periyar 375

16-02-2015ம் நாள் சென்னை, சங்கம் நிகழ்வில் நடைபெற்ற ‘திராவிடமா? தமிழ்த் தேசியமா?’ என்ற விவாதத்தில் தோழர் மணியரசன் அவர்கள் தான் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக திராவிடத்தின் மீது பல அவதூறுகளை விட்டெறிந்தார். ஆனால் ஒன்றை மறந்து விட்டார்; வரலாறுகள் முன்பு போல் இல்லாமல் பலரால் பலவிதமாக பதிவு செய்யப்பட்டே வந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார். இப்படிப் பட்ட அவதூறுகள் அவரைப் பற்றிய மதிப்பீட்டை இங்கு பல தோழர்களிடம் இழக்க நேரும் என்பதை மறந்துவிட்டார். முதலில் தலைப்பின் கீழாக தமிழ்த்தேசியத்தின் தேவையையும் அதை முன்னெடுக்க வேண்டிய முறையையும் பேசியிருந்தார் என்றால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து திராவிடத்தின் மீதும், பெரியாரின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் களமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் அவதூறு ‘ஆதிதிராவிடர் என்ற பதத்தை அயோத்தி தாசர் கைவிட்டார்’ என்பதாகும்.

முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 1861லிருந்து 1881 வரையும் எடுக்கப்பட்டது, அதன் பிறகு சாதிவாரியாக - மிகவும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் கணக்கெடுப்பை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் - 1910ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் அதுவும் குறிப்பாக அன்றைய சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தனது அரசியல் போராட்டமாக பயன்படுத்திக்கொண்டவர் என்றால் அது அயோத்தி தாசராகத்தான் இருக்க முடியும். ஆம் 1861ல் இருந்து 1881 வரை கிருத்துவர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்களும் இந்துக்கள் என்று வலிந்து திணித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பொழுது ‘தாங்கள் இந்துக்கள் இல்லை’ என்று சொல்லும் விதமாக 1881ம் ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது ‘சாதியற்ற தமிழர்கள்’ என்று பதிவிடச் சொல்லி அரசாங்கத்திடம் மனு கொடுத்தார். ஆனால் அவரே 1910ம் ஆண்டு “சாதிபேதமற்ற திராவிடர்களென்று” பதிவிடக் கோரினார்.

“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தர்களுமேயாகும். சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)

தோழர் மணியரசன் 1881ல் “சாதியற்ற தமிழர்கள்” என்று அயோத்தி தாசர் மனு அளித்ததை வைத்து, அயோத்தி தாசர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்று கூறுகிறார். ஆனால் வரலாறு என்ன கூறுகிறது என்றால் 1881க்குப் பிறகு தான் ‘திராவிட’ என்ற அடையாளத்தை அயோத்திதாசர் ஏற்றுக் கொள்கிறார். 1881க்குப் பிறகு பாதிரியார் ஜான் பாண்டியன் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது. ஜான் பாண்டியன் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தலித்துகள் மட்டும் படிக்கக்கூடிய பள்ளியை நடத்தி வந்தார். அவருடன் இணைந்து 1886 ல் திராவிட பாண்டியன் என்ற இதழை இணைந்து ஆரம்பிக்கிறார். அதில் உதவி ஆசிரியராகவும் பணி புரிகிறார். 1907ம் ஆண்டு தனியாக “ஒரு பைசாத் தமிழன்”, “தமிழன்” போன்ற பத்திரிக்கைகளை ஆரம்பிக்கிறார். ஆனால் 17-12-1910ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாக “சாதி பேதமற்ற திராவிடர்கள்” என்று பதிவிடக் கோருகிறார்.

1881ல் சொன்னதை 1910ல் மாற்றிக் கொண்டார் என்றால் “சாதியற்ற தமிழர்கள்”என்பதில் இருந்து 1910ல் “சாதியற்ற திராவிடர்கள்”என்று தங்களை திராவிடர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். இதை தலைகீழாக மாற்றியே தோழர் மணியரசன் வருட வித்தியாசங்களை மறைத்து அயோத்தி தாசர் தூக்கி எறிந்த திராவிடர் அடையாளத்தை பெரியார் வலுவில் திணித்தார் என்று குறிப்பிடுகிறார்.

