முதலாவது அகிலம் 1864-76 வரை செயல்பட்டது. முதலாவது அகிலத்தின் செயல்பாடுகளில் மார்க்ஸ்ம், ஏங்கல்ஸ்ம் ஊக்கமுடன் பங்காற்றினர். அகிலத்திற்குள் நிலவிய பல்வேறு தவறான சித்தாந்தப் போக்குகளை முறியடித்து பாட்டாளி வர்க்கத்திற்கான‌ கொள்கையை நிறுவினர். தொழிலாளி வர்க்கத்திற்கென ஒரு தத்துவமும், அமைப்பும் வேண்டும்; அந்த அமைப்பும் தேசியத் தன்மையோடு சர்வதேசியத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றனர். விவசாயிகளுடன் கூட்டணி, யுத்தம், தேசிய இனப் பிரச்சனை ஆகியவற்றிக்கான மார்க்சிய கோட்பாடுகளை வகுத்தளித்தது.

இரண்டாவது அகிலம் 1896

முதலாளியம் ஏகாதிபத்தியமாக வளர்ந்து சலுகை பெற்ற தொழிலாளர் பிரிவுகளை உருவாக்கியது. வர்க்கப் போராட்டம் தேவையில்லை முதலாளித்துவத்தின் தன்மை மாறிவிட்டது. இருக்கும் முதலாளிய நாடாளுமன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி சோசலிசத்தை படிப்படியாக அடையலாம். மொத்தத்தில் இரண்டாவது அகிலத்தில் சந்தர்ப்பவாதம் கோலோச்சியது.

இரண்டாவது அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தை தோழர் லெனின் முறியடித்தார்.

communist leaders

மூன்றாவது அகிலம் 1920

மூன்றாவது அகிலம் முன்வைத்த முக்கியக் கோட்பாட்டு முடிவுகள்:

1.பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கம் விவசாயிகள் இயக்கத்துடன் உறுதியான உறவு ஏற்படுத்திக் கொள்ளாமல் கம்யூனிஸ்டு போர்த்தந்திரங்களையும், கம்யுனிஸ்டு கொள்கைளையும் பின்பற்ற முடியாது.

2.பின்தங்கிய நாடுகளிலும் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் சோவியத்துக்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும், நிலைமைகள் அனுமதிக்கும்போது சோவியத்துகளை நிறுவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு உலகிலுள்ள அனைத்துப் புரட்சிகர சக்திகளுக்கும் புரட்சிக்கான கட்சியை கட்டுவதற்கான தெளிவான வழிகாட்டலை லெனின் தலைமையிலான மூன்றாவது அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் 21 அம்சங்களைக் கொண்ட நிபந்தனைகளாக அகிலத்தின் உறுப்பினர்களுக்கு விதித்தது.

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் தோற்றம் 1920

மாபெரும் அக்டோபர் புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் மார்க்சியம் பரவுவதற்கு வழிவகுத்தது. 1925 டிசம்பரில் கான்பூரில் சத்தியபக்தன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் கூட்டப்பட்ட மாநாட்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி நிறுவப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சிங்காரவேலர் முதல் பொதுச்செயாலாளராக தேர்வு செய்யப்பட்டார். புரட்சிகர கட்சிக்கான மூன்றாவது அகிலத்தின் வழிகாட்டலை இந்த மாநாடு பின்பற்றவில்லை. மாநாட்டில் அகிலத்தின் பிரதிநிதியை பார்வையாளாரக வைத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவை ஒரு தேசமாக காங்கிரஸ் கருதி முன்வைத்த திட்டத்தையே இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

மாபெரும் ஆசான் லெனினையும் அவரது வழிகாட்டலையும் புறந்தள்ளிய இவர்கள் காந்தியை மகாத்மா என்று கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சி, இந்திய தரகு முதலாளிகள் மற்றும் நிலக்கிழார்களின் வர்க்க நலனையும் சனாதன பார்ப்பனியத்தையும் பாதுகாக்க நிற்பதைப் பார்க்க மறுத்து காங்கிரஸ் கட்சியை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாக காட்டும் வேலையில் இறங்கிவிட்டனர்.

