(கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதி - பொதுவுடைமை தான் என்ன? - 4. முதலாளித்துவச் சமூகம்)
முதலாளித்துவச் சமூகத்தில் மூலதனத்தை வைத்துக் கொண்டு உள்ள முதலாளிகள், என்ன என்ன பண்டங்களை உற்பத்தி செய்தால் அவற்றை இலாபகரமாக விற்பனை செய்ய முடியுமோ அவற்றையே உற்பத்தி செய்கின்றனர். ஆனால் சோஷலிச சமூகத்தில் மக்களுக்குத் தேவையான பொருட்களையும் அவற்றின் அளவுகளையும் திட்டமிட்டு, அவை உற்பத்தி செய்யப்படும்.
புராதனப் பொதுவுடைமைச் சமூகம் நடப்பில் இருந்த போது, மக்கள் தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் போதுமான அளவிற்கு மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்து கொண்டு இருந்தது. ஆனால் இன்று மனித குலம் தான் வாழ்வதற்கும், தன் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவையான பொருட்களை விட மிக மிக .... மிகப் பல மடங்கு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெற்று உள்ளது. ஆகவே என்ன என்ன பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று முன்னுரிமை வகுப்பதில் (prioriatising) மனிதர்களுக்கு இடையே கருத்து மாறுபாடு ஏற்படலாம். இன்று முதலாளித்துவச் சமூகத்தில் சந்தையில் விற்பனை ஆகக் கூடிய பொருட்கள் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன. அதில் மக்களுக்கு இடையே கருத்து மாறுபாடு இருக்கவே செய்கிறது.
பசியால் வாடும் மனிதன் உணவு உற்பத்திக்கும் அதன் சீரான விநியோகத்திற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நினைக்கலாம். பெரும் பணத்தை வைத்துக் கொண்டு உள்ள ஒருவன் அத்தரிலேயே குளிக்க வேண்டும் என்றும் ஆசைப்படலாம். ஆனால் மூலதனத்தை ஆளும் முதலாளிக்கு அவை இலாபகரமாக இல்லாததால் அந்த ஏழை மனிதனின் விருப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; பணக்காரனின் ஆசையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. சந்தையில் அதிக இலாபம் அளிக்கும் பொருட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.
ஆனால் சோஷலிச சமூகத்தில், முதல் முன்னுரிமையாக உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்குத் தான் அளிக்கப்படும். உலகம் முழுமையும் சோஷலிச சமூகம் ஏற்படாத நிலையில், ஒரு நாட்டில் சோஷலிச சமூகத்தைக் கட்டிக் காக்க நேர்ந்தால், அப்பொழுது பாதுகாப்புக்கும் அதிக முன்னுரிமை அளிக்க நேரிடும். மேற்கொண்டு தங்கள் கைகளில் உள்ள இயற்கை மூலாதாரங்களையும் மனித வளத்தையும் பொறுத்து மற்ற பொருட்களும் உற்பத்தி செய்யப்படும். எது எப்படி இருப்பினும் என்ன என்ன பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது (முதலாளித்துவச் சமூகத்தில் இருப்பது போல) நிச்சயமாகக் கண்மூடித் தனமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் சக மனிதர்களை அடிமைப் படுத்தும் விதமாகவும் இருக்காது.
ஒரு தொழிலில், ஒரு முதலாளி (வரி ஏய்ப்பு, இன்னும் எத்தனையோ விவகாரங்களில்) முறை கேடாக நடந்து கொள்வது, அங்கு பணிபுரியும் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை அவர் எதிர்க்க முடியாது. எதிர்ப்பதாக இருந்தால், அவர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப் படுவார். அதாவது அநியாயத்தை எதிர்க்கும் சுதந்திரம் அங்கு இல்லை என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
அதே போல் சோஷலிச சமூகத்திலும் ஏதாவது தடைகள் இருக்குமா? குடி மக்களுக்குச் சுதந்திரம் இருக்குமா என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். நிச்சயமாக அந்த சுதந்திரம் உறுதி செய்யப்பட்ட சமூகம் தான் சோஷலிச சமூகம். சோஷலிச சமூகத்தில் கல்வியும் வேலை வாய்ப்பும் மக்களின் அடிப்படை உரிமைகளாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இங்கு ஒரு முதலாளி தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்குவது போல அங்கு செய்ய முடியாது. மேலும் வேலை வேண்டும் என்பதற்காக இங்கு யார் யாரிமோ கெஞ்சிக் கொண்டு நிற்க வேண்டியது போல அங்கு நிற்க வேண்டிய அவசியம் இல்லை. வேலை கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமையாகவும், வேலை பெறுவது குடி மக்களின் அடிப்படை உரிமையகவும் இருப்பதால் யாரும் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் பண்ட உற்பத்தியில் மக்களின் சுதந்திரம் உறுதி செய்யப்படுகிறது.
ஆகவே மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கு ஏற்ற சமூகம் தான் சோஷலிச சமூகம் என்பது தெளிவாகிறது. அங்கு சதந்திரம் இல்லை / இருக்காது என்று கூறுபவர்கள் எல்லாம் தங்களால் மற்றவர்களை அடிமை கொள்ள முடியாமல் போவதைத் தான் அவ்வாறு கூறுகிறார்கள். மனித சுதந்திரத்தை விரும்பும் யாருமே சோஷலிச சமூகத்தை விரும்பவே செய்வர். ஆனால், மனித சுதந்திரத்தை விரும்புகிறவர்கள் மட்டும் அல்ல; மனித உலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற நினைப்பு இருந்தாலேயே அவர்கள் சோஷலிச அமைப்பை வரவேற்றே தீர வேண்டிய நிலையை இன்று முதலாளித்துவம் எற்படுத்தி உள்ளது. இக்கட்டுரைத் தொடரின் இறுதிப் பகுதியாக அதைப் பார்ப்பபோம்.
- இராமியா