தீண்டப்படாத சமூகங்களான தலித்துகளும் பழங்குடிகளும் பன்னெடுங்காலமாக அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய நிலைகளில் ஒடுக்கப்பட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தின் கீழடுக்கில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்து, இவ்விரு பிரிவினர்க்கும் சமூக நீதியை உறுதிப்படுத்தும் நோக்கத்தில்தான் இடஒதுக்கீட்டுக் கொள்கை தோற்றுவிக்கப்பட்டது; மற்றும் இச்சமூகங்களின் பாதுகாப்பு, மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தலித்/பழங்குடி இனத்தவர்க்கான வளர்ச்சித் திட்டங்களும் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பட்டியல் சாதிகள்(Scheduled Castes) மற்றும் பழங்குடி (Scheduled Tribes) இன மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு இணையாக அரசியல் அவைகள், அரசுத்துறை/பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுள் இடஒதுக்கீடு வழங்குவது என்பதை கொள்கைரீதியாக ஏற்றுக்கொண்டது இந்திய அரசியல் சட்டம். அதாவது அன்றைக்கு மக்கள் தொகையில் 15% தலித்துகளும் 7.5% பழங்குடிகளும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டு 22.5% இடங்கள் மேற்கண்ட துறைகளில் தீண்டப்படாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரம் இந்திய மக்கள் தொகையில் தலித்துகள் 16.6% மற்றும் பழங்குடிகள் 8.6% (இதன் கூட்டுத் தொகை 25.6%) என்று அறிவிக்கின்ற நிலையில் மக்கள் தொகை ஏற்றத்திற்கு ஏற்ப காலத்துக்குக் காலம் இந்த ஒதுக்கீட்டு அளவு உயர்த்தப்படாமல் அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்ததை அப்படியே அதிலும் மெத்தனமாகப் பின்பற்றப்படுகிற அவலம் ஒருபுறம் இருக்க, இது குறித்தெல்லாம் அரசியல் அவைகளில் 22.5% நிறைந்துள்ள தீண்டப்படாதார் தரப்பு அரசியல் பிரதிநிதிகளும் தலித் தலைமைகளும் எக்காலத்திலும் கவலைப்பட்டதில்லை என்பதுவும் குறித்துக் கொள்ளத்தக்கது.

dalit 370இந்திய அரசியல் உறுப்புகள் 330, 352 ஆகியவை சட்டமன்றங்கள், பாராளுமன்றம் உள்ளிட்ட அரசியல் அவைகளில் தீண்டப்படாதவர்கள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு வழிவகை செய்கின்றன. இதன்படி கூட்டு வாக்காளர் தொகுதி (Federal Electoral System) அடிப்படையிலான தனி இடங்கள் (Reserved Seats) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தலித்/பழங்குடி இன அரசியல் பிரதிநிதிகள் அரசியல் அவைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 65 ஆண்டுகாலமாக இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் அவைகளுக்கு அனுப்பப்பட்ட தலித்/பழங்குடி இன அரசியல் பிரதிநிதிகள் மூலம் தீண்டப்படாத சமூகங்கள் பெற்ற பலன்தான் என்ன? இப்பிரதிநிதிகள் அரசியலில் இடஒதுக்கீடு எனும் வாய்ப்பைப் பயன்படுத்தி தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத் துக்காக செய்ததுதான் என்ன? தீண்டப்படாத சமூகங்களின் மேம்பாட்டுக்காக காலமாற்றத்திற்கேற்ற வகையில் புதுப்பித்துக்கொண்ட செயல்திட்டங்களுடன் தெருவில் இறங்கி போராட்டங்கள் நடத்தி அதன் வழியாக அதிகார மையங்களுக்கு நெருக்கடிகள் கொடுத்து ஏதேனும் சாதித்தனர் என்பதற்கான அம்சங்களை சல்லடைப் பார்வையில் தேடினாலும் ஒன்றும் தென்படமாட்டேன் என்கிறது. தீண்டப்படாதவர்கள் கல்வி, பொருளாதாரம், நிலவுடைமை, தொழில் முதலீடு மற்றும் பிற துறைகளில் இதர சமூகங்களுக்கு நிகராக அல்லது சற்றே நெருக்கமான அளவுக்கேனும் வளர்ச்சிக் கண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் ஏதும் நம்மிடையே உள்ளனவா என்றால் அதுவும் இல்லை. அரசாங்க ஒப்பந்தங்களில் பங்களிப்புப் பெறும் அளவுக்கு தீண்டப்படாதவர்களில் தொழில் முனைவோர்ப் பிரிவு இன்று வரைக்கும் உருவாகவில்லை. இதற்கெல்லாம் ஆளும் வர்க்கங்கள் தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தீண்டப்படாதார் தரப்பு அரசியல் பிரதிநிதிகள் தப்பித்துக் கொள்கின்றனர். உண்மையில் இந்நிலை உருவாகாததற்கு மேலதிக பொறுப்பேற்க வேண்டியவர்கள் அரசியல் அவைகளில் வீற்றிருக்கும் 22.5 சதவீத் தலித்/பழங்குடி இன அரசியல் பிரதிநிதிகளே ஆவர் என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம் நாமும்.