தோழர் மணியரசனின் இந்த அவதூறுக்கான மறுப்பை இத்துடன் நாம் கடந்து சென்றுவிடலாம். ஆனால் அவ்வாறு கடந்து செல்வது சரியான வரலாற்றுப் பார்வையாக இருக்க முடியாது. இந்தப் பிரச்சனை குறித்து மட்டும் பேசுவதாக முடிந்துவிடும். இன்று ஆதி திராவிடர்கள் என்று தமிழகத்தில் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. 1914ல் அயோத்திதாச பண்டிதர் அய்யா இறந்துவிடுகிறார். 1912ம் ஆண்டு திரு நடேசன் அவர்களால் திராவிடர் சங்கம் தொடங்கப்படுகிறது. இந்த சங்கமானது பார்ப்பனரல்லதோர் சங்கம் என்ற நிலையிலேயே ஆரம்பிக்கிறது. இதன் பிறகே நீதிகட்சியும் ஆரம்பிக்கிறது. நீதி கட்சியினர் திராவிட மகாஜனசபையினருடன் இணைந்து பார்ப்பனரல்லாதவர்கள் அரசியலை முன்னெடுக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் தோழர் எம்.சி.ராஜா அவர்கள் 1918ம் ஆண்டு ஆங்கில அரசாங்கத்திடம் ஆதி திராவிடர் என்று அங்கீகரிக்க கோரிக்கை வைக்கிறார். 1920ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது. 1922ம் ஆம் ஆண்டு ஆதி திராவிடர் என்ற பெயர் அதிகாரப் பூர்வமாக சாதியப் பட்டியலில் இடம் பெறுகிறது.

இவ்வளவு பிரச்சனை செய்து பெயரை மாற்றி முன்னிறுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது என்று பார்ப்பதும் முக்கியம். “சாதியற்ற தமிழர்”என்று சொன்னவர் “சாதியற்ற திராவிடர்”என்று மாற்றிக்கொள்ள காரணம் என்ன என்று ஆராய்ந்தோம் என்றால், இன்றைய காலகட்டம் போல் ஒடுக்கப்பட்ட மக்களை அன்று தமிழர்களாக பார்த்தது இல்லை சாதி இந்துக்கள். பார்ப்பனரல்லோதோர் என்று ஒன்றிணைந்தாலும் சரி, பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை; ஏன் மனிதர்களாகக் கூட மதித்ததில்லை என்பதை சமீபத்திய பரமக்குடி படுகொலைகள் வரையிலான வரலாறுகளைப் படித்தோம் என்றால் நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகப்பெரும் முன்னோடியாகத் திகழ்பவர் தோழர் திரு.வி.க அவர்கள். 1921ம் ஆண்டு பின்னி ஆலையில் கூலி உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் வேலைக்குச் செல்வதை தடுக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிலர் மரணமடைகின்றனர். இதனால் ஏற்பட்ட துவேசம் சாதியக் கலவரமாக மாறி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த புளியந்தோப்பு பகுதியில் 100 குடிசைகளை எரித்தனர் தொழிற்சங்கத்தை சேர்ந்த சாதிய இந்துக்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரும் மரணமடைந்தனர். இதற்கு எதிர்வினையாக புளியந்தோப்பில் இருந்து மக்கள் கிளம்பி, பார்ப்பனரல்லாதார் வாழ்ந்த பெரம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தினர். பின்னர் புளியந்தோப்பு மக்கள் கலவரத்தை அடக்கும் நோக்குடன் அங்கிருந்து அகற்றப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தை தொழிற்சங்கவாதியும், நவசக்தி இதழின் ஆசிரியருமான திரு.வி.க எழுதும் பொழுது “ஹரிஜனங்கள் தமிழர்களை சாரிசாரியாக வந்து தாக்கினர்” என்று குறிப்பிடுகிறார்.

இதன் பொருள் ஹரிஜனங்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு மாபெரும் தொழிற்சங்கவாதியே தமிழர்களாகப் பார்க்காமல் ஒதுக்கி வைத்தார் என்பதுதான். இந்து தர்மம் இவர்களை பஞ்சமர்கள் என்று கூறி ஒதுக்கியது என்றால் சக தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களை தமிழர்களாகப் பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையே சாதியற்றவர்கள் என்றும், தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும், மேலும் சாதியற்ற திராவிடர்கள் என்றும், ஆதி திராவிடர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்தது.

