திருப்பூரில் 06.09.2015 அன்று கல்புர்கி அரங்கில், கருத்துரிமைக்கெதிராக செயல்பட்ட உளவுத்துறையைக் கண்டித்து 17 கட்சிகள் இனைந்த கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கண்டனக் கூட்டமும், மௌனத்தின் சாட்சியங்கள் நூல் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. அதில் நிகழ்ந்த விவாதங்களில் ஒரு பகுதியை அக்டோபர் 2015 வைகறை வெளிச்சம் இதழில் 46,47,48 பக்கங்களில் வெளியிட்டிருந்தனர். அதில் மரியாதைக்குரிய நண்பர் காதர் மைதீன் அவர்கள் நாவலில் அவர் முரண்படும் இடங்கள் குறித்தும் எனது அரசியல் நிலைபாடு குறித்தும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கான பதிலை நான் மேடையிலேயே சொல்லியிருந்தேன். இப்போது அதே கேள்விகளை வைகறை வெளிச்சம் பத்திரிக்கையில் கேட்டிருக்கிறார். மேடையில் நான் கூறியிருந்த பதிலை வேறு பொருளில் மாற்றி எழுதியிருப்பதால் (ஒருவேளை அவரின் தவறான புரிதலாகக்கூட இருக்கலாம்) அதற்கான மறுப்பை எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டியக்கத்தில் இணைந்து எங்களுக்குத் தோள் கொடுத்த தாருல் இஸ்லாம் அமைப்புக்கு நன்றியைச் சொல்லிக்கொண்டு கேள்விகளுக்குச் செல்கிறேன்.

”2006 ஜூலையில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்புச் சதி போலீசாரால் நடத்தப்பட்டது. மனித நீதிப் பாசறை அமைப்பின்மீது பழிபோட்டு அடாவடித்தனம் நடந்தது. உடனே அதன் தலைவர் எம்.குலாம் முகமது அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து இதுபோன்ற செயல்களில் மனிதநீதிப் பாசறை ஈடுபடாது என தெளிவுபடுத்தினார். மேலும் கோவையின் அனைத்து ஜமாத்துக்களும் ஒருங்கிணைந்து போலீசின் சூழ்ச்சியை முறியடித்தனர். பின்பு இந்த சதித்திட்டம் தீட்டிய ஏ.எல்.இரத்தின சபாபதி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்த நாவலில் குறிப்பிடப்படவே இல்லையே?”

அதாவது 2006 ஜூலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை ஏன் நாவலில் குறிப்பிடவில்லை என்று கேள்வியெழுப்புகிறார். அன்புக்குரிய நண்பர் காதர் மைதீன் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த நாவல், மதவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் துயரத்தைப் பதிவு செய்வதையும், மதச்சார்பற்ற சமூகத்தின் பார்வைக்கு இந்த துயரச் சம்பவங்களைக் கொண்டு செல்வதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டது. இன்னும் நூறு நூல்கள் எழுதினாலும் முழுதும் சொல்லிவிட முடியாத அளவுக்கு துக்கத்தை அந்த மக்கள் சுமந்தபடி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எந்த அமைப்புகளின் செயல்பாடுகளையோ பங்களிப்புகளையோ பேச வேண்டுமென்ற நோக்கம் எனக்கில்லை.  

”போலீசாரால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட அப்பாவியான யாசருக்கு மனநலம் பாதித்ததாக நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா என அறிய இவ்வழக்கில் பத்து ஆண்டுகள் சிறையிலிருந்து பின்பு விடுவிக்கப்பட்ட சகோதரர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி யாருக்கும் மனநிலை பாதிக்கவில்லை என்று தெரிவித்தனர்.”

