மோதி ரசிகர்கள் ஒரு நூறு நாள் முன்பு ஆடிய ஆட்டம் என்ன? பாடிய நாமாவளிகள் என்ன? வளர்ச்சி விதைப்போனே! ஊழல் ஒழிப்போனே! நீர்வளம் வளைப்போனே! மீன்வளம் காப்போனே! என மோதி பஜனையில் திளைத்தனர்.

மோதியோ நான் வளர்ச்சி நாயகனில்லை! இந்துத்துவக் காவலன்! என முழங்கியபடி அரியணை ஏறிய மறு நாளே காவியடிக்கும் திருப்பணிகளில் இறங்கி விட்டார்.

modiகுசராத்து மோதி தாய்மொழி குசராத்தி மறந்து உலகெங்கும் இந்திப் பா பாடுவதில் நமக்குக்குக் குறையொன்றுமில்லை. ஆனால் தமிழனையும் இந்தியில் பேசி, சமற்கிருத வாரம் கொண்டாடி, குரு உற்சவத்தில் முங்கச் சொல்வது இந்திய வெறியல்லவா?

மோதிக் கூட்டத்தின் இந்திய வெறியே அண்மையில் இந்துத்துவ நஞ்சாக அவர்களின் குரு மோகன் பகவத் நாவில் கொட்டியுள்ளது. நாகபுரித் தலைவர் மோகன் பகவத்தின் கீதை ஓதுகிறது, இங்கிலாந்தில் பிறந்தவர் இங்கிலீஷ்காரர் என்றால், ஜெர்மனியில் பிறந்தவர் ஜெர்மானியர் என்றால், இந்துஸ்தானத்தில் பிறந்தோர் அனைவரும் இந்துக்கள் அன்றோ?

உலகச் செய்திகள் யாவும் அறிந்த மேதாவிகள் போல் பேசி, இந்துத்துவர்களைத் தவிர வேறு யாரும் பிதற்ற முடியாது. இங்கிலாந்து, ஜெர்மனி பற்றிப் பேசுகையில் ஆங்கிலேயர், ஜெர்மானியர் என மொழியைக் கொண்டு அடையாளம் காணும் பகவத் இந்தியாவில், அவரது பாஷையில் இந்துஸ்தானத்தில் வாழ்வோரை மட்டும் இந்துக்கள் என மதத்தைக் கொண்டு அடையாளம் காண்கிறார். மொழிவழித் தேசியங்களை மதவழித் தேசியத்துடன் ஒப்பிடும் பகவத்தின் அப்பட்டமான தன் முரண்பாட்டுக்கு இந்துத்துவப் பார்வையே காரணமல்லவா?

பகவத் எடுத்துக்காட்டும் இங்கிலாந்துக்கே போனால் அவர் நிலைமை இடியாப்பச் சிக்கலாகிப் போகும்! கிரேட் பிரிட்டனில் இங்கிலாந்து தவிர ஸ்காட்டிஷ் மொழிவழித் தேசியமான ஸ்காட்லாந்தும் அடக்கம் என்பது பகவத்துக்குத் தெரியுமா? ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி உலகக் கோப்பைப் போட்டிகளில் தனிக் கொடியுடன் கலந்து கொண்டு இங்கிலாந்துடன் மோதுகிறதே? இதே போல் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பைத் தமிழகக் கிரிக்கெட் அணிக்கும் தருவாரா பகவத்? 1977இல் ஸ்காட்லாந்துக்கென தனி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதே? அதே போல் தமிழர்களுக்கும் ஒரு நாடாளுமன்றம் அமைத்துத் தருவாரா பகவத்? கடந்த 2014 செப்டம்பர் 18ஆம் நாள் ஸ்காட்லாந்து தேசம் இங்கிலாந்துடன் இயங்கலாமா? தனித்தியங்கலாமா? எனக் கேட்டு நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து இங்கிலாந்துடன் சேர்ந்து இயங்குவதாகச் சனநாயக முடிவு எடுத்துள்ளதே? பகவத்தின் இந்துஸ்தானமும் காஷ்மீருக்கு வாக்குறுதி அளித்தது போல் அங்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் இருப்பதா? வேண்டாமா? என முடிவெடுக்கும் சனநாயக உரிமையைக் காஷ்மீரத்துக்கு வழங்குவாரா? பாக் நீரிணையின் அக்கரையில் தமிழீழ மக்கள் சிங்கள அரசிடமிருந்து பிரிந்து வாழ பொது வாக்கெடுப்புக் கோரிக்கை வைக்கிறார்களே! ஆதரிப்பாரா பகவத்?

