திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு பின்னணியில், அவர் விசாரித்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருக்கிருந்த நிர்பந்தம் காரணமாக இருக்கலாம் என ஊகங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. கோகுல்ராஜ் கொலையில் முக்கிய பங்கு வகித்தவர் என கருதப்படுகின்ற யுவராஜ் தொடர்ந்து ஆதிக்க அரசியல் மற்றும் சாதிய சக்திகளின் பாதுகாப்பில் இருந்து வருகின்றார். அவரை கைது செய்யக்கூடாது என்பதிலும், வழக்கில் சாட்சியங்களை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்பதிலும் காவல்துறையின் நடவடிக்கை கட்டமைக்கப்பட்டிருந்தது.

தனது உறவினர்கள் நண்பர்கள் என எல்லோருடனும் சகஜமாக தொலைபேசியில் உரையாடி வரும் யுவராஜினை சட்டத்தின் முன் நிறுத்துவதில் உள்ள தயக்கம் போன்றவை பாதிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சனநாயக சக்திகளுக்கும் அவ நம்பிக்கை ஊட்டுவதாய் உள்ளது. இதற்கு ஓர் உதாரணம்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உள்ள ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட ஆவணங்களின் பட்டியல். அதில் வழக்கின் கோப்புகள் அனைத்தும் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஆவணங்களை உடனே விஷ்ணுபிரியா தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷ்னுபிரியாவின் மேல் அதிகாரிகளில் ஒருவரான கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (நாமக்கல் மாவட்ட காவல்துறை பொது தகவல் அதிகாரி) உத்திரவிட்டுள்ளது.

இது அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை. இது போன்ற உத்திரவை காவல்துறை உயர் அதிகாரி தனது கீழ் அதிகாரிக்கு இடக் கூடாது. புலன் விசாரணை நிலுவையில் உள்ள ஒரு வழக்கின் கோப்புகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வழங்கத் தடை உள்ளது. அவ்வாறு உள்ளபோது அந்த ஆவணங்களைத் தரவேண்டும் என கட்டளையிட்டுள்ளது முற்றிலும் காவல்துறை புலன்விசாரணையில் குறுக்கீடு மற்றும் அழுத்தம் இருந்ததைக் காட்டுவதாகவே கருத முடியும்.

பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழும் வன்முறைகளுக்கு எதிராக அலட்சியமான தட்டிக்கழிக்கும் பாணியில் புலன்விசாரணை நடத்தப்படுவது புதிதல்ல. காவல்துறை என்ற அமைப்பானது உயர்சாதிய மனப்பான்மையில் உள்ளதன் வெளிப்பாடு அது. முழுக்க ஆணாதிக்க கூறுகளுடன் அது கட்டமைக்கப்பட்டுள்ளது. சாமானியர்கள் அது தங்களுக்கானதாக கருத இயலாது போவதற்கும் இந்த ஆதிக்க மனநிலையில் அதன் செயல்பாடுகள் இருப்பதும் ஒரு காரணம். சட்டத்தின் ஆட்சியையும் சனநாயக ஒழுங்கினையும் காப்பாற்றுதல் என்பதைக் காட்டிலும் அதிகாரத்திற்கு அருகில் உள்ளவர்களை திருப்திபடுத்த தன் சுயத்தை இழக்கின்றது காவல்துறை. பல சமயம் நேர்மையாக பணி புரிய நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும், தண்டிக்கப்படுவதும் நிகழ்கின்றது.

காவல் அதிகாரி விஷ்ணு பிரியாவின் மரணம் காவல்துறை சனநாயக சமூகத்திற்கு ஏற்ப சனநாயகப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது. காவல்துறை அதிகாரிகள் சுதந்திரத் தன்மையோடு புலனாய்வு செய்யும் நோக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி உருவாக்கப்பட வேண்டிய புதிய காவல்துறை சட்டம் இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு பாரபடசமற்ற முறையில் இவ் வழக்கின் விசாரணையினை நடத்தவேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் வேண்டுகின்றது.

- ச.பாலமுருகன், மாநிலச் செயலர் & பேரா.சரஸ்வதி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)

Pin It