மௌனத்தின் சாட்சியங்கள் நூல் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட புனைவிலக்கியம். அதில் யாசர், வைஷ்ணவி போன்ற ஒரு சில கற்பனைப் பாத்திரங்கள் உண்டு. பல பாதிக்கப்பட்ட இளைஞர்களின் அனுபவங்களை யாசர் என்கிற கதாப்பாத்திரத்திற்குள் சொல்ல முயன்றிருக்கிறேன். அந்த கதாப்பாத்திரத்தை வெளியில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை என்று சொல்வதே நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. நல்லவேளை நீங்கள் வைஷ்ணவியைத் தேடாமல் இருந்தீர்களே!! மேலும் நான் மேடையில் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். நீங்கள் உள்வாங்கியிருப்பதுபோல யாசர் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட பைத்தியக்காரனாக சித்தரிக்கப்படவில்லை. சிறைக் கொடுமைகளும், தனிமையும், அன்புக்காக ஏங்கக்கூடிய அவனது இயல்பான குணமும் சேர்ந்து அவனது உளவியலில் தாக்கம் செலுத்துவதையும், அதன்மூலம் அவனது இயல்பான நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றத்தையும் சொல்லியிருக்கிறேன். தூக்கத்தில் பேசுவது, தூக்கத்தில் நடப்பது, அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, அதிகமான பய உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை இப்படி மனப்பிறழ்வில் பலவகை உண்டு. அதில் யாசர் தனிமையில் பேசுவது அவனின் இயல்பான மனநிலையில் ஏற்பட்டிருக்கும் பிறழ்வு. அதைப் பைத்தியம் என்று புரிந்து கொள்ளக்கூடாது. அப்படி அவன் முழுதாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அவன் பாதிக்கப்பட்ட கதையை, இரயிலில் சந்திக்கும் இளைஞனிடம் நாள், தேதி முதற்கொண்டு எப்படி சரியாகச் சொல்லமுடியும் என்ற எளிய கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

”இந்தப் புத்தகம் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக கம்யூனிசத்தையே முன்வைக்கிறது”

இதற்கும் நான் மேடையிலேயே பதில் சொல்லிவிட்டேன். நண்பர் மறந்துவிட்டார் அல்லது வசதியாக மறைத்துவிட்டார் போலும். நாவலில் எங்குமே கம்யூனிசமே தீர்வு என்று குறிப்பிடவில்லை. மீண்டுமொருமுறை நீங்கள் நாவலை வாசியுங்கள். நான் இந்த நாவலில், சமூகத்தில் மதவாதம் வளர்ந்து செல்வாக்கு செலுத்திய நிகழ்வுப் போக்கை மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்திருக்கிறேன். வைஷ்ணவி, ஃபெரோஸ், மகேந்திரன் விவாதங்களில் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதான விமர்சனத்தை (சுயவிமர்சனத்தை) பதிவு செய்திருக்கிறேன். ஆனாலும் தனிப்பட்ட முறையில் கம்யூனிசமே அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வானது என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான்.

”ஆனால் இஸ்லாம் 1300 ஆண்டுகள் இந்தப் பூமியில் ஆட்சி செய்தது. இன, மத, சாதி வேறுபாடின்றி சமத்துவ ஆட்சி செய்தது என கிருஸ்துவ ஆய்வாளர்களே குறிப்பிட்டுள்ளனர். கிருஸ்துவ ஆட்சியாளர்களின் கீழ் வாழ்ந்ததைவிட இஸ்லாமிய ஆட்சியின் கீழே கிருஸ்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆகவே யாருக்கும் பாதிப்பின்றி நடத்தப்பட்ட இஸ்லாமிய ஆட்சியே தீர்வு.”

