தமிழகத்தில் மிகப் பெரிய அறிவியல் புரட்சியும்,அறிவியல் மறுமலர்ச்சியும் ஏற்படுவது போல் அணுசக்தித் துறைக்கும்,  அரசுக்கும் ஆதரவான பத்திரிகைகளில் கடந்த ஜனவரி 5,2015 முதல் ஒரே ஆரவாரமான,ஆதரவான கட்டுரைகள்,   செய்திகள்தொடர்ந்துவெளிவந்து கொண்டுள்ளன.

தேவாரம், பொட்டிபுரம், அம்பரப்பர் மலையை குடைந்து அமைக்கப்பட இருக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கான தொகை ரூ 1500 கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது முதல், நியூட்ரினோ ஆதரவு எனும் முழக்கத்தை முன்வைத்து அரசு ஆதரவுப் பத்திரிகைகள் உச்சத்தில் வைத்துக் கொண்டாடி வருகின்றன.

neutrino 370அறிவியலை ஆதரிக்கிறோம் எனச் சொல்லி கொண்டு வரும் சிபிஎம் போன்ற சில போலித்தனமான பொதுவுடைமை அமைப்புகள், நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து தற்போது நாடெங்கும் அதிதீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அறிவியல் வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலுக்கும் உயிர்மைப் பன்மயச் சூழலுக்கும் இயற்கைக்கும் எந்தவிதத்திலும் சேதாரம் ஏற்படுத்தாத திட்டம்,  எந்த சரணாலயங்களும் பாதிக்கப்படாத திட்டம்,  இந்திய அறிவியலாளர்களால் மட்டுமே செயல்படுத்தப்படும் திட்டம்,எந்த ஒரு வெளிநாட்டோடும் குறிப்பாக அமெரிக்காவோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத இந்திய திட்டம்,50 ஆயிரம் டன் காந்தக் கருவியை குளிரூட்டும் அறைக்குள் வைத்திருந்தாலும் கூட தண்ணீர் தேவை என்பது பெரிய அளவுதேவைஇல்லாத திட்டம்,ஒரு லட்சம் டெட்டனேட்டர் வெடிமருந்துகளை பயன்படுத்தி வெடிவைத்து மலையை உடைக்கும்போது கூட வெடிச்சத்தம் முதுகைத் தட்டிக் கொடுப்பது போல் மட்டும்தான் இருக்கும் எனச் சொல்லப்படும் திட்டம்தான்  நியூட்ரினோ திட்டம்.

இத்திட்டத்திற்கு அருகிலிருக்கும் இடுக்கி,முல்லைப் பெரியாறு,உட்பட எவ்வித அணைகளிலும் விரிசல்,பிளவு,உடைப்பு போன்ற எவ்வித சேதாரமும் ஏற்படுத்தாத திட்டம்,  நீர் நிலைகளுக்கும் நீரியல் அடுக்குகளுக்கும் பிரச்சனை ஏற்படுத்தாத திட்டம்,இந்தியாவிலேயே பொட்டிபுரம் மேற்கு போடி மலை மட்டுமே எவ்வித இடையூறுமின்றி இத்திட்டம் நடைபெறுவதற்கான  உகந்த இடம் எனும் கூறும் திட்டம்,  இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோவை மட்டும் ஆய்வு செய்து கொண்டு,செயற்கையாகச் அனுப்பப்படும் நியுட்ரினோ கற்றையை ஆய்வு செய்யாத திட்டம், கதிர்வீச்சு அபாயம் எதுவும் இல்லாத திட்டம்,அணுக்கழிவை எக்காலத்திலும் நியூட்ரினோ திட்டம் அமைக்கும் இடத்தில் கொண்டுவந்து வைக்க திட்டமில்லாத திட்டம்,

காந்தஉணர்கருவிக்குள் எந்தவிதமான ரசாயன வாயுவையும்   பயன்படுத்தி பின்பு அதை வெளியேற்றும் திட்டமில்லாத திட்டம்,  இந்தியாவில் இத்திட்டத்தை நிறைவேற்ற நமது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம் போன்றதிட்டம்,  கேரளத்தில் உள்ள   பொதுவுடமை இயக்கத்தலைவர்கள் கூட ஆதரிக்கும் திட்டம்,  தமிழக மாணவர்கள் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறக் கிடைத்த அருமையான அற்புதமான வாய்ப்பு இந்தத் திட்டம், அறிவியலாளர்கள் மக்களின் நண்பர்கள் என்பதை உணரவைக்கும் திட்டம் என பல்வேறு வகைகளில் ஆளும் வகுப்பு ஆதரவாளர்களால் நியூட்ரினோ திட்டம் பற்றிசொல்லப்பட்டும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இது உண்மையா என ஆராய்ந்து பார்த்தால் நமக்கு மிகப்பெரிய ஏமாற்றமே கிடைக்கிறது.

அறிவியலின் பெயரில்,அறிவியலாளர்கள் எனும் பெயரில் எந்தப் பொய்யை உரக்கச் சொன்னாலும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.சாதாரண மக்கள்அறிவியலாளர்கள் சொல்லும் எதையும்  மறுக்கக் கூடாது,எதிர்த்துகேள்வி கேட்கக் கூடாது எனும் பொதுப் புத்தி நம் தலையில் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுள்ளது.

