மெட்ராஸ் கபே திரைப்படத்தினை மார்க்கெட்டிங் செய்வதும், சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கும் பலமுயற்சிகள் எடுக்கப்பட்டன. இதைப்பற்றி நாம் சில விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன்.

வியட்னாம் போரில் அமெரிக்கா தோல்வியடைந்த பிறகு தனது ராணுவத்தின் வலிமையை பறைசாற்றிக்கொள்ள, யுத்த தந்திரத்தினை வணிகப்பொருளாக பிற நாட்டின் ராணுவத்திற்கு விற்க அமெரிக்காவிற்கு தேவை இருந்தது. இதனடிப்படையில் தொடர்ச்சியாக வியட்நாம் மக்களுக்கு எதிராகவும், அமெரிக்க படைவீரர்களை வெற்றிவீரர்களாகவும் சித்தரித்தும், வியட்நாம் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் படங்கள் வந்தன. மிக அரிதாகவே ப்ளேட்டூன், ஹெவன் அண்ட் எர்த் போன்ற படங்கள் வந்தன. அவையும் கூட அமெரிக்க போர்வீரரின் உளவியல் பிரச்சனையை பேசின. இந்த அடிப்படையிலேயே மெட்ராஸ் கபே படமும், இதற்கு முன்வந்த ஏக்தா டைகர் படமும், இந்தியாவின் ராணுவ பொருட்களை விற்பனை செய்யவும், இந்திய உளவு நிறுவனத்தினை சர்வதேச தரம் வாய்ந்ததாக மாற்ற பிரச்சார யுக்தியாக திரைப்படத்தினை பயன்படுத்துகிறது.

இந்திய அரசு நிறுவனம் இந்த யுக்தியை பல முன்னனி நடிகர், இயக்குனர்களை கொண்டு செய்கிறது. ஆகவே இதில் கருத்து சுதந்திரம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அரசு நிறுவனங்களுக்கு கருத்துசுதந்திரம் என்று ஒன்று கிடையாது. அரச எதிர்ப்பு கருத்துக்கே கருத்துச்சுதந்திரம் அவசியம். சுதந்திரம், ஜனநாயகம் என்பது அரச எதிர்ப்பு நிலையே. அரச ஆதரவு நிலைக்கு பாசிசம் என்று பெயர். இப்படம் பாசிசத்தின் பிரச்சாரம்.
 
மெட்ராஸ் கபே படத்தினை பொருத்தவரை இவர்கள் முதல்கட்ட வியாபார யுக்தியாக நமது எதிர்ப்பு அரசியலை பயன்படுத்தினார்கள். திரைப்படத்தினைப்பற்றி ஒரு அறிவிக்கப்படாத விளம்பரமாக நமது எதிர்ப்பினை பயன்படுத்த முயன்றார்கள். ஏனென்றால் இவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் தமிழகம் இவர்களுக்கு பெரிய சந்தை கிடையாது. மாறாக தமிழர்களின் எதிர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் ஒரு கவனத்தினை பெறவைக்கமுடியும், மேலும் வணிகமாக பல இடங்களில் இப்படத்தினை வெற்றியடைய வைக்கவே விரும்புகிறார்கள். மேலும் நமது எதிர்ப்பினை ஜனநாயக விரோத போராட்டமாகவும், தமிழர்கள் முரட்டுத்தனமாக உணர்ச்சிவயத்துடன் எதிர்ப்பவர்கள் என்கிற முத்திரையையும் குத்த முயற்சிக்கிறார்கள்.
 
நமது எதிர்ப்பு என்பது பல்வகை தளங்களில் வெளிப்படவேண்டும். ஜான் ஆபிரகாம் மற்றும் இலங்கையுடன் வர்த்தக புரிந்துணர்வு ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்பட வர்த்தகர்கள் தமது வர்த்தக அறத்தினைப் பற்றி வெளிப்படையாக அறிவித்தல் அவசியம். ஒரு இனப்படுகொலை நாட்டுடன் வணிகம் செய்யும் பாலிவுட் திரையுலகம் வணிகத்தில் அறத்தினை தொலைத்த நிறுவனமே. பணத்திற்காக மனித உரிமைகளை புறக்கணிக்கும் நிறுவனம் மக்களால் விரட்டப்படுவது அரசியல் செயல்பாடே அன்றி ஜனநாயக மறுப்பன்று. சந்தையை இலங்கையில் தேடும் பாலிவுட் திரையுலகம் தனது வணிகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்த முனைவது முரணாகவே பார்க்கப்படும்.
 