முதலில் இஸ்லாம் 1300 வருடம் எங்கே ஆட்சி செய்தது என்று தெளிவுபடுத்துங்கள். அதன்பிறகு அது சிறந்த ஆட்சியா..? யாருக்கும் பாதிப்பில்லாமல் அந்த ஆட்சி நடந்ததா..? என்பதை விவாதிப்போம். இஸ்லாமியர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதும் இஸ்லாம் ஆட்சி செய்தது என்பதும் ஒன்றா..? நாளை இந்தியாவில் ஒரு இஸ்லாமியர் பிரதமரானால் இந்தியாவில் நடப்பது இஸ்லாமிய ஆட்சி என்று சொல்வீர்களா..? குறைந்தபட்சம் அரசு என்றால் என்ன?, அந்த அரசு நிலவிய சமூகம் எந்தவகைச் சமூகம்? அப்போது எந்தவகை உற்பத்தி முறை நிலவியது? அரசுக்கும் உற்பத்திக்குமான உறவு எப்படி இருந்தது? உற்பத்திக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருந்தது? போன்ற விபரங்களைப் பரிசீலிக்காமல் பொத்தாம் பொதுவாக நல்ல அரசு, நல்ல ஆட்சி என்றெல்லாம் பேசுவது எப்படிப் பொருத்தமாக இருக்குமென்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு வாதத்திற்காக நீங்கள் கூறுவதுபோலவே அப்போதைய இஸ்லாமிய ஆட்சி அந்த காலகட்டத்தில் நல்லாட்சியாக இருந்தது என்று வைத்துக்கொண்டாலும் இப்போதைய வளர்ச்சியடைந்த முன்னேறிய  காலகட்டத்திற்கு அதைப் பொருத்த முடியுமா? அதே வகைச் சமூகமும் அதேவகைப் பொருளுற்பத்தியும் அதேவகையான உற்பத்தி உறவும் இப்போதும் நிலவுகிறதா..? இல்லையெனில் இப்போதைய கால வளர்ச்சிக்கேற்றபடி இஸ்லாம் மாற்றமடைந்திருக்கிறதா..? பிறகெப்படி இந்தச் சமூகத்திற்கு அது பொருந்தும்?

”இஸ்லாம் மட்டுமே தான் ஆண்ட காலங்களில் வறுமையை முழுமையாக ஒழித்திருந்தது. கம்யூனிசம் ஆண்ட பகுதிகளில் ஒழிக்கப்படவே இல்லை என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.”

இஸ்லாம் ஆண்ட எந்தப் பகுதியில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்தது..? அதற்கு வரலாற்றிலிருந்து ஆதாரம் கொடுங்கள். ஒரு வாதத்திற்காக இஸ்லாம் வறுமையை ஒழித்திருந்தால் ஜகாத் என்ற முறைக்கு தேவையே இல்லாமல் போயிருக்குமே..? இன்றுவரை இஸ்லாத்தில் ஜகாத் கட்டாயக் கடமையாகத்தானே உள்ளது.

கம்யூனிச ஆட்சி பற்றி நீங்கள் கேட்ட கேள்விக்கு, உலகில் கம்யூனிச ஆட்சி எங்கு நடந்தது என்று உதாரணம் சொல்லுங்கள் என்று மேடையிலேயே கேட்டேன். இங்காவது நீங்கள் பதில் சொல்லியிருக்கலாம். உலகில் இதுவரை எந்த நாட்டிலுமே கம்யூனிச ஆட்சி வந்ததில்லை. (ஆதிப் பொதுவுடமைச் சமூகம் தவிர்த்து) அப்படியிருக்க கம்யூனிச ஆட்சியில் வறுமை ஒழியவில்லை என்பதும், கம்யூனிசம் தோற்றுப்போய்விட்டது என்று சொல்வதும் எந்த அளவுக்கு சரியான வாதமாக இருக்கும்? கம்யூனிச சமூகம் என்பது இறுதிக்கட்டம். சோசலிசக் கட்டம் என்பது கம்யூனிச சமூகத்திற்கு முந்தைய கட்டம். அதாவது கம்யூனிச சமூகத்தை நோக்கி நகரும் கட்டம். கம்யூனிஸ்ட்டுகள் சில நாடுகளில் அதிகாரத்திற்கு வந்தார்கள். அங்கு சோசலிச ஆட்சியை நிறுவினார்கள். கம்யூனிசத்தை நோக்கி அந்த சமூகத்தை நகர்த்திய நீண்ட போராட்டத்தில் உலக வல்லரசுகளும் முதலாளித்துவ அடிவருடி நாடுகளும் சேர்ந்து அந்த அரசுகளை உடைத்தன என்பது உண்மை. அந்த அரசுகள் தோல்வியடைந்ததை நாங்கள் மறுக்கவேயில்லை. அந்த தவறுகளைப் பரிசீலித்து அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் கூறும் கம்யூனிச சமூகம் என்பது சுரண்டலை அறவே ஒழித்த சமூகமாக இருக்கும். சுரண்டல் இல்லையெனில் மட்டுமே வறுமை ஒழியும்.