தேசம் என்பது பற்றியும், தேசத்தின் உருவாக்கத்திற்கும், ஜனநாயகப் புரட்சிக்கும் உள்ள தொடர்பு பற்றியும் மார்க்சியம் தெளிவாக அறிவுறுத்தி இருந்த போதிலும் 1942-43வரை இந்தியா ஒரு பல்தேசிய இன நாடு என்பதை இ.பொ.க. உணரவில்லை.

1940களில் மொழிவழி தேசியக் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்ததையொட்டி, இ.பொ.க. முதன்முதலாக இந்திய சிக்கல் குறித்த ஆய்வைத் தொடங்கியது. இதன் விளைவாக 1942-43ல் இந்தியா ஒரு பல் தேசிய இன நாடு என்றும், தேசிய இனங்களின் தன்நிலைத் தீர்வுரிமையை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாப்பது என்றும் முடிவுக்கு வந்தது. அதாவது இந்தியாவில் தேசிய இனங்கள் பற்றிய அதன் ஆய்வும் முடிவும் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பது பற்றிய கவலையிலிருந்தே தொடங்கியது.

நாட்டில் மக்களின் வீரமிக்க போராட்டங்கள் தீவிரமடையும் போது கூட விடுதலைப் போராட்டத்தின் தலைமையை எடுத்துக் கொள்வது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தது. மாறாக காங்கிரஸ்- பொதுவுடைமை இணைப்பு, முன்னணி ஏற்படுத்துவது பற்றியே சிந்தித்தது. இ.பொ.க.வின் தலைமை காந்தியை தேசத்தின் தந்தை என்றும் அவருடைய தலைமையில் ஒரு ஜனநாயக ரீதியான உடன்பாட்டின் மூலம் சுதந்திரம் தரும்படியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குக் கொடுத்த மனுவில் கேட்டுக்கொள்ளும் இழிநிலைக்கும் சென்றது.

பார்ப்பனியம் இரண்டு அடக்குமுறைகளை செய்து வருகிறது. ஒன்று சாதிகளாக மக்களைப் பிளவுபடுத்தி பெரும்பிரிவு மக்களை ஒடுக்கிறது.

இரண்டு சம்ஸ்கிருத மொழி மேலாண்மை மூலம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பல்வேறு வளர்ச்சி நிலையும் பண்பாட்டுத் தொன்மையும் கொண்ட தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கி வருகிறது.

1920களில் இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி (இ.பொ.க. - CPI) உருவானது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் காங்கிரஸ் கட்சியாலும் குறிப்பாக காந்தியாலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. வீரியமிக்க செயல்பாடுள் மூலம் இந்திய அரசியல் அரங்கில் பெரும்தாக்கத்தை பொதுவுடமைக் கட்சி உருவாக்கியது,

1930களில் மொழிவழி மாநிலக் கோரிக்கைகள் வலுப்பெற்று எழுந்தது. இந்த புதிய நிலைமைகளை ஆய்வு செய்தது இ.பொ.க. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதையும் அவற்றிற்கு சுயநிர்ணய உரிமை வழங்க வேண்டும் என்பதையும் கட்சித் திட்டத்தில் முன்வைத்தது.

1947ல் அரசியல் அதிகாரம் கைமாற்றப்பட்டது. இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்தின் ஆசியோடு நாடாளுமன்ற ஜனநாயக முறையின் கீழ் தங்கள் சுரண்டலைத் தொடர்ந்தனர்.

உழவர், தொழிலாளர் அதிகாரம் 1917ல் தோழர் லெனின் தலைமையில் ரசியாவில் நிறுவப்பட்டிருந்தது.

உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவுவதற்கான‌ பாதை நாடாளுமன்றப் பாதை அல்ல என்பதை மார்க்சியம் தெளிவாகக் கூறுகிறது. ரசியா, சீனா நாட்டில் உழவர்-தொழிலாளர் அதிகாரம் நிறுவப்பட்டு அந்த நாடுகள் சோசலிசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டும் இருந்தன. இவ்வாறு கோட்பாட்டு வழியிலும், நடைமுறையிலும் ரசியா, சீனாவில் நாடாளுமன்றப் பாதையை கம்யூனிஸ்ட்கள் நிராகரித்திருந்தனர். ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் சோசலிசத்திற்கான பாதை நாடாளுமன்றப் பாதையே என தனது திட்டத்தில் வகுத்துக்கொண்டது. அதுமட்டுமின்றி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது இந்தியாவிற்குப் பொருந்தாது என முடிவெடுத்து இந்திய பார்ப்பனியக் கட்சியாக சீரழிந்து போனது.

இ.பொ.க.விலிருந்து 1965களில் இ.பொ.க.(மா)- CPI(M) தோன்றியது. இ.பொ.க.விற்கும் இ.பொ.க.(மா)விற்கும் அடிப்படை நிலைபாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இ.பொ.க.(மா)வின் பாராளுமன்ற சமரசப் பாதையை எதிர்த்து ஆயுதப் போராட்டப் பாதையை ஆணையில் வைத்து இ.பொ.க.(மா.லெ.) கட்சி 1968ல் நக்சல் பாரி எழுச்சியினைத் தொடர்ந்து உருவானது.

இ.பொ.க.(மா.லெ)கட்சி நக்சல்பாரி இயக்கம் என்று அறியப்பட்டது. இ.பொ.க.(மா.லெ.) இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்ததன் மூலம் புரட்சிகர கட்சியாக தன்னை நிறுவிக் கொண்டது.

1.நாடாளுமன்ற சமரசப் பாதையை தூக்கியெறிந்து விட்டு ஆயுதப் போராட்டம் என்னும் மார்க்சிய வழியில் ஊன்றி நின்றது.

2.தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை என்னும் லெனியக் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது

இந்த இரண்டு நிலைபாடுகளும் இ.பொ.க. (மா.லெ.)கட்சியை புரட்சிகர கட்சியாக நிலை நிறுத்தியது. இருந்த போதும் அரசியல் போரட்டத்தை புறந்தள்ளி ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்தியது. இன்னும் ஒருபடி மேலே போய் தனி நபர் அழித்தொழிப்பு (annihalation theory)என்னும் இடது தீவிரவாதத்தில் ஊன்றி நின்று மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டது.

இ.பொ.க.(மா.லெ)யின் இடது தீவிர நிலையை மறுத்து தமிழகத்தில் மேற்கு பிராந்தியக் குழு என்று அறியப்படுகிற பிரிவினர் பல சரியான நிலைப்பாடுகளை முன்வைத்து மாநில அமைப்புக் குழு இ.பொ.க.(மா.லெ.) SOC-CPI( M.L) என்ற பிரிவை 1977ல் உருவாக்கினர். இந்தக் குழுவின் சரியான கூறுகளை ஏற்று, தோழர் கார்முகிலும் தன்னை இத்துடன் இணைத்துக் கொண்டார்.

இதுகாறும் கவனிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு மா.அ.கு. முன் வந்து நின்றது.

மா.அ.கு. இ.பொ.க. SOC CPI(M.L) எதிர்கொண்ட கோட்பாட்டுக் கேள்விகள் இந்திய பொதுமை இயக்கம் தீர்க்க வேண்டிய மிக, மிக அடிப்படையான கோட்பாட்டுச் சிக்கல்களாகும். சுருக்கமாகக் கூறின் கீழே நிரல்படுத்தப்பட்டுள்ள கேள்விகளுக்கு மார்க்சிய-லெனினிய வழியில் தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு புரட்சிக்காரனின் முன்னும் வந்து நின்றது

1975ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் மிகக் கொடிய கறுப்புச்சட்டமான MISA (Maintanance of Internal security Act) உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை கொடூரமாக ஒடுக்கினார். நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. ஊடகங்கள் முடக்கப்பட்டன. விசாரணையின்றி ஆகப்பெரும் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சிறையில் அடைக்கப் பட்டனர். சுருக்கமாக இட்லரின் ஜெர்மனியை விட இந்திராவின் இந்தியா பாசிசமயமானது.

நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் மீதே பாசிசம் ஏவப்பட்டது. இந்தப் புதிய அரசியல் சூழலை எதிர்கொள்ள மா.லெ. இயக்கத்தின் பல்வேறு குழுக்களும் பல முடிவுகளை மேற்கொண்டனர்.

சில அமைப்புகள் ஆளும் வகுப்பின் ஒரு பிரிவாக செயல்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களோடு தேர்தல் கூட்டணியே கண்டனர். ஒரு பிரிவினர் மக்களுக்கு எப்பொழுதுமே பாசிசம் தான் என்று கூறி எதார்த்தத்தை அங்கீகரிக்க மறுத்தனர். தமிழ் நாட்டில் மா.அ.கு. புதிய நிலைமைகள் உருவானதை அங்கீகரித்தது. ஆனால் அதை எதிர்கொள்ள புதிய நிலைப்பாடுகளின் அவசியத்தை மறுத்து சந்தர்ப்பவாததில் அழுந்திக்கொண்டது.

மா.அ.கு. எதிர்கொண்ட கோட்பாட்டுச் சிக்கல்கள்:

1.புதிய ஜனநாயகப் புரட்சி நிகழ்ச்சி நிரலில் இருக்கும்போது நிலவும் அரசியல், பொருளாதர நெருக்கடி காரணமாக ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே இன்னொரு பிரிவின் ஜனநாய உரிமைகளைப் பறித்து பாசிசத்தை கட்டவிழ்த்து விடும்போது ஒடுக்கப்படும் ஆளும் வர்க்கப் பிரிவை கையாள்வது எப்படி? புதிய ஜனநாயகப் பொதுத்திட்டமே போதுமா? இடைக்கால நிலைமைகளுக்கான ஒரு இடைக்காலத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமா? இடைக்காலத் திட்டத்திலிருந்து புதிய ஜனநாயகப் புரட்சிக்கு முன்னேறுவது எப்படி?

2.அரசியல் போராட்டத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் இடையிலுள்ள உள்ளுறவு என்ன? அரசியல் போராட்டத்திலிருந்து படிப் படியாக ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டு எவ்வாறு நிலையான ராணுவ அமைப்புகள் உருவாக்கப்படும்?

3. அடிப்படை, முதன்மை முரண்பாடுகள் என்றால் என்ன? இந்திய சமூகத்தின் அடிப்படை, முதன்மை முரண்பாடுகள் என்ன?

4. நாடாளுமன்றங்களின் பாலான கம்யூனிஸ்ட்கள் அணுகுமுறை என்ன? புறக்கணிப்பா? பங்கேற்பா? பயன்படுத்துவதா?

5.இந்தியப் புரட்சிக்கான‌ ராணுவப்பாதை என்ன?

மேற்கண்ட கோட்பாட்டுச் சிக்கல்களை எதிர்கொண்ட மா.அ.கு தலைமை மா.லெ. வழி நின்று பிரச்சனைகளை அணுகவில்லை. கட்சிக்குள் வந்த மாற்றுக் கருத்துக்களை உட்கட்சி ஜனநாயக முறைப்படி அணுகவில்லை.

மா.அ.குவின் கீழ் செயல்பட்ட கொள்கை பிரச்சாரக் குழுவின் பொறுப்பாளராக இருந்த தோழர் கார்முகில் இந்தியப் புரட்சி இயக்கம் தீர்த்து முன்னேற வேண்டிய கோட்பாட்டுக் கேள்விகளுக்கு விடைகாணும் பொறுப்பை தாம் எடுத்துக் கொண்டு தீர்க்க முற்பட்டார்.

தோழர் கார்முகிலின் இந்த அளப்பரிய முயற்சிக்கு மா.அ.கு. தலைமை ஆவண உதவிகள் செய்தும் தங்கி எழுதுவதற்கு இட ஏற்பாடுகள் செய்து கொடுத்தும் உதவி செய்திருக்க வேண்டும்.புரட்சிகர நேர்மையோடு மா.அ.கு. தலைமை செயல்படாமல் சதிச்செயல்கள் மூலம் தோழர் கார்முகில் வேலை செய்வதைத் தடுத்து சித்திரவதை செய்தது.

