(கையில் ஒலிவாங்கியுடன் எம்.கே.நாராயணன், சந்திரஹாசன் மற்றும் இந்து என்.ராம்)
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மீது 2008ம் ஆண்டு ஈராக்கில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு காலணி எறியப்பட்டது. "அமெரிக்க நாயே! இது உனக்கு ஈராக் மக்களின் வழியனுப்பும் முத்தம்” என்ற முழக்கம் வந்தது. இரண்டாவது காலணியும் எறியப்பட்டது. "இது ஈராக்கில் கொல்லப்பட்ட, விதவைகளாக்கப்பட்ட, அநாதைகளாக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும்” என்ற முழக்கம் வந்தது. எறிந்தவர் ஈராக்கின் ஊடகவியலாளர் முன்டசார் அல் சைதி. தனது ஏகாதிபத்திய போர் வெறிக்காக செருப்படி வாங்கிய முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றார் ஜார்ஜ் புஷ். ஈராக்கின் மக்களைக் கொன்று குவித்த ஏகாதிபத்தியம், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் அம்பலப்பட்டு நின்றது.
அதைப் போன்றதொரு நிகழ்வு தற்போது தமிழக மண்ணிலும் நடைபெற்றுள்ளது. தமிழ் அகதிகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இனப்படுகொலை கூட்டாளி எம்.கே.நாராயணின் மீது செருப்பால் அடித்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற தோழர்.
எப்போதுமே தங்களை Moderatorகளாக காட்டிக் கொள்ள விரும்புகிற சிலர் எம்.கே நாராயணனை தோழர் பிரபாகரன் செருப்பால் அவமானப்படுத்தியதை தவறு என்றும், அதைக் கண்டிக்கிறோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் மதவெறி கும்பல் நடத்துகிற தாக்குதலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் மீது வெறுப்பினை உமிழ்வதற்காக நடத்தப்படுகிற பாசிச தாக்குதலுக்கும், அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கொலைகளை செய்துவிட்டு, இன்னும் கொலைகளை செய்வதற்கு ஆயிரம் யானைகள் பாதுகாப்புடன் வலம் வந்து, மக்களை ஒடுக்கும் அதிகாரிகள் மீது எளிய மனிதர்கள் காட்டுகிற எதிர்ப்பிற்கும் இலட்சம் வேறுபாடுகள் உண்டு.
இந்த இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது மேலோட்டமான வரலாற்றுப் பிழை. செருப்பால் அடிப்பது என்பதையும், ஷூவினை கழட்டி வீசுவதையும் தாக்குதல் நோக்கில் வகைப்படுத்துவதே முதலில் தவறானது.
அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு அயோக்கிய கொலைகாரனை செருப்பால் அவமானப்படுத்துவது என்பது அவனை, அவன் செய்த குற்றத்தினை, அவனது அதிகார எல்லைகளை மீறி அனைத்து மக்களுக்கும் அம்பலப்படுத்துகிற எளிய மக்களுக்கான ஓர் எளிமையான மற்றும் வன்முறையற்ற ஓர் ஆயுதம்.
எம்.கே.நாராயணனுக்கும், இந்து ராமுக்கும் ஏன் இந்த எதிர்ப்பு?
எம்.கே.நாராயணன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், ஐபி எனும் உளவுத்துறையின் இயக்குநராகவும் இருந்தவர். இலங்கையின் இன அழிப்பு போருக்கு இந்தியாவிலிருந்து அனைத்து உதவிகளையும் செய்து, இறுதி யுத்தத்தின் நகர்வுகளை நேரடியாகக் கண்காணித்து தமிழர்களை அழிக்க அனைத்து வேலைகளையும் செய்தவர்.
இலங்கை அரசின் துணையுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழினப் படுகொலையை மறைத்து பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள் தி இந்து பத்திரிக்கையும், என்.ராமும்.