இன்றும் தலித்/பழங்குடிகளுள் 86% மக்கள் நிலமற்ற ஏழைகளாக இருக்கின்றனர்; கிராமப்புறங்களில் 64% நகர்ப்புறங்களில் 61% தலித்/பழங்குடியினர் கூலித் தொழிலையே நம்பி வாழ்கின்றனர் என்னும் நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைக்கு வந்து 65 ஆண்டுகளாகியப் பின்னரும் தீண்டப்படாதவர்களின் வளர்ச்சி விகிதம் தாழ்வான நிலையில் இருக்க இடஒதுக்கீட்டுக் கொள்கையும் அம்பேத்கருக்குப் பின்பான தீண்டப்படாதார் தரப்பு அரசியல் பிரதிநிதிகளும் இம்மக்களின் உய்வுக்காக செய்ததுதான் என்ன என்ற கேள்விக்கான பதில் நிரப்பப்படாதக் கோடிட்ட இடமாய் வெறுமையாகவேக் காட்சி யளிக்கிறது. தீண்டப்படாத சமூகங்கள் முன்னேற்றம் காணாமல் 65 ஆண்டுகளுக்கும் முன்பிருந்த நிலைமையிலேயே இப்போது மில்லை; ஒப்பீட்டளவில் கல்வி, பொருளாதாரம், அரசியல் உணர்வுட்பட இதர விசயங்களில் கூட கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்று வாதிட முன்வருவோர் இவையாவும் அம்பேத்கர் ஏற்கனவே செய்து வைத்துவிட்டுப் போன ஏற்பாடுகளை அடியொற்றி நடந்தேறியுள்ள இயல்பான மாற்றங்களேத் தவிர இவ்வளர்ச்சிகள் மீது உரிமைகோரும் அருகதை அம்பேத்கருக்குப் பிந்தைய தலித்/பழங்குடி இன தலைமைகளுக்கு இல்லை என்பதுவும் மனதிற்கொள்ளததக்கது.