புரட்சி இயக்கம் எதிர்கொண்ட சிக்கல்களைக் களைந்து முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தில் தோழர் கார்முகில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சரியான கோட்பாட்டு முடிவுகளை நிறுவினார்.

1.அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப் போராட்டம் என நிறுவினார்

2.புதிய ஜனநாயகத் திட்டத்தை நோக்கி முன்னேறும் போது அரசியல் அரங்கில் தீவிரமான மாறுதல் ஏற்பட்டு ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு புரட்சிகர முகாமிற்கு தள்ளப்படலாம். அந்தச் சூழலில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவைப் பயன் படுத்திக் கொள்ள குறிப்பான நிலைமைகளுக்கான குறிப்பான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என நிறுவினார். அத்தோடு அன்றைய குறிப்பான நிலைமைகளை எதிர்கொள்ள "பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக‌த் திட்டத்தை" முன்வைத்தார்.

3. இந்திய சமூகத்தின் அடிப்படை முரண்பாடு உற்பத்தி அரங்கில் -தேக்கமுற்ற அரை நிலக்கிழாரிய உற்பத்தியும், தரகு முதாளித்துவ உற்பத்தியும்- என வரையறை செய்து அதை மாற்றுவதற்கு அரசியல் அரங்கில் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என வரையறுத்து அதை தூக்கியெறிவதே பிரதான முரண்பாடு என முன்வைத்தார். இதனால் அரசியல் அரங்கில் வேலை செய்வதில் நிலவி வந்த தீவிரவிய, குறுங்குழுவிய, அல்லரசிய போக்குகளுக்கு முடிவுகட்டப்பட்டு புரட்சிகர இயக்கப் பணிகள் அரசியல் அரங்கில் குவிக்க வழிகோலப்பட்டது. இது தான் இந்திய அரசியல் அரங்கை மதிப்பீடு செய்து இந்திய சமூகம் பற்றிய எதார்த்தத்தை மார்க்சிய அடிப்படையில் புரிந்து கொள்ள வழிவகுத்தது. இந்திய தேசியக் கண்ணோட்டத்திலிருந்து விடுபட இந்த முடிவுகள் அடிப்படையிலான வேலையே
காரணமாகும்.

4.இந்தியப் புரட்சியின் இராணுவ மூலவுத்தி சீன நிலைமைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளதை தெளிவுபடுத்தி இங்கு படையிய அமைப்புகள் அரசியல் அரங்கப் பணியின் நீட்சியாக அமையும் முறை முன்வைக்கப்பட்டது,

5.பாராளுமன்றத்தில் பங்கேற்பது திரிபுவாதமாக இருப்பதைப் போல அதைப் புறக்கணிப்பது தீவிரவாதமாகும். பாராளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக அணுகவேண்டும் என முன்வைத்தார். எப்பொழுது பங்கேற்பது, எப்பொழுது புறக்கணிப்பது என்பதை கட்சியின் பலம், பலவீனங்களை கணக்கில் கொண்டும் ஆளும் வர்க்கத்தின் பலம், பலவீனங்களைக் கொண்டும் குறிப்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என வறையறுத்தார்.

தோழர் கார்முகிலால் முன்வைக்கப் பட்ட அரசியல் கோட்பாட்டு முடிவுகளை முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாக 1983களில் தமிழ்நாடு அமைப்புக் குழு -இ.பொ.க (மா.லெ) [ TNOC-CPI(m.L)] நிறுவப்பட்டது த.ந.அ.கு. அமைப்பின் கோட்பாட்டு முடிவுகளைப் பற்றி நின்று 1990கள் வரை செய்யப்பட்ட புரட்சிகர பணிகள்தான் புரட்சிகர இயக்கம் முன்னேற இந்திய சமூகம் பற்றிய புரிதல் தேவை என உணர்த்தி அதற்கான‌ ஆய்வுகளுக்கு இட்டுச்சென்றது.

இவ்வாறு வரலாற்றின் தேவையை நிறைவு செய்து வரும் ஒரு புரட்சியாளரை குணா போன்ற சீர்குலைவாளர்கள் அவதூறு செய்வதை அனுமதிக்க முடியாது.

