ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிச்சதுந்தான் விதிச்சாங்க இந்த ஊடகங்களின் அக்கப்போர் தாங்க முடியவில்லை. எந்தத் தொலைக்காட்சி செய்தி சேனல்களைத் திறந்தாலும் மாடுகளைப்போல வாயில் ஜல்லிக்கட்டையே அசைபோட்டுக் கொண்டு இருக்கின்றன. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் கொஞ்சம் கூட அதைப்பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் ஜல்லிக்கட்டு மாட்டின் வாலைப்பிடித்துத் தொங்காத குறையாக எந்நேரமும் அதைப்பற்றியே பேசினால் என்ன அர்த்தம். இதில் புதிய தலைமுறை தொலைக்காட்சியும், தந்தி தொலைக்காட்சியும் செய்த அட்டூழியங்கள் நம்மை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோய் விட்டது.
ஆனால் இந்தத் தடையும், தமிழக செய்திசேனல்களில் இடைவிடாத ஜல்லிக்கட்டு ஆதரவு விவாத நிகழ்ச்சிகளும் பலபேரின் முற்போக்கு முகமூடிகளை எரித்து சாம்பலாக்கி இருக்கின்றது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக பெரியமீசை வைத்தவர்களின் ஊரில் மட்டும் நடைபெறும் இந்தக் கமர்சியல் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒட்டுமொத்த தமிழர்களுக்கான வீர விளையாட்டு என புருடா விடுவதில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் (புதிய தமிழகம் கிருஷ்னசாமியைத்தவிர) ஒற்றுமைகாணப்பட்டது.
வியாழக்கிழமை அன்று(14\01\2016) புதிய தலைமுறையில் ஒளிபரப்பான நேர்பட பேசு நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிய வித்துவான்? பேராசிரியர் அருணன், பார்வட் பிளாக் பி.வி.கதிரவன் அப்புறம் யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் - இவர்கள் அனைவருமே பேசியது ஜல்லிக்கட்டை ஒழிக்கறதுக்காக பன்னாட்டு கம்பெனிகள் செய்யும் சதிதான் இது என்றும், பீட்டா போன்ற என்.ஜி.ஓக்கள் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோருவதன் வாயிலாக நாட்டு மாடுகளை ஒழித்துக்கட்டிவிட்டு இந்திய பால் சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க துணைநிற்பதாக கூறினார்கள். (ஆவின் நிறுவனத்தைத் திட்டமிட்டு ஒழித்ததில்கூட பீட்டாவின் சதி இருக்குமோ!)
இப்படிப்பட்ட மொக்கை வாதத்தை வைத்து நீதிமன்றத்தில் வழக்காடியதால் தான் இவர்கள் தோற்றார்கள். நீதிமன்றம் எந்த இடத்திலும் நாட்டுமாடுகளை வளர்க்கக்கூடாது என்றோ, அதை உழவுக்கோ, இனப்பெருக்கத்திற்கோ பயன்படுத்தக்கூடாது என்றோ சொல்லவேயில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசும் அனைவரும் இதே கருத்தையே வெவ்வேறு குரல்களில் திரும்ப திரும்ப சொல்கின்றார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் அவர்களிடம் அதற்காக பல ஆதராங்கள் இருக்கின்றன. ஆனால் ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதற்கு ஒரு நியாயமான வாதம் கூட இவர்களிடம் கிடையாது. அதனால் தான் தோற்றுப்போய் வந்திருக்கின்றார்கள்.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தும் அந்தத் தடைக்கு மத்திய அரசில் தற்போது இருக்கும் மேனாகாகாந்தியும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிந்திருந்தும் கொஞ்சம்கூட வெட்கமானமே இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி கொடுத்தது மத்திய அரசு. அனுமதி கொடுத்த கையோடு பொன்.ராதாகிருஷ்ணன் இந்தப் பொங்கலை மோடி பொங்கலாக தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தார். இதைக்கூட பொருத்துக் கொள்ளலாம் ஆனால் இந்தியாவில் இருந்து இறைச்சிக்காக பல லட்சம் டன் மாடுகள் கொல்லப்படுகின்றன, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்காக ஏன் குரல் கொடுக்கின்றார்கள் என்ற தொனியில் பேசி இருந்தார். மாட்டுக்கறியைத் தின்றார்கள் என்ற காரணம்காட்டி இதுவரை எத்தனை தலித், முஸ்லிம் மக்களை கொலை செய்திருப்பார்கள் இந்தப் பாவிகள், இன்று யோக்கியனைப்போல பேசுகின்றார்கள்.
இந்த ஜல்லிக்கட்டு தடை பல முற்போக்குவாதிகளைத் தமிழக அரசியலில் அம்பலப்படுத்தி இருக்கின்றது. தேர்தல் அரசியலில் பங்கெடுப்பவர்கள், தேர்தல் அரசியலில் பங்கெடுக்காதவர்கள் என அனைத்து முற்போக்குவாதிகளும் ஜல்லிக்கட்டுக்காக வரிந்து கட்டிக்கொண்டு ஊடகங்களில் பேசும் போதுதான் மனம் மிக துன்பப்பட்டது. இந்தப் பாவிகளையா இத்தனை நாட்களாக முற்போக்குவாதிகளாக நினைத்துக்கொண்டு இருந்தோம் என வெட்கப்பட நேர்ந்தது. சரி தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் பிழைப்புவாதிகளாகவும், நேரத்திற்கு தகுந்தாற்போல தனது முகமூடிகளை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகளாகவும் இருக்கின்றார்கள் என்றால் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத பலரும் ஊடகங்களில் பேசும் போது அவ்வாறே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசியது மிகக்கேவலமான செயலாகும். எள்ளுதான் காய்கின்றது என்றால் எலிப்புளுக்கை எதற்காக காய்கின்றது என்று தெரியவில்லை.
