புவியின் மேற்பரப்பு உருவான வரலாற்றினைத் தெரிந்து கொள்வதில் இமயமலையை விட பழமை வாய்ந்த, மேற்குத் தொடர்ச்சி மலையும் முக்கிய பங்காற்றுகிறது என்கிறார்கள் புவி ஆராய்ச்சியாளர்கள். ஐ.நாவின் யுனெஸ்கோவும் இம்மலைப்பரப்பின் முக்கியத்துவத்தினை ஆராய்ந்து, இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட இயற்கை சொத்து என்று அறிவித்திருக்கிறது.

இது இந்தியாவின் சொத்து மட்டுமல்ல, உலக உயிரினத்தின் சொத்து என்பதே இதன் மையக் கருத்து. 5000 தாவர வகைகள், 352 மர வகைகள், 179 வகை பாலூட்டிகள், 157 ஊர்வன, 219 மீன்வகைகள் ஆகியவற்றின் இனவகைகளின் தோன்றும் இடமாக இம்மலைத்தொடர் இருக்கிறது. இதனாலேயே இப்பகுதி உலகின் மிகச்சிறந்த பல்லுயிர் பெருக்கத்திற்கான இடமாக அறியப்படுகிறது.

pottipuram 600

காட்கில் கமிட்டியின் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிட்டத்தட்ட 39 பகுதிகளை யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதி என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கஸ்தூரிரங்கன் கமிட்டி போன்ற கமிட்டிகள் இம்மலைத்தொடரினை பாதுகாப்பதைப் பற்றி விவரித்திருக்கின்றன. பல்வேறு சமரசத்திற்கும், வணிகமயமாதலுக்கும் ஏற்றவகையில் உருவாக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் கமிட்டியும் கூட இந்த நிலப்பரப்பு பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தினைப் பேசுகிறது. இம்மாதிரியான முக்கியத்துவம் பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான, குறிப்பாக சமவெளி மக்களும், மலைப்பரப்பின் செல்வமும் இணையக் கூடிய தேவாரம் பகுதியில் நியூட்ரினோ ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட இருக்கிறது.

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்காக, சுருளி மலைச்சரிவு பகுதி பாறையில், 8 லட்சம் டன் கற்களை வெடி வைத்து தகர்க்க உள்ளனர். இந்த ஆராய்ச்சிக் கூடம் தேவாரம் மலையடிவாரத்தில் கிட்டத்தட்ட ஒன்னேகால் கிலோமீட்டர் (1300 மீட்டர்) அளவிற்கு மலை குடையப்பட்டு உருவாக்கப்படுகிறது.

மலை உச்சியில் இருந்து சுமார் 1.3 கி.மீ. ஆழத்தில் 2.5 கிலோமீட்டர் அளவிற்கு சுரங்கம் அமைக்கிறார்கள். ஒரு மைய சுரங்கமும், மேலும் சிறிய சுரங்கங்களும் இப்பகுதியில் தோண்டப்பட இருக்கின்றன. இந்தப் பணிக்கு கிட்டதட்ட 1000 டன் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. வெட்டியெடுக்கப்படும் பாறைகளும், வெளிப்படும் தூசுகளும், இதைச் சுமந்து செல்லும் கனரக வாகனங்களும் இப்பகுதியின் சூழலை சிதைக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த பாறைக்கழிவுகளை மேற்குத் தொடர்ச்சி மலையின் எந்தப் பகுதியிலும் கொட்டிவிட முடியாது.

அடுத்த மூன்று வருடங்களில் இப்பகுதியில் நடக்கும் சுரங்கம் அமைக்கும் பணியும், வெடிமருந்துகளின் பயன்பாடும் இப்பகுதியை சுற்றி அமைந்திருக்கும் 12க்கும் மேற்பட்ட அணைகளுக்கு பாதிப்பினை உருவாக்கும் என்பது குழந்தைகளுக்கும் புரியும் அறிவியல். இப்பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும் இடுக்கி அணை பாதி கொள்ளளவினை நெருங்கும் சமயங்களில் எல்லாம் நில அதிர்வுகள் ஏற்படும் சம்பவங்கள் கடந்த காலத்தில் பதிவு. உலக அளவில் அணைகளினால் ஏற்படும் நில அதிர்விற்கான எடுத்துக்காட்டு பகுதியாக இடுக்கி அணை விளங்குவதாக நீரியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் அதிக மழைப்பொழிவினை பெறும் (150-250 செ.மீட்டர்) இந்த மலைப்பகுதியில் ஏற்படுத்தப்படும் வெடிகள், சுரங்கம் தோண்டும் பணிகள் முல்லைப்பெரியாறு அணை உட்பட தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரத்திற்கு பெரும் ஆபத்தினை விளைவிப்பதாக இருக்கிறது என்பது மிகையல்ல. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை இத்திட்டம் பாதிப்புக்குள்ளாக்கும் என்பது நியாயமான கவலையே. நியூட்ரினோ ஆய்வு மையம் இதை மறுத்தாலும், கடந்த காலத்தில் இந்திய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளும், தகவல்களும் உண்மைக்கு மாறாக இருந்ததை மறக்க இயலாது.

