தந்தி தொலைக்காட்சியில் தலைவர் வீரமணி அவர்களிடம் நேர்காணல் செய்து மூக்குடைபட்ட பாண்டே அவரை வழி அனுப்பிவிட்டு அவரது வாதங்களை மறுக்கவேண்டும் என்கிற அபிலாசையில் சில பின் இணைப்பு வேலைகளை செய்திருக்கிறார். அப்படி அவரால் சொல்லப்பட்டது அனைத்துமே உண்மைக்கு புறம்பானவை என்பது விபரம் அறிந்தவர்களுக்கு புரியும்.

veeramani & pandey

1. அம்பேத்கர் "தாழ்த்தப்பட்டவர்களை மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது" என்று கூறியதாக சொன்ன பாண்டே அதற்கு ஆதாரமாக காட்டிய இணைப்பில் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார்? தாழ்த்தப்பட்ட தோழர்களே இறந்த மாட்டை சுமக்காதீர்கள். இறந்த மாட்டின் இறைச்சியை உண்ணாதீர்கள் என்பது தானே. மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லையே!

2. திருமாவளவனே பெரியாரை ஏற்றுகொள்ளவில்லை என்று சொன்ன பாண்டே அதற்கு ஆதாரமாக திருமாவளவன் அவர்கள் பேசியதையோ எழுதியதையோ காட்டாமல் வன்னியரசையும், ரவிக்குமாரையும் துணைக்கழைப்பது ஏன்?

3.பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என பெரியார் கூறியதாக உளறிவிட்டு அதற்கு ஆதாரமாக நீங்கள் காட்டும் நூல் பெரியாரால் எழுதப்பட்டதா? அவரால் நடத்தப்பட்ட குடியரசிலோ, விடுதலையிலோ அவரது பேச்சாகவோ எழுத்தாகவோ வெளிவந்திருக்கிறதா?

4.சாதிக்கலவரங்கள் நடைபெறுகிறபோது கண்டுகொள்ளாமல் இருக்கிற இயக்கம் திராவிடர் கழகம் என்கிற பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் பொய்யரே அன்மையில் நடைபெற்ற தருமபுரி கலவரத்தில் கூட முதலில் மாநாடு கூட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடியதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதலும் நிவாரணமும் வழங்கியது திராவிடர்கழகம் தான் என்பது உமக்கு தெரியுமா?

5.வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் தமிழகத்தில் ஏன் ஈடுபடவில்லை என அதிபுத்திசாலிபோல் கேட்கும் பாண்டே அவர்களே, வைக்கத்தில் நடைபெற்றது கோவில் நுழைவுப் போராட்டமா? கோவிலைச் சுற்றிய வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நுழைய அனுமதி மறுத்ததை எதிர்த்த போராட்டமல்லவா அது? இந்த அடிப்படை வித்தியாசம் கூட இந்த அறிவுஜீவிக்கு விளங்காததுதான் ஆச்சரியம்.

6.பறையன் பட்டம் போகாமல் ஒருநாளும் சூத்திரப்பட்டம் ஒழியாது என்று பொட்டிலடித்தாற்போல் சொன்னவர் பெரியார் என்பது நினைவில் இருக்கட்டும்.

அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த பாண்டே புளுகு பெரும்புளுகாகிவிட்டதே!

Pin It