வரலாறு மாறிக்  கொண்டுதான் இருக்கும். அதற்கு இத்தாலியும் ஒரு எடுத்துக் காட்டு. இது ஜம்மு - காஷ்மீருக்கும் பொருந்தும்.

majiniஇந்திய அரசமைப்புச் சட்டம் 370, ஜம்மு - காஷ்மீரின் சிறப்புரிமைகளை உறுதி செய்திருந்தது. அதன்படி 1949 முதல் ஓரளவு சுதந்திரமாக இருந்த ஜம்மு - காஷ்மீர்,  இன்று மூன்றாகக் கூறுபோடப்பட்டு விட்டது.

ஆதிக்கம், இந்து மத வாதம் தலைவிரித்தாடும் ஆர்.எஸ்.எஸ். ஆளுமையில் இருக்கும் பா.ஜ.க. வின் மத்திய அரசு இதைச் செய்திருக்கிறது.

1815 ஆம் ஆண்டில் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நேச நாடுகளின் காங்கிரஸ் வியன்னோவில் கூடியது. அங்கே அவைகள் எடுத்த முடிவின்படி இத்தாலியை ரோம், நேபிள்ஸ், மிலான் என்று மூன்று கூறுகளாகப் பிரித்து அவைகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தன.

 அங்கே ஆதிக்கமும், கிருஸ்துவ மதவாதமும் தலைவிரித்தாடின, அந்த மூன்று நாடுகளில்.

இதனால் இத்தாலியில் சிறு சிறு கலகங்கள் ஆங்காங்கே  நடந்தன. அவை வலிமையற்ற, திட்டமிடப் படாத கலகங்களாகவே இருந்தன.

இந்நிலையில் “இத்தாலி மூன்று கூறுகளாகப் போடப்பட்டு விட்டன. இத்தாலியை மீண்டும் ஒரே நாடாக ஆக்க வேண்டும். வலிமையான இத்தாலியக் குடியரசை அமைக்க, வாருங்கள் - வாருங்கள் இளைஞர்களே”, என்று ஒரு வலிமையான முழக்கத்தை எழுப்பினான் ஜோசப் மாஜினி.

இந்த முழக்கம் மக்களைக் கவந்தது, குறிப்பாக இளைஞர்களை ஈர்த்தது. அப்போதுதான் “இத்தாலிய இளைஞர் சங்கம்” என்ற இயக்கத்தை உருவாக்கினான் மாஜினி, 1831 ஆம் ஆண்டில் .

“இளைஞர்களே, நாம் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும், நம் சந்ததியாக்குச் சுதந்திரக் காற்றைக் கொடுக்கும். காலம் கடந்து போகுமுன் நம் கடமையைச் செய்வோம் வாருங்கள். எதிரிகளை விரட்டி ரோம், நேபிள்ஸ், மிலான் ஆகிய நம் தாயகத்தில் நம் இத்தாலியச் சுதந்திரக் கொடியை பறக்க விடுவோம். இத்தாலியர்களே, இளம் இத்தாலியர்களே வாருங்கள், வாருங்கள்” என்று பேசவும் தொடங்கினான் அவன்.

விடுமா வல்லாண்மை அரசு. கைது செய்தது மாஜினியை. நிறுத்தியது நீதிமன்றத்தில். விசாரணை என்ற பெயரில் மாஜினிக்கு மரண தண்டனை வழங்கினார் நீதிபதி. தண்டனைக்குரிய 19 ஆம் எண் குற்றவாளியாக மீண்டும் அடைக்கப்பட்ட மாஜினி, தூக்கில் இடப்பட வேண்டிய நாளுக்கு முதல் நாள் சிறையில் இருந்து தப்பி , பிரஞ்ச் புரட்சியின் நாயகன் நெப்போலியன் போனோபாட் பிறந்த கார்சிகா தீவில் தலைமறைவானான்.

அந்தத் தீவில்தான் இத்தாலிய இளைஞர் சங்கத்தினரைக் கருப்புச் சட்டை அணியச் சொல்லி, அவ்வியக்கத்தைக் “கருஞ்சட்டைப் படை” யாக மாற்றிய மாஜினி தான், உலகப் போராளிகளின் முதல் கருஞ்சட்டைத் தலைவன்.

 இத்தகைய சூழலில் இத்தாலியின் நிலைமை மோசமாயிற்று. ஒரு பக்கம் ஆஸ்திரியா, மறுபக்கம் நேபிள்ஸ், இன்னொரு  பக்கம் பிரான்ஸ் படைகளின் தாக்குதல்கள் கடுமையாக இருந்தன. மதத்தின் பெயரால் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டன. மகத்தின் பெயரால் மக்கள் கூறு போடப்பட்டார்கள். மூன்றாகப் பிரிக்கப் பட்ட அன்றைய இத்தாலியில், மதவாதிகளின் தான்தோன்றித் தனமான திட்டங்களாலும், அரச அதிகாரங்களாலும், மக்கள் வாதைக்குள்ளானார்கள், இன்றைய காஷ்மீரைப் போல.