இன்று தோழர் மணியரசன் போன்றவர்கள் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தமிழர் பெருமை என்று கூறி, திராவிடத்தில் ஒரு சிலர் செய்த பிரச்சனையை பெரிதுபடுத்தி ஒட்டுமொத்தமாக திராவிடம் என்ற வார்த்தையையும், வடுகர்கள் என்ற இனத்தையும், தமிழர்களுக்கு எதிராக சித்தரிப்பது தான் நடந்து கொண்டுள்ளது. தமிழ்த் தேசியம், தமிழின விடுதலை என்று பேசும் பொழுது, அந்த விடுதலை எவ்வாறு அமையவேண்டும் என்று பார்த்தோம் என்றால் நம் வரலாற்றினை நன்றாகப் புரிந்துகொண்டு, யாருக்கும் கெடுதி நினைக்காத, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியலே சரியான பாதையாக இருக்கும் என்பதை உணர முடியும். முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் இன்று திராவிடத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக அயோத்திதாச பண்டிதர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு, நடேசன் அவர்களால் பார்ப்பனரல்லோதருக்காக என்று அடுத்த அடிக்கு நகர்த்தப்பட்டு, பெரியாரால் அனைவருக்கும் பொதுவான சொல்லாக, எந்த கீழ்மையும் மேன்மையும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் திராவிடம். இல்லாத பெருமை பேசும் தமிழ்த் தேசியம், தமிழகத்தில் தமிழரல்லாதோரின் மீதான இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். தமிழ்த் தேசியம் என்பது திராவிடத்தை ஒதுக்கிவிட்டு முன்செல்வது என்பது பாசிசமே.

தோழர் மணியரசன் அயோத்தி தாசர் குறித்த வாதத்தில் வரலாற்றைத் திரித்து பகிர்ந்த அவதூற்றை இங்கே வரலாற்றுடன் இணைந்து பார்த்தோம். இதன் பிறகு தோழர் மணியரசன் திராவிடம் என்ற வார்த்தை ஆரியன் மட்டுமே பயன்படுத்தியது, அதனால் அதை மறுக்கிறோம் என்று கூறினார். மேலும் திராவிடம் என்பது தமிழனை ஊனமாக்கியது என்றார். இது கடைந்தெத்த பொய், வரலாற்றை மறைக்கும் செயல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாக உபயோகத்தில் இருக்கும் வார்த்தையே. கிபி 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழில் பக்தி இலக்கியங்கள் கோலோச்சிய காலகட்டங்களில்தான் சைவ, வைணவத் திருமுறைகள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அளவில் இயற்றப்பட்டன. இதே காலகட்டம் தான் தோழர் மணியரசன் குறிப்பிட்ட ஆதிசங்கரர் இயற்றிய செளந்தர்யலஹரியின் காலகட்டமும். இதைத் திரித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிசங்கரர் வாழ்ந்தார் என்பது ஆரியத்தின் புரட்டு. ஆதிசங்கரர் திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிட்டார் என்றால், திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டே. திருஞான சம்பந்தரால் குணமாக்கப்பட்ட கூன் பாண்டியன் என்ற அரிகேசரி பாண்டியன் ஆண்ட காலம் கிபி 640 முதல் கிபி 670 வரை. இந்த காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தரைப் பற்றி ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார் என்றால், ஆதிசங்கரர் வாழ்ந்த காலமும் 7ம் நூற்றாண்டே. ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது ஆரியப் புரட்டு. இந்த ஆரியப்புரட்டைப் போலவே அய்யா மணியரசன் அவர்கள் திராவிடம் என்ற வார்த்தை ஆரியர்கள் மட்டும் பயன்படுத்தியது என்கிறார்.

