இந்திய கலாச்சாரத்தில் இலக்கியம், சினிமா, அரசியல், வணிகம் மற்றும் கல்வி என எங்கும் தனிநபர் வழிபாட்டை காணமுடியும். சினிமாவை எடுத்துக்கொண்டால் பாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளிவரும் திரைப்படங்களும் நாயகன் வழிபாட்டை ஊக்குவிப்பதாகவே உள்ளன. கதாநாயகனாக நடிப்பவர் ஒரே ஒரு துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அனைத்து வில்லன்களையும் அடித்து வீழ்த்தி தான் நினைத்த பெண்ணை கரம்பிடிப்பது போன்று திரைப்படங்கள் அமைந்துள்ளன. அரசியலை எடுத்துக்கொண்டாலும் அகில இந்திய மற்றும் அனைத்து மாநில பெரும்பான்மை கட்சிகள் தங்கள் தலைவன் அல்லது தலைவி துதி பாடுபவையாகவே உள்ளன. தலைவன் என்னும் சூரியனைச் சுற்றியே கட்சியின் பிற கோள்கள் சுற்றி வருகின்றன. நாயகன் வழிபாட்டை மேற்கொள்ளும் சாமானிய மனிதன் நாயகனாக மாறமுடிவதில்லை. அவன் அப்படி எண்ணுவதுமில்லை. உயர்குலத்தைச்சேர்ந்தவர்கள், பெரும் பணக்காரர்கள் வாழையடி வாழையாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே நாயகன் சக்தியை பெற்றுள்ளனர் என்று இவர்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். நாயகன் வழிபாட்டிற்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

அரசியல் கட்சியின் தலைவன் அல்லது தலைவியை ஆராதிப்பதால் சில குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், குடும்பங்கள் மட்டுமே அரசாளமுடியும். பெயரளவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டாலும் கூட வாரிசு அரசியல் தொடர்ந்து நாட்டை ஆளத்தான் செய்கின்றன. தனிநபர் வழிபாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்டவர்களுக்கே சேருகிறது. தற்பொழுது ஒரு காரியம் ஆக வேண்டும் எனில் சிறிய வயதினராக இருந்தாலும் தலைவா என முதியவர்கள் அழைப்பது வழக்கம். பிரபல அரசியல் கட்சித்தலைவர்கள், ரசிகர்மன்றங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் தலைவனின் மீது கொண்ட அளப்பறிய பற்றால் அல்லது அன்பின் வெளிப்பாடாக திரைப்படம் வெளியிடும் நாளன்று சூரியனை கண்டவுனும் இல்லை. எங்கள் தலைவனை வென்றவனும் இல்லை என்றும், சூரியன் உள்ளவரை எங்கம்மா புகழே நிறைந்திருக்கும் என அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் தலைவியைப் பற்றியும், வருங்கால இளஞ்சூரியனே, சூரியனே என புகழ்வதும் கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கில் உதித்தாலும் சரி. என்னுடைய தலைவன் கொள்கையில் இருந்து தடம் புரளமாட்டார் எனக்கூறுவதும் சூரியனுக்கு நிகராக புகழ்ந்தும், நமது நாட்டை ஆண்ட ஆங்கியேலர்கள் சூரியனே எங்களைக் கேட்டுத்தான் உதிக்கும் என்றும் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் எங்கள் சாம்ராஜ்யம் என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு தங்கள், தலைவன், தலைவி பற்றி பாடல்கள் பாடியும் அதன் சம்பந்தமாக விளம்பர பதாகைகள் வெளியிடுவதும் வாடிக்கை.

