இத்தனை வருடங்களும்
இதன் நிழல் வாங்கி
இதன் பழம் தின்னும்
பறவைகள் பார்த்து-
இதன் துளிரில் துளிர்த்து
சருகில் சரசரக்க நடந்து
திரிகிறவன் எனினும்
இந்த மரத்தை முழுதாகப்
பார்த்ததில்லை என்று புரிய
நேற்றுவரை ஆயிற்று
ஆயுசு போதாது
ஒரு மரம் பார்க்க.

- கல்யாண்ஜி

திருநெல்வேலி கணபதி சிவசங்கரன், சுருக்கமாக தி.க.சி என்று இலக்கிய குடும்பத்துள் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம், தவிர்க்க இயலாத குரலாக ஒலித்த மூதறிஞர் தி்.க.சிவசங்கரனின் மறைவு ஒரு மனோரஞ்சித மலரைப் போன்ற உதிர்வின் மணமிக்கதாகும்.

thikasi 243பட்டய அறிஞர்கள் கோலோச்சிய காலத்தில் பட்டறிவைக் கொண்டு இலக்கிய வெளியில் புகுந்த தி.க.சி. விரைவிலேயே தனக்கான இடத்தை மென்மையும், திடமுமாக தக்கவைத்துக் கொண்டார். 1942-ல் எழுத வந்து 1952 க்குள் சிறுகதை எழுதுவதை நிறுத்திக் கொண்டதை தமிழ் இலக்கியத்திற்கு நல்ல காலம் எனவும், ‘களவும் கற்று மறப்பது போல’ என்று தான் விமர்சனத் துறைக்கு மாறிக் கொண்டதை வேடிக்கையாக குறிப்பிடுவார். இவரை எழுத்துலகில் சுகப்பிரசவம் செய்த மூத்த இலக்கியவாதி வல்லிக்கண்ணனைப் பின் பற்றியதாக அது இருந்தது. பாரதி கவிதை வழி தீரா கவி தாகமும், விடுதலை உணர்வும் பெற்று சுதந்திரப் போரில் தமது சமகால நண்பராக சி.சு.செல்லப்பாவைப் போன்றே தம்மையும் ஒரு போராளியாக்கிக் கொண்டார். சி.சு. வின் எழுத்து, 'கலை, கலைக்காகவே' என்றபோது சிறையில் பெற்ற பொதுவுடைமை நட்பு, தி.க.சியை 'கலை, மக்களுக்காக' என்று சொல்ல வைத்தது.

நெல்லையில் தி.க.சி. நடத்தி வந்த வாலிபர் சங்கத்தின் ‘இளந்தமிழன்’ கையெழுத்து இதழில் அவரது அயல் வீட்டுக்காரரான வல்லிக்கண்ணன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது, தி.க.சியின் முதல் சிறுகதையான ‘வண்டிக்காரன்’ வெளிவந்தது. பு.பி யின் அக்கால சமூக சமச்சீரின்மையின் ஆவேசம் தொற்றிக் கொண்டவராக தி.க.சியின் கதைகளும், எழுத்துக்களும் வெளிவரத் தொடங்கின. ஓய்வற்ற உழைப்பையும், பொழுதையும் கோரும் மனித வாழ்வின் வறுமையின் அவலத்தை அக்கதை பேசிற்று. பின்னர் அதுவே பிரசண்ட விகடனில் அச்சில் வந்த அவரது முதல் சிறுகதையாகவும் அமைந்தது.