அதற்கு ஆதாரமாக ராகுல் திராவிட், மணி திராவிட் என்று இருவரின் பெயரைக் காட்டுகிறார். மேலும் பார்ப்பனர்களில் இருக்கும் சாதிய வேறுபாடான வட இந்தியப் பார்ப்பனரையும், தென்னிந்திய பார்ப்பனரையும் பிரிக்கும் சொல்லான பஞ்ச திராவிட என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லாம் சரி. ஆனால் ராகுல் திராவிட் என்று இல்லை, வெறும் திராவிட் என்று கூட பெயர் வைத்திருக்கலாம் ஒரு பார்ப்பனன். ஆனால் அவன் என்ன இனத்தவனாக தன்னை உணருகிறான் என்பது தான் பிரச்சனை. ராகுல் திராவிட்டிடமும், மணி திராவிட்டிடமும் ஏன் இந்த பஞ்ச திராவிட இனத்தில் பிறந்த ஒவ்வொரு பார்ப்பனரிடமும் அவர்கள் என்ன இனம் என்று கேட்டால் தன்னை ஆரியன் என்றே விளித்துக் கொள்வார்கள். இதன் கீழாகவே திராவிடன் என்று கூறும் பொழுது தமிழனுடன் இணைய மாட்டான் என்பதைக் கொண்டே திராவிடம் என்ற வார்த்தை தமிழின மீட்சியின் அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இதை அறியாமல் இல்லை தோழர் மணியரசன். அவருக்கு நன்றாகவே தெரியும் - தமிழ் என்பது மொழியையும், தமிழர் என்பது அவர்களின் மொழி, வாழும் இடம் மற்றும் பண்பாட்டைச் சார்ந்து குறிக்கப்படும் பெயர் என்பது. அதாவது தமிழர் என்பது பண்பாட்டுச் சொல், திராவிடம் என்பது அரசியல் சொல். இதை நன்றாக அறிந்து இருந்தாலும் தோழர் மணியரசன் இதை மறைத்துவிட்டு திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நான்கையும் உள்ளடக்குவதே என்ற நோக்குடன் பேசி வருகிறார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே இதை உள்ளடக்கிப் பேசியது இல்லை. ஏன் தேவநேயப்பாவணர் தமிழ் என்பதை வடமொழியினர் தங்களின் மொழியில் திரமிளம் என்றும், திராவிடம் என்று குறித்துள்ளனர் என்பதை விளக்கியுள்ளார்.

 “வடநாட்டு ஆரிய நூல்களில் திராவிடம் என்னும் சொல் முதலாவது திரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியில் இல்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து த்ர, ப்ர எனப் புணர் எழுத்துக்களாகத் திரிப்பது வடநூலார் வழக்கம் எ.டு : படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம், இதனால் தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம் எனத் திரிந்தது. ள-ட, ம, வ போலி, திரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திராவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. எனத் தமிழம் என்பதே த்ரமிளம் - திராவிடம் எனத் திரிந்ததாக” குறிப்பார். {திராவிடத் தாய், தேவநேயப் பாவாணர், பக். - 8}

இதில் தமிழைக் குறிக்கத்தான் திராவிடம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதை விடுத்து திராவிடத்தில் நான்கு மொழி அடக்கம், அஞ்சு மொழி அடக்கும் என்பதோடு, பெரியார் தமிழுக்காக போராடவில்லை என்று புருடா விடுகின்றனர். சரி 1705ம் ஆண்டு பிறந்து 1742ல் மறைந்த தாயுமானவர் சாமிகள் திராவிடம் என்ற வார்த்தையை தனது பாடல்களில் உபயோகிக்கிறார். இவருக்கும் கால்டுவெல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கால்டுவெல் 1850களில் தான் வருகிறார். அதாவது ஒரு நூற்றாண்டு கழித்தே கால்டுவெல் வருகிறார். தாயுமானவர் தனது பாடலில் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு நிகராகவே பயன்படுத்துகிறார்.

கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;

கற்றுமறி வில்லாதவென்

கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?

கைவல்ய ஞான நீதி

நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று

நாட்டுவேன் ; கர்மமொருவன்

நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று

நவிலுவேன் ; வடமொழியிலே

வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே

வந்ததா விவகரிப்பேன் ;

வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த

வித்தையென் முத்திதருமோ ?

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

வித்தக சித்தர்கணமே!

- சித்தர்கணம்

இதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார், “வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்று வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன் என்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிவது திராவிடம் என்ற வார்த்தை கால்டுவெல்லோ, இல்லை அயோத்திதாச பண்டிதரோ, இல்லை பெரியாரோ கண்டுபிடித்தது இல்லை. திராவிடம் என்பது பரவலாக தமிழைக் குறிக்க அனைவராலும் பயன்படுத்தப்பட்ட வார்த்தையே. இந்த வார்த்தையை தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் ஏன் மலையாளத்திற்கும் தாரை வார்க்கும் முயற்சியையே இன்றை தமிழ்த் தேசியர்கள் செய்து வருகின்றனர். பெரியாரும் திராவிடம் என்ற வார்த்தையை தமிழுக்கு நிகராகவே உபயோகித்தார் என்பதும், ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், மலையாளிகள் மீது நன் மதிப்பையோ கொண்டிருந்தவர் இல்லை என்பதும் உண்மை.