தங்கள் காரியம் நிறைவேறவேண்டும் என்ற எண்ணம் காரணமாகவோ தலைவா, தலைவரே, எஜமானே, சாமியே எனப்புகழப்படுவதுண்டு. இதே போல பண்டைய காலத்தில் அரசர்களைப் பாராட்டுவதை மெய்க்கீர்த்தி என்றும் மெய்க்கீர்த்தி என்றால் புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு ஆகும். பொதுவாக அரசர்கள் தங்களை சூரிய குலம், சந்திரன் குல தோன்றலாகச் கூறி அழைத்துக்கொள்வது பண்டைய காலத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இராமன் சூரிய குலத்தோன்றலாக வர்ணிக்கப்படுகிறான். பாண்டியர்கள் தங்களை சந்திரகுலத்தின் வாரிசுகளாகவும், சோழர்கள் சூரியனின் வழித்தோன்றல்களாகவும் தங்களை அழைத்துள்ளனர். கல்வெட்டுக்களை தவிர செப்பேடுகளிலும் மன்னர்களை இந்திரனை வென்றவன், சந்திரனை வென்றவன் எனப் புகழப்பட்டுள்ளன. இவ்வாறு புகழப்பட்ட மன்னர்கள் தானமாக அதாவது கொடையாக அளித்த நிலங்கள், கோவில்கள், தேவாலயங்கள், குளங்கள், ஏரிகள், சத்திரங்கள் போன்றவற்றை ஆக்கிரமிப்பு செய்தாலோ அல்லது அவர்கள் வழங்கிய கொடைக்கு தீங்கு விளைவித்தாலோ அதனை சாபமாகவும் விட்டுள்ளார்கள். அச்சாபத்தில் சூரியன், சந்திரன் உள்ளவரை இந்த சாபம் நிலைத்து நிற்கும் என அச்சுறுத்தும் விதமாகவும், கீழ்தரமான வார்த்தைகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல காதலர்கள் சந்திரனை மையப்படுத்தி பல பாடல்கள் வெளியிடப்பட்டும், இன்று வரை பல பாடல்களும் வெளிவரும் சந்திரன் மீது உள்ள அன்பின் வெளிப்பாடு. சிறிய குழந்தைகளுக்கு மாலை வேளையில் உணவு ஊட்டும்போது நிலாவை காண்பித்து சோறு ஊட்டுவதும், அண்டை மாநிலமான கேரளாவில் அம்பிலி மாமா கும்பில் குத்தி சோறுட்டுடூ, குன்னி சக்கன்ட மூக்கு முறிக்கான் கத்திட்டுடூ அதாவது நிலாவிடம் சோறை தூக்கிப்போடு என்றும், சின்னக்குழந்தைகளுக்கு மூக்கை அறுக்க கத்தி கொடுத்தனுப்பு எனக்கூறி சாப்பாடு கொடுப்பார்கள். நிலா நிலா ஓடி வா. நில்லாமல் ஓடிவா என்று சிறிய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து வருவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று.

பண்டைய காலத்தில் அரசன் மற்றும் அரசியர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சத்திரம், குளம், கண்மாய்கள், தானங்கள் அளிக்கும்போது அவற்றில் கல்வெட்டு ஒன்றை பொறிப்பார்கள். அக்கல்வெட்டுக்களில் தானம் வழங்கப்பட்ட செய்தியையும் அதன்பின்னர் கல்வெட்டின் இறுதி வாசகத்தில் இந்த தானத்திற்கு தீங்கு விளைத்தவர்கள் சூரியன் உள்ளவரை, சந்திரன் உள்ளவரை பாவப்பட்டவர் என்று சாபமிட்டு வைப்பார்கள். இசுலாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட தானமாக இருந்தால் பிறையும் பொறித்திருப்பார்கள். அதே போல அரசர்களை புகழும்போது சூரியகுலம், சந்திர குலம் என புகழ்ந்துரைத்து அதற்காக பரிசுகளையும் புலவர்கள் பெற்றுள்னர். அவ்வாறு புகழப்பட்டவைகளை கல்வெட்டுக்களாகவும், ஓலைச்சுவடிகளாகவும் வைத்துள்ளனர். அதில் ஒன்று களஆய்விற்காக கும்பகோணம் சென்றபோது சூரியன் மற்றும் சந்திரன் போல் வரைந்த கல்வெட்டு ஒன்று காலத்தால் அழியாமல் இன்றளவும் உள்ளது.