’விஞ்ஞானி’அப்துல் கலாமே சொல்லிவிட்டார்,மத்திய நிபுணர் குழு,மாநில நிபுணர் குழு,ஐஐடி உட்பட மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும்,ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள்,எந்தப் பாதிப்பும் வராது என்று சொல்லி விட்டார்கள் எனக் கூறித்தான் நம் தலையில்,கூடங்குளம் அணு உலைத் திட்டம்ஏற்கனவேதிணிக்கப்பட்டது.

அணு உலை இயங்கத் தொடங்கிவிட்டது என ஜுன் 13,2013 அன்றுஅரசால்சொல்லப்பட்டது முதல் ஆயிரம் மெகாவாட் உற்பத்தியாகியுள்ளது எனஇன்றுவரைபலமுறை நிலைய இயக்குனரால் சொல்லப்பட்ட்து. ஆனால்இன்றுவரை 600 நாட்களைக் கடந்தும் கூட,ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அது விநியோகம் செய்து அதற்கான தொகையை எந்த அரசிடம் இருந்தும் பெற்றுள்ளதாக எந்த ஒரு உறுதியான ஆதாரப்பூர்வமான செய்திகளும்இல்லை.இதுபற்றி தமிழக முதல்வரை டிசம்பர் மாதம் கூடன்குளம் போராட்டக்குழு சார்பில் நாங்கள் சந்தித்த போது கூட தெரிவித்தோம்.

அணு உலையில் நடந்த விபத்து பற்றி பல மணி நேரம் கழித்தேஅரசால்வெளியில் சொல்லப்படுகிறது.  விபத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் என்ன நிலையில் உள்ளார்கள் என்று இன்றுவரை வெளியே அறிவிக்கப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

அணு உலை இயங்கத் தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்ட நாள் முதல் இன்றுவரை அணு உலையில் பல்வேறு பிரச்சனைகள்,   கசிவுகள்,   விபத்துகள்,    பல்வேறு இயந்திரக் கோளாறுகள்,  அடிக்கடிஅணுஉலை இயங்காமல் நிறுத்தி வைக்கப்படுதல்,  ஓராண்டில் மட்டும் 35 கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கப்பட்டது என எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளது. ஆனால்,அணு உலையில் தினமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்ற ஒருமாபெரும் பொய்யை ஊடகங்களை வைத்து உண்மை போல்நாட்டுக்குகாட்டும் நிலையில்தான் இந்திய அரசும்,அரசு சார்ந்த விஞ்ஞானிகளும் இருந்து வருகின்றனர். மக்கள் உழைத்து கொடுக்கும்வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்களின் அறமும் நேர்மையும் எங்கே உள்ளது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும்,தொடர்ந்து பல்வேறு அவதூறுகளைச் செய்வதையுமே தனது வேலையாக வைத்திருந்த சில அரசு சார்ந்த ஊடகங்கள்,  கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்தில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட அணு உலையில்  உற்பத்தி செய்து விநியோகிக்கப்படாத நிலை இருப்பதை  அறிந்தும்,  இதுவரை ஏனென்று கேட்டு எழுத,   கேள்வி கேட்க துப்பில்லாத நிலையில்தான் உள்ளது.

அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு வரும் எங்களைப் போன்றோர்,  இந்த நிலையில் இருந்துதான் நியூட்ரினோ திட்டத்தைப் பற்றியும்,அதன் உண்மை நிலை பற்றியும்  அலசி ஆராய வேண்டிய தேவை உள்ளது.

வானவெளியில் இருந்து வரும் நியூட்ரினோ துகள்களுக்கு  நம் மண்ணில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தும் வல்லமையும்இல்லை.  ஆனால்  செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோவிற்கு அத்தன்மை உண்டு. இரண்டிற்குமான ஆற்றல் வேறுபாடே அதன் இயற்பியல்/வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது.  

நாம் இயற்கையில் உள்ளபிரபஞ்சம் முழுவதும் பரவி,எல்லா இடத்திலும் தங்கு தடையின்றி வந்து கொண்டு உள்ளநியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்வதை எதிர்க்கவில்லை. ஏற்கனவே  கோலார் தங்க சுரங்கத்தில்இது பற்றி ஆய்வுக்காகசெயல்பட்ட நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தையும்எதிர்க்கவில்லை.

ஆனால்வரும்காலத்தில்அமெரிக்கா,ஜப்பான்,ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து (சுமார்6500-11,500கி.மீ தூரம்) அனுப்பப்பட்டு   ஆய்வு செய்யப்படும்எனINOதனது திட்ட அறிக்கையில் சொல்லியுள்ள  செயற்கை நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்வதைதான் எதிர்க்கிறோம்.

