கடந்த 16.12.2015 அன்று புது தில்லியில் மருத்துவத் துறைப் படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருத்தி, சில போக்கிரிகளால் பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு ஆட்பட்டு மரணம் அடைந்தார். இந்நிகழ்வைப் பற்றிக் கருத்து கூறும் பொழுது, மிக மிக .... மிகப் பெரும்பாலான மக்கள்அந்தப் போக்கிரிகளைக் கண்டித்தனர். ஆனால் காவிக் கும்பலினரில் சிலர் அந்தப் பெண் தன்னைத் தாக்குபவர்களிடம் கைகூப்பித் தொழுது, தன்னை விட்டுவிடும் படி கேட்டுக் கொண்டு இருந்தால், அவளுக்கு இத்துன்பம் நேர்ந்து இருக்காது என்று கூறினர்

mukesh singh nirbaya caseஇந்நிகழ்வு, இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உலகம் முழுவதற்கும் உணர்த்தியது. இதைப் பற்றிய உண்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒரு செய்திப் படத்தைத் (documentary film) தயாரிக்க, பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் (BBC) முனைந்தது. அதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள், இவ்வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் இருப்பவர்கள் ஆகியோரைப் பேட்டி காண்பதற்காக 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. இந்திய அரசும் 24.7.2013 அன்று அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் இந்நிகழ்வின் / இவ்வழக்கின் தொடர்பானவர்களைப் பேட்டி கண்ட போது, தங்களுடைய பாலியல் தாக்குதலை அந்தப் பெண் எதிர்த்துப் போராடாமல், அமைதியாக இருந்திருந்தால் இது போன்ற கோரமான முடிவு ஏற்பட்டு இருக்காது என்று அந்தக் குற்றவாளி கூறி இருக்கிறான்.

குற்றவாளி தான் குற்ற மனப்பான்மையுடன் அவ்வாறு கூறி விட்டான்; மற்றவர்கள் அவ்வாறு இருக்க மாட்டார்கள் என்று நினைக்க விரும்பினாலும், அவர்களுக்காக வாதாடும் வாக்கறிஞர்களின் கூற்று மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. இரவு 8 மணிக்கு ஒரு பெண் வீட்டில் இல்லாமல் வெளியில் இருந்தால் இவ்வாறு நடப்பதைத் தடுக்க முடியாது என்று ஒரு வழக்கறிஞரும், தன் சகோதரியோ, மகளோ இவ்வாறு வீட்டில் இல்லாமல் வெளியில் இருந்தால், அவளை உயிரோடு எரித்து இருப்பேன் என்று இன்னொரு வழக்கறிஞரும் கூறி உள்ளனர்.

இவற்றை எல்லாம் வைத்து ஒரு செய்திப் படத்தைத் தயாரித்து வெளியிட முனைந்த போது, இச்செய்திப் படம் வெளியானால் இந்தியாவின் மானம் போய்விடும் என்று நினைத்த இந்திய அரசு 4.3.2015 அன்று இதற்குத் தடை போட முனைந்தது. ஆனால் அதை நேரடியாகச் செய்யாமல் 5.3.2015 அன்று தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவை வாங்கியது.

ஆனால் இந்திய அரசு நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்குவதற்கு முன்னாலேயே, பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் இச்செய்திப் படத்தை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விட்டது. தடை உத்தரவு வந்த பின் இந்தியாவில் இணைய தளத்தில் இச்செய்திப் படம் மறைக்கப்பட்டது. ஆனால் உலகம் எங்கும் மக்கள் இதன் மென்படியை (soft copy) இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளனர். இதனால் தில்லி உயர் நீதிமன்றத் தடை உத்தரவு செயலிழந்து விட்டது.

இச்செய்திப் படத்தைத் தயாரித்த லெஸ்லீ உட்வின் (Leslee Udwin) அம்மையார் 8.3.2015 அன்று இப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதைப் பற்றிக் கூறுகையில், இது போன்ற, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆவணங்களைத் தடை செய்தால், இதன் திருட்டுப் பிரதிகள் (pirated version) மிக வேகமாக மக்களிடையே போயச் சேரும் என்று கூறி உள்ளார். மேலும் இப்படத்தைத் தயாரித்ததன் நோக்கமே மக்களின் வெவ்வேறு பகுதியினரின் மனநிலையை (mindset) எடுத்துக் கூறுவதும், அதன் மூலம் எந்த இடத்தில் மாற்றத்திற்கான வேலையைத் தொடங்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படுவதற்கும் தானே ஒழிய, யாரையும் இழிவு படுத்தவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ அல்ல என்றும் கூறி உள்ளார்.

ஆனால் நமது இந்திய அரசும் சரி; பெரும்பான்மை மக்களும் சரி; அதைப் பற்றிச் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் வணிக நோக்த்துடன் தான் இச்செய்திப் படத்தைத் தயாரித்து உள்ளது என்று காவிக் கும்பலினர் கூறுகின்றனர்.