சென்னையில் நடக்கும் சுரங்க ரயில் பாதை பணியோடு இதை ஒப்புமைப்படுத்தி எளிமையானதானதாக காட்டுவது உண்மையில்லை. உலகின் மிகப்பழமையான மலைப்பகுதியான தேவாரத்தில் நிகழும் சுரங்கம் தோண்டும் பகுதியும் சென்னையும் ஒன்றல்ல. சென்னையில் இயற்கை சூழலியல் சீரழிக்கப்பட்டு நூறாண்டுகளாகிறது. சென்னையின் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை அழித்த வளர்ச்சித் திட்டத்தை விட கடுமையான பாதிப்புகள் நிறைந்தது இத்திட்டம். சுரங்கம் தோண்டுவதால் நிகழ இருக்கும் அழிவு ஒட்டுமொத்த ஆபத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே.

உலகின் அற்புதமான, அதே சமயத்தில் மிக நுட்பமான இயற்கைப் பகுதி எதற்காக அழிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? இந்த ஆய்வின் முக்கியத்துவம் என்ன என்பதையும் நாம் விவாதத்திற்குள்ளாக்க வேண்டும்.

இத்திட்டம் உலகின் பல பகுதியில் நடக்கும் நியூட்ரினோ அணுத் துகள் ஆய்வு சம்பந்தப்பட்டது என்றாலும், பிற இடங்களில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட பொழுது ஏற்பட்ட பாதிப்புகளையும் கணக்கில் எடுக்க வேண்டும். மேலும் பிற ஆய்வகங்களில் நிகழ்த்தப்பட இயலாத ஆய்வுகளும் இங்கே நிகழ்த்தப்பட இருக்கின்றன. இதன் வாதங்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.

நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது அணு உலைக்கழிவுகளுக்கான பகுதியின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருக்கிறது எனில் இது நியூட்ரினோ திட்டமா, அணுக்கழிவு கிடங்கா?

அணுக்கழிவுகள் குறைந்த பட்சம் 30,000 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அக்கழிவுகளை இந்த மலைக்கு கொண்டுவரும் பயணமும் மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும் பேரழிவினை ஏற்படுத்தும் ஆபத்தினைக் கொண்டது. இது எப்படி பொதுமக்களையும், இயற்கையையும் பாதிக்காமல் இருக்கும்? பல்லாயிரம் ஆண்டுகளாக இவற்றினை பாதுகாக்கும் திறன் இந்திய அரசிற்கு மட்டுமல்ல உலகின் எந்த அரசிற்கும் கிடையாது என்பது நிரூபணமான பின்னர் எதற்காக இந்த ஆபத்தான திட்டம்?

மேலும், தேனிக்கு செல்லும் வழியில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு அருகே உள்ள ‘வடபழஞ்சி’யில் அணுக்கழிவு ஆய்வு மையத்தினை எதற்காக இந்திய அரசு துவங்குகிறது? இப்பகுதிக்கும் அணு உலைகள் அமைந்திருக்கும் கல்பாக்கம், கூடங்குளத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத பொழுதில் இது ஏன் இங்கு அமைக்கப்பட வேண்டும்? ஏன் தேவாரம் செல்லும் சாலையில் அணுக் கழிவுகள் குறித்த ஆய்வுக் கூடத்தினை இந்திய அரசு திறக்கவேண்டும்?

அணுக்கழிவுகள் உலகில் எங்குமே பாதுகாப்பான முறையில் வைக்கப்பட முடிவதில்லை என்பது மட்டுமல்ல அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு ’சிதைக்கப்பட்ட உயிரினங்களை’ உருவாக்குகிறது என்பதை கல்பாக்கம், ரசியாவின் செர்னோபில், ஜப்பானின் புகுசிமோ, அமெரிக்காவின் மூன்றுமைல் தீவு அணு உலைகள் மூலம் உலகம் அறிந்திருக்கிறது. எனில் தேனி, கம்பம், உசிலம்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளின் 300 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படாமல் போகும்?

