அரசின் போலி மோதல் கொலைகளின் உச்சக்கட்ட நாடகம்தான் அண்மையில் ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் அரங்கேற்றப்பட்டது.. திருப்பதி அருகே சித்தூர் மாவட்டத்தில் சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டையை கடத்த வந்த ”கடத்தல்காரர்களோடு” 07.04.2015 அன்று ஏற்பட்ட மோதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக ஆந்திர அதிரடிப் படை அறிவித்தது! அதேபோல், அதே நாளில் "இசுலாமிய தீவிரவாத" இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஐந்து விசாரணை கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சிறைக் காவலர்களை தாக்கி தப்பிக்க முயன்ற போது கொல்லப்பட்டனர் என்று தெலுங்கானா காவல்துறை அறிவித்தது.

இவை இரண்டுமே மோதல் கொலைகள் அல்ல. அப்பட்டமான படுகொலைகள். எளிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட அரச பயங்கரவாதம் என்பது அம்பலமாகியுள்ளது.

andhra encounter

ஆந்திராவில் நிராயுதபாணியான கூலித் தொழிலாளர்கள் மீது ஒரு மணி நேரத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை ஒரு போர் எல்லையில்கூட நிகழாத அபூர்வமான ஒன்று என ஊடகங்கள் வர்ணிக்கின்றன! இத்தகைய ஒரு படுகொலையை இந்தியா சமீப காலங்களில் சந்தித்ததில்லை என்பதுதான் உண்மை.

100 கூலித் தொழிலாளர்கள் அதிரடிப்படையினரை கற்களைக் கொண்டும் அருவாளாலும் தாக்கினார்கள் என்றும் அந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக அதிரடிப் படை அவர்களை தாக்கியதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். கல்லால் அடித்ததாக கூறப்படும் கும்பலை எதிர்கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது ஆந்திர அதிரடிப்படை.. ஒரு பகுதியில் கொலை செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஏழு பேருக்கு துப்பாக்கிக் குண்டு நெஞ்சிலும் தலையின் பின்புறமும் பாய்ந்திருப்பது எதைக் காட்டுகிறது? இறந்தவர்களின் உடலில் தீக்காயம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? மோதல் நடந்ததாக கூறப்படும் பகுதியில் அதற்கான எந்த தடயமும் இல்லையே, ஏன்? கொல்லப்பட்டவர்கள் தவிர மோதலில் ஈடுபட்டவர்களாக கூறப்படும் வேறு யாரும் கைது செய்யப்படாதது ஏன்?

இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கும் இந்த சம்பவத்தைப்பற்றி விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கொல்லப்பட்ட 20 பேரில் 12 பேர் சம்பவத்திற்கு முந்திய தினம் திருப்பதிக்கு வந்த பேருந்திலிருந்து பிடித்துச் செல்லப்பட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன. பிரேத பரிசோதனைச் செய்த ஐந்து பேர் கொண்ட ஆந்திர மருத்துவக் குழு கொல்லப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டுகள் மிக அருகாமையிலிருந்து சுடப்பட்டதாக இருக்க வேண்டுமென கூறியுள்ளனர். ஆந்திரா உயர் நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் சுட்டவர்கள் மீது ஏன் கொலைக் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என வினவியுள்ளது.

இச்சம்பவம் பற்றிய உண்மைத் தன்மையை அறிய முற்பட்ட மனித உரிமை அமைப்புகள் இதனை “போலி மோதல் கொலை” என்றும்; மோதல் ஏற்பட்டதற்கான எவ்வித தடயமும் இல்லை என்றும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் இடத்தில் ரத்தக் கறை ஏதும் பார்க்க முடியவில்லை என்றும் பதிவு செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்களுக்கு அருகில் கிடந்த செம்மரக்கட்டைகள் மோதலின் போது வெட்டப்பட்டவைகளாக தோன்றவில்லை என்பதையும் பதிவு செய்திருக்கின்றனர். சம்பவத்திற்கு முன் தினம் ஆந்திர காவல் துறையின் கைதிலிருந்து தப்பித்த மூன்று பேர் எப்படி ஆந்திர காவல் துறையினரால் மற்றவர்கள் பிடிக்கப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என சாட்சியம் கூறியுள்ளனர். PUDR என்னும் மனித உரிமை அமைப்பின் தலைமையில் மேற்கொண்ட உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் மீது அத்துமீறி வனப்பகுதியில் நுழைந்தார்கள் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி மோதலின் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்த இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியை ஒடுக்க நினைப்பது எதனால்?

எட்டுப் பேர் கொண்ட உண்மை அறியும் குழுவில் இடம் பெற்ற, தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஐந்தாண்டுகள் பணி புரிந்த, சத்தியபிரதா பால் என்பவர் தம்முடைய அனுபவத்தில் இத்தகைய அப்பட்டமான போலி மோதலை கண்டதே இல்லை என்று பதிவு செய்திருக்கிறார். ஹைதிராபாத் உயர் நீதிமன்றம் எரிக்கப்படாமல் இருந்த ஐந்து பேரின் உடலை மறுபிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென ஆணையிட்டது.