இந்த முரண்பாட்டுச் சிக்கல்கள் இந்துஸ்தானத்தை முன்னிறுத்தும் இந்துத்துவவாதிகளுக்கு மட்டுமே சொந்தமென எவரும் கருதி விட வேண்டாம். இந்தியத்தை, பாரதத்தை முன்னிறுத்தும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எந்தக் கட்சியும், ஏன், இந்திய அரசமைப்புச் சட்டமே கூட இந்த முரண்பாட்டுப் பெட்ரோலில்தான் பாரத ஒற்றுமைத் தேரை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தியத்தில் ஊறிப் போன இந்த மூளைகளுக்கு இந்த முரண்பாடு ஒருபோதும் புரியப் போவதில்லை. ஆனால் நமக்கு நம்மைச் சுற்றி நடக்கும் சில அடிப்படை விவாதங்களே இந்த முரண்பாட்டைத் தீர்த்து வைக்கும்.

எடுத்துக்காட்டாகத் தமிழகத்தில் அடிக்கடி விவாதிக்க நேரிடும் ஒரு கருத்தைப் பார்ப்போம். தமிழ்வழிக் கல்வியே, அதாவது தாய்மொழிக் கல்வியே சரி என மெய்ப்பிக்கும் நோக்கில் ஒரு வாதம் முன்னுக்கு வருவது வழக்கம். ஜப்பான், ருஷ்யா, பிரான்சு, ஃபின்லாந்து உள்ளிட்ட தேசத்தினர் அனைவரும் முறையே ஜப்பானியம், ருஷ்யம், பிரெஞ்சு, ஃபினிஷ் என அவரர் தாய்மொழியிலேயே கல்வி கற்று அறிவு வளர்ச்சியில் தலைசிறந்து விளங்குகையில், தமிழ் மாணவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பயில்வது நியாயந்தானா? எனத் தமிழ் ஆதரவாளர்கள் உரத்துக் கேட்கையில், உடனே எதிரிகள் மடக்கப் பார்ப்பர். அங்கெல்லாம் ஒரு தேசம், ஒரு மொழி என்பதே உண்மையாக இருக்க, இது பல மொழி பேசும் நமது இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும்? என வினா தொடுப்பர்.

இங்கிலாந்தும் ஜெர்மனியும் ஒரே மொழி பேசும் தேசங்கள் என வாதம் செய்வோர், இந்தத் தருக்கத்தை இந்தியாவுக்குப் பொருத்திப் பார்க்கும் போது மட்டும் குழம்புவது ஏன்? இந்தத் தருக்கத்தையே நீட்டி ஒற்றை மொழியற்ற இந்தியா ஒற்றைத் தேசமன்று அல்லது ஒற்றைத் தமிழ் மொழி பேசும் தமிழகமே ஒற்றைத் தேசம் என்ற முடிவுக்குத்தானே இயல்பாக வந்து சேர வேண்டும்? மாறாகப் பல மொழி பேசும் இந்தியாவைப் பல தேசங்கள் அடங்கிய பெருநிலமாக வர்ணிக்காமல், அதனை ஒற்றைத் தேசமாக்குவது அப்பட்டமான தன் முரண்பாடுதானே?

இந்தியா பற்றி மிக இயற்கையான இந்த முடிவுக்கு வந்து சேர விடாது நம்மவர்களைக் குழப்புவது எது? நமது குழந்தைப் பருவந்தொட்டு நம்மிடம் கடவுள் நம்பிக்கை விதைக்கப்படுகிறதோ இல்லையோ, இந்திய நம்பிக்கை ஆழ அகலமாய் விதைக்கப்படுகிறது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களும் இந்திய நம்பிக்கையை 24 ஜ் 7 மணி நேரமும் ஓதுகின்றன. பள்ளிகள் அனைத்தும் மாணவச் செவிகளில் காலை இறை வணக்கத்திலேயே இந்திய நம்பிக்கையையும் தூவி விட்டுத்தான் வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்கின்றன.