முதலில் நியூட்ரினோ திட்டம்,இந்திய அரசின்திட்டம்,மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டம்.இந்தத் திட்டத்தின் சரி தவறுகள் பற்றி அரசும்,அரசில் பணிபுரியும் விஞ்ஞானிகளும் நேரடியாக மக்களிடம்விளக்காமல்,விளக்க கூட்டங்கள்,   பத்திரிகைகளில் கட்டுரைகள் இதுபற்றி   ஏன்   எழுதாமல்  உள்ளார்கள்என தெரிவிக்க வேண்டும்.  இதற்குப் பதிலாக நியூட்ரினோ திட்டத்தை ஆதரிக்கும்ஒரு கட்சியின் துணை அமைப்பை வைத்து,அதாவது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)  தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற அமைப்பை வைத்து மதுரை,   தேவாரம்,   சென்னை மற்றும்மதுரை தேனியைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் விளக்கக் கூட்டம் நடத்தியதுஎதற்காகஎன விளக்க வேண்டும்.

இந்திய அரசு நியூட்ரினோ திட்டம் பற்றி சி.பி.எம் கட்சி விளக்கக் கூட்டம் நடத்த நாங்கள் எவ்வித அனுமதியும் தரவில்லை, எங்களை கேட்கவும் இல்லை.அவர்களேதான் முன்னூக்கமாக இதை நடத்துகின்றனர் எனக் கூறினால்,அதையும் இந்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கூடங்குளம் அணுஉலை திட்டத்தோடு (KKNPP)இணைந்து,  அணுஉலையை ஆதரித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து கூட்டம் நடத்த அனுமதியளித்த அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படவுள்ள பிரச்சனைகளை நெருக்கடிகளை எடுத்துக் கூறும் அமைப்புகளுக்கும் பேச அனுமதி தர அரசு உத்தரவிட வேண்டும்.

இப்படி இந்திய,தமிழக அரசுகள் செய்யுமா எனக் கேட்டால் கட்டாயம் செய்யாது. மிகப் பெரிய கருத்துரிமைக்கு ஆதரவாளர்கள் போல்   நாடெங்கும்   வேடமிட்டுச் செயல்படும் சி.பி.எம் கட்சியினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தாங்கள் நிகழ்ச்சி நடத்திய அதே பள்ளிக் கல்லூரிகளில் நியூட்ரினோ பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்றுஅவர்களிடம்சொல்வார்களா எனக் கேட்டால்,  சொல்ல மாட்டார்கள்   என்பதேஎதார்த்தமான  உண்மை. அதே போல் நியூட்ரினோ திட்டத்தை விமர்சிக்கும் கட்டுரைகளை தங்கள் ஆதரவுப் பத்திரிகைகளிலும் தங்களின் கட்டுரைஏற்கனவே  வெளியாகி  உள்ள  பத்திரிகைகளிலும் அதையும் வெளியிட வேண்டும் என வெளிப்படையாகச் சொல்வார்களா எனப் பார்த்தால் இல்லையென்ற பதிலே கிடைக்கும்.

உலகத்தையே தனது கொள்ளைக்காக சுரண்டி வரும் அரசுகளால் பல்வேறு கனவுகளோடு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்தான்   செயற்கையாக தயாரிக்கப்பட்டநியுட்ரினோ திட்டம். இத்திட்டத்தைஅந்த நாடுகளின் சுரண்டல் தேவைக்காக இங்கு அமைத்து செயல்படுத்த அதன் அடிவருடியாக இருந்து இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நேரடியாக இந்திய அரசு மக்களிடம் இத்திட்டம் பற்றி பேச வந்தால் மக்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தால் பின்வாங்க வேண்டியதிருக்கும்.    ஏற்கனவே 2010 முதல் தற்போது வரை இப்பகுதி மக்கள் நியுட்ரினோ திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடியதால் கைது செய்யப்பட்டு,,சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். இப்பகுதியிலுள்ள அனைத்து முன்னணிச் செயல்பாட்டாளர்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் அரசால் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீங்கள் எந்த நேரமும் கைது செய்யப்படுவீர்கள் எனக் காவல்துறை தொடர்ந்துஅவர்களைஅச்சுறுத்தி வருகிறது. இப்படி,  மக்களை அச்சுறுத்தியும் அடக்குமுறை செய்துமே அவர்களை  நியூட்ரினோதிட்டத்திற்கு எதிராக செயல்பட விடாமல் மிரட்டி தடுத்து அச்சுறுத்தி வருகிறது அரசு.

எனவே மக்களின் எதிர்ப்புணர்வை நீர்த்துப் போகச் செய்யவும்,  மக்களின் எதிர்ப்பை மடைமாற்றவுமே அணுசக்தித் துறையோடு இணைந்து செயல்பட்டு வரும் சி.பி.எம்.மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை தற்போது களமிறக்கியுள்ளதுஅரசு.  

அடுத்தடுத்து‘விஞ்ஞானி’அப்துல் கலாம் நியூட்ரினோ திட்டத்தை சிலமணி நேரம் ஆய்வு செய்து எந்த ஒரு பாதிப்பும் வராது என ஆதரித்துப் பேசுவார்.  சில பத்திரிக்கைகளில்  ஒரு பக்க கட்டுரை எழுதுவார்.பின்பு இந்திய அரசின் நிபுணர் குழு   ஒன்று  அமைக்கப்பட்டு நியூட்ரினோ திட்டம்மிக அற்புதமான பாதுகாப்பான திட்டம் என அறிக்கை வெளியிடும்.  இதுதான் நடைமுறையில் இந்திய அரசு நடத்தப்போகும் கபட நாடகம்.இக்காலத்தில் மக்களின் எதிர்ப்புகளை கடுமையாக ஒடுக்கி விடலாம் என்பதே அரசின் திட்டம்.