”மௌனத்தின் சாட்சியங்கள் கோவை குண்டுவெடிப்புக் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய புத்தகமல்ல… இந்தப் புத்தகம் முஸ்லிம்கள்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக ஆணித்தரமாக சொல்கிறது. பிற்காலத்தில் உண்மைகள் முழுமையாக வெளிவரும்போது தவறிழைத்ததாகிவிடும்”

தோழர் ப.பா மோகன் அவர்களின் உரையில் ”இந்த நாவல் பேசும் கதைக்களத்தோடும் அந்த வழக்குகளோடும் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. இந்த நாவல் புனைவாக சொல்லப்பட்டாலும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிற சம்பவங்கள் அத்தனையும் உண்மை.. அதற்கு நானே சாட்சி..” என்று அவர் கூறியதை நினைவூட்ட விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் அவரைவிட இந்த வழக்கில் அதிகம் அனுபவம் கொண்டவரா என்று எனக்குத் தெரியவில்லை. அதே நேரத்தில் எல்லா தகவல்களும் அடங்கிய நூல் என்றும் நான் சொல்லிக் கொள்ளவில்லை. நான் எடுத்துக்கொண்ட கதைக்குள் பக்கச்சார்பின்றி நேர்மையாக நிகழ்வுகளைப் பதிவுசெய்ய நினைத்தேன். அதை ஓரளவுக்கு சரியாகச் செய்துவிட்டதாகவே நினைக்கிறேன். புத்தகத்திற்குள் உண்மைக்கு மாறாக ஏதாவது சொல்லப்பட்டிருப்பதாகக் கருதினால் சுட்டிக் காட்டுங்கள். கட்டாயமாகப் பரிசீலிக்கிறேன். ஒருவேளை இந்த குண்டுவெடிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் நிறுவ முயன்றால் ஆதாரத்தோடு நிறுவுங்கள். பொத்தாம்பொதுவாக போகிற போக்கில் எழுதிவிட்டுச் செல்வதெல்லாம் பொருத்தமற்றது.

கம்யூனிசம் ஒரு போதும் தீர்வாகாது என நாம் கூறியதை கம்யூனிசம் என்பது கிரையோஜெனிக் ராக்கெட் போன்றது, ராக்கெட் விட்ட பிறகு தோல்வியடைந்தால் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று (நூலாசிரியர்) கூறினார். உணர்வுள்ள உயிருள்ள மனிதனை இயந்திரத்தைப்போல் பாவிப்பது எப்படி என்று நமக்குப் புரியவில்லை. எப்பொழுதுதான் மனிதனுக்கான நடைமுறை சாத்தியங்களை இவர்கள் கண்டுபிடிப்பார்களோ..?

கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த ஒரு அரங்கில் நான் பேசியதை கூச்சமேயின்றி அப்படியே ’மாற்றி’ எழுதியிருக்கும் உங்கள் தைரியத்தை வியக்கிறேன். நான் அங்கு பேசியதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