அரசர்கள் தங்களை சூரிய, சந்திரகுல வழித்தோன்றல்களாக அழைத்துக்கொள்வது அல்லது பிறரை வைத்து அழைக்க வைத்துள்ளனர். பாண்டிய மன்னர்கள் தங்களை சந்திர குலத்தின் வாரிசுகளாகவும், சோழர்கள் சூரியனின் வழித்தோன்றல்களாகவும் அழைக்கப்பட்டுள்ளனர். அதே போல சூரியனை வென்றவன், சந்திரனை வென்றவன் என்று இதுவரை கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல திருவாலங்காடு செப்பேட்டில் சூரியனைப்பற்றி ரசித்துக் கூறப்பட்டுள்ளது. இச்செப்பேட்டை எழுதியவர் உய்ய கொண்டார் வளநாட்டைச்சேர்ந்த திருவழுந்தூர் நாடு, துலார் கிராமத்தைச் சேர்ந்த குறளி என்ற உத்தமச்சோழன் தமிழாடு அரையன். இச்செப்பேட்டினை வழங்கிய அரசன் இராஜேந்திர சோழன். இராஜேந்திரச சோழனின் பெருமை கூறப்பட்டுள்ள விதம் சூரியனான மதுராந்தகன் இராஜேந்திர சோழன் வானம் முழுவதும் பரவி நின்றான். சூரியனை நெருங்கினால் நெருங்குபவர்களை சுட்டு பொசுக்கி விடும் எனவே சூரியனிடமிருந்து விலகி நிற்பதே நல்லது என்பதை மறைமுகமாக எதிரிகளுக்கு அச்சுறுத்தும் விதமாக செப்பேடு பொறிக்கப்பட்டுள்ளது.

சங்கர மடத்திற்கு இஸ்லாமியர் மரியாதைப் பற்றிய கல்வெட்டு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மேலக்காவேரிப் பகுதியில் இஸ்லாமியர்கள் முஹரம் பண்டிகைக்கு இசை, வாத்தியக் கருவிகளுடன் நகரில் பல தெருக்களில் ஊர்வலம் போவது வாடிக்கை. 6.9.1892 அன்று அவ்வாறு மொகரம் பண்டிகை ஊர்வலம் போகும்போது சங்கரமடத்தின் எதிரில் ஐம்பது கஜ தூரத்திற்கு இசைக்கருவிக்ள வாசிப்பது இல்லை என்று முடிவு செய்து அதை வருங்கால சந்ததியினரும் பின்பற்றவேண்டும் என்றும் இந்த சமரசம் சூரியர், சந்திரர் உள்ளவரை கடைப்பிடிக்கவேண்டும் என்று சங்கரமடத்தின் இருபுறமும் 50 கஜம் தூரம் இடைவெளியும், வடக்கிலும், தெற்கிலும் எல்லைப்பக்கம் நட்டு இந்த விபரத்தை தெரிவித்துள்ளனர். மேலும் சங்கர மடத்தின் நுழைவு வாயிலில் சூரியன், சந்திரன் பற்றிய கல்வெட்டுக்களை பொறித்துள்ளனர். இக்கல்வெட்டு இன்றும் உள்ளது.

கல்லும், காவிரியும், சந்திரர், சூரியர் நட்சத்திரங்கள் உள்ளவரை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு நகரத்தில் சேக் அலாவுதீன் சாயபு மஜீத் தர்கா நுழைவு வாயிலில் வலப்புறம் ஒரு குத்துக்கல் நடப்பட்டுள்ளது. அதனுடைய காலம் கி.பி.12.6.1761 ஆகும்.

கல்வெட்டு செய்தி

மைசூர் மன்னன் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் ஈரோடு மாவட்டப்பகுதி அவர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஈரோடு கோட்டை அதிகாரியாக இருந்த ரங்கய்யநாத திம்மரசய்யன் என்பவரும், அவரும் கோட்டையில் கந்தாசாரம், அட்டவணை, சேனபோகம், சேருவைகாரர் ஆக இருந்த ஏனைய நான்கு அதிகாரிகளும் காவிரிக்கரை சேக் அலாவுதீன் தர்காவிற்கு வருகை புரியும் அரதேசி, பரதேசி ஏழைகளுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கவும், அவர்களுக்கு உடை கொடுக்கவும் காலிங்கராயன் பாச நன்செய் நிலத்தில் 4 மாநிலம் கொடையாக கொடுத்தனர்.

கல்லும், காவிரியும், சந்திரர், சூரியர், நட்சத்திரங்கள் உள்ளவரை இந்தத் தர்மம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தனர்.

இந்தத் தர்மத்திற்கு இந்துவாக இருந்து தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவமும், தாயைச்சேர்ந்த பாவமும் பெறுவான். இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்காவில் பன்றியைக் குத்திக் கொன்று தின்ற பாவம் கிடைக்கும். தாயாரையும், மகளையும் சேர்ந்த பாவமும் வரும். பூமி ஆகாயம் கேடுகள் உண்டாகும். மக்கள்பேறு இல்லாமல் போகும்.