 இந்தச் சூழலில் நாடு திரும்பிய மாஜினி மிலான், மசாய்னா பகுதிகளில் புரட்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.

 karibaldiஅப்பொழுது இத்தாலி விடுதலையின் இன்னொரு வீரன் கரிபால்டி விடுத்த அழைப்பை ஏற்று, கரிபால்டியுடன் கருஞ்சட்டைப் படையை இணைத்துக் கரிபால்டி தலைமையில் போராட முன் வந்தான் மாஜினி.

 “கரிபால்டி - மாஜினி இருவரும் ஆஸ்திரியாவைக் கடுமையாகத் தாக்கினர். பிரஞ்சுப் படையினரைத் தடுத்துப்  பின் வாங்கச் செய்தனர். நேபிள்ஸ் படையைத் தோற்கடித்தனர்” என்று சொல்லும் ஜவகர்லால் நேரு, சேவாக், மிலான் ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டன என்றாலும் இத்தாலியின் விடுதலை அப்போது சாத்தியமாகவில்லை என்றும் கூறுகிறார்.

அடுத்த சில நாள்களில் எதிர்பாராமல் ஆஸ்திரியப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மாஜினிக்கு இரண்டாவது தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.

 அந்தக் கால கட்டத்தில் பீட்மான்டின் அரசன் விக்டர் இம்மானுவேலை இத்தாலியின் மன்னனாக்க முயன்று கொண்டு இருந்தான், அவனின் தலைமை அமைச்சர் கவூர். அதனால் அவன் பிரான்சுக்கும், ஆஸ்திரியாவுக்கும் இடையே தவறான செய்திகளின் மூலம் பகைமையை ஏற்படுத்துகிறான். விளைவு, பிரஞ்சுப் படை ஆஸ்திரியா மீது போர் தொடுத்துத் தோற்கடித்தது. உடனே திட்டமிட்டபடி இம்மானுவேலின் படைகளுடன் கரிபால்டியுடன் இணைந்து பிரஞ்சுப் படையைத் தாக்கிச் சிதறடித்து நேபிள்ஸ், சிசிலியா பகுதிகளைக் கைப்பற்றினார்கள்.

 இந்த நிலையில்  ஆஸ்திரியா விதித்த மரண தண்டனையிலிருந்து,  மாஜினியை  விடுவிக்கக்  கோரி  கலகங்கள் வெடித்தன, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

லண்டனில் நடைபெற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரல் மார்க்ஸ் இப்படிப் பேசினார், “ தோழர்களே, இத்தாலி அழிவை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. நாளை மாஜினிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று செய்தி வந்திருக்கிறது...  அது நிறைவேறுமானால் அந்த வீரனின் பின்னால் நம்மைப் போன்றவர்கள் இருந்தும் பயனில்லை என்ற பழி வந்து சேரும்...  அகில உலகமும் மாஜினியின் விடுதலைக்காகப் போராடவேண்டும். (இத்தாலி) நாடு பிறகு விடுதலையடையட்டும், முதலில் மாஜினி விடுதலையாக வேண்டும். அவனைத்  தூக்கிலிட்டால் அந்த அரசாங்கம் இருக்கும் இடம் தெரியாமல் நொறுங்கும். இது நம் எச்சரிக்கை”.

 காரல் மார்க்ஸ் இவவளவு சூடாகப் பேசியது ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஐரோப்பிய இளைஞர் சங்கம், சுவிஸ்சர்லாந்து இளைஞர் சங்கம், மறுமலர்ச்சி இயக்கம், மாணவர் சங்கங்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள், கருஞ்சட்டைப் படையினர் என்று மாஜினியின் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் ஒன்று திரண்டார்கள்.

 மக்களின் எழுச்சியைப் பார்த்த ஆஸ்த்திரிய அரசன், மாஜினியை மரண தண்டனையில் இருந்து விடுவித்தான். பின்னர் தந்திரமாகக் கைது செய்து கெய்டா என்ற இடத்தில் சிறையில் அடைத்து விட்டான்.

கரிபால்டி, கவூர் இருவரின் தொடர் போராட்டங்களின் முடிவில், 1861 ஆம் ஆண்டில் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் மன்னன் ஆக்கப்பட்டான். ரோம், வெனிஸ் இரண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை ஆயின.

மதவாதிகளின் ஆட்சி அதிகாரங்களால் மூன்றாகக் துண்டாடப்பட்ட இத்தாலி பின்னாளில் ஒரே நாடாகவும், சுதந்திர இத்தாலியக் குடியரசாகவும் ஆனது.

இறுதியாக ஒரு செய்தி. 1805 ஜுன் 22 ஆம் நாள் ஜெனோவாவில் பிறந்த ஜோசப் மாஜினி, 1872 மார்ச் 10 ஆம் நாள் மரணமடைந்தான். இத்தாலியின் பைசா நகரக் கோபுரத்திற்கு அருகில் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த வரலாறு அன்றைய இத்தாலிக்கும், இன்றைய காஷ்மீருக்கும் பொருந்தும்.

Pin It