நமக்கு எழும் கேள்வியெல்லாம் இதுதான்.தமிழகத்தில்பலகோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இருக்கின்ற,   அவர்களுடையசி.பி.எம் கட்சியாலேயே எதிர்க்கப்படுகின்ற,கூடங்குளம் அணுஉலைப் பூங்கா திட்டத்தையும்(கூடங்குளத்தில்   ஒருஅணுஉலைஇருக்கலாம்,ஆனால்அணுஉலைப் பூங்காகூடாது),மீத்தேன் திட்டத்தையும்,தாதுமணல்-கிரானைட்-ஆற்றுமணல் போன்ற கனிமவள கொள்ளை பற்றி, சி.பி.எம்.மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இதன் பாதிப்பு பற்றிஅறிவியல்பூர்வமாகஎங்குமே விளக்கக் கூட்டங்களோ,  கருத்தரங்குகளோ,பள்ளிக் கல்லூரிகளில் ஒருவிழிப்புணர்வு   நிகழ்ச்சி கூட நடத்தியதாகவோ அல்லது இதன் பாதிப்பு பற்றி கட்டுரைகள் கூடஎழுதியதாகவோ எங்கும் தகவல் இல்லை.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் ஏற்கனவே உள்ள அணை பலம் இழந்து விட்டது. எனவே அதை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளத்தின் நிலைபாடுதான் இவர்கள் நிலைபாடாக இருந்தது. முல்லை பெரியாறு அணை பிரச்சினையின் உச்சகட்டமாக இருந்த கடந்த  15  ஆண்டுகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தங்களின் நிலையை பற்றி எங்கும் வெளிப்படுத்தி பேசவில்லை.இதன் மூலம் அணை பலம் இழந்து விட்டது என்ற கேரளத்தின் நிலைக்கு மறைமுகமான ஆதரவாக இருந்த, மாபெரும்  ’அறிவியல்பூர்வமான’  இயக்கத்தினர்தான் சி.பி.எம்.மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர்.

மக்கள் நலனில்’அக்கறையுள்ள’மாபெரும் இப்படிப்பட்ட சி.பி.எம்.மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த‘அறிவியல்  பற்றாளர்கள்’ தான் இன்று நியுட்ரினோ திட்டத்தை ஆதரித்து நாடெங்கும் சுற்றிச் சுற்றி வந்து ஒயாமல் மக்களிடம் கூட்டம் நடத்துகிறார்கள். கட்டுரை எழுதுகிறார்கள். முகநூலில் பொங்கி எழுந்து அறிவியலை வளர்க்கிறார்கள். நேற்று சி.பி.எம்.மின் அகில இந்திய பொறுப்பாளர் பிரகாசு காரத் அவர்கள் தமிழகத்தின் மற்ற அழிவுக்கான பிரச்சினைகளை எல்லாம் பேசுவதை விட்டுவிட்டு  ’நியுட்ரினோ ஆராய்சி நாட்டின் வளர்ச்சி’  என சென்னையில் பேசியுள்ளார். இப்படி பேசும் இவர் இந்த திட்டத்தை தங்கள் சொந்த மாநிலத்தில் அமைக்க வேண்டும் என குரல் கொடுப்பாளர்களா, கடந்த 15 ஆண்டுகாலமாக எங்கே அமைப்பது என முடிவு செய்ய முடியாமல் இருந்த போது தங்கள் சொந்த மாநிலத்திற்க்கு கேட்டார்களா  என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு கிடைக்கும். இப்படிப்பட்ட   ‘நேர்மையாளர்’கள் எந்த உண்மைகளைமக்களுக்கு சொல்வார்கள் என நாம் எதிர்பார்க்க முடியும்.

நியூட்ரினோ திட்ட அமைவிடம்:                      

=================================

நியூட்ரினோ திட்டம் அறிவியலாளர்களால்,தேனி மாவட்டம் தேவாரம்,பொட்டிபுரம் மேற்கு போடி மலை மட்டுமே நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பதற்கான எல்லாவித தகுதிகளும் கொண்ட இடம் என வரையறுத்துக் காட்டிச் சொல்லி வருகின்றனர்.

உண்மை இதுவா என்று பார்த்தால்,இல்லை என்ற பதிலே நமக்குக் கிடைக்கும். அம்பரப்பர் மலையில் உள்ள சார்க்கோனைட் பாறைகள் போன்றவை உள்ள பகுதிகளாக கேரளாவில்”பொன்முடி:யும்,  கர்நாடகத்தில்”பில்லிகிரி ரங்கா”வும் அமைந்துள்ளது. 1400 கிலோ மீட்டர் நீளமுள்ள மேற்கு தொடர்ச்சி மலை தமிழகம் தொடங்கி குஜராத் வரை 7 மாநிலங்களில் உள்ளது. இம்மலை முழுமையாக கடினப் பாறைகள் கொண்டது. இங்கு எங்குமேநியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க முடியாது என்பதற்கான அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை.