கல்லறைகள் கூறும் காவியம்

சவக்குழிக்கு மேல் கல்லறை கட்டும் பழக்கம் கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து நாட்டில் முதன் முதலாக கல்லறை கட்டினார்கள். மனிதன் இறந்தாலும் அவனுடைய ஆன்மா என்றைக்காவது அவனுடைய உடலை நாடி வரும் என்று நம்பினார்கள். உடம்பை அழிக்காமல் மனம் காட்டிப்பது காத்து வைக்கவே பிரமாண்டமான கல்லறையை அமைத்தார்கள். அத்துடன் அவர்களுடன் உடை, நகை, உணவு முதலிய பலவகைப் பொருள்களைக் குவித்து வைத்தார்கள். கி.மு.2900 ல் வாழ்ந்த க்ஸா என்ற இடத்தில் மன்னன் ஒருவன் பிரமிடு கட்டிக்கொண்டான். அந்தக் கல்லறையாகிய பிரமின் அடித்தளம் 13 ஏக்கர் பரப்பளவுடையது. மொத்த கற்கள் 2300000. ஒரு கல்லின் எடை 2.5 டன். 40 டன் கன அடி அறைகளின் தவற்றில் சிற்பக் கலையினால் உருவங்களும் விலங்குகளும் அவனே சாவு முன்னே செதுக்கி வைத்துக்கொண்டான். இந்த பிரமிடு உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

பைபிளில் பழைய ஏற்பாட்டின் நாயகரான யபிக்குகர்பின் மனைவி ராக் முகலின் கல்லறை ஒன்று பேசப்படுகிறது. ஜெருசலேமிலிருந்து இயேசு பிறந்த பெத்தலேகம் செல்லும்; வழியில் இந்தக் கல்லறை எதிர்ப்படுகிறது. ராக்கேல் தன் மகன் பெஞ்சமினைப் பெற்றெடுக்கும் போது மரணமடைய அந்த இடத்தில் புதைக்கப்பட்டாள். குழந்தைப்பேறு விரும்புவோர் நீளமான சிவப்பு நூலைக் கட்டி வழிபடும் பழக்கம் இப்போதும் இந்தக் கல்லறையில் காணப்படுகிறது.

இயேசு நாதருடைய வாழ்க்கையின் முடிவு இதற்கு வழிகாட்டியாக இருக்கிறது. இவருக்கு மரண தண்டனை கொடுத்துச் சிலுவையில் அறைந்தார்கள். தலைக்கு மேலே தண்டனைக்குரிய காரணத்தை இவன் யூதனின் அரசானாகிய இயேசு என்ற எழுதி வைத்தார்கள். இதுதான் இறந்தோருக்கு எழுதிப்போட்ட முதல் வாசகமாக இருக்கவேண்டும்.

மகாகவி சேக்ஸ்பியர் என்னுடைய கல்லறையை யாரும் தோண்டிப் பார்க்க கூடாது என்று எழுதிப்போடும் படி தாளில் எழுதி வைத்துவிட்டு உள்ளே போனார். மொகலாய மன்னர் ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் தன் கல்லறையில் கணவினம் எழுதி வைக்க சொன்ன வாசகம் இது. என் சமாதியில் விளக்கை ஏற்றாதீர்கள் பாவம். அதில் விட்டில் பூச்சிகள் விழுந்து சாகவேண்டாம். இறந்த பின்பும் எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற கருணை உள்ளம்.

அறிஞராகிய ஜி.யு.போப் மதப் பிரச்சாரகாகத் தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழை கற்றுத்தேர்ந்தார். சீவகசிந்தாமணி என்ற கிரேக்க மொழியால் உள்ளன. அவர் தம் கல்லறையில் தாழ்மையான தமிழ் மாணவன் எழுதி வைக்கச் சொன்னார்.

கிரேக்க வீரன் அலெக்சாண்டர் கல்லறையில் ஆறடி சமாதியே போதுமானதாக இருக்கிறது என்று கிண்டல் சொற்களால் எழுதிப்போட்டுள்ளனர்.