அம்பேத்கருக்குப் பின்பான தீண்டப்படாத அரசியல் பிரதிநிதிகள் என்னவாகத்தான் ஆகிப்போயினர்? அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளும் ஆசையில் ஆளும் வர்க்கங்களின் கையாள்களாக ஆகிப்போயினர் என்கிறார் டாக்டர் ஆனந்த் டெல்டும்டே. குட்டி முதலாளித்துவ குணம் கொண்டவர்களாகி, தீண்டப்படாத மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் எழுப்ப மறந்தனர்; ஒட்டுமொத்த தலித் அரசியல் மைய நீரோட்டத் திலிருந்து விலகிப் போயினர் எனலாம். தீண்டப்படாத சமூகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், மேம்பாட்டு நடவடிக்கைகள், வளர்ச்சி நடவடிக்கைகள் ஆகிய செயற்பாடுகள் மீது தொடர் கண்காணிப்பு நிகழ்த்தி அவை தொய்வு கண்டபோது கிரியா ஊக்கியாக பின்னிருந்து செயல்பட்டு அவற்றை முன்னுக்கு நகர்த்தும் கடமையிலிருந்து தவறினர். குறிப்பாக தீண்டப்படாத மக்களின் மேம்பாட்டு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் அவற்றுக்காக செலவழிக்காமல் அந்நிதியை பொதுத் திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்தபோதும் 22.5% சட்ட மன்ற/பாராளுமன்ற அவை தலித்/பழங்குடி இன உறுப்பினர்களும் அமைதிக் காக்க அரசியல் அவைகள் எவ்வித அமளியும் இன்றி அமைதியாக நடந்தேறின. தில்லியில் ஷீலா தீட்சித் சிறப்பு உட்கூறுத் திட்ட நிதியை தைர்யமாக காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்குப் பயன்படுத்தினார்; தமிழகத்தில் இலவச வண்ணத் தொலைக் காட்சிகள் வழங்கவும், பசுமை வீடுகள் கட்டித்தரவும், பெரியார் நினைவு சமத் துவபுரங்கள் கட்டமைக்கவும் சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் நிதியையும் ஆதிதிராவிடர்களுக்கான நிதியையும் திராவிட கட்சிகள் பயன்படுத்தியபோது தமிழக சட்ட மன்றத்திலிருந்த தலித்/பழங்குடி அரசியல் பிரதிநிதிளும் வெளியில் இருந்த இதர தலித் தலைமைகளும் மௌன விரதம் கடைப்பிடித்தனர்.

உலகமயமாக்கல், தாராளவாதம் என்னும் நடவடிக்கைக ளின்கீழ் அரசு தொழில்துறை உட்பட ஒட்டுமொத்த தொழில்துறை களும் தனியார்மயம் என்றாகிவரும் இன்றைய சூழலில் இத்துறைகளில் அரசு முதலீடு என்பதும் கணிசமாகக் குறைந்து வருகிறது. தொண்ணூறுகளுக்குப் பின்பு புதிய பொருளாதாரக் கொள்கையுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்த தனியார்மய சிந்தனை ஆட்குறைப்பு, புதிய ஆட்கள் சேர்ப்பதற்குத் தடை என்பது போன்ற நடவடிக்கைகளால் 97களுக்குப்பின் 10 இலட்சம் மத்திய அரசாங்கப் பணிகள் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டன என்று சொல்லப்படுகிறது. இச்சூழலின் நீட்சி இடஒதுக்கீடு கொள்கைக்கு சமாதி கட்டும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் என்பதை அறிந்திருந்தும் மௌனம் காத்தனர் அரசியல் அவைகளின் தீண்டப்படாத அரசியல் பிரதிநிதிகளும் பிராந்திய/ அகில இந்திய தலித்/பழங்குடியினர் அரசியல் தலைமைகளும். இவர்கள் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொள்கைக்கான தேசிய அளவிலான விவாதங்களை கட்டியெழுப்பவும் தவறியதுடன் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்னும் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுகள் காண்பதற்கான முயற்சிகள் எதுவும் இவர்களால் முன்னெடுக்கப்பட வில்லை/முடுக்கி விடப்படவில்லை. முன்னெடுக்கப்பட்ட ஆனால் காத்திரமாக முன்னெடுக்கப்படாத முயற்சிகள் சிலவும் எடுபடாமல் போயின.

புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டை முன்னிட்டு தொண்ணூறுகளில் Sc/StSpecial Recruitment Drive என்னும் சிறப்பு முயற்சி மூலம் அரசு நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் கிடந்த தலித்துகளுக்கான இடங்களை நிரப்பும் முயற்சியை மேற்கொண்டது மத்திய அரசு. அதன் விளைவாக தலித்துகளுள் பலர் மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற்றனர் என்பதென்னவோ உண்மைதான். ஆனால்,. இம்முயற்சிகளுக்குப் பின்பும் கூட 1996-97களில் ஏ பிரிவு உத்தியோகங்களில் 74.84 விழுக்காடு, பி பிரிவில் 51.39 விழுக்காடு, சி பிரிவில் 55.87 விழுக்காடு, டி பிரிவில் 54.30 விழுக்காடு, வங்கிகளில் 45.10 விழுக்காடு, பொதுத்துறை நிறுவனங்களில் 88.18 விழுக்காடு தலித்/பழங்குடியினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன என்னும் புள்ளிவிவரம் நம்மை எத்தனை துயரத்தில் ஆழ்த்துகிறது? இந்த நிலவரம் 2000வது ஆண்டுகளில் சிறிதளவு முன்னேற்றம் கண்டது. அதாவது, ஏ பிரிவில் SC:10.35%, ST:2.97% இடங்கள் நிரப்பப்பட்ட நிலையிலும் 176845 SC/ST இடங்கள் காலியாக இருந்தன; பி பிரிவில் SC: 11.05%, ST:4.18% இடங்கள் நிரப்பப்பட்டு 148487 SC/ST இடங்கள் காலியாயிருந்தன; சி பிரிவில் SC:18.93%, ST:8.26% இடங்கள் நிரப்பப்பட்டு 736242 SC/ST இடங்கள் காலியாயிருந்தன; டி பிரிவில் SC:22.51%,ST:11.40% இடங்கள் நிரப்பப்பட்டு 269233 SC/ST இடங்கள் காலியாயிருந்தன; துப்புரவுப் பணியாளர்களில் SC :73.15%, ST:3.15% இடங்கள் நிரப்பப்பட்டு 6613 SC/ST இடங்கள் காலியாயிருந்தன. இந்தப் புள்ளி விவரத்தை Black Paper, VI Fact Sheet லிருந்து எடுத்து தலித்தியமும் உலக முதலாளியமும் என்னும் தமது நூலில் வழங்கியிருக்கிறார் எஸ்.வி.ராஜ துரை. இடஒதுக்கீடு மூலம் தலித்/பழங்குடி இன மக்கள் பெரும் ஆதாயங்கள் பெற்று முன்னேறிவிட்டனர் என்று ஓலமிடும் சாதி இந்து அறிவுஜீவிகளுக்கு மேற்கண்ட புள்ளி விவரங்களை நாம் சமர்ப்பிப்போமாக.

உலகமயமாக்கல், தாராளாமயம் என்னும் வடிவங்களில் முதலாளித்துவப் பொருளாதாரம் இந்தியாவிற்குள் நுழைந்தப் பிறகு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பதன் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. உலகமயமாக்கல் கொள்கை கையுடன் கொண்டுவந்து இங்கு வைத்திருக்கும் பன்னாட்டு தொழில் மற்றும்வர்த்தக நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை அப்படியே பின்பற்றும் நிலைக்கு ஆளாகிப்போனது நமது அரசாங்கம். தனியார் மயம் மட்டுமே திறமையுடன் செயல்பட்டு அதிக இலாபம் ஈட்டும் என்னும் தாராளவாத தொழில் கோட்பாடுகளின்படி அரசு நிறுவனங்களும்கூட தனியார் மாகி வருகின்றன. பொருளுற்பத்தியில் ஈடுபடுதல், சேவைகள் செய்தல், சமூக நலத் திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று புத்திமதி சொல்லும் அளவுக்கு அரசின் செயற்பாடுகளில் மூக்கு நுழைக்கிறது தாராளவாதம்.

