பா.ஜ.க. அரசின் ஒராண்டு கால ஆட்சியை முன் வைத்து...

நல்ல காலம் பொறக்குது” என்று உரத்த குரலில் தொடங்கிய பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) ஒராண்டு கால ஆட்சியின் சாதனைகள் என்ன? என்ற கேள்விக்கு வேதனைதான் மிஞ்சுகிறது.

”தூய்மை இந்தியா” திட்டத்தை ஒரு புறம் அறிவித்துவிட்டு சமூக நலத்துறையின் முக்கிய அங்கமான கல்வி, ஆரோக்கியம், குழந்தைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நிதி ஒதுக்கிடு குறைக்கப்பட்டுள்ளது ஏன்? இந்த துறைக்கு 2014-15 ஆண்டை ஒப்பிடும்போது 2015-16 ஆண்டிற்கான நிதி ஒதுக்கிடு உரூபா 40,205 கோடி குறைக்கப்பட்டுள்ளது!

மாறாக 2014-15 ஆண்டில் மட்டும் பெரு முதலாளிய நிறுவனங்களுக்கு 70,000 கோடிக்கு மேல் நிவாரணங்களும் வரிச் சலுகைகளும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன!

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 35% மேல் இன்னும் பயன்படுத்தாமல் இருக்கும்போது தங்குதடையற்ற தொழில் முன்னேற்றத்திற்காக என்று கூறி மேலும் நிலத்தை கையகப்படுத்த வெள்ளயன் ஆட்சிக்காலச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர மீண்டும் மீண்டும் அவசரச் சட்டமாக கொண்டு வருவது யாருடைய நலனிற்காக? உணவு உத்திரவாதத்திற்கு தேவையான பல்பயிர் விவசாய நிலங்கள் உட்பட உள்ள விவசாய நிலங்களை பறிக்க நினைப்பது யார் நன்மைக்காக?

’நாட்டின் முதுகெலும்பு விவசாயம்’ என்பது உண்மையானால் உழவர்களை விவசாய நிலங்களைவிட்டு வெளியேற்றும் திட்டத்தை யாருக்காக அமல்படுத்துகிறது மத்திய அரசு?

”இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” (MAKE IN INDIA) என்று அழைப்பு விடுத்துவிட்டு ஒவ்வொரு அயல் நாட்டு பயணத்தின் போதும் இங்குள்ள பெரு நிறுவன முதலாளிகளுடன் பயணம் மேற்கொண்டு போடப்படும் ஒப்பந்தங்கள் யாருக்காக? சீனாவில் மட்டும் இத்தியாவின் இரண்டு தொழில் குடும்பங்களுக்காக 22,000 கோடி ரூபாய்க்கான தொழில் ஒப்பந்தத்தை போட்டது இந்தியாவில் உற்பத்தி செய்வதற்காகவா?

பரந்துபட்ட தொழில் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் அடிப்படையாக இருக்கும் சிறு/குறு தொழில்களை ஊக்கிவிக்காமல் பகாசுர பன்னாட்டு கம்பனிகளுக்கு நமது சந்தையை திறந்துவிடுவது எதற்காக?

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி உட்பட அன்னிய முதலீட்டிற்கு ரத்தின கம்பளம் விரித்திருப்பது யாருடைய லாபத்திற்காக?

தமிழகத்தின் வாழ்வாதாரச் சிக்கல்களான முல்லைப் பெரியாறு, காவிரி, மேகதாடு அணை, மீனவர்கள் படுகொலை போன்ற எந்த சிக்கலுக்கும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்?

தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டம், அழிவு திட்டங்களான கூடங்குளம் அணு உலைகள், தேனி ந்யூட்ரினோ திட்டம், தாது மணல் கொள்ளை போன்ற திட்டங்களை மத்திய மாநில அரசுகள். ஊக்குவிப்பது எதற்காக?

ஈழத்தமிழர்களுக்கான நீதி, மறுவாழ்வு, சுயாட்சி மற்றும் ஏழு தமிழர்களின் விடுதலை போன்ற சிக்கல்களுக்கும் உறுப்படியான நடவடிக்கைகள் இல்லையே ஏன்?.

இறுதியாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை குலைத்து இந்துத்துவ வெறியாட்டங்களுக்கான, காவிப்படைகளின் களமாக இந்தியத் துணைக்கண்டம் மாற்றப்பட்டு வருகிறதே? . மதச் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களும், பழங்குடியினரும் அஞ்சி வாழக்கூடிய நிலையை சங் பரிவாரங்கள் உருவாக்கி வருகின்றனவே? “காதல் புனிதப் போர்” (”காதல் ஜிஹாத்”) என்றும் ”தாய் மதத்திற்கு திரும்புவது” (”கர் வாப்ஸி”) என்றும் காந்தியடிகளை படுகொலைச் செய்த கோத்சேவுக்கு கோவில் கட்டுவதும், முசுலிம் மக்களுக்கான வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என்றும் தாஜ்மகாலில் பூசை செய்ய அனுமதி வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் வெளியிடும் வக்கிரக் கருத்துக்களை மத்திய அரசு கண்டிக்கவில்லையே ஏன்?.

மத்திய அரசை விமர்சிப்பவர்கள் தேசத் துரோகிகள் என்கிறது பா.ஜ.க அரசு. மத்திய அரசை விமர்சனம் செய்த சென்னையில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி மாணவர்களின் “அம்பேத்கர்-பெரியார் கல்வி வட்டம்” தடை செய்வதற்கு மத்திய அரசே காரணம். காவிமயமாக்கலுக்கு எதிராக எழுப்பபடும் குரல்வளை நசுக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

ஆக, மக்களின் அடிப்படையான பிர்ச்சனைகள் எதற்கும் முகம் கொடுக்காத பா.ஜ.க அரசு அறிவித்த “நல்ல காலம் பிறக்கும்” என்ற வாக்குறுதி மரணித்து ஒராண்டாகிவிட்டது. அதற்கு அஞ்சலி செலுத்துவோம்!

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரு முதலாளிக்கும் சாமரம் வீசும் இந்துத்துவ பாசிச ஆட்சியை வீழ்த்த ஜன நாயக சக்திகளே ஒன்று திரள்வோம். மக்கள் அதிகாரத்தை நிறுவ தன்னாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடிப்போம்.

ஊழலற்ற ஆட்சி அமைய; மதவாதத்திலிருந்து நாட்டை மீட்க; புல்லுருவி முதலாளியத்தை வீழ்த்த சூளுரைப்போம்!

- பொன்.சந்திரன்

Pin It