கிரேக்கத்தைச் சேர்ந்த டயோனசியஸ் என்பவன் தன் கல்லறையில் எழுத வேண்டியதை தானே எழுதி வைத்து விட்டு உள்ளே போய் படுத்துக் கொண்டான். டயோனசியஸ் என்ற பெயருடைய எனது சடலம் என் அறுபதாவது வயதில் இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. என் தந்தை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் நான் செய்து கொண்டிருப்பேன் என்று புதிர் கொள்ளும்படியாக எழுதியுள்ளான். பாறையில் குகைகளைக் குடைந்து பிணங்களைப்போட்டு பெரிய கல்லால் மூடி விடும் பழக்கம் உண்டு. தாழிகளை வளைத்து அதற்குள் சடலங்களை வைத்துப் புதைத்தார்கள். இதற்கு முதுமக்கள் தாழி என்று பெயர். நிலத்தின் கீழ் பலவகைக் கற்களை அறைகள் போல்; நிறுத்தி சடலங்களை வைப்பதும் உண்டு. அவைகளைப் பாண்டவர் குழிகள் என்று அழைத்திருக்கிறார்கள்.

சீனாவில் யுன்லாங் ஏரி மிகவும் பிரபலமானது. இதை பண்டைய காலத்தில் ஆண்ட ஹான்பரம்பரை மன்னர்கள் மிகவும் பிரபலம்.

சீனாவில் டெர்ரகோட்டா நிலைகளுடன் இருந்த கல்லறை மிகவும் பிரபலம். இது முதலாம் சீன மன்னர் இறந்தபோது, அவருடன் அவர்களது வீரர்களின் சிலை மாதிரிகளையும் சேர்த்து புதைத்தனர். இது உலகப்புகழ்பெற்ற இடங்களில் ஒன்று. இக்கல்லறை கிறிஸ்து பிறப்பதற்கு 206 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் சிறப்பு என்பது இவர்கள் மலையைக் குடைந்து அதன் நடுவே மன்னரை அடக்கம் செய்தது தான். ஒரு பெரியமலையை குடைந்து அதன் நடுவரை சென்று அங்கு மன்னரையும் அந்தப் பாதையின் இருபக்கங்களிலும் அவர்களின் குடும்பத்தையும் புதைத்து இருக்கின்றனர். இக்கல்லறையை பாதுகாக்க டெரகோட்டா சிலை வீரர்கள் கையில் ஆயுதங்களுடன் இருக்கின்றனர். அகழ்வராய்ச்சியின்போது அதனைக் கண்டுபிடித்து கண்ணாடி பேழை வைத்து அதை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். ஒரு ஓலைப்பெட்டி போல உருவாகி, அதன் உள்ளே மன்னரை வைத்து பாடம் செய்துள்ளனர்.

கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும், கல்லறைகளிலும் இவை போன்ற ஏராளமான மெய்க்கீர்த்திகள் விரவிக்கிடக்கின்றன. வரலாற்றுக்கு மிக அருகிலும், நம் பாரம்பரிய தொன்மையோடும், கொஞ்சம் மிகையுணர்ச்சியுடனும் உள்ள மெய்க்கீர்த்திகளே பண்டைய கால வரலாற்றை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றன. அயர்லாந்து தேசியவாதி டேனியல் ஓ கானெல் கூறியது போல், எந்த ஆணும், தனது நன்றிக்கடனுக்குத் தன் கௌரவத்தை விலையாக தரமுடியாது. எந்தப் பெண்ணும் தனது நன்றிக் கடனுக்காக தன் கற்பை தரமுடியாது. எந்த தேசமும் தனது நன்றிக் கடனுக்காக தன் விடுதலையை தரமுடியாது. இந்த எச்சரிக்கை மற்ற தேசங்களை விட இந்தியாவிற்கு அதி முக்கியமானது. அதிலும் தமிழகத்தில் அரசியலில் பக்தி அல்லது நாயகன் வழிபாடு வகிக்கும் பங்கு உலகின் மற்ற நாடுகளை விட இங்குதான் அதிகம். அரசியலில் பக்தி அல்லது நாயகன் வழிபாடு என்பது தாழ்வுக்கும் இறுதியாக சர்வாதிகாரத்திற்குமான பாதையாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.தலைவர்கள் பற்றி இன்றைக்கு புகழப்படும் புகழுரைகள் காலங்களைக் கடந்து நம் எதிர்கால சந்ததியினருக்கு என்ன அறிவுரை கூற காத்துக்கிடக்கின்றனவோ? கல்வெட்டுக்களே காலத்தைச்சொல்லட்டும்.

- வைகை அனிஷ்

Pin It