நவீன முதலாளித்துவப் பொருளாதாரம் சர்வதேசத்தை தன் ஆளுமையின் கீழ் நிறுவத் துடிக்கும் போது அதன் நடவடிக்கைகள் ஒரு தேசத்தின் ஏழை/ நடுத்தர மக்களின் நலன்களைப் பொருட்படுத்துவதில்லை என்பதும் நாமறிந்ததே. இதன்படித்தான் தாராளவாதத்தின் நவீன தொழில் நுட்பங்களும் வர்த்தக சீர்திருத்தங்களும் மக்கள் சேவையைப் புறந்தள்ளி வைத்துவிட்டு இலாப நோக்கில் மட்டுமே இயங்குமாறு அரசு இயந்திரத்தை நிர்பந்தம் செய்கின்றன. அரசானது பன்னாட்டு தொழில்/வர்த்தக நிறுவனங்கள் சுமுகமாக இயங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும்; மின்சக்தி, சாலைப் போக்குவரத்து, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டும்; வரி விதிப்புகளில் விலக்கும் அதிக பட்ச சலுகையும் வழங்க வேண்டும். இவற்றைத் தவிர்த்து மேற்படி நிறுவனங்களை தன் விதிகளால் கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது; தொழிற் சங்கங்களின் ஆதிக்கம் கிட்டத்திலேயும் நெருங்கப்படாது. இது போன்ற நிபந்தனைகளுடனும் இந்திய அரசின் ஏகோபித்த ஆதரவுடனும் இங்கு கால் பதித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நெடுங் கதவுகள் முன் நின்றுகொண்டு “தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கு" என்று முழங்கும்போது அம்முழக்கம் செல்லாக் காசுக்கு சில்லரைக் கேட்பதுப்போல் நகைப்புக்கு ஆளாகிவிடுகிறது.

தொழில் நுட்ப உயர்கல்வி, மேலான கணினி அறிவு, ஆங்கிலம் பேசும் திறன் ஆகியவற்றை அடிப்படைத் தகுதிகளாகக் கொண்டு இவற்றில் அதிகத் தகுதி/ அதிகத் திறன் பெற்றவர்களுக்ககே முன்னுரிமை என்கிற ரீதியில் பன்னாட்டு/ தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான வேலையாட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிறுவனங்களில் இடஒதுக்கீடு செல்லுபடியாகாது என்றாகிப்போன சூழலில், கல்வியில் இன்றளவும் தலித்துகள் பின்தங்கியே இருக்கின்றனர், தலித்துகளில் பெரும்பான்மையினர் இன்றும் கூலித் தொழிலையே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர் என்றிருக்கும் நிலையில் இம்மக்கள் பிரிவினரிடமிருந்து மேற்கண்ட அதிகத் தகுதி/அதிகத் திறன்களுடன் எத்தனை பேர் மேற்படி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் பெற்று விட முடியும்? மேற்படி நிறுவனங்களின் முன் வாயிற் காவலர்களாக, தோட்டங்களை அழகுப் படுத்தும் தொழிலாளர்களாக, துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்புகள் மட்டுமே தலித்து களுக்கும் பழங்குடிகளுக்கும் மிச்சமிருக்கின்றன .உயர் பதவிகளில், நிர்வாகப் பொறுப்புகளில் பார்ப்பனர்களும், உயர்சாதி இந்துக்களும் மட்டுமே இடம் பெறுகின்றனர். தலித்/பழங்குடி இன மக்கள் இது போன்ற நிறுவனங்களில் செல்வாக்கு மிக்க பதவிகளைப் பெறுவதற்கான தடைக்கற்களாக அவர்களது வறுமை நிலையும், ஏழ்மையும், பின்தங்கிய கல்வி அறிவு நிலையும் காரணங்களாக விளங்குகின்றன இம்முறை. இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் தலித்துகளுக்கும்/பழங்குடி களுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையில் நிலவும் விரிசல் மேலும் அதிகமாகி தலித்/பழங்குடிகள் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவர் அல்லது அங்கேயே இருத்தப்படுவர். தீண்டப்படாத சமூகங்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வறிய சூழலுக்குள் தள்ளப்பட்டு மாற்று சாதிகளைச் சார்ந்து நிற்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவர். இந்தப் புரிதலிலிருந்துதான் இன்று வேலை வாய்ப்புகளில் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு என்பது தன்னளவில் பொருளற்ற ஒன்றாகி வருகிறது என்பதுடன் தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த வற்புறுத்துகிறோம் நாம்.