இந்த அணுக்கழிவுகளில் இருந்து வெளியாகும் அணுக்கதிர் வீச்சினால், மனிதர்களுக்கு மட்டுமன்றி, பல்வேறு அரிய உயிரினங்களின், தாவரங்களின் தாய் நிலப்பரப்பாக அமைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் எவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்கும்.? இந்த உயிரினங்களில் மரபணு மாற்றம் நிகழும் பட்சத்தில், இங்கு ஏற்பட இருக்கும் சூழலியல் பேரழிவினை எப்படி தடுக்க முடியும்? ஒட்டுமொத்த உயிரினங்களும் இந்த கதிரியக்கத்தினால் பாதிக்கப்படவே செய்யுமெனில் சூழலியல் வலைப்பின்னல் சிதைவதை மனிதனால் எப்படி தடுக்க இயலும்?

வெளிப்படும் கதிர்வீச்சு இப்பகுதியில் உருவாகும் நீர் நிலைகளிலும் ஊடுறுவி பாதிக்கும் தன்மை வாய்ந்தது. எனில் இது ஐந்து மாவட்டங்களில் புற்றூநோய், பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பாறைவெடிப்பினால் உருவாகும் அதிர்வினால் முல்லைப்பெரியாறு அணை உடைபடுமானால் மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன உத்திரவாதம் அளிக்கப் போகிறது அரசு? காவிரி ஆற்று நீரை பெற்றுத்தர இயலாத மத்திய அரசினை எப்படி தமிழர்கள் நம்புவது?

சூழலியல் வாழ்வாதாரம் சார்ந்து எழும் கேள்விகளை தொடர்ந்து அறிவியல் ரீதியான கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.

நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அணுக்கழிவிற்கல்ல என்று ஒருவேளை அரசு மறுக்குமானால், நியூட்ரினோ ஆய்வகம் ஏற்படுத்த இருக்கும் கதிர்வீச்சு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நியூட்ரினோ ஆய்வினால் ஏற்படும் ஆய்வகப் பிரச்சனைகள், அறிவியல் பிரச்சனைகள், இதனால் சூழலியலில் ஏற்படும் பாதிப்புகள் என்பதை தனித்தனியாக கேள்விக்குள்ளாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதைத் தவிர்த்து நியூட்ரினோவின் பயன்பாடுகள் எதை நோக்கியது என்பதும் மிக மிக இன்றியமையாத கேள்வியாக இங்கே முன்வைக்க விரும்புகிறோம். ஏனெனில் அறிவியலின் வளர்ச்சி பெரும்பாலும் தொழிற்நுட்ப அடிப்படையில் வணிகத்திற்கும், ராணுவம்-பாதுகாப்பு துறைகளுக்குமே முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்து இதுநாள் வரை பயன்பட்டிருக்கின்றன. அணுப்பிளவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கலாம் ஆனால் இது ஜப்பானில் அணு குண்டினை போட்டு அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கே அரசுகளுக்கு பயன்பட்டது என்பதை மறக்க இயலாது. அணு குண்டினை உருவாக்குவது ஐன்ஸ்டீனின் நோக்கமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இது போன்ற ஆய்விற்கு உதவும் நாடுகள் இந்த அறிவியலை தனது ராணுவ வலிமையை அதிகரிக்கவே பயன்படுத்துகின்றன என்பதை எப்படி மறுக்க இயலும்? இதனடிப்படையில் சுருக்கமாக இக்கேள்விகளை பட்டியலிட விரும்புகிறோம்.

1 செயற்கையாக உருவாக்கப்படும் நியூட்ரினோ துகள்கள் இயற்கையாக இருக்கும் நியூட்ரினோ துகளைவிட மிக மிக ஆபத்தானது. இயற்கை நியூட்ரினோக்கள் குறைந்த அல்லது ஏதுமற்ற மின்னாற்றலைக் கொண்டுள்ளது. எனவே இது உடலோடும், பிற பொருட்களோடும் வினை புரியாது. ஆனால் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் நியூட்ரினோக்கள் அதிக மின்னாற்றல் கொண்டவை. இந்த வகை மியூயான் நீயுட்ரினோக்கள் 500 கோடி எலக்ட்ரான் வோல்ட் வரை மின்னழுத்தம் கொண்டவை எனப்படுகிறது. இதை விட குறைந்த அழுத்தம் கொண்டவை என்று ஆய்வகம் சொன்னாலும் கூட இது கவனிக்கபப்ட வேண்டிய விசயமே. ஒரு தீக்குச்சியில் இதை விட அதிகமான ஆற்றல் வெளியிடப்படுகிறது என்று சொன்னாலும், அணு இயலைச் சார்ந்து இது எளிமையாக பார்க்கப்பட வேண்டிய கருத்தியல் அல்ல. உலகின் நியூட்ரினோ ஆய்வுக்கூடங்களில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் நியூட்ரினோக்களே ஆய்விற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாக சூரியனில் இருந்து வெளிப்படும் நியூட்ரினோக்கள் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை, ஆனாலும் அவற்றினை ஆய்விற்கு பயன்படுத்த முடிவதில்லை என்பதால் செயற்கை நியூட்ரினோக்கள் பயன்படுத்தப்படுகின்றன .

