பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய செந்தமிழர் சீமான் அவர்களுக்கு நேச வணக்கம்!

ஈழ இனப்படுகொலை காலத்திலிருந்து உங்கள் தமிழ்ப் பற்றுத் தெறிக்கும் உரைகளை மிகுந்த ஆர்வத்துடனும் வியப்புடனும் கேட்டு வருபவன் நான். அரசியலில் புதுக் குருதியாக ஊற்றெடுத்திருக்கும் உங்களை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். தமிழர் பிரச்சினைகளில் உங்கள் நிலைப்பாடுகள் பலவும் எனக்கு மிகவும் பிடிக்கும்; ‘திராவிட எதிர்ப்பு’ உட்பட.

seeman 313அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் உங்கள் நேர்காணல் பார்த்தேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிப்பதை ஈழத் தமிழர்கள் எதிர்க்கிறார்களே என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலடி, தமிழில் வழிபாடு செய்யாத எந்தச் சமயத்தையும் ஏற்க முடியாது என்று கூறிய உங்கள் துணிச்சல், தமிழர்கள் ஏன் சமயம் மாறுகிறார்கள் என்பதற்கு நீங்கள் அளித்த விளக்கம் என்று எல்லாமே வழக்கம் போலவே அருமையாகவும் எளிமையாகவும் இருந்தன. நன்றி!

ஆனால், ‘யார் தமிழர்’ என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த விளக்கமும், ம.தி.மு.க தலைவர் வை.கோ முதல்வர் ஆகலாமா என்ற கேள்விக்கான உங்கள் பதிலும்... பொறுத்துக் கொள்ளுங்கள், முகம் சுளிக்க வைத்தன!

இத்தனை நாட்களாக ‘திராவிடக் கொள்கை’ இனி தமிழர்களுக்கு ஏற்றதில்லை என்பதால்தான் நீங்கள் மற்ற திராவிடத் தலைவர்களோடு சேர்த்து வை.கோ அவர்களையும் புறக்கணிக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்த நேர்காணலைப் பார்த்த பிறகுதான் புரிகிறது நீங்கள் அவர் பிறப்பை வைத்து அவரை எடை போடுகிறீர்கள் என்பது.

ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன், ஒருவர் தமிழரா இல்லையா என்பது அவர் வாழும் வாழ்க்கையை வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டியதா அல்லது அவர் பிறப்பை வைத்துத் தீர்மானிக்கப்பட வேண்டியதா?

தமிழராகப் பிறந்து விடுவதாலேயே ஒருவர் தமிழராகி விட முடியுமா? அப்படியானால் விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தே ஈனப் பிழைப்புப் பிழைத்து வரும் டக்ளஸ் தேவானந்தா தமிழன், மேதகு.பிரபாகரன் அவர்கள் தன்னை நம்பி ஒப்படைத்த பெரும் படையோடு மொத்தமாய்ப் போய் சிங்களன் காலில் விழுந்து இனத்தையே காட்டிக் கொடுத்த கருணா தமிழன், நடந்த இனப்படுகொலைக்கு அன்றைய நிதியமைச்சர் என்ற முறையில் இரண்டாயிரம் கோடிக்குக் காசோலை தீட்டிக் கொடுத்த சிதம்பரம் தமிழன்; இவர்களெல்லாரும் தமிழர்களை ஆளலாம். ஆனால் தமிழர்களுக்கெனத் தனித்தன்மையும் சிறப்பும் இருக்கின்றன என்பதை உணரச் செய்த பெரியார், நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே ஈழத் தமிழர்களுக்காகவும் விடுதலைப்புலிகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் வை.கோ ஆகியோர் தமிழர்கள் இல்லை, வை.கோ முதல்வர் ஆகக்கூடாது; அப்படித்தானே ஐயா? உங்களை நம்பிப் பின்பற்றிய எங்களுக்கு இதுதான் நீங்கள் கற்பிக்கும் அரசியல் நெறியா? இஃது அணுவளவேனும் சரியா?