கல்வியில் இடஒதுக்கீடு:

கல்வியில் இடஒதுக்கீடு பின்பற்றுதல் என்பதைப் பொருத்தவரையில் பெருமளவு விடுபடல்களும் தொய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றைத் தவிர்த்து அரசு உயர்கல்வி நிலையங்கள் உள்ளிட்டு அரசின் உதவி பெற்று இயங்கும் கல்வி நிறுவனங்களிலும் தலித்/பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நேர்மையாகவே நிரப்பப்பட்டு வருகின்றன. அரசின் கல்விக் கொள்கை வேண்டுமானால் தலித்/பழங்குடி மக்களின் கல்வி அறிவு வளத்தைப் பெருக்கும் வகையில் வடிவமைக்கப் படவில்லை; தீண்டப்படாத சமூகங்களின் கல்வி அறிவு வளர்ச்சிக்கு இடையூறாய் விளங்கும் தடைகளை நீக்கி அவர்களது கல்வி வளர்ச்சி விகிதத்தைப் பிற சமூகங்களின் கல்வி வளர்ச்சிக்கு நிகராக வளர்த்தெடுக்கும் விதமான திட்டங்கள் அரசின் கைகளில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நகர்ப்புறத்து நடுத்தரப் பிரிவினருக்கும் மேட்டுக்குடிகளுக்கும் தரமான நவீனக் கல்வி, கிராமப்புறத்து ஏழை எளிய மக்களுக்கு சுமாரான கல்வி என்று பாரபட்சமான கல்விமுறை நடைமுறையிலிருக்கும் இன்றைய நிலையில் தலித்/ பழங்குடி மக்களில் பெரும்பான்மையினர் சாதி இந்துக்களின் கிராமங்களின் ஒதுக்குப் புறம் குடிசைகளாலான சேரிகளில் வசிக்கின்றனர் என்பதால் இவர்களுக்கு நவீன/தரமான கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது என்றும் சொல்லலாம்.