எழுத்தே வாழ்வு என்றானபோது, அவர் எழுதாத விடயமே இல்லை என்றாயிற்று. வங்கிப் பணியை உதறினார். 1969 முதல் சோவியத் யூனியனின் சென்னைத் தூதரகத்தில் பத்திரிகைப் பணியேற்று 25 ஆண்டுகள் தீவிர மொழி பெயர்ப்பு இலக்கியத்தில் ஈடுபட்டார். ‘கவிக்குயில் மலர்கள், கிராமஊழியன், கலாமோகினி', போன்றவற்றில் கட்டுரை, கவிதைகள் பெருமளவு எழுதினார். வாராவின் நடையைபோல நடைசித்திரங்கள் எழுதுவதில் தனக்கென்று ஒரு தெளிந்த நடையை மேற்கொண்டார். அது போலவே கவிதை தளத்தில் ந.பி.யை, பாரதியை, பாரதிதாசனை முன்மாதியாகக் கொண்டு ஒரு மரபார்ந்த வீச்சை கைக்கொண்டார். ‘துருவன்’ என்ற பெயரில் எழுதியதும் அவர்தான். மத்திய காலங்களில் திரைப்படங்கள் குறித்த அவதானிப்புடன் கூடிய கூரிய விமர்சனங்களை மக்கள் முன்வைத்தார். பின்னர் தீவிர விமர்சகராக அறியப்பட்ட காலத்தில் தி.க.சி., நாவா (வானமாமலை) வின் வேண்டுகோளுக்கிணங்க மு.வ.வின் நூல்களுக்கு விரிந்த மார்க்சியப் பார்வையில் தமது திறனாய்வினை எழுதத் தொடங்க, அதுவே அவரை தனித்த அடையாளமாக்கியது.

பிறகான காலங்களில் எழுத்து துறைக்கு வந்து சேரும் தனது கவனத்திற்குட்பட்ட படைப்புகள் யாவற்றையும் அவரது விமர்சனத் தென்றல் வருடாமல் விட்டதில்லை. சமரசமற்ற நேர்மையும், இளந்தலை முறையினரை வளர்த்தெடுப்பதிலுள்ள மூத்த தலைமுறையின் கரிசனமும் கண்டிப்புமே பண்பட்ட நாகரிகமான அவரது விமர்சனப் பார்வையை நம்மை தென்றலுக்கு ஒப்பிடச் சொல்கிறது. நீயெல்லாம் எழுதவில்லை என்று யார் அழுதா?! என்பது போன்ற ‘நேர்மையான’ இன்றைய எழுத்து மேதாவிகள் போல அவரது எழுத்துகள் புயல் போல சீறியதில்லை, யாதொருவர் மீதும் விழுந்து குருதி வழியப் பிறாண்டியதில்லை. விமர்சனத் துறையின் அதிகபட்ச நேர்மையைக் கொண்டிருந்தார் தி.க.சி.

புதுமைப்பித்தன் அலை வீசிக் கொண்டிருந்த காலத்தில், புதுமைப்பித்தன் நினைவு மலரிலேயே புதுமைப்பித்தனிடத்தில் புதுமையும் உண்டு பித்தமும் உண்டு என்று எழுதத் தயங்கவில்லை அவர். அதாவது புதுமைப்பித்தன் படைப்பில் பிற்போக்குத் தன்மையும் உண்டு என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனது நெருங்கிய நண்பரும் இலக்கியவாதியுமான வல்லிக்கண்ணனின் இலக்கிய நோக்கை முழுமையாக ஆதரித்தவர் இல்லை தி.க.சி. இதை வல்லிக் கண்ணனே குறிப்பிடுகிறார். வல்லிக்கண்ணனின் கதைகள் கயிலைப் பதிப்பக வெளியீடாக வந்தபோது அதை கடுமையாக விமர்சித்து எழுதினார். முற்போக்கு அரங்கிலே தோன்றிய பின் நவீனத்துவவாதிகளையும் கூட அதே காட்டத்துடன் எதிர்த்து வந்தார். சின்ன அறிவுசீவிக் கூட்டமான அவர்கள் வறட்டுத்தனம் நிர‌ம்பியவர்கள் என்றார். இவர்கள்தான் புதுமைப்பித்தன் போன்றவர்களை சாதியத்திற்குள் அடைப்பவர்கள் என சாடினார். தனது கொள்கைக்கு நேர் எதிர் இடத்தில் இருந்தாலும் அவர்களது படைப்புகளை மதிப்பிட்டு பாராட்ட கொஞ்சமும் தயங்காத முதுபெரும் விமர்சகர் தி.க.சி. மட்டுமே. தத்துவநோக்கமும், பொதுவாழ்வில் அர்ப்பணிப்பும் அபூர்வமாக இணைந்து நிற்கும் அரிதான படைப்பாளிகளை பெரிதும் நேசிப்பவராக இருந்தார் அவர். அதனால்தான் சி.சு.செ, தொ.மு.சி. வல்லிக்கண்ணன் போன்றோரையும் வசீகரிப்பவராக இருந்தார்.

