bhel 288

திருச்சி பெல் நிறுவனம் தங்களது ஒப்பந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வேலை நிறுத்தப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 150-க்கு மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது மேலும் 200 நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த வித தொழில் வளமும் இல்லாமல் விவசாயத்தை நம்பி இருந்த தமிழகத்தை தொழில் வளர்ச்சி மூலம் வளர்ச்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். 1960-ம் ஆண்டு கேரளாவுக்கு செல்ல இருந்த நவரத்தினம் (தற்போது மஹாரத்தினம்) என்ற அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை திருச்சிக்கு கொண்டு வந்து பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர் அவர்.

இந்த தொழிற்சாலையினால் 19-ஆயிரம் தொழிலாளர்கள் ஆலையில் பணியாற்றி வருகின்றனர். இது சார்ந்துள்ள 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில் 1 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இதன் மூலம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெல் நிறுவனம் தனது ஆர்டர்களை இங்குள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்காமல் வடமாநிலத்திலுள்ள நிறுவனங்களுக்கு கொடுத்ததினால் 150 சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு அப்போதை காங்கிரஸ் கட்சியின் தொழில்துறை அமைச்சராக இருந்த பிரபு பட்டேல் திருச்சி வந்தபோது பெல் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பார்த்து வியந்து போனார். பிறகு அவர் சோனியா காந்தியின் உதவியுடன் இங்குள்ள ஆர்டர்களை தனது மாநிலத்துக்கு கொண்டுச் சென்றார்.

மேலும் இந்தியா முழுவதும் ACF Vendors அமைப்பில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு அதிகப்படியான விலையில் வேலைகளை வழங்கினார். இதனால் இங்குள்ள 150 நிறுவனங்கள் மூடப்பட்டன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்து இன்றும் வறுமையில் உள்ளனர். பலர் இங்கு வேலை செய்து வந்த குடும்பங்கள் வேலைத்தேடி திருவெறும்பூர் பகுதியிலிருந்து வெளியேறி வெளிமாவட்டம், வெமாநிலத்துக்குச் சென்று விட்டனர்.

இந்நிலையில் பெல் நிறுவனம் தனது தொழிற்கொள்கையினால் மேலும் 200 சிறு நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பெல் சார்பு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. மேலும் சில டெண்டரில் நஷ்டம் ஏற்படும் விலையை ஒப்புக் கொண்டுள்ளதால் மற்ற நிறுவனங்களும் நட்டம் ஏற்படும் வகையில் விலையை ஒப்புக் கொள்ள வேண்டி உள்ளது. மேலும் தயாரிக்கும் பொருள்களை பெல் நிறுவனம் காலம்தாழ்த்தி எடுத்துக்கொண்டு அபராத தொகையும் வசூலிக்கிறது. இதனால் சிறு நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் இப்பகுதியில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மேலும் 200 நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு நோக்கிய கம்பெனி மூடப்பட்டதற்கு ஆதங்கப்படும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் இது குறித்து வாய் திறப்பதில்லை. இந்தத் தொழிற்சாலைகள் மூடியதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். காமராஜர் எதற்கு பெல் நிறுவனத்தைக் கொண்டு வந்தரோ அந்த பெல் நிறுவனமே ஆர்டர் இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த ஆர்டரை நம்பியுள்ள சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது.

எனவே பெல் நிறுவனம் தனது தொழிற்கொள்கை மாற்றிக்கொண்டு மீண்டும் சிறு, குறு தொழிற் நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்கவேண்டும் என சிறு நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- சி.சண்முகவேல்

Pin It