Maoist Shyna

 “உங்கள் அரசும், உங்கள் காவல் துறையும் என்னை ஒரு மாவோயிஸ்டாக மாற்றியுள்ளன; சாதாரண கருத்தியல்வாதியாக இருந்த என்னை ஒரு முழுநேர மாவோவாதியாக மாறுவதற்கான அரசியல் மன உறுதியை நீங்களே வழங்கியுள்ளீர்கள்!” என அந்நாள் முதலைமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எழுதிய மடலில் பி.எ. ஷைனி கூறியுள்ளார்.

 ஆனால், இக் கடிதத்தைப் பெற்ற முதலைமைச்சர் அச்சுதானந்தன், அதை கண்டுகொள்ளாமல் அலட்சியப் படுத்தினார்!

 கேரளத்தின் மையப் பகுதியில் ஒரு இசுலாமிய குடும்பத்தில் பிறந்தவர்தான் ஷைனி; மாவோயிசத்தை தழுவிக் கொண்டதால், தன் உயிரையும், தனது இரு பெண் குழந்தைகளின் எதிர் காலத்தையும் பேரபாயத்தில் வைத்துள்ளார்! தன் குடும்பத்தின் மீதான காவல் துறையின் தாங்கொண தொடர் துன்புறுத்தலே இதற்குக் காரணம் என ஷைனி குற்றம் சாட்டுகிறார்.

 மேற்கு வங்கத்திலிருந்து வந்த சில மாவோவாதிகள் ஒரு இரகசிய கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் தகவலைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு சனவரி 10-ம் நாள் ஷைனியின் வீட்டை கேரளக் காவல் துறையினர் திடீர்ச் சோதனை செய்தனர்; பல மனித உரிமை செயற்பாட்டாளர்களும், ஷைனியும், அவரது குழந்தைகளும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர்; எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், மேற்கு வங்க மற்றும் ஆந்திர பிரதேசத்திலுள்ள மாவோயிச இயக்கங்களுடன் ஷைனி தொடர்பு வைத்துள்ளார் என காவல் துறை தொடர்ந்து சொல்லி வந்தது.

 ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர் மட்ட சி. பி. அய்(மாவோ) தலைவர் ஒருவர் தங்கியிருந்த பெரும்பாவூரிலுள்ள ஒரு வீட்டை காவல் துறை சோதனையிட்டது; இதனைத் தொடர்ந்து, ஷைனி தன் குழந்தைகளுடன் தலை மறைவானார்.

 ஆந்திரப் பிரதேச சிறப்புக் காவல் படை 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மல்லா ரெட்டியை அங்கமாலியில் வைத்து கைது செய்ததது; தானும், தன் உதவியாளரும், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் கேரளா வந்ததாக காவல் துறையிடம் ரெட்டி “மொழி” நல்கினார்.

 ஷைனி குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், ரெட்டி பயன்படுத்திய மடிக் கணினியை கைப்பற்றுவதற்காக அங்கு சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்; அவர்களுடைய கூற்றுக்கு ஆதரவாக எந்த ஒரு சான்றும் இல்லாத போதும், ஷைனியும் அவரது கணவர் ரூபேஷும், அவர்களுடைய வீட்டில் தான் ரெட்டியை மறைத்து வைத்தனர் என்று காவல் துறை அடிக்கடி கூறி வந்தது.

 மென் மேலும் பிரச்சனைகள் வரும் என்பதை மனங்கொண்டு தனது பணி விலகல் கடிதத்தை பதிவு அஞ்சலில் அனுப்பினார். ஆனால், கேரளா உயர் நீதிமன்ற பதிவாளர் அதனை ஏற்க மறுத்தார்:எனவே, பின்னர் இக் கடிதத்தை நேரில் கொடுப்பதற்காக ஒருவரை ஷைனி அனுப்பினார்.

 “அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளும். குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பும் என்னை தீவிர அரசியலில் பங்கெடுப்பதை தடுத்தன; இக் காரணங்களுக்காகவே, நான் கேரள உயர் நீதி மன்றத்தில் எழுத்தர் பணியை தெரிவு செய்திருந்தேன்; இப்போது காவல் துறை என்னை நிழலாக பின் தொடர்கிறது; என் குழந்தைகளின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது; எந்த ஒரு தீவிர இடது அமைப்புகளோடும் எனக்கு எவ்வித தொடர்பு இல்லையாயினும் , காவல் துறை எனக்கு கடும் மன உளைச்சலை தந்து கொண்டிருந்தது” எனக் கூறி, மாவோவாதிகளுடன் தான் சேர்வதற்கு எடுத்த முடிவை நியாயப் படுத்துகிறார் ஷைனி.