மேலும் இங்கு பொத்தம் பொதுவான சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, கேரளம், கர்நாடகம் என்று அனைத்தும் இணைந்து இருந்ததாக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள். இது முற்றிலும் பொய். ஆந்திரத்தின் ஒரு பகுதியும் கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளும், கேரளத்தின் ஒரு சில பகுதிகளுமே சென்னை மாகாணத்தில் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் பங்கனப்பள்ளி சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், மைசூர் சமஸ்தானம் தனித்தே இயங்கி வந்தன. இவர்களுக்கு என்று தனி காவல் மற்றும் நீதித் துறை இருந்தது என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் நன்கு உணர்வார்கள். ஆங்கிலேயர் தங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவே சென்னை மாகாணம் இருந்தது. இதில் ஒரு கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் வாழ்ந்த மக்கள் தொகை 4,93,410 பேர். இது 1941ம் ஆண்டு கணக்கெடுப்பு. 17.9.1954ல் பெரியார் தனது பிறந்த நாள் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் வாழும் பிறமொழியினர் என்ற தகவலில் குறிப்பிடுகிறார் மலையாளிகள் 8 சதவீதம், கர்நாடகர்கள் 5ம் சதவீதமும். இதைத் தவிர கிருத்துவர்கள் 4 சதவீதமும், முஸ்லீம்கள் 5 சதவீதமும் என்கிறார். இதில் கிருத்துவர்களில் எத்தனை பேர் தமிழர்கள், எத்தனை பேர் மலையாளிகள் என்ற தெளிவான கணக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். சென்னை மாகாணத்தில் அதுவும் ஆந்திரா பிரிந்து சென்ற பிறகு சொல்லப்படும் கணக்கு இது. ஆந்திரர்கள் இருந்திருந்தாலும் அவர்கள் ஒரு 10 சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும் மலையாளி, கர்நாடகர் மற்றும் ஆந்திரர் சேர்த்து 23சதவீதமே. பெரியாரின் கருத்தியல் என்பது தனிமனிதனின் சுயமரியாதையும் அவர்களின் முன்னேற்றமே. இதை 1925ல் குடியரசு இதழ் ஆரம்பித்து முதல் பத்திரிக்கையின் தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறார்.

“எமது பத்திரிக்கையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.

ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய......... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நன்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925

மேலே இருக்கும் பதிவே பெரியாரின் நோக்கம் என்ன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். தேசம், தேசியம் என்பவைகள் கற்பிதமே என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் பெரியார். தன் சமூக மக்களின் முன்னேற்றத்தை விரும்பியவர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதே தலையங்கத்தில் இன்னொரு பத்தியில்

“ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குறியார். இவ்வருங்குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ......................... வலிமையால் இப்பத்திரிக்கை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925

என்று குறிப்பிடுகிறார். அதாவது 23 சதவீத வேற்று மொழிக்காரர்களை விட 77 சதவீதம் வாழ்ந்த சென்னை மாகணத்தில் இருந்த தமிழர்களைக் குறிப்பிட்டு இது தமிழுலகம் என்றே குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் திராவிடம் என்ற பெயரை தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை இணைத்தே குறிப்பிட்டார் என்று இங்கே கட்டுக் கதைகள் பரப்புகின்றனர் சிலர். பெரியாரின் ஆந்திரர் குறித்த பார்வை.

“இது அரசியல் போராட்டமல்ல, இனப்போராட்டம், மனிதத் தன்மைப் பாதுகாப்புப் போராட்டம், தென்னாட்டவரின் மனிதத் தன்மையை அழித்து ஆரியவர்க்கத்தோடு சேர்த்துக் கொள்ளச் செய்யப்படும் சூழ்ச்சியின் முதல்படி தான் கட்டாய இந்தி நுழைப்பு. ஆகவே நாம் இதை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். ஒரு வேளை ஆந்திரர்கள் ஆரியவர்க்கத்தில் சேர்ந்துவிடுவார்களோ என்று கூட நினைக்க வேண்டியிருக்கிறது. எவ்வகையானும் இதை எதிர்த்துப் போராடியே தீருவோம். இப்போராட்டம் தென்னாட்டுச் சரித்திரத்தில் திராவிட நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய மகோன்னதப் போராட்டம். இப்போராட்டத்தில் வெற்றியின்றேல் தமிழ்நாடு போம். தமிழ்க்கொடி போம், தமிழன் சிறப்பெல்லாம் தகர்ந்துபோம். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. தமிழ்காக்க வாரீர்! எங்களுக்கு வயதாகிவிட்டது! நாங்களும் வெற்றிகாண ஆசைப்படுகிறோம். ஆகவே தன்மானத் திராவிடர்காள்! தமிழர்காள்! வெற்றிக்காணப் போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். சாவேன் அல்லது வெற்றியோடு மீள்வேன் என்ற உறுதியோடு முன்வாருங்கள்.”