மேலும் இமயமலை மிகச் சமீபகாலத்தில் தோன்றிய மலை என கூறப்படுகிறது. அங்குள்ள படிமப் பாறைகளை குடைந்து சுரங்கம் அமைத்தால் அது காஸ்மிக் கதிரை வடிகட்டும் மலையாக இருக்காது. பாதுகாப்பானதாக இருக்காது என்று சொல்லும் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் இல்லை.

ஏற்கனவே 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயல் சுரங்கங்களில் 2000 மீட்டர் ஆழத்தில் (2 கி.மீ) நியுட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 1980களில் தங்க வயல்களை அரசு மூடிவிட்ட பிறகு அந்த நியூட்ரினோ ஆய்வகமும் மூடப்பட்டது என ஐ.என்.ஓ தனது திட்ட அறிக்கையில் கூறியுள்ளது. தங்கவயல் மூடப்பட்டப் பிறகு அப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் இயங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில் ஆய்வகம் ஏன்மூடப்பட்டது. இப்போது கோலார் தங்கவயல் சுரங்கத்தில் நியூட்ரினோ ஆய்வு நடத்த என்ன தடை உள்ளது என்பதை எங்கும் கூறப்படவில்லை. இதுபோன்ற எவ்விதப் பயன்பாடுமற்ற எண்ணற்ற சுரங்கங்கள் நாடு முழுக்க உள்ளது.

இப்படிப்பட்டஎண்ணற்றபல்வேறு கேள்விகள் நம்முன் பூதாகரமாக எழுந்துள்ளது. இந்திய அரசைப் பொறுத்தவரை நியூட்ரினோ திட்டத்தில் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் இருக்கும் என்ற அடிப்படையிலேதான் நியூட்ரினோ திட்டம் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளதாக நாம் உணரவேண்டியுள்ளது.

அணுஉலைகளை கேரள அரசு அமைக்க மறுத்தவுடன் இந்திய அரசு அதைத் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் நிறுவியது. அணு உலைக் கழிவுகளை கர்நாடக அரசு கோலார் தங்கவயலில் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தவுடன்,உடனே48,000 வருடம் பாதுகாக்க வேண்டிய அணுக் கழிவுகளை தமிழ்நாட்டிலேயே வைப்போம் என உச்சநீதிமன்றத்திலே கூறியது இந்திய அரசு. தற்போது தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் வருகிறது. தொடர்ந்து இந்திய அரசு தமிழகத்தை தனது அடிமை நாடு என்ற நிலையில் வைத்தே,  அழிவுத் திட்டங்களைஎல்லாம்திணித்து வருகிறது.இதை நாம் எந்த நிலையிலும் ஏற்க முடியாது.

மேற்கு போடி மலையில் இருந்து 2 கி.மீ சுரங்கம் தோண்டப்படும்  சுரங்கம்,முகப்புப் பகுதியிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் தமிழக எல்லைக்குள் வருகிறது. மற்ற ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் கேரளத்தின் எல்லைக்குள் வருகிறது. சுரங்க முகப்பிலிருந்து வடமேற்காக சுரங்கம் தோண்டப்பட்டால் அப்பகுதியில் கேரளத்தின் “மதிகெட்டான் சோலை சரணாலயம்”வருகிறது. சரணாலயம் இருக்கும் பகுதியில் எப்படி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட முடியும் என்ற ரகசியம் நமக்குத் தெரியவில்லை.

யுனெஸ்கோவால் உயிர்மைப் பன்மயச் சூழல் மிகுந்த பகுதியாக அகில உலக பாரம்பரியச் சின்னமாக அடையாளம் காட்டப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி ஆய்வு செய்த கஸ்தூரி ரங்கன் கமிட்டி ஒரு அறிக்கை கொடுத்துள்ளது. அதில்,மேற்குத் தொடர்ச்சி மலையில் பாறைகளைக் குடைவதோ, உடைப்பதோ, சிதைப்பதோ, வெடிவைத்துத் தகர்ப்பதோ  கூடாது எனத் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை  அபிவிருத்தித் திட்டப்படி, 2000 சதுர மீட்டருக்கு (சுமார் ஒரு பள்ளி, மருத்துவமனை கட்டும் அளவு மட்டும்) மேல் எவ்விதமான கட்டுமானங்களும் இங்கு கட்டப்படக் கூடாது என தெளிவாகச் சொல்கிறது.இவர்கள் போட்டுள்ள சட்டத்தை  எல்லாம்  இவர்களேகாலில் போட்டு மிதித்துவிட்டு எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இப்பகுதி,நிலநடுக்கம் ஏற்படக் கூடிய லெவல் 3 பகுதிக்குள் வருகிறது. இடுக்கி அணைப் பகுதியில் ஏற்கனவே பலமுறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது. ஆனால்,இதையெல்லாம் மறைத்து,இப்பகுதியில் நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்காக நிலநடுக்கம் ஏற்படாத லெவல் 2 எனபொய்யாககாட்டும் வேலையை செய்கின்றதுஅரசு. இதுதான் அறிவியலாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களின்‘அறச்’செயலாக உள்ளது.