வறட்டு முற்போக்கு வாதம் இலக்கியத்தின் அழகியலையும் அதன் நோக்கத்தையுமே சிதைத்துவிடும் என்பதில் தி.க.சி.க்கு மாற்றுக் கருத்து இருந்ததில்லை அதே நேரம் வெறும் அழகியல் என்பது பிணத்திற்கு சமம் என்று கருதினார். அதனால்தான், பா.செயப்பிரகாசம், பொன்னீலன் போன்ற முற்போக்கு படைப்பாளிகளின் எழுத்துக்களை பெரிதும் வரவேற்றார். பொன்னீலனின் பாதைதான், பாரதி, பாரதிதாசன், ஜீவாவின் தடம் என்பதை உறுதியாக நம்பினார். எதிர்கால முற்போக்கு இலக்கியம் இவர்களிடமிருந்தே செழித்து வளரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதேசமயம் சமூக நீதிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் என தடையாக இருக்கும் எவ்வகை இலக்கியத்தையும் முனைமுகத்து நின்று எதிர்ப்பதில் அவர் சோர்விலா வீரர். எவ்வகை விமர்சனமும் தட்டிக் கொடுப்பதாக இருக்க வேண்டுமே தவிர தாக்குதலாக மாற இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இன்றைய விமர்சனப்பாங்கு என்பது வெறும் புகைச்சலும், குழுவாதமும் நிறைந்தது என்பதை நினைக்கையில், தி.க.சி.யின் விமர்சனக் கரிசனம் எத்தனை முக்கியத்துவமுடையது என்பது விளங்கும்.

வளரும் படைப்பாளிகளை தட்டிக் கொடுப்பதிலும், வளர்ந்த படைப்பாளிகளை தட்டிக் கேட்கவும் தி.க.சி.யின் விமர்சனப் பார்வை சமரசப்பட்டுக் கொண்டதில்லை. அவரது அளவுகோல் என்பது அவரைப் போலவே எளிமையானதும் கூட. சிறந்த படைப்பாளி, சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதே அவரது எப்போதைக்குமான முன் நிபந்தனையாக இருந்துவந்தது.

தமது இலக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கும் என்று திருமணம் செய்து கொள்ளாத முதுபெரும் படைப்பாளிகளுக்கு மத்தியில் நிறைவான குடும்ப வாழ்வை மேற்கொண்டார் தி.க.சி. பல இலக்கியவாதிகளின் வாரிசுகள் எழுத்து பிழைப்பதற்கான வழியல்ல என்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை. உண்மையில் எழுத்து ஒருவகை வாழ்வு தவம். ஒரு சரியான படைப்பாளியின் பிள்ளை சரியான மனிதனாகவும், படைப்பாளியாகவும் இருப்பான் என்பதை தி.க.சி.யின் நிழலில் வளர்ந்த பிள்ளை வண்ணதாசன் (கல்யாண்ஜி) எழுத்து சொல்வதாக இருக்கிறது. வேறெந்த தமது சிறந்த படைப்பை போலவே தி.க.சி. தமது மகன் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அது நியாயமானதும் கூட.