வகுப்பறைக்குள் மாணவர்கள் சென்றதும், இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுப்பு என வரலாற்றாசிரியர் கதையளக்கத் தொடங்குகிறார். உடனே நம் மாணவர்களும் ஏதோ தமிழகத்தையும் இந்தப் பகை சூழ்ந்ததாகக் கலங்கத் தொடங்குவர். அலெக்சாண்டர் நுழைந்த போது இந்தியா ஏது எனக் கேட்பதற்கல்லவா மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்? அவர் படை தட்சசீலம் (இன்றைய பாகிஸ்தான்) கடந்து ஆக்கிரமிப்பைத் தொடங்கிய காலத்தில், தமிழகத்தைப் பாரி, காரி, ஓரி உள்ளிட்ட தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்ததை அல்லவா சொல்லித் தர வேண்டும்? ஆனால் இன்னும் இன்னும் மோசமான கற்பனைக் களஞ்சியங்களை மாணவர்களிடம் புகுத்துகின்றனர். அசோகர், கலிங்கர், அர்ஷர் ஆட்சிகளை இந்திய வரைபடத்தில் குறித்துக் காட்டச் சொல்கின்றனர். மாணவர்கள் அன்று நடப்பில் இல்லாத கற்பனை இந்திய வரைபடத்தில் வட மன்னர்களின் ஆட்சிப் பரப்புகளைக் குறித்துக் காட்ட வேண்டுமாம். புற உண்மைகளிலிருந்து கருத்தை அகழ்ந்தெடுத்து மாணவர்கள் நெஞ்சில் விதைக்காமல், மூளையில் உதிக்கும் இந்தியக் கற்பனைகளைப் புகுத்துவதே பல மயக்கங்களுக்கும் காரணம். இந்த மயக்க ஊசியை மாணவக் குருதியில் ஏற்றித்தான் இந்திய ஒற்றுமைச் சதி அரங்கேறி வருகிறது.

அன்று தமிழ்நாடு மட்டும் இருந்ததாக்கும்! என இந்திய பக்தர்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். இதற்குரிய விடை பெற தொல்காப்பியத்தில் சொல்லதிகாரம் 13ஆவது நூற்பாவை முதலில் பார்ப்போம்:

"செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்"

எந்த வினாவுக்கும் விடை நேரடியாக இருக்க வேண்டும் எனக் கூர்த்த அறிவியல் உளப்பாங்குடன் மூவாயிரம் ஆண்டு முன்பே இயற்றப்பட்ட இந்தத் தொல்காப்பியச் செய்யுளுக்கு 11ஆம் நூற்றாண்டில் விளக்கவுரை எழுதிய இளம்பூரணர் அதனை ஓர் எடுத்துக்காட்டு வினா தொடுத்து விளக்குகிறார். "உன் நாடு எது?" எனக் கேட்டால், "தமிழ் நாடு" எனச் சொல் (நும்நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்) என்கிறார். இந்திய ஆதரவாளர்களின் வினாவுக்கும் இளம்பூரணரின் இந்த நேரடி விடையே போதுமானது. தொல்காப்பியம் இன்னும் ஒரு படி மேலே போய் வடவேங்கடம் முதல் தென்குமரி எனத் தமிழகத்துக்கு எல்லையும் குறிக்கிறது.

ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது இந்து நாடே என மார்தட்டிப் பேசும் எவரும் அதற்குச் சான்று காட்ட தமிழ் இலக்கியத்திலிருந்து வேண்டாம், ஆரிய சமற்கிருத இலக்கியத்திலிருந்தேனும் ஒரு சான்றையாவது காட்ட முடியுமா?

ஆர்எஸ்எஸ் உச்சி முகர்ந்து போற்றும் மேனாள் காஞ்சி மடத் தலைவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் தமது தெய்வத்தின் குரல் நூலில் இந்து மதம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? சௌரபம், சைவம், வைணவம், கணபத்யம், சாக்தம், கவுமாரம் என ஷண் (ஆறு) மதங்களாய்ப் பிரிந்து கிடந்த நம் எல்லோரையும் வெள்ளைக்காரன் இந்துக்கள் என ஒன்று சேர்த்து அழைத்தானோ பிழைத்தோம்! இல்லை என்றால் பல துண்டுகளாகப் பிரிந்து போயிருப்போம் என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் சந்திரசேகரர். இந்தத் தருக்கத்தை நீட்டித் துணிந்து சொல்லலாம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல பல மன்னர்களின் கீழ் பிரிந்து கிடந்த பல ஆட்சிப் பரப்புகளையும் இந்தியா என்னும் பெயரில் வெள்ளைக்காரன் தன் வசதிக்கு இறுகப் பின்னியதால் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிக் கூட்டம் பிழைத்துக் கொண்டது!

ஆக, இந்துத்துவம் பேசுவோரின் இந்துக்களும், மதச்சார்பின்மை பேசுவோரின் இந்தியர்களும் ஒன்றே!