தனதுமண்ணின்தேவைக்காக இந்திய அரசை எதிர்க்கட்சித் தலைவரையும் உடன் அழைத்துக் கொண்டு தேடித் தேடிச் சென்று பல்வேறு திட்டங்களை கேட்கும் கேரளா,கர்நாடக உட்பட பல்வேறு அரசுகள் ஏன் மேற்குத் தொடர்ச்சி மலை,இமயமலை எனபரவிஉள்ள தங்கள் பகுதிகளில் நியூட்ரினோ திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இந்த‘அற்புதமான திட்டமும் அறிவியல் வளர்ச்சியும்’அவர்களுக்கு கசக்கச் செய்யுமா?என்பதை நாம்ஆராய்ந்துஉணர வேண்டும்.

அறிவியலாளர்கள் என்றால் அரக்கர்களா?மக்களுக்காக இயற்கையைப் பாதுகாக்க உண்மையாக,நேர்மையாக செயல்பட மாட்டார்களா என பலராலும் கேட்கப்படுகிறது. குறிப்பாக நியுட்ரினோ ஆய்வுக்காக செயல்படும் அறிவியலாளர்களின் நிலை என்பது நேர்மையற்ற நிலையாகவே உள்ளது. இந்திய அரசு,இவர்கள்அனுமதி கேட்ட இடத்தில்  நியுட்ரினோ திட்டம் செயல்படஅனுமதியளித்து இருந்தால் இந்த ஆய்வு இப்போது உதகை-சிங்காரா பகுதியிலோ அல்லது தேனி-சுருளி மலைப்பகுதியிலோ நடந்து கொண்டு இருந்திருக்கும். இரண்டுமே மிக முக்கியமான வனவிலங்கு சரணாலய (முதுமலை,மேகமலை) பகுதிகள்,மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளங்கள் குவிந்துள்ள பகுதி இது. இந்த பகுதிஅழிவது பற்றி எவ்வித அக்கறையும் இன்றியே,  இவர்கள் இப்பகுதியை நியுட்ரினோ   திட்டஆய்வுக்குதேர்ந்தெடுத்தது என்பது,எப்படிப்பட்ட  கொடூர  மனநிலை உள்ளவர்கள் இவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும்.

நியுட்ரினோ  ஆய்வுதிட்டத்தைகேரளத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் அவர்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார். இந்திய நியூட்ரினோ திட்டத்பொறுப்பாளர்திரு. மேண்டல் அவர்கள்,   2012ல்   தோழர்.அச்சுதானந்தன்   அவர்களை சந்தித்து நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவு கேட்டபோது,அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து நியூட்ரினோ திட்டத்தை  தோழர். அச்சுதானந்தன் எதிர்த்தார் என்பதுதான் வரலாறு.  கேரள முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள்,   நியுட்ரினோ திட்டம் குறித்து கேரள அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆதரவைக் கேட்பேன். மக்கள் நலனுக்குத் தேவையானதை தங்களின் அரசு கட்டாயம் செய்யும் என தெரிவித்துள்ளார்.

கேரள அறிவியல் இயக்கத்தினர் நியூட்ரினோ திட்ட்த்தால் இடுக்கி, முல்லைப் பெரியாறு அணை கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிவித்த போது,  அதை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர்கடுமையாக எதிர்த்தனர்.

இந்தியாவில் அணுக்கழிவை எங்கு வைக்கப்போகிறோம்என்பதுபற்றி இதுவரைஅரசு எங்கும் கூறவில்லை. .  எனவே அணுக்கழிவை வருங்காலத்தில் நியூட்ரினோ திட்டம் அமைக்கும் இடத்தில்இதைகொண்டுவந்து வைக்கும் ரகசிய திட்டம் அரசுக்கு உள்ளது  என்பதுதான்  அப்பட்டமான உண்மை.(ஏனெனில்வேறு பகுதிகளில் எங்கும் இதை வைக்க விடமாட்டார்கள்). இந்திய கணிதவியல் மையம் 22.04.2010 அன்று அரசுக்கு கொடுத்த தனது விண்ணப்பத்தில் இதை அணுமின் நிலையம், அணுசக்தி (மறுசுழற்சி) நிலையம், அணுக்கழிவு மேலாண்மை நிலையம் என்ற வகை என குறிப்பிட்டு இருந்தது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். 