தங்களை முற்போக்குவாதிகள் என்று தாங்களே முத்திரை குத்திக் கொண்டு உள்ள பார்ப்பனர்களும், காவிக் கும்பலினரைப் போலவே கருத்து தெரிவித்து உள்ளனர். இச்செய்திப் படம் உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையைக் குறைக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும், முழுக்க முழுக்க மகளிருக்கு எதிராக உள்ளது என்றும் 5.3.2015 அன்று அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கத்தின் (All India Progressive Women's Association) செயலாளர் கவிதா சிருஷ்ணன் கூறி உள்ளார்,. மகளிருக்கு எதிரான கொடுமைகள் நடப்பதை வெளியில் தெரிவிப்பது மகளிருக்கு எப்படி எதிரானது ஆகும் என்று தெரியவில்லை.

தில்லியில் 2012 ஆம் ஆண்டில் நடந்த பாலியல் வன்முறைத் தாக்குதலைப் பற்றிக் கருத்து கூறும் பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இது போன்ற அடாத செயல்கள் மேற்கத்தியப் பண்பாடு பரவி உள்ள நகர்ப்புறங்களில் தான் நடக்கின்றன என்றும், இந்து மதம் வேர் பிடித்து உள்ள கிராமப்புறங்களில் நடப்பது இல்லை என்றும் கூறினார்.

ஆனால் கிராமப்புறங்களில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் கேள்வி முறையே இல்லாமல் பாலியல் தாக்குலுக்கு உள்ளாகின்றனர். ஆண்கள் மட்டும் அல்ல; அறிவிற் சிறந்து விளங்கும் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் சுடர் விட்டு ஒளிவிடத் தொடங்கினால், பார்ப்பனப் பெண்களே கூட அவர்களைப் பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்துகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பரஹ்பதா (Barahbada) என்ற கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த இரு தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவிகள் மிகவும் நன்றாகப் படித்துக் கொண்டு இருந்தனர். அதைக் காணப் பொறாத ரேஷ்மா சோனியா, பிரீதி சர்மா என்ற இரு பார்ப்பன ஆசிரியைகள் 15.3.2012 அன்று தேர்வு நடக்கும் பொழுது, தேர்வு எழுதுவதற்குத் துண்டுக் காகிதத்தை (bit) வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அம்மாணவிகள் துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு இருக்கிறார்களா என்று சோதனை செய்வதாகக் கூறி, தேர்வு அறையில் சுமார் 40 ஆண் மாணவர்களுக்கு முன்னால் உடைகளைக் களைந்து நிர்வாணப் படுத்தினார்கள்.

இக்கொடுமையை எந்த வகையில் சேர்ப்பது? இந்நிகழ்வின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன?

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு வலுவான அடித்தளம் வரணாசிரம முறையே.

என்ன குற்றங்களைச் செய்தாலும், உயர் சாதிக் கும்பலினரைக் காப்பாற்ற, காவல் துறை மட்டும் அல்லாது, அனைத்து அரசுத் துறைகளிலும், உயர்நிலைகளிலும், அதிகார மையங்களிலும் உயர் சாதிக் கும்பலினர் கொடூரமான அளவில் நிரம்பி உள்ளனர். ஆகவே எப்படியும் தப்பித்து விடலாம் என்ற மனத் துணிச்சல் தான் கொடூரமான குற்றங்களை எல்லாம் புரியத் தூண்டுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தவறு செய்யாத போதும், ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ள நேர்ந்தால், அவர்களுக்கு உதவி புரிய அதிகார மையங்களில் போதுமான எண்ணிக்கையில் மக்கள் இருப்பது இல்லை. ஆகவே அவர்கள் அளவுக்கு மீறிய தண்டனைகளை அடைகின்றனர்.

அதிகார மையங்களில் உயர் சாதிக் கும்பலினரின் கொடூரமான அளவு ஆக்கிரமிப்பும், அடங்கி நடக்க வேண்டிய இடங்களில் மட்டுமே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இருக்க வேண்டி நேர்வதுமான வருண அதர்ம முறை ஒழிந்து, அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும், அனைத்து வகுப்பு மக்களும் அவரவர் மக்கள் தொகையின் விகிதத்திற்கு ஏற்ப இருந்தால், குற்றங்களைச் செய்து தப்பித்து விடலாம் என்ற மனத் தணிச்சல் யாருக்கும் வராது அல்லவா? இப்படி ஒரு மனத் துணிவு வரவில்லை என்றால் மிகப் பெரும் அளவில் இக்குற்றங்கள் குறைந்து விடும் அல்லவா? இக்கருத்தை நாம் முன்னெடுத்து, இக்கொடுமைகளுக்கு முடிவு கட்ட, வேலையை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்கும் பணியை முன்னெடுப்போமா?

- இராமியா

Pin It