2. நியூட்ரான்கள் மூன்று வகையானவை. இதில் ஒருவகை மியூயான் வகை நியூட்ரினோ. இவ்வகை நியூட்ரினோவின் கதிர்வீச்சின் (பயணத்தின்) பொழுது அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை உருவாக்குகிறது. இது பூமிக்குள் பயணிக்கும் பொழுது எந்த வகை வினையையும் செய்வதில்லை. ஆனால் பூமியின் மேற்பரப்பை விட்டு வெளியேறும் பொழுது உருவாகும் இரண்டாம் கட்ட கதிரிகள் அதிக அளவில் வினைபுரியக் கூடியவை என்பது அறியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அதிக பாதிப்பினையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என உலகின் முதன்மையான நியூட்ரினோ ஆய்வகமான அமெரிக்காவின் ”பெர்மி” ஆய்வுக்குழுவின் ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

1999இல் புரூஸ் எனும் ஆய்வறிஞரால் வெளியிடப்பட்ட தகவல் இதை உறுதி செய்திருக்கிறது. நியூட்ரினோ ஆய்வகத்தின் அண்டைப் பகுதிகளில் கதிர் வீச்சு பாதிப்பினை ஏற்படுத்தியதை இவர் உறுதி செய்திருக்கிறார். அதாவது கட்டுப்படுத்தபட்ட ஆய்வகத்திற்கு வெளியே நியூட்ரினோக்கள் வினைபுரிவதையும், கதிரியக்க பாதிப்புகளை ஏற்படுத்துவதையும் பதிவு செய்திருப்பதை இந்திய நியூட்ரினோ ஆய்வக விஞ்ஞானிகள் வெளிப்படையாகப் பேசுவதில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் தேவாரத்தில் இருக்கும் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வெளியே பொதுவெளியில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என்பதை மறுக்க இயலாது.

3. அண்டவெளியில் நிகழ்ந்த வெடிப்புகளினால் சக்திவாய்ந்த நியூட்ரினோ வீச்சு உருவாக்கப்பட்டது. இது கதிரியக்கத்தினை வெளிப்படுத்தியது. (ionising radiation due to the intense neutrino flux from stellar collapses) இக்கதிரியக்கமே பூமியின் பல உயிரினங்கள் அழிவதற்கு காரணமானது என ஐரோப்பிய ஆய்வறிஞர்களின் கருத்தியல் விவாதத்தினை இத்தருணத்தில் கவனத்தில் எடுக்க விரும்புகிறோம். நியூட்ரினோக்கள் பாதிப்பற்றவை என்கிற கூற்று முழுமையான உண்மையன்று.

4. கதிரியக்க பாதிப்புகள் நியூட்ரினோ ஆய்வகத்தில் அதிகரிப்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், நிலப்பரப்பின் மேற்பகுதியில் இருக்கும் ஆய்வகத்தில் இருப்பதை விட, நிலத்திற்குள் உருவாக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகத்தில் மூன்று கன அளவு (மூன்று மடங்கை விட மிக அதிக அளவில்) கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுவதை கண்டறிந்திருக்கிறார்கள். செயற்கையாக நியூட்ரினோக்களை உருவாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘சேர்ன் ஆய்வகத்தின்’ விஞ்ஞானிகளினால் 1998இலேயே இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதை எப்படி இந்திய விஞ்ஞானிகள் மறந்து போனார்கள் எனும் கேள்வி எழுகிறது. ஏனெனில் தேவாரத்தில் எழுப்பப்படும் ஆய்வகம் மலைக்கு ஒன்னேகால் கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