ஈராயிரம் ஆண்டு தொடக்கத்தில், விமர்சனங்கள்- மதிப்புரைகள்- பேட்டிகள் என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமியின் விருது தி.க.சி க்கு கிடைத்தது என்பது விருதுக்கு கிடைத்த பெருமையாகும்! விருதுகளைத் தேடி, ‘அலைந்து’, ‘வாங்கும்’ காலத்தில் அவரைத் தேடி வந்தது தமிழ் பெற்ற அவதானமாகும். தி.க.சி. இலக்கிய செயற்பாட்டாளர் என்பார், மூத்த தமிழறிஞர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி. மனிதர்களைப் போற்றுவதும், மனித நேயத்தை வளர்ப்பதுமே தி.க.சியின் அடிப்படை இலக்கியக் கொள்கை என்பார் வல்லிக்கண்ணன். தாமரை, இவர் காலத்தில்தான் பொற்றாமரையாயிற்று. 6 மொழி பெயர்ப்பு நூல்கள், 4 திறனாய்வு நூல்கள் தி.க.சி.யின் இலக்கியப்பணியில் விளைந்தவை. கேரளாவில் தாம் வங்கிப் பணியாற்றிய காலத்தை நாவலாக எழுதும் அவரது அனுபவம் அவருடனே பின் சென்றுவிட்டது நெடுங்கதை உலகின் பேரிழப்பாகும்.

தமிழில் இலக்கிய விமர்சனத்துறை என்பது பெரிதாக வளராததற்கு நேர்மையும், திறந்த மனதும் இல்லாததும், விமர்சகர் என்பவர் திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பவர்; வெகுசன விரோதி என்பன போன்ற மனோநிலையும் காரணமாக இருந்த நிலையில் தி.க.சி. படைப்பாளிக்கும் விமர்சகருக்கும் இடையே தோழமையையும் நட்புறவையும் வளர்ப்பவராக இருந்தார். படைப்பை நோக்கிய விமர்சனம் எந்நிலையிலும் படைப்பாளியைத் தாக்காவண்ணம் அவரது ஆளுமை இருந்தது. இன்றைக்கு விமர்சனம் என்கிற பெயரில் பெரும்பாலும் தனிநபர் தாக்குதலுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தனிநபரை முன்வைத்து படைப்பை நிராகரிக்கும் துறையாகவே இன்றய விமர்சனத் துறையின் போக்கு இருந்து கொண்டுள்ளது.

தலைமுறை இலக்கிய வாதிகளுக்கிடையே காலத்தின் பாலமாக, மரபின் தொடர்ச்சியாக நின்ற தி.க.சி. தமது 90 வது அகவையை எட்டும் முன்பாகவே தம்மை நம்மிலிருந்து துண்டித்துக் கொண்டுவிட்டார். பலரும் அவரை தபால் கார்டு இலக்கியவாதி என்று எள்ளியதுண்டு. நமது படைப்புகள் பற்றி திருநெல்வேலியிலிருந்து தி.க.சி. என்ன எழுதியிருக்கிறார் என்று அன்றைய திங்கள் இதழைத் திறந்து வாசகர் கடிதப் பகுதியில் தேடிப் பிடித்து படிப்பது எம்மைப் போன்ற படைப்பாளிகளின் அன்றாடமாக இருந்தது. அந்த அய்ம்பது காசு தபால் கார்டுதான் எம்மைப் போன்ற ஏகலைவர்களை, பல இலக்கியவாதிகளை வளர்த்தெடுக்கும், அடையாளம் காட்டும் முகவரியாக இருந்தது என்பதை யாதொருவராலும் மறுக்கமுடியாது.

ஒரு நேர்காணலில் தி.க.சி. இப்படி சொன்னார், தி.க.சி என்ற மனிதன் இறந்துவிட்டால், ஒரு எழுத்தாளன் என்று கூட வேண்டாம், ஒரு நல்ல மனிதன் உற்ற தோழன் போய்விட்டான் என்று நினைத்து கண்ணீர்விட ஒரு நூறு பேர் போதும் என்றார். தி.க.சி. போன்ற நல்ல மனிதருக்காக, இலக்கியவாதிக்காக சிந்தும் ஒரு துளிக் கண்ணீர் என்பது உண்மையில் நூறு பேருக்குச் சமம்தான்.!

- இரா.மோகன்ராஜன்

Pin It