நியூட்ரினோ திட்டம் அமைக்கும் 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்த உணர்கருவிக்குள் பிரியான் வாயு-(பிரியான்-இது மூச்சை இழுத்து திரும்ப விடுவதற்குள் இறக்கும் அபாயம் உள்ள வாயு),  சல்பர் ஹெக்சா புளூரைட்)சல்பர் ஹெக்சா புளூரைட் (புவி வெப்பமயமாதலுக்கும், ஓசோன் மண்டலம் ஓட்டை ஆவதற்க்கும் காரணமான வாயு), சமபூத்தேன் ஆகிய வாயு அனுப்பப்படும். .. பின்பு இதை காற்றோட்ட கருவிகள் மூலம் வெளியேற்றும் போது அது உடனடியாக நரம்பு மண்டலத்தை பாதித்து கோமாவுக்கு இட்டு செல்லக் கூடிய வாயுவாக இருக்குமாம்.  இந்த வாயுவை காற்றில் கலந்தால் தேவாரப் பகுதி மக்களின் உடல் நலம்மிககடுமையாக பாதிக்கப்படும்.இந்த வாயுவைப் நீர்த்து போகச் செய்து காற்றுடன் கலப்போம் என சொன்னாலும் அது காற்றுடன் கலந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கு   பல்வேறு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிவியல் சொல்கிறது.

இப்படி இந்த நியுட்ரினோ திட்டத்தில்உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் எடுத்துக் கொண்டு,அரசு சார்பாளர்களால்,நியுட்ரினோ திட்டச் சார்பாளர்களால் சொல்லப்பட்டு வரும்ம் அனைத்து வாதங்களையும்,  தகவல்களையும் தவறு என அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது.(இது பற்றி முழுமையான புத்தகமாக வெளி வரும் வகையில் எழுதிக் கொண்டு உள்ளேன். விரைவில் வெளியாகும்)

தமிழ்நாட்டில் இப்படி இந்திய அரசால் திணிக்கப்படும் நாசகார திட்டங்களைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் உள்ளது அஇஅதிமுக,திமுக போன்ற கட்சிகள். தமிழகத்தின் எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எவ்வித ஒப்புதலும் இல்லாமல் இது போன்றா  திட்டங்கள் கொண்டு வரப்படுவதைப் பற்றி கவலையின்றி,  இந்திய அரசுடன் ஒப்பி சென்று தனது கட்சியினருக்கும், தனது குடும்பத்திற்க்கும்,தனக்கும் இதன் மூலம் என்ன பொருள் ஆதாயம் கிடைக்கும் என்பதை பற்றி மட்டுமே கவலைப்படும் கட்சிகளாகவே தமிழகத்தை ஆளும்,ஆண்ட கட்சிகளின் நிலையாக உள்ளது. மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்துக் கிளம்பினால் அப்போது அங்கு வந்து நிலைமைகளுக்கு ஏற்ப திறமையாக நாடகமாடும் இக்கட்சிகள்.

பிள்ளையையும் கிள்ளி விட்டு,அழுகின்ற குழந்தையை தூங்க வைக்க  தொட்டிலையும் ஆட்டி விடுவது போன்ற நடிப்பது போல்,திட்டத்திற்கு அனுமதியும் கொடுத்து விட்டு,மக்களின் கடும் எதிர்ப்பு வந்தால் அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் அஇஅதிமுக,திமுக போன்ற ஆளும்,ஆண்ட கட்சிகள். மீத்தேன்,  அணுஉலை,  கெயில் போன்ற ஒவ்வொரு திட்டத்திலும் இதுதான் இவர்கள் நிலை.

நமது  நாட்டில்போபால் விசஆலைக் கழிவுகளால் விபத்து நடந்து 30 ஆண்டுகள்கழிந்தும்  கூடஅதை அகற்றஎவ்விதவழியின்றி,  செய்யாமல் உள்ளது இந்திய அரசு. ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் அபாயகரமான குரோமிய நச்சுக் கழிவுகள்மட்டும்1,30,000 டன் உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டு உள்ளது.வேலூர்மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில்மட்டும்பல ஆயிரம் டன் எடையுள்ளநச்சுக்கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது பற்றி அக்கறையின்றி  இந்திய, தமிழகமாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செயல்பட்டு  வருகின்றனர்..

வேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப்புப் பணிஉடனேதொடங்க வேண்டும் என கடந்த2003-ம் ஆண்டு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டும் கூட,இன்றுவரை அபாயகரமான கழிவுகள் அகற்றப்படாத நிலையிலேயே உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தமிழக முதல்வர் டெல்லி சென்று அபாயகரமான திடக்கழிவுகளை அப்புறப்படுத்தஇந்தியஅரசிடம்உதவி கேட்டு வந்துள்ள நிலைமை உள்ளது

திருப்பூர்சாயப்பட்டறைக் கழிவுகளால்காவிரியின் துணை நதியானநொய்யல் ஆறு செத்துப்போனது ஒருஅவலமானவரலாறு. அணு உலைக் கழிவுகளைப் பற்றி கூறவே தேவையில்லை.அமெரிக்கா உட்படஉலகம் முழுக்கஉள்ள அணுலை வைத்துள்ள அனைத்து அரசுகளும்,அணு உலைக் கழிவுகளை எப்படி 48,000 ஆண்டுகள்வைத்துபாதுகாப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.

இப்படிப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வரும்விசக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்வது பற்றி,மக்கள் நலனைப் பற்றி  எந்த ஒரு அறிவியலாளருக்கும்,ஆராய்சியாளர்களும்உண்மையில் கவலையும் அக்கறையும்கொண்டு,  அதை மாற்ற வேண்டும் என சிந்தனையும் செயல்பாடும்  இருப்பதாகக் கூடதெரியவில்லை...