இந்த அடிப்படையில் தமிழக மக்கள் இந்த வணிக முயற்சியை முறியடிப்பதும் பாலிவுட் திரையுலகம் தன்னை திருத்திக் கொள்ளாதவரை தமிழக சந்தையை கைக்கொள்ள இயலாத நிலையை ஏற்படுத்துதல் அவசியம். இதன் மூலமே ஆகப்பெரும் ஆற்றல் வாய்ந்த பாலிவுட் திரையுலகம் தமிழக மக்களிட்த்திலேயே ஒரு நேர்மையான நேரடி உரையாடலை நடத்தவேண்டும். தனது வணிகம் மனித நேயத்திற்கு எதிரானதாக இல்லை என்கிற முடிவினை அவர்கள் எடுத்து அதன் அடிப்படையில் இல்ங்கையை புறக்கணிக்கும் பட்சத்தில் தமிழகம் பாலிவுட் திரையுலகை அனுமதிப்பது சரியானதாக அமையும். தமிழகத்தின் சந்தையையும், இலங்கையின் சந்தையையும் ஒரு சேர கிடைப்பது அனுமதிக்க இயலாதது.
 
மேலும் ஜான் அபிரகாம் ஊடாக(விளம்பர முகவராக) வணிகம் செய்யும் நிறுவன்ங்களை நாம் புறக்கணித்தல் என்பது இந்த வணிக பெருச்சாலிகளுக்கு சரியான எதிர்ப்பாக அமையும். இதை நாம் செய்யும் போது இந்த நிறுவனங்கள் தமது மனிதநேய அல்லது மனித உரிமை சார்ந்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படவேண்டும். எந்த ஒரு விவாதமும் இல்லாமல் தமது வலிமையை கொண்டு நம்மிடம் திணிக்கும் கருத்துக்களை எதிர்த்து நின்று போராடி விவாதத்திற்கு அழைக்கும் போதே இவர்கள் அம்பலப்பட நேரும். எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்வோம். தமிழின எதிர்ப்பு திரைப்படங்களை பிரச்சாரமாக திணிக்கும் இந்தியாவின் முயற்சியை முறியடிப்போம். இந்த திரைப்படத்தில் கருத்து தளத்தில் பங்காற்றியவர்கள், இலங்கை அரசுடன் ஒத்துழைத்து வணிகம் வளர்க்கும் பாலிவுட் திரையுலகம் ஆகியவற்றினை தமிழகம் புறக்கணிக்கும் போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும். இதன் பிறகே நாம் விவாதிப்பதற்கான நேர்மையான களம் அமையும். வரலாற்றினை திரிப்பதை நாம் ஒருபோதும் கலையுலக படைப்பாக கொள்ள முடியாது. வரலாறு என்பது மக்கள் சார்ந்த்து, கலை என்பது மக்கள் சார்ந்த்து. மக்கள் எதிர்ப்பு கலைப்படைப்புகள் அனைத்தும் பாசிசத்தன்மை வாய்ந்தவையே. அவை எதிர்க்கப்படவேண்டும், புறக்கணிக்கப்படவேண்டும்.
 
பாலிவுட் திரையுலகம் இந்தியத்தின் படைப்பே, அது இந்தியத்தின் பிரச்சாரமே. பார்ப்பனிய இந்துத்துவ வடிவத்தினையும் இந்திய மேலாதிக்கத்தினையும் உள்வாங்கிய இந்த திரைப்படங்கள் விமர்சனத்துடன் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்தியாவின் பொருட்கள் தமிழகத்தில் புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழகத்தின் அரசியல் கோரிக்கைக்கு பங்கு இல்லையென்றால் இந்தியாவிற்கு தமிழகம் என்கிற சந்தை இல்லை என்கிற நிலை இங்கு ஏற்படவேண்டும். ஏனெனில் இந்தியத்தின் இலங்கைப்பாசம் என்பது இனநட்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவும் முன்னிறுத்தபடுகிறது. இப்பாசம் தமிழகம் தரும் புறக்கணிப்பு அரசியல் ரீதியாக விவாதத்திற்கு எடுத்துவரப்படும். இந்தப் படம் நமக்கு ஒரு விவாத வெளியை உருவாக்க வாய்ப்பினை கொடுத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். இந்த விவாதத்தில் நாம் வலிமையான இடத்தில் நின்று பேச நமக்கு வரலாறு இருக்கிறது. வரலாறு நம் பக்கம் இருக்கிறது. பேசுவதற்கான தளவலிமை என்பது நமது புறக்கணிப்பு அரசியலின் வலிமையைப் பொருத்து உருவாகும். அதை நாம் வலிமையாகச் செய்வோம். ஒட்டுமொத்த இந்தியாவினை புறக்கணிப்பது என்பது அதன் வணிகம், பண்பாடு, அரசு சார்ந்த கலைப்படைப்பில் இருந்து ஆரம்பிக்கட்டும்.
 
- விவேகானந்தன், மே17 இயக்கம்

Pin It