5. நியூட்ரினோ ஆய்வகத்தின் மூலம் பெறப்படும் அறிவியல் ராணுவ-ஆயுத பயன்பாட்டிற்கு பயன்படவே செய்யப்படுகிறது என்று அமெரிக்காவின் பல அதிகாரிகள் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஏனெனில் உலக அறிவியலில் எந்த ஒரு பொருளாலும் தடைசெய்ய முடியாத கதிரியக்கமாக நியூட்ரினோக்கள் விளங்குகின்றன. பூமியின் மையப் பகுதியை ஒரு பக்கத்தில் ஊடுறுவி, மறுபக்கத்தில் எவ்வித பிரச்சனையுமின்றி வெளியேறும் தன்மை கொண்டவை இந்த நியூட்ரான்கள். இதைக் கொண்டு கடல் கடந்தும், நிலம் கடந்தும், வான் கடந்தும் செய்திகளை அனுப்ப இயலும் என்பதை அமெரிக்காவின் ராணுவ ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. நிலப்பரப்பிலிருந்து எந்த வித துணைக்கோள் துணையுமின்றியும், கேபிள் துணையின்றியும் செய்திகளை நீர்மூழ்கி கப்பலுக்கு அனுப்பி இருக்கிறார்கள். மேலும் 300 அடி விட்டம் கொண்ட பாறைக்கு ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு எந்த வித சேதமும் இன்றி செய்திகளை நியூட்ரான்கள் மூலம் அனுப்பி பரிசோதித்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆக இந்த ஆய்வகத்தின் அறிவியல் ராணுவ பயன்பாட்டிற்கும், பெரு வணிக நிறுவனங்களின் வணிகத்திற்குமே பயன்பட இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டே இந்த ஆய்வுகளை கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

இக்கட்டுரை ஒரு சிறு விகித பாதிப்பினையையே பதிவு செய்ய இயன்றிருக்கிறது. விரிவான நேர்மையான விவாதம் நியூட்ரினோ ஆய்வறிஞர்களிடம் இது குறித்து தேவைப்படுகிறது. இவ்வாறு ஒரு வணிகத்திற்கும், ராணுவ பயன்பாட்டிற்கும் குறிப்பாக இந்தியா அல்லாது அமெரிக்காவின் வசதிக்காக உருவாக்கப்படும் ஆய்வில் எதற்காக தமிழர்களின் நிலமும், வாழ்வாதாரமும் அழிக்கப்பட வேண்டும்? அமெரிக்காவின் பெர்மி ஆய்வகத்துடன் இந்த ஆய்வகமும் இணைக்கப்பட்டே ஆய்வு செய்யப்படும் என்கிற உண்மையை இதுவரை ஏன் இந்திய விஞ்ஞானிகள் மறைக்கிறார்கள்? பெர்மி ஆய்வகத்தினைச் சுற்றியுள்ள மக்கள் பகுதிகளில் கதிரியக்க பாதிப்புகள் ஏற்பட்டதை ஏன் இதுவரை வெளிப்படையாக இந்திய விஞ்ஞானிகள் பகிர்வது இல்லை? விஞ்ஞானிகள் அரசிற்கு மட்டுமே பதிலளிக்க வேண்டியவர்கள் என்பது அறிவியலுக்கு முரணானது. அரசின் கொள்கைகளுக்காக மட்டுமே செயல்படுபவர்கள் நேர்மையான விஞ்ஞானிகளாகி விட முடியாது.

ஈழப்படுகொலைக்கு நீதி பெற்றுத்தர முன்வராத இந்த சர்வதேசத்திற்கு தமிழர்கள் ஏன் துணை நிற்க வேண்டும்? தமிழக மக்களுக்கு சிறிதளவேனும் நன்மை தராத, கடும் துன்பத்தினை பல்லாயிர வருடக்கணக்கில் ஏற்படுத்தப் போகும் இந்த ஆய்வினை எதற்காக தமிழர்கள் தலையில் இந்திய அரசு கட்டுகிறது?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த நிலப்பரப்பிலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதையே மனிதநேயத்தினை விரும்புகிறவர்கள் கூறுவார்கள். தமிழகத்தின் தொன்மையான நிலப்பரப்பில் நிகழும் இந்த அழிவின் அறிவியல் தேவையற்றது. தமது குழந்தைகளை நேசிக்கும் எவரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தர இயலாது என்பதே பேருண்மை.

கதிர் இயக்கத்தினால் ஏற்படும் பாதிப்பினை இங்கே படித்த பிறகு, இந்தக் கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளை மறுபடியும் படியுங்கள். பாரம்பரிய இயற்கை வளங்களையும் இழந்து, நம் சந்ததிகளும் அழிய வேண்டுமா என்று சிந்திப்போம். இந்த உலகம் நம் குழந்தைகளுக்கு சொந்தமானது, நமக்கானதல்ல, ஆய்வு செய்து அழிப்பதற்கு.

- திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்

Pin It