“கம்யூனிச சமூகம் இதுவரை உலகில் எங்குமே ஏற்படுத்தப்படவில்லை. அப்படியிருக்க கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று சொல்வது எப்படிப் பொருத்தமாக இருக்கும். உதாரனத்திற்கு, ஒரு கிரையோஜெனிக் இயந்திரத்தை எடுத்துக் கொள்வோம். அதை நடைமுறையில் பயன்படுத்திய பிறகுதானே அது வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா என்று சொல்ல முடியும். அது நடைமுறைக்கு வரும் முன்னமே அது தோல்வியடைந்ததாகச் சொல்வது எப்படி சரியான கருத்தாக இருக்க முடியும்? அதுபோல கம்யூனிசம் இதுவரை உலகில் எங்குமே நடைமுறையில் வராதபோதே கம்யூனிசம் தோல்வியடைந்து விட்ட சித்தாந்தம் என்று சொல்வது எப்படிப் பொருத்தமாக இருக்கும்..?”

இதுதான் நான் பேசியதன் சாரம். இதை உங்கள் வசதிக்கு திருத்தி எழுதியிருக்கும் உங்கள் ’நேர்மை(?)’ எனக்கு வியப்பளிக்கிறது. மனிதனுக்கான நடைமுறை சாத்தியங்களை கம்யூனிஸ்டுகள் கண்டு பிடிக்கவில்லை என்ற அரிய கண்டுபிடிப்பை செய்திருக்கிறீர்கள். மார்க்சியம் என்பது என்றுமே ‘மாறாத’ வேதம் அல்ல. அது சமூகத்தைப் பற்றிய ஆய்வுமுறையைக் கற்றுக் கொடுக்கும் விஞ்ஞானம். அது நடைமுறைக்கான தத்துவம். நடைமுறையை உள்வாங்கித் தன்னை தொடர்ந்து செழுமைப்படுத்திக் கொண்டே இருக்கும் தத்துவம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அது வலியுறுத்திச் சொல்கிறது.

”இஸ்லாமிய ஆட்சி ஒன்றே அனைத்துக்கும் தீர்வு என்று நாம் சொன்னதைக் குறிப்பிட்டு அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று (நூலாசிரியர்) கூறினார். இஸ்லாமிய ஆட்சியின் வரலாறுகளை நாவலாசிரியர் படிக்க வேண்டும்”

இப்போதும் அதையே கூறுகிறேன். எப்போது கேட்டாலும் அதையேதான் கூறுவேன். இஸ்லாமிய ஆட்சி அனைத்துக்குமான தீர்வு என்ற கருத்தில் எப்போதுமே எனக்கு உடன்பாடில்லை. சமூகத்தைப் பற்றிய ஆய்வுமுறையோ உற்பத்தி குறித்த புரிதலோ இல்லாமல் இந்தக் கருத்தை நீங்கள் எப்படி முன்வைக்கிறீர்கள் என்றே புரியவில்லை. எனது கொள்ளுத்தாத்தா மாட்டுவண்டியில் பயணித்திருக்கலாம். அப்போதைய காலத்தில் அது பயண நேரத்தைக் குறைக்கும் முக்கிய சாதனமாக அது இருந்திருக்கலாம். இது ராக்கெட்டுகளின் காலம். இந்த இயந்திரகதியான வாழ்க்கை முறையில் மாட்டுவண்டி எனக்குப் பயன் தராது. என்னை இஸ்லாமிய அரசுகளின் வரலாறுகளைப் படிக்குமாறு பரிந்துரைத்தமைக்கு நன்றி. வாசிப்பு எனக்கு எப்போதுமே உவப்பான விசயம்தான். அதேபோல நண்பர் காதர் மைதீனுக்கு அரசு குடும்பம் தனிச்சொத்து என்கிற எங்கல்ஸ் எழுதிய அற்புதமான புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன், இது அரசு, சமூகம், உற்பத்தி குறித்த அடிப்படைப் பார்வையை நண்பருக்குக் கொடுக்கும். 

குறிப்பு: இந்த பதிலின் நகலை வைகறை வெளிச்சம் பத்திரிக்கைக்கும், கீற்று இணையதளத்துக்கும் அனுப்பியிருக்கிறேன்.

- சம்சுதீன் ஹீரா

Pin It