ஐயா! ஒருவர் தமிழரா இல்லையா என்பது அவருடைய உணர்வின் அடிப்படையிலானதாகத்தான் இருக்க முடியுமே தவிர, ஒருபொழுதும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது. தமிழ் உணர்வு உள்ளவரே தமிழர்! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதை உயிராக நேசிப்பவர்கள், தமிழ் மொழிக்கு ஓர் ஊறு நேர்ந்தால் தன்னையும் அறியாமல் பதறுபவர்கள், உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அது தனக்கே ஏற்பட்டதாகத் துடிப்பவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும், எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் அவர்கள் தமிழர்களே! அப்படிப்பட்ட உண்மையான தமிழர்களுக்குத்தான் தமிழர்களை ஆளும் தகுதியும் உண்டு! இதை நீங்கள் மறுப்பதாக இருந்தால் அந்த மறுப்பை நாங்கள் ஒப்புக் கொள்வது இருக்கட்டும், இந்தத் தமிழ்ச் சமூகம் ஒப்புக் கொள்வது இருக்கட்டும், தலைவர் பிரபாகரன் ஒப்புக் கொள்வாரா?... வை.கோ தமிழர் இல்லை என்கிற உங்கள் கூற்றை அவர் ஏற்றுக் கொள்வாரா?... சிந்தியுங்கள்!

ஐயா! இதே சிந்தனையின் அடிப்படையில்தான் நீங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலையும் அணுகுவதாகத் தெரிகிறது.

இதுவரை, தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பதை மட்டுமே தெரிவித்து வந்த ‘நாம் தமிழர் கட்சி’ முதன்முறையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தாங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்திதான்!

இதுவரை, தமிழ்ப் பற்றுள்ள எத்தனையோ கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியையும் பிடித்திருக்கின்றன; தமிழர் வாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், அவர்கள் எல்லோருமே தென்னிந்தியர் அனைவருக்கும் பொது அரசியல் கொள்கையான ‘திராவிடம்’ என்பதை முன்வைத்து அரசியல் வாழ்வு கண்டவர்கள். ஆனால், தமிழர்களுக்கான அரசியல் கொள்கை என்றாலே அது ‘திராவிடம்’தான் என்று கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக இருந்த நிலைமையை மாற்றி, முதன்முதலாகத் தமிழர்களுக்கு என ஒரு தனி அரசியல் கொள்கையை முன்வைத்த கட்சியான ‘நாம் தமிழர்’ தேர்தலில் போட்டியிடுவது தமிழர் அரசியல் உலகில் குறிப்பிடத்தக்க ஒரு வரலாற்று நிகழ்வு என்பதாகவே கருதுகிறேன். இந்த நல்முடிவுக்காக நன்றி!

ஆனால் அதே நேரம், இந்தத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ தனித்துப் போட்டியிடும் என்கிற அறிவிப்புதான் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது!

தமிழர்களுக்காக வாழ்நாளெல்லாம் எவ்வளவுதான் போராடினாலும் வை.கோ தமிழராகி விட முடியாது என்கிற உங்கள் கொள்கை சரியெனவே வைத்துக் கொள்வோம்! ஆனால், கொள்கை, கோட்பாடு, இவற்றிலுள்ள நியாயங்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, நம் மக்களின் தற்பொழுதைய நிலை என்ன என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்!

தமிழினம் தற்பொழுது எப்பேர்ப்பட்ட அழிவுக் காலக்கட்டத்தில் இருக்கிறது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஈழத்தில் நம் மக்கள் உயிருடனே நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள். இங்கேயும் மீனவர்கள் தாக்கப்படுதல், அணு உலை, தமிழ்நாட்டையே வாழத் தகுதியில்லாததாக மாற்றக்கூடிய மீதேன் திட்டம் என அடுத்தடுத்துத் தமிழினத்தை வேரறுக்க அபாயங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இவற்றுக்கிடையில், நடுவணரசுப் பள்ளிக் கல்வியை (CBSE) உயர்த்திப் பிடித்து சமச்சீர்க் கல்வி, தமிழ் வழிக்கல்வி ஆகியவற்றை மதிப்பிழக்கச் செய்தல், அதன் மூலம் இந்தி, சமசுகிருதம் போன்றவற்றைத் திணித்தல் என அடுத்த தலைமுறைக்குத் தமிழே தெரியாமல் மறக்கடிப்பதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. மொத்தத்தில்,

•             நேரடியாகத் தாக்கி அழித்தல்

•             வாழ்வாதாரத்தை அழிப்பதன் மூலம் வாழவிடாமல் அழித்தல்

•             வாழ்விடத்தை வாழத் தகுதியில்லாத இடமாக மாற்றுவதன் மூலம் அழித்தல்

•             தாய்மொழியையும் அது சார்ந்த பண்பாட்டையும் மறக்கடிப்பதன் மூலம் இன அடையாளத்தை அழித்தல்