இந்த எம்.கே.நாராயணனும், இந்து ராமும் இணைந்து தமிழ் அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்புவதற்கான சதித்திட்டத்தினை சென்னையில் நேற்று (04-11-2015) நடத்தினர். அந்தக் கூட்டத்தில்தான் எம்.கே.நாராயணனின் உண்மை முகத்தினை அம்பலப்படுத்த தனது செருப்பினை பயன்படுத்தினார் பிரபாகரன்.
எம்.கே.நாராயணனை இலங்கையை அலசும் வல்லுநராகவும், பிரம்மாண்ட நாயகனாகவும் சித்தரித்த தேசத்தின் முன், இன்று அவனது பிம்பங்கள் உடைபட்டு அம்பலப்பட்டு நிற்கிறது. வாய்கள் மூடப்பட்டு, வாயில்கள் அடைக்கப்பட்ட எளிய மக்களின் அறம் சார்நத கோபம் இப்படித்தான் வெளிப்படும். இது வரலாறு நெடுகிலும் அனைத்து சமூகங்களிலும் நிகழ்ந்துள்ளது.
ஜார்ஜ் புஷ் முதல் ப.சிதம்பரம் வரை இப்படியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஜார்ஜ் புஷ்ஷை நோக்கி காலணியை வீசியவர் ஓர் ஊடகவியலாளர். ப.சிதம்பரத்தின் மீது காலணியை வீசியவரும் ஓர் ஊடகவியலாளர். தங்கள் செய்தியை பொதுமக்களிடம் சென்று சேர்க்கும் ஊடகவியலாளர்களே, அயோக்கியர்களை அம்பலப்படுத்தும் உரிமை இல்லாமல் இப்படித்தான் அம்பலப்படுத்தி எதிர்ப்பைக் காட்டும் நிலையில் இருக்கிறார்கள். அப்படியென்றால் சாதாரண மனிதரான பிரபாகரனிடம் இவர்கள் என்ன வன்மத்தை அல்லது வன்முறையைக் கண்டுவிட்டார்கள்? கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து மட்டுமே இப்படியான 50க்கும் மேற்பட்ட சம்பவங்கள் உலகம் முழுதும் நடைபெற்றுள்ளன. இவை சுய திருப்திக்காகவோ, தங்கள் வெறியைத் தீர்த்துக் கொள்வதற்காகவோ நடக்கிற நிகழ்வுகள் அல்ல. தங்களிடமிருக்கும் ஒரே வாய்ப்பினை பயன்படுத்தி ஓர் அதிகார யானையை அம்பலப்படுத்தும் அறம்.
எளியவர்களின் கைகளும், வாய்களும் கட்டப்பட, இந்த சமூகத்தின் அறிவுசீவி வர்க்கம் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கும்மாளமடிக்கும் சூழலில் ஓர் எளியவன் தனது செய்தியை உலகுக்குத் தெரிவிக்க ஒன்று அவன் தீக்கிரையாகவோ அல்லது இப்படியான செயல்களிலோ இறங்கும் நிலைக்கோ தள்ளப்படுகிறான். அதற்கு இந்திய அறிவுசீவி வர்க்கத்தின் அழுக்கு வரலாறுதான் காரணமேயொழிய, மக்களின் மன ஓட்டங்கள் மட்டுமல்ல. ஒரு பலம் பொருந்திய ராணுவ டேங்கியை நோக்கி ஒரு சாதாரண மக்கள் சமூகம் கல்லெறிவதை எப்படி பாசிசத்தில் வகைப்படுத்த முடியும்?
மீண்டும் அறிவுசீவி சமூகத்தினையும், அதிகார வர்க்கத்தினையும் பாதுகாத்து மக்கள் சமூகத்தின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்தல் என்பது இன்னும் பாரிய விளைவுகளைத்தான் ஏற்படுத்துமேயொழிய, மாற்றத்தினை ஏற்படுத்த உதவாது.
காலில் போடும் செருப்பினை கையில் தூக்கி நடக்கச் சொன்னவர்களின் ஆதிக்க மனநிலையை வரலாறு நெடுகிலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது செருப்பு எனும் ஆயுதம்.
- விவேகானந்தன், மே17 இயக்கம்