காஸாவில் ஜூலை 7ம் தேதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற முடியாமலும், சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்போர் பயத்திலும் காஸாவில் தவித்து வருகின்றனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு ஐ.நா. பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாகும் என்று ஐ.நா. கூறியுள்ளது.

palestinian journalist 600

வான்வழி, கடல்வழி, தரைவழி தாக்குதல் என்று இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஐ.நா.வோ இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சிறிதும் செவிசாய்க்காமலும், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்காமலும் மவுனம் காத்து வருகின்றது. காஸாவில் மருத்துவமனைகள் கூட பாதுகாப்பாக இல்லை. அல் வாஃபா மருத்துவமனை முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை வெளிக்கொண்டு வரும் பத்திரிகையாளர்களுக்கும் அங்கு விதிவிலக்கல்ல. இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்து பத்திரிகையாளர்களை தாக்கி வருகின்றது.

இதுவரைக்கும் பத்திரிகையாளர்கள் மீது மட்டும் 72 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் பெண்கள் உட்பட எந்தவித பாரபட்சமுமின்றி பத்திரிகையாளர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர் என்று ஃபலஸ்தீன தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போர் நிறுத்தத்திலும் இஸ்ரேல் கிஞ்சிற்றும் விதிமுறையை கடைபிடிக்காமல் நிவாரணப் பணிகளில் ஈடுபடுபவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றது.

கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில், பத்திரிகையாளர்கள் சமீஹ்அல்அரியன் மற்றும் முஹம்மது தஹார் ஆகியோர் கொல்லப்பட்டனர். பலத்த காயங்களுடன் இவர்களின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று, புதன்கிழமை மத்திய காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய மோசமான படுகொலையில் 17 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில், ரமி ரய்யான் மற்றும் அஹத் சகுத் ஆகிய பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் மட்டும் நான்கு ஆண் பத்திரிகையாளர்களும், ஒரு பெண் பத்திரிகையாளரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இதில், ஃபலஸ்தீனத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஹாலித் அஹமது(25) என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இதுவரை நடந்த தாக்குதல்களில் ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் மற்றும் தொலைக்காட்சி வண்டியும், 16 பத்திரிகையாளர்களின் வீடுகளும், 15 பத்திரிகை அலுவலகங்களும் அழிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலைத் தொடங்கிய நாளிலிருந்தே பத்திரிகையாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், ஃபலஸ்தீனில் தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து, செய்திகளை வழங்கி வருகின்றனர் பத்திரிகையாளர்கள். இதனால், இஸ்ரேலிய இராணுவம் எங்கு நம்முடைய உண்மை முகம் வெளிவந்து விடுமோ என்ற அச்சத்திலேயே இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

காஸா இன்று திறந்த வெளிச்சிறைச்சாலையாக காட்சியளிக்கின்றது. அனைத்து வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மின்சாரம், தண்ணீர் என்று காஸா மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நிறுவனங்களும் இஸ்ரேலிய இராணுவத்தினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற மனித உரிமை மீறல்களை உலக மக்கள் முன் கொண்டு வரும் பணியில் பத்திரிகையாளர்கள் பிரதானமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தான் பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- நெல்லை சலீம்

Pin It