IIT

உலக நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் கல்வித் தரம் பற்றி மதிப்பீடு செய்து, அவற்றைத் தர வரிசைப் படுத்தும் நிறுவனங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நிறுவனமான குவாக்குவாரெல்லி சிமோண்ட் (Quacquarelli Symond) என்ற பிரிட்டிஷ் நிறுவனம் 2013 -2014ஆம் ஆண்டிற்கான ஆய்வின் முடிவை 16.9.2014 அன்று புது தில்லியில் வெளியிட்டது. இவ் ஆய்வின் படி தர வரிசையில் 200 வரையிலும், ஒரு இந்தியக் கல்வி நிறுவனமும் இடம் பெறவில்லை. பம்பாயில் உள்ள இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (Bombay I.I.T.) 222வது இடத்தையும், டெல்லி இந்திய தொழில் நுட்ப நிறுவனம் 235வது இடத்தையும், சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனம் 300வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதே போன்று உயர் கல்விக் காலம் (THE - Times Higher Education) என்ற இன்னொரு நிறுவனமும் ஆய்வு செய்து அதன் முடிவை 1.10..2014 அன்று புது தில்லியில் வெளியிட்டு உள்ளது. இதுவும் மகிழ்ச்சி தரக் கூடியதாக இல்லை. இதன் படி உலகத் தர வரிசையில் 275 வரையிலும் ஒரு இந்தியக் கல்வி நிறுவனமும் இடம் பெறவில்லை.

இதைக் குறித்து இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் (Editor of THE World University Ranking) ஃபில் பேட்டி (Phil Baty) கருத்து கூறும் போது இந்திய மக்கள் தொகையையும், அதன் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, இந்தியக் கல்வி நிலையங்களின் இப்படிப்பட்ட தாழ்வான நிலைமை ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியதாகும் என்று கூறி உள்ளார்.

இவ்வாறு நம் இந்திய நாடு உலக அரங்கில் மூக்கறுபடுவது இது முதல் தடவை அல்ல. அண்மைக் காலமாக நேரும் நிகழ்வுகளும் அல்ல. அண்ணல் அம்பேத்கரே இதைப் பற்றிக் கருத்து கூறி உள்ளார். விதி விலக்காக வெளி நாடுகளில் கல்வி கற்கச் சென்ற போது, உயர் சாதிக்கும்பலினர் மட்டுமே உயர் கல்வி பெறுவது மட்டும் அல்ல; உயர் பணிகளில் அமர்த்தப் படுவதும் விதியாக உள்ளதைப் பார்த்தார். இந்திய மக்களில் அனைத்து வகுப்பினரிலும் உள்ள திறமைசாலிகளைப் பொறுக்கி எடுக்காமல், உயர் சாதிக் கும்பலினரில் இருந்து மட்டுமே பொறுக்கி எடுப்பதால், திறமைக் குறைவானவர்களே பெரும்பாலும் தேர்ந்து எடுக்கப்படுவதையும், அதனால் உலக அரங்கில் இந்தியாவின் நிலைமை மிகவும் கேலிக்கு உரியதாக ஆவதையும் கண்டு அவர் மனம் வெதும்பி உள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் நம் நாட்டின் கல்வித் தரத்தைப் பற்றிப் பல முறை தன் "ஆழ்ந்த வருத்தத்தை" அடிக்கடி தெரிவித்து வருகிறார். ஆனால் அண்ணலைப் போல் அதன் காரணத்தைப் பற்றி மூச்சு விடுவது கூட இல்லை.

இதன் காரணத்தை உணர்ந்து அதைக் களைய முயன்றால், தங்கள் சுக வாழ்வு பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக, உயர் சாதிக் கும்பலினர் அதைப் பற்றி மவுனம் சாதிக்கலாம்.

ஆனால் பொரியார், அம்பேத்கர் பங்களிப்பால் பயன் அடைந்து, கல்வி பெற்று, இன்று உயர்நிலைகளில் வந்து இருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படட வகுப்பு மக்களில் பலர் இதை உணராமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது ஆகும். அதிலும் அப்படி முன்னேறியவர்களில் பலர் தங்களுக்கு நாட்டுப் பற்று உள்ளதாக மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் இந்திய நாட்டின் கீழ்த் தரமான நிலைமைக்கு, கல்வி, உயர் கல்வி, உயர்நிலைப் பணிகள், சமூக, பொருளாதார நடவடிக்கைகளில் அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகளுக்கு இடம் அளிக்காமல், உயர் சாதிக் கும்பலினரே சுருட்டிக் கொள்வது தான் காரணம் என்பதை உணர மறுக்கின்றனர். அப்படி உணர மறுப்பதால் இந்திய நாடு உலக அரங்கில் தலை நிமிர்ந்து நடப்பதற்கு எதிராகச் செயல் படுகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.10.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It