பழங்குடிகளுக்கான தேசிய மனித உரிமை ஆணையத்தின் துணைத் தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் மோதல் நடந்ததிற்கான எவ்வித நியாயமான காரணங்களும் சொல்லப்படவில்லை என பதிவு செய்திருக்கின்றார். தேசிய மனித உரிமை ஆணையம், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் நீதி விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறது. ஆந்திரா உயர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான நாட்குறிப்பினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளது. மேலும், இதனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டுமென்றும், அதிகப்பட்சம் 60 நாட்களுக்குள் விசாரணைக் கமிஷன் தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஆணையிட்டுள்ளது!

மக்கள் சிவில் உரிமைக் கழகம் இதற்கு காரணமானவர்கள் மீது கொலைக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது ”படுகொலை” குற்றத்திற்க்காகவும் “படுகொலைச் செய்ய சதி செய்த” குற்றத்திற்க்காகவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசோ ஆந்திர அரசு அதிரடிப்படையின் நடவடிக்கையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கோரியிருக்கிறது. .

ஆக, இச்சம்பவம் அப்பட்டமான படுகொலை; வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் தமிழகக் கூலித்தொழிலாளர்கள் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதம். சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப்பிடிக்க வேண்டிய அரசே சட்டத்தை மிதிப்பதற்கான சாட்சியமாக இச்சம்பவங்கள் இருக்கின்றன. அரசியல் பின்புலத்துடனும், காவல் துறை உட்பட அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெறும் செம்மரக் கடத்தல்களுக்கு பின்னால் உள்ள மாஃபியாக்களை காப்பாற்றும் இந்த அரசாங்கங்கள், அப்பாவிகளான கூலித் தொழிலாளர்களை படுகொலை செய்திருக்கிறது. சட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ எழும் எதிர்ப்புகளை சந்திக்க இயலாத அரசு எந்திரம் போலி மோதல் கொலைகளை ஒர் ஆயுதமாக அரசு கையாள்கிறது என்பதை இச்சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன.

அதேபோல் சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லாத நிலையில் போலி மோதலை நடத்தி இஸ்லாமிய ”தீவிரவாதிகளை” கொன்ற தெலுங்கானா சம்பவம் அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை, குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான, மற்றும் தலித் மக்களுக்கு எதிரான கோர முகத்தை கிழித்துக் காட்டுகிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஏற்றிச் செல்லப்பட்ட வேனில் கை விலங்கோடு இருக்கும்போது இவர்கள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர் என்று கூறுவதை ஏற்க முடியுமா? விசாரணைக் கைதிகளாக வேவ்வேறு சிறைகளில் இருந்த இவர்களை ஒரே சிறையில் (வாரங்கல் சிறையில்) அடைத்ததற்கான உள் நோக்கம் என்ன? போலி மோதலில் இவர்களை அழிப்பதுதான் நோக்கமா?

மத்திய இந்தியாவிலும், காஷ்மீர், மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடும் மக்கள் மீது இராணுவ அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரிலும், இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரிலும், பிரிவினைவாதிகளை தடுப்பது என்ற பெயரிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் இதன் நீட்சியே. இராணுவத்தின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) பயன்படுத்தி சந்தேகத்தின் பெயரில், விசாரணை என்ற பெயரில், யாரை வேண்டுமானாலும் சிறைப்படுத்தலாம், சுட்டுத் தள்ளலாம், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தலாம் என்ற சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென ஐரோம் ஷர்மிளா என்ற பெண் போராளி மணிப்பூரில் கடந்த 13 ஆண்டுகளாக அறவழியில் தொடர்ந்து பட்டினிப் போர் நடத்திக்கொண்டிருக்கிறார்! என்பதை நாம் எத்தனைப் பேர் அறிவோம்?

அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அரசு அடக்குமுறைக்கு எதிராகவும் அணி திரள்வது எல்லா ஜனநாய இயக்கங்களுடைய கடமையாகும். சட்டத்தின் ஆட்சி கோலோச்ச வேண்டுமானால் சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் சட்டத்தை மீறுவதை அம்பலப்படுத்தியாக வேண்டும். இதற்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் தேவையை வலியுறுத்தி பல்வேறு சமூக இயக்கங்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பான ”அரசு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” தெருமுனைக் கூட்டங்களை நடத்த முன் வந்துள்ளது. இந்த பரப்புரைக்கு துணை நிற்போம்! மக்கள் அதிகாரத்திற்கான குரலை வலுப்படுத்துவோம்!!

- பொன்.சந்திரன்

Pin It