என்று குறிப்பிடுகிறார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது அடுத்து மலையாளிகளை பற்றி நிறையவே எழுதியும் பேசியும் இருக்கிறார் அதில் 1954ம் ஆண்டு தனது பிறந்த நாள் அறிக்கையில் “மலையாளிகளின் தொல்லையே பெருந்தொல்லையாகும்” என்று கூறுகிறார்

“குறிப்பாகக் கூறவேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும்;, ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மாலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.”

இதில் தெளிவாகவே மலையாளிகளைப் பற்றிய தன் நிலைப்பாட்டை பெரியார் கூறியுள்ளார். அவர்களை எங்கும் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. இதைத் தவிர தட்சிணப்பிரதேசம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வேலூரில் 29.1.1956ம் தேதி பொதுக் கூட்டத்தில் பேசிய பொழுது மலையாளிகளின் சூழ்ச்சி தான் தட்சிணப்பிரதேச திட்டம் என்பதையும் விளக்கி மலையாளிகளை சுயமரியாதையோ, சுதந்திர புத்தியோ இல்லாதவர்கள் என்றும், அவர்கள் உத்யோகத்தில் அடிக்கும் கொள்ளை, பார்ப்பான் - மலையாளி உறவின் கீழாக தமிழர்களுக்கு இழைத்தத் துரோகத்தினைத்தையும் விளக்கி இருப்பார். ஆனால் திராவிடம் என்றால் தெலுங்கர், கன்னடர், மலையாளி உட்பட என்று தொடர்ந்து கட்டுக்கதைகள் அமைத்து வருகிறார்கள். அந்த வேலையை பெரியாரை படித்த தோழர் மணியரசனும் செய்கிறார், பாவம் அவர் சார்ந்து நிற்கும் பார்ப்பனிய தமிழ்த் தேசியம் இவ்வாறு அவரை செய்ய வைக்கிறது போலும்.

இப்படி ஆரியச் சார்புடைய தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவர்களை அவர் என்றும் கண்டுகொண்டதில்லை. தமிழை ஆரியத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடனே செயல்பட்டார். 1900 ஆரம்பங்களில் தமிழ் மொழி என்பது மணிபிரளாவ நடைமொழியில் முழுவதுமாக கலப்புற்று வடமொழி வார்த்தைகளுடனே பயின்று வந்தது. அதை மாற்றவே தனித் தமிழ் இயக்கம் காணப்பட்டது. மறைமலை அடிகள் மிகப்பெரும் வேலைகள் செய்தார், அவருடன் இணைந்து பெரியாரும் நின்றார். விடுதலை, குடியரசு போன்ற இதழ்களே மறைமலையடிகளின் மாற்றங்களை முன்னின்று செயல்படுத்தியவை. இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் என்றே இருந்த பெரியாரின் திராவிடர் இயக்கத்தை போகிற போக்கில் தமிழை ஊனமாக்கியது என்கிறார் தோழர் மணியரசன். பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி என்ற சொல்லி நீதிக்கட்சி போராடிய பொழுது அவர்களையும் விட்டுவைக்கவில்லை பெரியார். திராவிடம் என்று தன் இயக்கத்திற்கு பெயர் சூட்டியதற்கான காரணத்தை விளக்கும் இடத்தில் அதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“நாம் இந்தியர் என்பதை மறுக்கிற படியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘திராவிடர்’ எனும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல, மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நான் ஏன் அல்லாதார் ஆக வேண்டும்...

...மேலும் நமக்குத் ‘திராவிடர்’ என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனர் அல்லாதார் என்பதா? பார்ப்பனர் அல்லாதார் எனக் கூறிக்கொள்ளும் ஜஸ்டிஸ்கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில், வேஷத்தில், பார்ப்பனரைவிட இரண்டுமடங்காகவல்லவா இருக்கின்றார்கள்!...

திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல், பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன” கோ-வேள்நம்பி, தமிழனை உயர்த்திய தலைமகன், பக்கம் - 21

இதில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார் திராவிடம் என்பது பலராலும் அன்றைய காலகட்டத்தில் உபயோகிக்கப்பட்டு வரலாற்றுச் சான்றுகளுடன் இருப்பதாலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறார், மேலும் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மை மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட நீதி கட்சியினரின் நடை, உடை பாவனைகளை போட்டு கிழித்தெறிகிறார். பார்ப்பனர்களின் பழக்கவழக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட சமூகமாகவே அன்றைய தமிழ்ச் சமூகம் இருந்து இருக்கிறது. இதை உடைத்து தமிழ்ப் பண்பாட்டையும், தமிழரையும் மீட்டு எடுத்தது பெரியாரின் திராவிடக் கொள்கையே அன்றி வேறெதுவும் இல்லை. ஆனால் ஆரியக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் மொத்தமாக வடமொழி தாக்கத்திற்குள் உள்ளாகி நிற்கிறது. தமிழ் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கிறது, இதில் மணிப்பிரவாள மொழியின் தாக்கத்தை தோழர் மணியரசன் மறுக்கவும் முடியாது. இப்படி அத்தனை வகையிலும் தமிழுக்கு உதவிய திராவிடத்தை யாரோ இருவர் திராவிட் என்று பெயர் வைத்ததனால் நொள்ளை நொட்டை என்கிறார்.

கடைசியாக பெரியார் ஆங்கிலத்தையே தூக்கி பிடித்தார் என்கின்றார். பெரியார் மொழி குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பேசியதையும் மறந்துவிட்டார். 1965க்கு முன்பாக இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அப்பொழுது பெரியார் சொன்னதையும் மறந்துவிட்டார்.

‘வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்.'

தெளிவாக கூறுகிறார் சென்னை மாகாணம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் வாழும் இடம் என்று. மேலும் தமிழை மீட்டெடுக்கவே போராடினேன் என்பதை தெளிவாக கூறுகிறார். மேலும் ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை

1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும்.

2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும்.

3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது.

(பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)

ஆங்கிலத்தை அவர் ஏற்றுக் கொண்டது என்பது தமிழ் மொழியை அழிக்க என்பது போல் கதைகட்டுவது தான் இங்கு நடக்கிறது. அவரின் தமிழ், தமிழர் மீதான கவலை மேலே இருக்கும் பதிவுகளில் நன்றாகத் தெரியும். தன் பொது வாழ்வில் அவர் என்றும் தமிழ் மக்களுடனின் மேன்மையைக் குறித்தே சிந்தித்து வந்துள்ளார் என்பதும் புரியும். அவர் வீட்டு வேலைக்காரியுடன் தமிழில் பேசச் சொன்னார் என்பதால் அவர் தமிழை அழிக்க நினைத்தார் என்று கூறுகிறார்கள். பெரியார் காலத்தில் ஊடகங்கள் என்பது இன்று இருப்பது போல் இருந்தது கிடையாது, அதனாலே தனது கருத்துகளை நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுவிட்டு செல்லும் ஒருவன் அடுத்தவனுக்கு எடுத்துக் கூறும் பொழுது அந்த நகைச்சுவையில் மேலும் மெருகேற்றி சொல்வார், இதனால் வெகு வேகமாக கருத்துக்கள் பரவும் என்ற நோக்கிலேயே அவர் செய்து வந்திருக்கலாம். இதே போன்று தான் வேலைக்காரியுடனும் தமிழில் பேசுங்கள் என்று சொன்னது அன்றைய காலகட்டத்தில் மட்டும் அல்ல, இன்று வரை தனது வீட்டில் எத்தனை தமிழன் வேலைக்காரி வைக்கும் நிலையில் இருக்கிறார் என்பதை ஆராய்ந்தாலே புரியும். ஆங்கிலத்தைப் படிக்க வேண்டிய தேவையை உணர்த்துவதற்கு கூறினாரே ஒழிய தமிழை அழிக்கும் நோக்கத்துடன் கூறினார் என்பது எல்லாம் திரித்தல்வாதம்.