இவர்களைப் பொறுத்த வரை, காங்கிரசும், பாஜகவும், இடதுசாரிகளும் தேசியக் கட்சிகளாம்! திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி போன்றவை பிராந்தியக் கட்சிகளாம்! பொய் இந்தியத்தைத் தேசியம் என உயர்த்துவதும், மெய்யான மொழிவழித் தேசியத்தைப் பிராந்தியம் எனத் தாழ்த்துவதும் எத்தகையது? இட்லர் வகைப்பட்ட ஆரியப் பாசிசம் இல்லாமல் வேறென்ன?

பகவத் இன்னும் சொல்கிறார். இந்துஸ்தானின் இசுலாமியர்களையும் கிறித்துவர்களையும் இந்து இசுலாமியர்களாகவும் இந்துக் கிறித்துவர்களாகவும் அடையாளம் காண வேண்டுமாம்! இல்லை, இது நச்சுக் கருத்து, இவர்கள் இந்தியக் கிறித்துவர்கள், இசுலாமியர்கள் என்கிறது காங்கிரஸ். ஆனால் நமக்கு வரலாறு சொல்லித் தருவதென்ன?

காங்கிரஸ் இயக்கத்தில் இந்தி மொழிவழித் தேசியத்தின் தலைவர்களான நாத்திக நேருவுக்கும் தலித் ஜகஜீவன் ராமுக்கும் பார்ப்பன இந்திராவுக்கும் இசுலாமிய சல்மான் குர்ஷித்துக்கும் கிறித்துவ அம்பிகா சோனிக்கும் மற்ற மொழி பேசுவோரின் தலையில் இந்தி மிளகாய் அரைப்பதில் தயக்கமேதுமில்லையே! இந்தத் திணிப்பில் இந்திவழி வந்த பாஜக ராஜ்நாத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்டின் பி. சி. ஜோஷிக்கும் கூட என்ன வேறுபாடு? இதில் உபியின் தலித் மாயாவதியும் யாதவர் முலாயமும் கூட ஓரணிதானே? இவை இந்தியத்துக்கும் இந்துத்துவத்துக்குமான வெளிப்படைச் சான்றுகள் அல்லவா? இந்திவழித் தேசியத் தலைமைகளுக்கு நேர்மாறாகத் தமிழகத்து மொழிப் போர்களில் தலித்துகள் முதல் பார்ப்பனர்கள் வரை, இசுலாமியர்கள் முதல் கிறித்துவர்கள் வரை, ஆத்திகர்கள் முதல் நாத்திகர்கள் வரை அனைவரும் கைக்கோத்து நிகழ்த்திக் காட்டிய அந்த மகத்தான இந்தி எதிர்ப்புப் போராட்டக் களங்கள் தமிழ் மொழிவழித் தேசியத்துக்கு வரலாற்றுச் சான்றுகள் அல்லவா?

இந்தியத்தின் காங்கிரஸ் கூட்டம் களவாடிச் செல்ல முயன்ற திருத்தணிகை முருகனை இந்துத்துவக் கொடுங்கரங்களிலிருந்து காப்பாற்றிக் கொடுத்த வடக்கெல்லைப் போராட்டத் தளபதிகளில் தமிழகத்தின் அப்துல் ரகீமும் ஒருவர் அல்லவா?

இந்து மலையாளிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் கேரளம் குமரியை இழந்திருக்காது என்கிறார் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன். தனக்கு வாக்களித்த குமரி மக்களுக்கு இவர் செலுத்தும் நன்றிக் கடனிது! நல்லது, 1950களில் நடைபெற்ற மாபெரும் தெற்கெல்லைப் போராட்டத்தில் நேசமணி, மோ. வில்லியம் உள்ளிட்ட கிறித்துவர்களும், மபொசி, பி. எஸ். மணி உள்ளிட்ட இந்துக்களும், அப்துல் ரசாக், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த ஏ. பீர் முகம்மது உள்ளிட்ட இசுலாமியர்களும் தமிழர்களாக ஒருங்கிணைந்து குமரியை வென்ற கதையைப் பொன். ராதா இந்துத்துவக் கூட்டம் அறியுமா?

தெற்கெல்லை மீட்புப் போராட்டத்தில் 'இந்து' தமிழர் பலரைச் சுட்டுக் கொன்றது 'இந்து' மலையாளிகளே! முல்லை பெரியாற்றணையைக் கடப்பாரைகளால் உடைக்கப் புறப்பட்டது ஆர்எஸ்எஸ் மலையாளிகளே! இதற்கு இந்து இந்திக்காரர் மோகன் பகவத் பதில் சொல்லட்டும்.