கிராமப்புறங்களில் வாழ்ந்து இடஒதுக்கீடு பலனாக அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புப் பெற்று நகரங்களுக்கு இடம்பெயர்ந்த தலித்துகள் சிலரின் வாரிசுகளுக்கு நவீன/தரமான கல்வி சாத்தியமாகியிருப்பது என்னவோ உண்மைதான். அப்படிப்பட்டவர்கள் அத்தரமான கல்வி அறிவையும் இடஒதுக்கீடு வாய்ப்பையும் பயன்படுத்தி அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுவிடுகின்றனர். இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த விரும்பாத தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் கூட பணி வாய்ப்புகள் இவர்களில் சிலருக்குக் கிடைத்து விடுகின்றன. இதனை வைத்துப் பார்த்தால் இடஒதுகீட்டால் பலன் பெற்றவர்களின் பிள்ளைகளுக்கே உயர்கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் மீண்டும் மீண்டும் வாய்ப்பு என்ற நிலை நிலைப் பெற்றுப்போய் தலித்/பழங்குடிகளுள் பணக்கார தலித்துகள் என்ற சிறு பிரிவு ஒன்றும் உருவாகியிருக்கிறது. இவ்வளவுக்கும் காரணம் பாரபட்சமான கல்விக் கொள்கையே என்பது ஒருபுறமிருக்க இடஒதுக்கீடு கொள்கைக்குள் சீர்திருத்தங்கள்/புதுப்பித்தல்கள் எதுவும் நடக்காமல் அக்கொள்கை தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததுவோ அப்படியே இன்றும் பின்பற்றப்பட்டு வருவதுவும் காரணமாகும். வேலை வாய்ப்பு என்னும் அம்சத்திலாவது இடஒதுக்கீட்டை ஒருமுறைக் கூடப யன்படுத்தாத தலித்/பழங் குடிக்கு முன்னுரிமை என்று மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு தலித் குடும்பம் வாழ்நாளில் ஒரு முறைமட்டுமே இடஒதுக்கீட்டைப் பயன்படுத்த முடியும் மற்றபடி அவ்வாய்ப்பு இதுவரைக்கும் பயன்படுத்தாத ஒருவரையே சென்றடையும் என்பது போன்ற மாற்றங்களும் சீர்திருத்தங்களும் செய்யப் பட்டிருந்தால் இடஒதுக்கீடு என்பது சிலருக்கு மட்டுமே பயன்படுகிறது என்பதைத் தாண்டி பலருக்கும் பலனளிக்கும் ஒன்றாக பரவலாக்கம் பெற்றிருக்கும்.

முடிவாக:

வீழ்த்தப்பட்ட தலித்துகள் பழங்குடிகள் என்னும் தீண்டப்படாத சமூகங்கள் முன்னேற்றம் அடைவதற்கு ஒரு வாய்ப்பு வழங்குதல் என்னும் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்றுக்கொண்டது இந்திய அரசியல் சட்டம் என்பதையும் இதன் அடிப்படையில் இந்திய அரசு அரசியல் அவைகள், அரசுத்துறை பணிகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் தீண்டப்படாதவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது என்பதையும் இக் கட்டுரையின் துவக்கத்திலேயேக் கண்டோம். இவ்வாய்ப்புகள் தீண்டப்படாத சமூகங்களை அரசியல், கல்வி,பொருளாதாரம், பண்பாடு, சமூக நிலை போன்றவற்றில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் வளர்த்தெடுக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனால் 65 ஆண்டுகளாகியும் இன்றுவரைக்கும் அவ்வகைப்பட்ட மேம்பாடுகள் எதுவும் சாத்தியப்படாமல் தீண்டப்படாத சமூகங்கள் அனைத்து நிலைகளிலும் பின்தங்கியே இருக்கின்றன என்பதுவே நம்முன் உள்ள கசப்பான உண்மையாகும். இந்திய ஆளும் வர்க்கம் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் அரசுத்துறை வேலைகளில் தீண்டப்படாதவர்க ளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பமால் மெத்தனமாக செயல்பட்டதன் விளைவாக, தலித்/பழங்குடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாதன் விளைவாகவே அவர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த அளவுக்கு மேம்பாடுகளும் வளர்ச்சியும் இல்லாமல் போயின .ஒட்டுமொத்தத்தில் பார்க்கப் போனால் தீண்டப்படாதவர்களுக்கு இந்திய ஆளும் வர்க்கத்தால் வழங்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் முன்னேறாமல் போனதற்கு அரசாங்கத்தின் அலட்சியமான செயற்பாடுகளே காரணம், இதனால் அச்சமூகங்கள் அரசியல், கல்வி, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட அம்சங்களில் பிற சாதிகளுக்கு இணையாக வளர்ந்தெழுந்து பரந்துப்பட்ட சமூகங்களுடன் இணைவர் என்ற உயரிய நோக்கமும் பாழாய்ப்போனது. அதாவது, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் நோக்கம் காயடிக்கப்பட்டுவிட்டது.

