தமிழக அரசியலைப் பொருத்தவரை தேர்தல் அரசியலில் சுயமாக முடிவெடுக்கக் கூடிய ஆற்றல் பெற்ற பேரியக்கங்கள் இரண்டு தான். ஒன்று திராவிட முன்னேற்ற கழகம், மற்றொன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். முன்னது கட்டமைப்பு ரீதியாக வலுவான கட்சி, பின்னது அதிக வாக்குவங்கி பலம் கொண்ட கட்சி. கடந்த 40 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இவற்றில் ஒன்றை ஏற்றும், மற்றொன்றை எதிர்த்துமாகத் தான் மற்ற எல்லாக் கட்சிகளும் செயல்படுகின்றன. இடைப்பட்ட கால‌த்தில் தோன்றிய எல்லாக் கட்சிகளும் வெகு சன செல்வாக்கைப் பெற்றிருந்தபோதும், ஓரிரு தேர்தலுக்குப் பிறகு இவற்றில் ஒன்றை சார்ந்தே இயங்கி வந்தன.

velmurugan2014 நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பா.ஜ.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க. கூட்டணி, சில இடங்களில் தி.மு.க வை மூன்றாம் இடம் பெற செய்யும் அளவிற்கு வலுப்பெற்று இருந்தது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

பொதுவாக தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கும், மாற்று அரசியல் சிந்தனை கொண்டவர்களுக்கும் உருவாகும் ஒற்றை சிந்தனை என்பது தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஒரு மாற்று அரசியலை மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்திய அரசியலில் கருவாவதற்கு முன்னரே கலைந்துபோவதாக‌ மூன்றாவது அணி உருவாக்க முயற்சி இருக்கிறது.

அண்ணன் வேல்முருகன் அவர்களே! திருச்சியில் அன்றைய இந்திய நடுவண் அரசின் முதன்மை அமைச்சர் மன்மோகன் சிங் வருகைக்கு கருப்புக்கொடி காட்டி கைதாகி இருந்தபோது, 'வைகோவோடு கரம் கோர்த்து மாற்று அரசியலை முன்னெடுக்க நான் தயார்' என்று நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறது. அந்த நிலைப்பாட்டில் தாங்கள் மாறாமல் தான் இருந்தீர்கள்.

தேர்தல் சூறாவளியில் புரட்சிப்புயல், மோடி அலையோடு சங்கமிக்க, அங்கு பாட்டாளி மக்கள் கட்சியும் ஒருங்கிணைய வேறு வழி தேடி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தீர்கள். இது தமிழக அரசியலில் இயல்புதான். அண்ணன் தொல்.திருமாவளவன் தி.மு.க.வின் துரோகங்களை சகித்துக் கொண்டுதான் அங்கே இருக்கிறார். அய்யா வைகோ அவர்கள், பா.ஜ.க வின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனங்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார். தேர்தல் அரசியல் என்று வந்த பிறகு சில சமரச‌ங்களை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்டாகத்தான் வேண்டும் என்பதையே இந்த இரண்டு விடயங்களும் காட்டுகின்றன‌.

இன்றைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமைகளே ஊழல் புகாரில் சிக்கி விழி பிதுங்கி நிற்கின்றன. இந்தச் சூழலில் தங்களைப் போன்றோர் அந்த இயக்கங்களை விட்டு விலக வேண்டும் என்பதே என் போன்றோர் விருப்பம். மாறாக தாங்கள் அ.தி.மு.க தலைமைக்கு ஆதரவாகப் பேசுவதென்பதும், ஜெயலலிதாவை நியாயவானாய் நிரூபிக்க முற்படுவதும் தங்கள் மீதான விமர்சனத்தை மட்டுமே உண்டு பண்ணும்.

தாங்கள் தமிழகத்தில் மிகக் குறைந்த வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்; மிகச் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்று விருது வாங்கியவர்; தங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் எவரும் சொல்லிவிட முடியாதபடி ஒரு நேர்மையாளர் என்று பதிவு செய்து இருப்பவர். இப்போது ஒரு ஊழல் வாதிக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதன் விளைவு நடுநிலைமையாளர்கள் மத்தியில் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். சமகால வாழ்வியல் உதாரணமாய் உங்கள் முன்னால் நிற்பவர் அண்ணன் தொல்.திருமாவளவன். ஈழ விடுதலை உணர்வை இதயத்தில் சுமப்பவர். ஆனால் தி.மு.க.வோடு கூட்டணியில் இருக்கிறார், தி.மு.க காங்கிரசோடு கூட்டணியில் இருக்கிறது... அவர்கள் செய்த பிழையைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகள் விடுதலை சிறுத்தைகள் மீது விமர்சனம் செய்யவில்லையா? அந்த அவதூறுகளை எந்தப் பிழையும் செய்யாமல் சுமப்பது எத்தனை பெரிய கொடுமை? நேர்மையாளன் என்று பெயர் எடுத்து விட்டு ஊழலுக்கு ஆதரவாகப் பேசினால் இதுதானே நிகழும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை 2011 இல் கழுத்தறுத்தவர், பொதுவுடைமை இயக்கங்களை 2014 இல் கழுத்தறுத்தவர் தங்கள் கழுத்துக்கு மட்டும் மாலை அணிவிக்கப் போகிறாரா என்ன? பெங்களூரு வழக்கு வெற்றி பெற்றிருந்தால் தங்களுடைய ஆதரவை மட்டும் கேட்டு இருப்பார். இப்போது தனித்து தேர்தலை சந்தித்தல் என்ற நிலைப்பாட்டில் இருந்து சற்று சறுக்கி இருக்கலாம். அதனால் தங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை. வாழ்த்துக்கள்!

அரசியல் வரலாற்றில் கிடைத்ததற்கரிய இந்த சந்தர்ப்பத்தை தங்களைப் போன்றோர் பயன்படுத்திக் கொள்ள போகிறீர்களா அல்லது மீண்டும் அ.தி.மு.க ., தி.மு,க கூட்டணி என்றே சாமரம் வீசப் போகிறீர்களா? காலம் பதில் சொல்லட்டும்.

- பாரிமைந்தன், தலைவர், தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு.

Pin It