கருத்துக் கூறியவர்கள் எல்லாம் அம்பலப்பட்டு போனார்கள். ஆனால் இன்னும் கருத்துக்கூறாத அல்லது கருத்துகூறா விரும்பாத நல்ல உள்ளங்கள் நிறைய தமிழ்நாட்டில் உள்ளன. எதுக்கு கருத்த சொல்லிகிட்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பேசினா சாதிவெறியர்களுக்குச் சொம்பு துக்குகின்றான் என்பான், பேசவில்லை என்றால் மறைமுகமாக ஆதரவு தருகின்றான் என்பான். எப்படியும் பேசுகின்றவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். பொங்கல் முடிந்தவுடனோ அல்லது தேர்தல் முடிந்தவுடனோ நாம் முற்போக்கு வியாபாரத்தை ஆரம்பித்துவிடுவோம் என அமைதியாக இருக்கின்றார்கள்.
இங்கே அனைத்திற்கும் ஒரு விலை இருக்கின்றது. முற்போக்குப் பேசுவதற்கும் ஒரு விலை இருக்கின்றது, பிற்போக்கு பேசுவதற்கும் ஒரு விலை இருக்கின்றது. ஆனால் முற்போக்கு வாதிகள் பிற்போக்காக பேசுவதற்கும் பிற்போக்குவாதிகள் முற்போக்காக பேசுவதற்கும் பெரும் விலை இருக்கின்றது. பதவியும், பணமும் கிடைத்தால் இவர்கள் தங்களை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றிக் கொள்வார்கள். மற்றபடி கட்சி, கொள்கை, சித்தாந்தம் என ஒரு வெங்காயமும் இவர்களிடம் கிடையாது.
மக்கள் நல கூட்டணியில் உள்ள தொல். திருமாவளவன் அவர்கள் 'ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறு தழுவதல் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகும். இதற்கு மிருகவதை என்னும் பெயரில் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது' என்கின்றார். நமக்குத்தான் அதிர்ச்சி அளிக்கின்றது திருமாவின் பேச்சு. தீண்டாமை கூட இந்து மதத்தின் பாரம்பரியம் தான் என்பதை திருமா தேர்தல் சமயத்தில் மறந்துவிட்டார் என்று நினைக்கின்றேன். இனி தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியில் குடிவைப்பது எங்களது பாரம்பரிய உரிமை என்று சாதி இந்துக்கள் குரல் எழுப்பினால் திருமாவும் அதை ஆதரிப்பார் என்று நினைக்கின்றேன். அவரைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்பது மேல் சாதிவெறியர்களின் சாதிவெறியை ஆதரிப்பதன் மூலம் தான் பெறமுடியும் என்று நினைக்கின்றார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தவுடன் 80 ஆயிரம் மாடுகள் அடிமாடுகளாக கேரள கறிக்கடைகளுக்கு விற்கப்பட்டு விட்டதாக ரத்தக்கண்ணீர் வடிக்கின்றார் திருமா. பொன்னார் தேர்தலுக்காக சைவத்தில் இருந்து அசைவத்திற்கு மாறிவிட்டார். திருமா அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிவிட்டார். ஏன் திருமாவைப் பற்றி இவ்வளவு பேசுகின்றோம் என்றால் நாம் யாருக்காக, எந்த மக்களின் நலனுக்காக ஜல்லிக்கட்டை முதன்மையாக எதிர்க்கின்றோமோ அந்த மக்களுக்காக கட்சி நடத்துகின்றேன் என்று சொல்லும் திருமா போன்றவர்கள் அந்த மக்களின் சுயமரியாதையை ஓட்டுச்சீட்டுகளுக்காக அடமானம் வைத்துவிட்டார்கள் என்பதால் தான்.
எனவே மக்கள் இந்தப் பிழைப்புவாதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கட்சிகள், அவர்கள் நடத்தும் ஊடகங்கள் என அனைத்தும் சாதி இந்துக்களாலேயே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன என்பதும், அதனால் தான் அவர்கள் இதை ஆதரிக்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும். சில தலித் தலைவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும் அவர்கள் ஒன்றும் ஒட்டுமொத்த தலித்மக்களின் பிரதநிதிகள் கிடையாது. எனவே சாதிவெறியையும், போலி வீரத்தையும் முதன்மைப்படுத்தும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உண்மையான முற்போக்குவாதிகள் வன்மையாக கண்டிக்க வேண்டும். போலி முற்போக்குவாதிகளைப் பற்றி இனிநாம் கவலைப்பட தேவையில்லை, ஏற்கெனவே அவர்கள் தங்கள் அம்மணத்தை வெளிக்காட்டி விட்டதால்.
- செ.கார்கி