இடஒதுக்கீடு என்பதன் உண்மையான அர்த்தம் 1980களில் (இடஒதுக்கீட்டின் உயிர்நிலை நசுக்கப்பட்டு விட்டது) மண்டல் கமிஷன் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொள்ளத் துவங்கியபோதே செயலிழந்துப்போனது. அதாவது அரசுத்துறை/பொதுத்துறை பணிகளில் பிற்பட்ட சாதிகளுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க முன்வந்தது முதலாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு சலுகை என்னும் அர்த்தத்தில் தோற்றுவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் நோக்கம் அடிப்பட்டுப் போனது. இது குறித்து "சமூக ஒடுக்குமுறையை அடிப்படையாகக்கொள்ளாமல் எண்ணிக்கை மற்றும் அதிகாரம் சார்ந்து அனைத்துச் சாதிகளுக்கும் ஒதுக்கீடு என்ற நடைமுறை பரவலாகி வருகிறது. அதன் வாயிலாக அதிகாரமற்றவர்க்ளுக்கு அதிகாரம் என்று அரசியல் சட்டம் விரும்பிய இடஒதுக்கீட்டுத் தத்துவம் காலாவதியாகி வருகிறது...இன்றைய இடஒதுக்க்ட்டுக் கருத்தியல் பெரும்பான்மைச் சாதிகளுக்கு ஆதரவாக உள்ளது " (நூல்: சாதி இன்று-பக்:78) என்று 'தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம்' முன்வைக்கும் கருத்து ஆணித்தனமானது.

மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்பை அரசியல் சட்டத்தின் 15(4) விதி வழங்குகிறது. இதனைப் பயன்படுத்தி தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பிற சாதிகளை வகைப்படுத்தி அவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. அதாவது ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டு சலுகை என்றிருந்த இடஒதுக்கீட்டுக் கொள்கை எண்ணிக்கை அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் இடஒதுக்கீடு என்று மாற்றியமைக்கப்பட்டுவிட்ட நிலையில் அதன் அந்தரார்த்தம் பொய்த்துப்போனது என்பதுவே நமது வாதம்.

உலகமயம் என்பதன் பெயரால் கல்வி உள்ளிட்டு தொழில் துறைகள் யாவும் தனியார்மயம் என்றாகி வரும்போது அங்கு இடஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுவது என்னும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது என்பதையும் கருத்தில் கொண்டுதான் இடஒதுக்கீட்டுக் கொள்கை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்த முயற்சிக்கிறது இக்கட்டுரை. இன்றைய நிலையில் இட ஒதுக்கீட்டுக்கொள்கை முடிவுக்கு வருவதால் பிற்படுத்தப்பட்டோர் உள்பட அனைத்துப் பிரிவு சாதிகளும் பாதிப்புக்கு ஆளாகின்றன என்றாலும் தனியார் துறைகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதன் மூலம் மேலதிக பாதிப்புக்கு உள்ளாவது ஏற்கனவே வறுமை நிலையில் திண்டாடும் தீண்டப்படாத சமூகங்கள் மட்டுமேயாகும். இட ஒதுக்கீடு இவ்வாறாக தன்னளவில் அர்த்தம் இழந்து மரணப்படுக்கையை நோக்கி நகர்ந்து வருவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கப் போகின்றனவா தலித்/பழங்குடி சமூகங்கள்? அல்லது இடஒதுக்கீட்டுக் கொள்கையை தனியார் துறைக்கும் விரிவுப்படுத்தக் கோருதல் போன்ற ஆக்கப் பூர்வமான மாற்றங்களை இடஒதுக்கீட்டுக் கொள்கையின்மீது கோரப்போகின் றனவா? இதற்கானப் பதில் தீண்டப்படாத சமூகங்களின் அரசியல் பிரதிநிதிகளின் கைகளிலும், தலித்/பழங்குடி இன அரசியல் தலைமைகளின் கைகளிலும், அம்மக்களின் கைகளிலும் தான் இருக்கின்றது.

Pin It