என எல்லா வகைகளிலும் தமிழர்களை அழிப்பதற்குண்டான முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படி, இனமே அழிந்து வரும் நிலையில் திராவிட அரசியல், தமிழர் அரசியல் எனக் கோட்பாட்டு அடிப்படையிலான நுட்பமான வேறுபாடுகள் குறித்து நீங்கள் கவலைப்படுவதும், அதன் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுப்பதும் நியாயமா எனச் சிந்தித்துப் பாருங்கள்! மக்களுக்கான முதல் அடிப்படைத் தேவை ‘பாதுகாப்பு’! அதை உறுதிப்படுத்தாமலே இனம், அடையாளம், உரிமை போன்ற அடுத்த கட்டப் புரிதல்களை மக்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது முறையா? சாதி, சமயம், திராவிடம், இந்தியம் ஆகிய தேவையற்ற அடையாளங்களையெல்லாம் தூக்கியெறிந்து ‘தமிழர்’ எனும் ஒரே அடையாளத்துக்குள் நாம் அனைவரும் ஒருங்கே கூட வேண்டுமானால், முதலில் தமிழர்கள் அனைவரும் உயிருடன் இருக்க வேண்டும்; அதுவும், தமிழர்களாக இருக்க வேண்டும்! அதற்கு உடனடித் தேவை ‘தமிழர் பிரச்சினைகள் அனைத்திலும் சரியான நிலைப்பாடு கொண்ட ஓர் ஆட்சி!’. ‘நாம் தமிழர்’ தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் அப்படி ஓர் ஆட்சி அமையும் என்றால், நீங்கள் எடுத்த இந்த முடிவு சரியானதுதான். ஆனால், அப்படி நடக்கும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

கனிவு கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்! தமிழ் உணர்வு, விடுதலைப்புலிகளை ஆதரித்தல், தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமிறங்கிப் போராடுதல் ஆகியவைதான் தமிழ் மக்களிடையே உங்களுக்கு இருக்கும் அடையாளங்கள். ஆனால், இதே அடையாளங்கள் ம.தி.முக-வுக்கும் இருக்கின்றன. தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் தவிர தமிழ்நாட்டில் சாதி, சமயப் பிரிவினைகளை எதிர்க்கும் கட்சிகள் எவை என்று பார்த்தால், நாம் தமிழரும், ம.தி.மு.க-வும் மட்டும்தான். கொள்கை, செயல்பாடு, நோக்கம் என இப்படி எல்லா வகைகளிலும் ஒரே மாதிரி இருக்கும் நீங்கள் இருவரும் தேர்தலில் தனித்தனியே பிரிந்து போட்டியிடுவதால் தமிழ் உணர்வாளர்களின் வாக்குகளும் பிரியும், கட்சி - சாதி - சமயச் சார்பு பாராமல் வாக்களிக்கும் பொதுமக்களின் வாக்குகளையும் ஓரணியில் திரட்ட முடியாமல் போகும்.

இப்படி, இருக்கிற வாக்கு வங்கியையும் முழுமையாகப் பெற முடியாமல், பொது வாக்குகளையும் மொத்தமாகக் கவர முடியாமல் நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. இது மீண்டும் தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வரத்தான் வழி வகுக்கும். அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? கருணாநிதியோ ஜெயலலிதாவோ மீண்டும் முதல்வராக வந்தாலும் கவலையில்லை; ஆனால், வை.கோ-வோடு சேர மாட்டேன் என்பதுதான் உங்கள் நிலைப்பாடா? இது உங்களுக்கே நகைமுரணாகத் தோன்றவில்லையா?

அதற்காக நான் உங்களை திராவிட எதிர்ப்பையே கைவிட்டு விடும்படிக் கேட்கவில்லை. ‘திராவிடம்’ என்பது எதிர்க்கப்பட வேண்டிய கொள்கைதான் என்பதில் எனக்கு அணுவளவும் மாற்றுக் கருத்து இல்லை. ‘திராவிடம்’ எனும் வகைப்பாட்டுக்குள் வரும் மற்ற இனத்தவர்கள் நம்மை திராவிடர்களாக இல்லாவிட்டாலும் சக மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை என்பது இங்கு அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் தங்களைத் தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும், மலையாளிகளாகவும் மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையில் தமிழர்களாகிய நாம் மட்டும் நம்மை ‘திராவிடர்கள்’ எனக் கருதுவது எவ்வளவு பெரிய இளித்தவாய்த்தனம் என நீங்கள் கூறுவது புரியாமல் இல்லை.

ஆனால் அதற்காக, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தமிழர்களின் அரசியல் கொள்கையாக நிலைபெற்றுவிட்ட ‘திராவிட’த்திலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் இவ்வளவு குறுகிய காலக்கட்டத்துக்குள் வெளிவந்து விட வேண்டும்; வெளிவந்து நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே உங்களிடம் ஆட்சிப் பொறுப்பை அளித்து விட வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி நடக்கும் என்பதுதான் என் கேள்வி.