அப்படி தமிழை அழிப்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தால் 11/9/1938ம் ஆண்டு திருவல்லிக்கேணி கடற்கரையில் நாவலர் சோமசுந்தர பாரதி, மறைமலை அடிகள் போன்றோரை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை ஏன் வைக்க வேண்டும்? அதற்கு முன்பாக அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பெரியாரின் பெருந்தொண்டர் திருச்சி உறையூரிலில் இருந்து கால்நடையாக இந்தித் திணிப்பை எதிர்த்து அமைதியாக சென்னை வரை ஊர்வலமாக நடந்து வந்து இராஜியின் வீட்டை முற்றுகை இட்டனர். இந்த முற்றுகைக்காக சென்னை வரை நடந்து வந்த தோழர்களை வரவேற்கவே திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டினார். அதிலே தான் “தமிழ்நாடு தமிழருக்கு” என்று முழக்கம் வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 1,50,000 மக்கள் கலந்து கொண்டனர். இப்படி 1938லும் 1952லும் மிகவும் அமைதியான கிளர்ச்சிகள் மூலம் இந்தித் திணிப்பை தடுத்தவர் தான் பெரியார். 1965ல் பெரும் உயிரிழப்புகளுடன் நடைபெற்ற கிளர்ச்சியைப் பார்த்து கண்டிப்பாக மனம் நொந்து தான் திமுகவை மிகவும் காட்டமாக சாடினார். தமிழைப் பிழைக்க உபயோகிக்கிறார்கள் என்றார். அதை விடுத்து தமிழை அழிக்க நினைக்கவில்லை. அப்படி அழிக்க நினைத்திருந்தால் 1938லேயே இந்தித் திணிப்பை அங்கீகரித்து அமைதியாய் இருந்து இருக்கலாம். ஏன் 7/03/1926லேயே இந்தி திணிப்பு பற்றிய கட்டுரையை சித்திர குப்தன் என்ற பெயரில் “தமிழுக்கு துரோகமும், இந்தி பாஷையின் இராகசியமும்” என்ற தலைப்பில் எழுதாமல் இருந்திருக்கலாம்.

11-09-1938 அன்றே தமிழ்நாடு தமிழருக்கு என்பதை எப்படி முன்னெடுக்க வேண்டும், தனது தோழர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியம் என்று சொல்லிக் கொண்டு பெரியாரின் மீது அவதூறு பரப்புபவர்கள் இதில் எதையேனும் செய்திருக்கிறார்களா?

“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.

புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!

தமிழ்நாடு தமிழருக்கே!

தமிழ்நாடு தமிழருக்கே!!

தமிழ்நாடு தமிழருக்கே!!!”

குடி அரசு - தலையங்கம் - 23.10.1938

இங்கே தமிழ்த் தேசியம் என்று பேசுபவர்கள் இது வரை 1000 பேரைக் கூட்டி ஒரு கூட்டத்தை போட்டதில்லை. ஆனால் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்களே 1000க்கும் மேலானவர்கள். அதுவும் பெண்கள் உட்பட குழந்தைகளுடன் சிறை சென்றவர்களும் 100க்கும் மேற்பட்டவர்கள். பெரியார் தமிழ்ச் சமூகத்திற்காக தன் வாழ் நாள் முழுவதும் வேலை செய்தார். மக்களுடன் மக்களாக வாழ்ந்தார். அதனாலேயே அவர் பின்னால் இத்தனை ஆயிரம் மக்கள் திரண்டனர். ஏன் அவர் இறந்த பிறகும் கூட இன்னும் பெரியாரின் வழியில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஏன் பெரியார் வழியை ஏற்காத ஆத்திகர்கள் கூட பெரியாருக்கு முன்பு தாங்கள் கடைபிடித்த பல மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து கொஞ்சம் நாகரீகத் தன்மையையுடன் நடந்து வருகிறார்கள். இதில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்களே இன்று பெரியாரைத் தூற்றுவதே தமிழ்த்தேசியம் என்று பேசி வருகின்றனர்.

பெரியார் ஒரு சிந்தனைவாதி இல்லை; அதனால் தான் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை என்ற அரும்பெரும் கருத்தை உதிர்த்து இருக்கிறார் தோழர் மணியரசன். பாவம் என்ன செய்வது தனது கருத்தான ‘பெரியார் தமிழருக்கு துரோகம் இழைத்தார்’ என்பதற்கு நேர் எதிரிடையான சாட்சியத்தை அவரே கொடுத்துள்ளார். ஆம் பெரியார் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை தான். காரணம் அவர் தான் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் இழிநிலையை போக்குவதற்காக சிந்தித்தார்; செயல்பட்டார். அதனாலே தமிழ் நாட்டை விட்டு வெளியே போகவில்லை.

Pin It