எந்தவித இலக்குமின்றி, வேலைத் திட்டமுமின்றி ஊரைச் சுற்றிக்கொண்டு பெரிய மேதாவி போல நடித்து முன்னணியாளர்களை ஏமாற்றும் பிழைப்புவாதிதான் குணா. நான் முன்வைத்துள்ள, இனியும் முன்வைக்கவுள்ள தொகுப்பிற்கு இந்த திருப்பூர் குணா நேர்மையிருந்தால் பதில் சொல்ல வேண்டும். சமூக அக்கறையுள்ள அனைவரும் இந்த கொள்கைப் போராட்டத்தை முன்னெடுக்க உதவவேண்டும்

த.நா.அ.கு. காலத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் கோட்பாட்டு நிலைபாடுகள்:

1.சமுதாயத்தின் முதன்மை மற்றும் அடிப்படை முரண்பாடுகள் பற்றிய வரையறை (ஆவணம்: சமுதாயத்தின் அடிப்படை மற்றும் முதன்மை முரண்பாடுகள்)

2.முதலாளித்துவ பாராளுமன்றங்களின் பாலான அணுகுமுறை பற்றிய கொள்கை (ஆவணம்: முதாலாளித்துவ பாராளுமன்றமும் பொதுவுடைமை புரட்சியாளர்களும்)

3.குறிப்பான திட்டம் பற்றிய கோட்பாடு(ஆவணம்: த.நா.அ.கு கட்சித் தீர்மானம்)

4. அரசியல்- ஆயுத போராட்டம் பற்றிய குழப்பமற்ற தீர்மானம்

5.மாவோ சிந்தனை பற்றிய வரையறை (ஆவணம்: திரிபுவாதத்திற்கு எதிராக)

6. உலக அரசியல் சக்திகளை வரையறுக்கும் கோட்பாடு (ஆவணம்: த.நா.அ.கு கட்சித் தீர்மானம்)

த.நா.அ.கு., த.நா.மா.லெ. கட்சியாக மாறும்போது முன்வைத்த கோட்பாடுகள்

1 இந்திய தேசம் பற்றிய வரையறை

2 தேசிய விடுதலை பற்றிய கோட்பாடு

3 சாதி ஒழிப்புத் திட்டம்

4 தேசிய விடுதலைக்கும் ஜனநாயகப் புரட்சிக்கும் உள்ள உறவு

5 பல் தேசிய அரசு சமூகத்தில் கட்சியும் புரட்சியும் பற்றிய கோட்பாடு

6 இந்தியா ஒரு தரகு முதலாளிய - பார்ப்பனிய வல்லரசியம் என்ற வரையறுப்பு, பார்ப்பனியத்தின் இரண்டு முகங்கள் குறித்த வரையறுப்பு, இந்தியாவில் இருவகை அரசியல் பாகுபாடுகள் என்ற வரையறுப்பு, தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சி என்ற முடிவு.

7 பெரியார்- அம்பேத்கார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய கொள்கை.

இதற்கான ஆவணங்கள்:

1 பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கொள்கை.
2 இந்தியாவில் தேசியப் பிரச்சனையும் ஜனநாயகப் புரட்சியும்.
3 த.நா.ம.லெ. கட்சித் தீர்மானம், கட்சித் திட்டம், உடனடி வேலைத் திட்டம்.

குறிப்பு:

தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சியில் அக்கறை உள்ளவர்கள் அருள்கூர்ந்து தமிழ் நாடு விடுதலை பற்றியும் இந்தியாவின் பார்ப்பனிய ஏகாதிபத்தியம் பற்றியும் தெளிவுபடுத்தும் மேற்கண்ட கொள்கை நிலைப்பாடுகளை படித்து விமர்சிக்க வேண்டுகிறேன். மேலும் பெரியாரை அரசியலற்று விமர்சிக்கும் போக்குக்கு முடிவு கட்ட பெரியாரியல்வாதிகள் கூட பெரியாரின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்துகொள்ள மேற்கண்ட ஆவணம் உதவும்.

- கி.வே.பொன்னையன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It