நம்மீதுஅறிவியலின் பெயரில் இங்கு கொண்டு வந்து திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி,மரபணு மாற்ற விதைகள்,  அணுஉலை,  மீத்தேன்,  நியுட்ரினோ என அனைத்துமே நமது வாழ்வாதாரத்தையும்,இயற்கையையும்அழித்து,  பன்னாட்டுக் கம்பெனிகளை மட்டும் வாழவைக்கும் திட்டங்களாகும்.

நமது நாட்டில் இருந்து வெற்றிகரமாக அனுப்பப்பட்டதாக சொல்லப்படும் செயற்கைகோள்கள் மூலம் நடக்கும் ஆராய்சிகள் எல்லாம் நமது மக்களின் வாழ்க்கையை எவ்விதம் மேம்படுத்தி உள்ளது எனப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். இந்த ஆராய்சிகள் மூலம் நமது நாட்டின் கனிமவளங்கள்,நீர் வளங்கள்,இயற்கைவளங்கள் அனைத்தும் எங்கெங்கு இருக்கிறது என கண்டறியப்பட்டு பன்னாட்டு கம்பனிகளுக்கும்,உள்நாட்டு கொள்ளையர்களுக்கும் அநியாயமாக கொள்ளையடிக்க தாரை வார்க்கப்பட்டு உள்ளாக்கப்பட்டத்துதான் நாம் உண்மையில் கண்ட பயன்.

நமது நாட்டு கல்வி என்பது பன்னாட்டு கம்பனிக்கு பணியாளர்களை உருவாக்கும் மெக்காலே கல்வி. சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். இப்படிப்பட்டமெக்காலே கல்வி என்பதுநமது தற்சார்பை புரிந்து கொண்டு அதை மீட்டமைப்பதற்கான கல்வியாக உண்மையில்  இல்லை.   இது ஏகாதிபத்திய தாசர்களை உருவாக்கும் கல்வி.

நீண்ட நெடிய பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்று தொன்மை கொண்டநமது பாரம்பரிய தமிழகத்தின் தொழில்நுட்பங்களான   கட்டிடக்கலை,   பொறியியல்,   மருத்துவம்,   வானியல்,  கடல்நுட்பங்கள்,  விவசாயம் என ஒவ்வொரு துறையிலும் நமது தமிழ்தேசத்தின் அறிவை மீட்டெடுத்து வளர்த்து எடுப்பதற்கான அறிவியல் ஆய்வுகள் இங்குஉண்மையில்நடத்தப்பட வேண்டும்என்பதைப் பற்றிய பார்வையோ,அக்கறையையோ கூட எந்த அறிவியலாளர்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை.

பன்னாட்டுக் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக மட்டும் நடத்தப்படும்   எல்லவிதமான அறிவியல் ஆய்வுகளுக்கு நாம்முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தை சோதனைச் சாலை எலிகளாக பயன்படுத்தப்படுவதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. அனுமதிக்ககூடாது.

அறிவியல்என்பது உண்மையில்  எந்த வர்க்கத்தின் கையில் உள்ளதோ அதன் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இன்று அறிவியல் என்பது உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒட்ட சுரண்ட வேண்டும் என்ற அமெரிக்கா போன்றமிகப்பெரிய கொள்ளைக்  கூட்ட நாடுகளின் கையில் உள்ளது. இந்த அறிவியலைஉண்மையில் மக்களுக்காகபயன்படுத்த வேண்டும் எனவிரும்பினால் கூட உண்மையில் அவர்கள்அதைபயன்படுத்த விட மாட்டார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

”இயற்கையின் மீது நடத்தப்படும் மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும்,இரண்டாவது,மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுபட்ட பலன்களையும் அளிக்கிறது.  இவை பல தடவைகளிலும் முதலில் சொன்ன வெற்றி என்பதை ரத்து செய்து விடுகின்றன”என்று மாமேதை.ஏங்கெல்ஸ் சொன்னதை நினைவில் நிறுத்திக் கொண்டு பார்த்தோமானால்,இயற்கையை அழித்து வளர்ச்சி என்றதால் நாம் எதிர்கொண்ட ஆழிப்பேரலை (சுனாமி), பசுமை புரட்சி, மரபணு மாற்றம் உட்பட ஒவ்வொரு அழிவிலும் நிகழ்ந்து உள்ள முழு உண்மையும், நமக்கு புரியும்.

இயற்கையோடு இணைந்து இயைந்து நாம் வாழ வேண்டும். நாம் நமது எதிர்கால தலைமுறைக்கு விட்டு செல்வது என்பது பொன்னோ,   பொருளோ,  சொத்தோ அல்ல. சுத்தமான,சுகாதாராமான நீர், நிலம், காற்று கொண்ட பூமியை என்பதை உணருவோம். பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நமது முன்னோர்களால் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த பூமியை பாதுகாக்க செயல்படுவோம். இயற்கையை பாதுகாப்போம். தேனி பொட்டிபுரம் நியுட்ரினோ  ஆய்வு திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்.

Pin It