 கேரள உயர் நீதி மன்ற பதிவாளர் சதீஷ் சந்திரன் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். கேரள உயர் நீதி மன்ற பணியாளர் சங்க முன்னாள் தலைவர் டி. எ. சுதீஷ் கூறுவதாவது:” ஷைனி பணியிலிருந்து விலகி ஈராண்டாகிறது; பதிவாளர் பணி நீக்க ஆணையை நல்கிய போது அதை இரத்து செய்வதற்கு பணியாளர் சங்கம் கடும் நெருக்கடியை கொடுத்தது. அப்போது, ஷைனிக்கு இடது தீவிரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை. இப்போது மாவோ வழியை ஏன் தெரிவு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை”. கேரள உயர் நீதி மன்ற பணியாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஷைனி இருந்தார்.

 “என்னுடைய ஆள்வரைக்குள் ஷைனி மீது எந்த ஒரு வழக்கும் இல்லை” என கொச்சி மாநகர ஆணையர் மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்தார். கலமசேரி காவல் துறை திடீர் சோதனை நடத்திய போதிலும், அங்கும் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

 தன்னுடைய தொடக்க காலத்தில் தீவிர மார்க்சிய அனுதாபியாக ஷைனி இருந்தார்; கல்லூரி நாட்களில் சி. பி. எம். கட்சியினின்று ஒதுங்கத் தொடங்கினார். முதுகலை படிப்பை முடித்த பின்னர், 1998-ம் ஆண்டு கேரள உயர் நீதி மன்றத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

 “ஷைனி, கொச்சி மண்டல ஏற்றுமதி தொழிலாளர் யூனியனை அமைத்தார்; அன்றிலிருந்து ஷைனிக்கு துயரங்கள் தொடங்கின; இப் பகுதியிலுள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கின; கடுமையான பணிச் சூழல் நிலவியது; எனவே, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் துயரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்” என ஷைனியின் சகாக்கள் கூறினர்.

 “ஆதிவாசி கோத்ரா மகா சபா” எனும் அரசியல் சார்பற்ற அமைப்பின் செயல்பாடுகளில் ஷைனி தன்னை இணைத்துக் கொண்டார்; இந்த அமைப்பு பழங்குடியினரின் நில மீட்புக்காக போராடியது. இத் தகு பொது தளங்களில் ஷைனி தோன்றியதைத் தொடர்ந்து, உயர் நீதி மன்ற அதிகாரிகள் இவர் மீது பணி விதிகளை மீறினார் என்று சொல்லி நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

ஆனால், ஷைனி, தான் எந்த ஒரு அரசியல் சார்ந்த நடடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், மனித உரிமைகளுக்காகவே போராடுவதாகவும் தெரிவித்தார்; தன்னுடைய பணிப் பயிற்சி காலம் ஈராண்டாக இருந்த போதிலும், நான்கு ஆண்டு காலம் இருக்க நேர்ந்ததாக ஷைனி கூறினார்.

பணிப் பயிற்சியின் போது அவரை நீக்குவதற்கு முயற்சிகள் நடந்தன; உயர் நீதிமன்ற பணியாளர் சங்கத்தின் தலையீட்டினால் அம் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

 சி. பி. அய்(எம். எல்) கட்சியினுடைய மத்தியக் குழு உறுப்பினர் சான்டோ ராஜா மௌலியை தென் கேரளத்திலுள்ள கொல்லத்தில் வைத்து கைது செய்வதற்கு ஆந்திரக் காவல் துறைக்கு, கேரளக் காவல் துறை ஒப்புதல் வழங்கியது; இதை கடுமையாக விமர்சித்தார் ஷைனி. இதனால், கேரள காவல்துறை ஷைனியை ஒரு மாவோவாதி என முத்திரை குத்தியது.

 “நான் எந்த ஒரு தவறையும் இழைக்கவில்லை; வரலாறு என்னை விடுதலை செய்யும்; அரசு பயங்கரவாதத்தை எதிர் கொள்வதற்கு மாவோயிசமே சிறந்த வழி; என்னை ஒரு மாவோவாதியாக மாற்றியதற்கான பெருமை தற்போதைய இடது முன்னணி அரசையும், காவல் துறையையுமே சாரும்; ஆம்! நீங்கள் என்னை ஒரு மாவோயிஸ்டாக உருவாக்கி விட்டீர்கள்!” என்கிறார் ஷைனி.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தெஹல்கா ஆங்கில இதழில் 3-05-2008-ம் ஆண்டு வெளி வந்த கட்டுரை;

தமிழில்: து.சேகர் அண்ணாத்துரை, வழக்குரைஞர், மாவட்ட செயலாளர், கோவை பி. யூ. சி. எல்.

குறிப்பு: ஷைனி மற்றும் ரூபேஷ் உட்பட அய்ந்து பேர் தற்போது கோவை காவல் துறை விசாரணையின் கீழ் உள்ளனர்.

Pin It