எல்லாவற்றையும் மீறி இந்திய ஒற்றுமை எதற்கு? மாட்டுக்கறி உண்ணும் இசுலாமியரும் தலித்துகளுமே இந்திய ஒற்றுமைக்குப் பகையெனக் கண்டது ஹெட்கேவரின் ஆர்எஸ்எஸ். இந்து இசுலாமியப் பிளவே இந்திய ஒற்றுமைக்குப் பகையெனக் கண்டது காந்தியின் காங்கிரஸ். இந்திய ஒற்றுமை கெடுவது தலித்துகளின் வீழ்ச்சிக்கே உதவும் எனக் கருத்துரைத்தார் அம்பேத்கர். இந்திய ஒற்றுமை உடைவது பாட்டாளி வர்க்க சர்வ தேசிய நலனுக்கே எதிரானது எனக் கொள்கை வகுத்தனர் இடதுசாரிகள். எதிரெதிர் நிலைகள் கொண்ட பலரும் நன்னோக்கிலோ கெடுநோக்கிலோ தத்தமது நிலைகளுக்கான தீர்வு இந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதே எனக் கருதினர். எனவேதான் இவர்கள் அனைவருமே இந்தியைத் திணித்து, இந்தியத் தேசிய இனங்களின் மொழியுரிமை மறுப்பதில், இந்தியத்தைத் திணித்து மொழிவழி மாநிலங்களின் ஆற்றுரிமை, எல்லையுரிமை மறுப்பதில் ஒரே அணியில் நின்றனர், நிற்கின்றனர். ஆக, இந்தி-இந்து-இந்தியா-பாரதம்-இந்துஸ்தானம் என்ற இந்தச் சொல்லாடல்களில் இவர்கள் எவருக்கும் முரணில்லை.

இந்துத்துவம், காந்தியம், அம்பேத்கரியம், கம்யூனிசம் என அனைத்துக் கோட்பாடுகளும் இந்தியத்தின்பால், பாரதத்தின்பால் நின்ற அத்தருணத்தில், இவை அனைத்தையும் துடைத்தெறிந்து மாபெரும் சமூக அறிவியல் கண்டுபிடிப்பைப் புரட்சிகரச் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் முன்வைத்தார் தந்தை பெரியார். இந்துச் சூத்திரர்களின், பஞ்சமரின், சிறுபான்மை இசுலாமியர்களின், மொழிவழி மக்களின் ஒடுக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் இந்திய ஒற்றுமையே அடிப்படைக் காரணம் என அறிவித்தார். நாம் இந்தியர்களாக இருக்கும் வரை நமக்குச் சூத்திரப் பட்டம் ஒழியாது என்றார்.

காஷ்மீரம், அசாம், தமிழகம் என ஒடுக்குண்ட தேசிய இனங்களைப் பொறுத்த வரை, இந்தியம், பாரதம், இந்துஸ்தானம் அனைத்தும் பகைச் சொற்களே. அவர்களுக்கு காங்கிரஸ், இடதுசாரிகளின் இந்தியத் தேசியமோ, இந்துத்துவவாதிகளின் இந்துத் தேசியமோ இனியும் உதவாது. அவர்களால் காஷ்மீரிகளாகவும் அசாமியர்களாகவும் தமிழர்களாகவும் ஒற்றுமை கண்டே தங்கள் மண்ணுரிமை, மொழியுரிமை, சமூகநீதி உரிமைகளை மீட்டுக் கொள்ள முடியும்.

எனவேதான் தேசிய இன உரிமைகளுக்காகப் போராடி வரும் காஷ்மீர் இசுலாமியரை, பஞ்சாப் சீக்கியர்களை, ஈழத் தமிழரை ஒடுக்குவதில் ஆகட்டும், சமூகநீதிக்கு அடிப்படையான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை ஒடுக்கப்பட்டோருக்கு, இசுலாமியருக்குத் தர மறுப்பதில் ஆகட்டும், இறுதியாகப் பார்க்குமிடத்து காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட பாரதக் கட்சிகள் அன்று முதல் இன்று வரை ஓரணியில் நிற்பதை இந்தியக் காலங்காட்டி படம்பிடித்துக் காட்டுகிறது.

ஆம், பாரதச் சேற்றில் கால் பதித்த எவரும் இந்துத்துவச் சகதியைப் பூசிக் கொள்ளாது தப்பிக்க முடியாது. இந்தியத்தின் உயிர்நாடி இந்துத்துவமே! சமூக அறிவியல் நோக்கில் இந்தியமும் இந்துத்துவமும் ஒன்றே!

(ஆழம் அக்டோபர் 2014 இதழில் வெளியான கட்டுரை)

Pin It