அப்படி நடக்காத ஓர் எதிர்பார்ப்பை முன்னிட்டு நீங்கள் தமிழ் உணர்வாளர்களின் வாக்கு வங்கியை ஏன் சிதறச் செய்கிறீர்கள் எனத்தான் கேட்கிறேன்.

அப்படி உணர்வாளர்களின் வாக்குகளைச் சிதறச் செய்து மீண்டும் இரு திராவிடக் கட்சிகளே ஆட்சிக்கு வர நீங்கள் ஏன் உதவுகிறீர்கள் எனத்தான் கேள்வி எழுப்புகிறேன்.

இனம் - மொழி - பண்பாடு என எல்லா வகைகளிலும் தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஒத்த கருத்துடைய தலைவர்கள் அனைவரோடும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பதன் மூலம் ஆட்சியைப் பிடித்து உடனடியாக மக்களைக் காப்பாற்ற வேண்டிய நீங்கள், அதற்கு வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் தனித்து நின்று உங்கள் செல்வாக்கைச் சோதித்துப் பார்த்துக் கொள்ள முயல்வது முறையா எனத்தான் வினவுகிறேன்.

தமிழ் இனத்தின் இன்றைய முதல் இன்றியமையாத் தேவை ஒற்றுமை. ஆனால், திராவிடத்துக்கு மாற்றாகத் ‘தமிழ் தேசியம்’ எனும் புதிய அரசியல் கொள்கையை முன்வைக்கும் நீங்கள் உங்களைப் போலவே களத்திலிறங்கிப் போராடும் உண்மையான மற்ற தமிழ்த் தலைவர்களும் அந்தக் கொள்கையை ஏற்று உங்கள் உங்கள் வழிக்கு வரும்படி செய்யாமல், ஏற்கெனவே சாதி, சமயம், கட்சி எனப் பிரிந்து கிடக்கும் தமிழ் மக்கள் புதிதாக ‘திராவிடம் - தமிழ் தேசியம்’ எனக் கோட்பாட்டின் அடிப்படையிலும் பிரிந்து அடித்துக் கொள்ளும்படி செய்வது எந்த வகையில் நியாயம்?

சமூக வலைத்தளங்களில் வார்த்தைச் சண்டையாக நாள்தோறும் அரங்கேறும் இந்தப் பிரச்சினை, ‘கத்தி’, ‘புலிப் பார்வை’ பட விவகாரத்தின்பொழுது தெருவுக்கு வந்து நம் இன ஒற்றுமையின் அழகைச் சந்தி சிரிக்கச் செய்த இந்தப் பிரச்சினை, அடுத்ததாகச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது நம்மைப் பார்த்து உலகமே சிரிக்க ஏதுவாக வேண்டுமா?

ஐயா! சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் ம.தி.மு.க-வோடு கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொண்டால் பெரியார் திராவிடக் கழகம், மே 17, சேவ் தமிழ்சு எனத் தமிழ் உணர்வு இயக்கங்கள் அனைத்தின் ஆதரவும் மொத்தமாக உங்கள் கூட்டணிக்குக் கிடைக்கும். அந்த ஆதரவே தமிழ் உணர்வாளர்கள் அனைவரின் வாக்குகளையும் ஓரணியில் திரட்டும். தி.மு.க, அ.தி.மு.க தவிர மற்ற எல்லாமே சாதி, சமயக் கட்சிகளாக இருக்கும் நிலையில் சாதி, சமய அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாத, தமிழர் பிரச்சினைகளுக்காகக் களமிறங்கிப் போராடுகிற நீங்கள் இருவரும் இப்படிச் சேர்ந்து நிற்பது தி.மு.க, அ.தி.மு.க அல்லாத புதிய ஆட்சியை விரும்பும் அனைவரின் வாக்குகளையும் உங்கள் கூட்டணியை நோக்கி ஈர்க்கும். தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பு தமிழர்களுக்காகப் பாடுபடும் உங்கள் கரங்களிலேயே வந்து சேரும். தமிழர் பிரச்சினைகளும் தீரும்.

மாறாக, இவ்வளவுக்கும் பிறகும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்பதுதான் உங்கள் முடிவு எனில், அப்புறம் உங்கள் விருப்பம். உங்களுக்குத் தமிழர் பிரச்சினைகள் தீர்வது முக்கியமா, வை.கோ எந்தச் சாதியில் பிறந்தவர் என்பது முக்கியமா?... நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!...

கொள்கையா, தமிழர் நலனா? முடிவு உங்கள் கையில்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It