முகநூலில் தோழர் லெனினின் மாணவன் என்பவரோடு ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவர் சார்ந்த தமிழ்நாடு மார்க்சிய-லெனினியக் கட்சியானது அதன் தோற்றமான தமிழ்நாடு அமைப்புக் கமிட்டியின் தொடக்கத்திலிருந்தே (1980) ஓர் உறுதி வாய்ந்த தலைமைக் கமிட்டியை உருவாக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதையும்: 1992-க்குப் பிறகு பெயரளவிற்கான தலைமைக் கமிட்டி கூட இல்லையென்பதையும், கட்சித் தேர்தல், சிறப்புக் கூட்டங்கள், பிளீனங்கள் அல்லது மாநாடுகள் எதையும் நடத்த முடியாமல் தேக்கமடைந்து விட்டதையும்:, மொத்தத்தில் அமைப்பு செயல் முடக்கமாகி விட்டதையும் நான் முன்வைத்திருக்கிறேன்.

இந்த செயல்முடக்கம் என்பது தானாக வந்ததில்லை என்பதும், யாரும் சூனியம் வைக்கவில்லை என்பதும், த.நா.மா.லெ.க-வின் செயல்முடக்கத்துக்கான காரணம் அதன் அரசியல் நிலைப்பாட்டில்தான் உள்ளது என்பதும் எனது வாதம். அந்த நிலைப்பாடு எதுவென்றால் 'அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத்தான் ஆயுதப் போராட்டம் உருவாகும்' என்கிற நிலைப்பாடேயாகும் என்பதே எனது விளக்கம்.

முகநூலில் நடைபெறுகிற இந்த விவாதத்தில் தோழர் கி.வே.பொன்னையன் கீழ்காணும் கருத்தைப் பதிவுச் செய்தார். "குணா முன் வைக்கின்ற சில கருத்துக்களில் எனக்கு உடன் பாடுள்ளது. ஆனால் அரசியல் போராட்டத்தின் நீட்சியே ஆயுதப்போராட்டம் என்பதற்கும் கட்சியை கட்டமுடியாமல் த.நா.மா.லெ.க இருப்பதற்கும் உறவு இருப்பதாக நான் கருதவில்லை. மாறாக அரசியல் போராட்டமே நடத்தாமல் ஒரு கட்சி 22 ஆண்டுகளாக முடங்கி இருந்ததால் சமூகத்தின் இயக்கத்தை விட்டே துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத்தொகுப்பு என்று சொல்லப்பட்டது, குட்டி முதலாளிய போக்கிற்கு முடிவு கட்டுவது என்று சொல்லப்பட்டது. நான் குட்டி முதலாளிய மன நிலையும் வாழ்நிலையும் கொண்டிருந்ததால் கட்சி எதிர் கொண்டதேவைகளை நிறைவு செய்யாமல் வெளியேற்றப்பட்டேன். உண்மையில் ஒரு புரட்சிகர இயக்கத்தில் முழுநேர ஊழியனாக பணியாற்ற எனக்குத் தகுதி இல்லை. நான் கட்சி பொறுப்புகளிலிருந்து 2006ஆம் ஆண்டிலிருந்து வேலை செய்வது இல்லை. ஆனால் சமூக அரங்கில் தமிழ்தேசிய மார்க்சியக் கண்ணோட்டத்தில் செயல்படுகிறேன் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் சரி என்று பற்றி நிற்கின்றேன். எனது கேள்வி எவ்வித சமூக இயக்கமும் இல்லாமல் புரட்சிக்கான ஊழியர்கள் எங்கிருந்து வருவார்கள்? கட்சியின் செயல் முடக்கம்தான் புதிய சக்திகளையும், புதிய சமூக நிலைமைகளயும் உள் வாங்க முடியாததற்குக் காரணமோ எனக் கருதுகிறேன். எனது கருத்தை கட்சியின் மீது விமர்சனம் வைப்பவர்கள் வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்க பயன்படுத்துங்கள். த.நா.மா,லெ,காவும் ஒரு திறந்த விவாதம் நடத்தலாம் என்று கருதுகிறேன்."

இந்த கருத்தின் மூலம் தோழர் கி.வே.பொ அவர்கள் த.நா.மா,லெ,க செயல்முடக்கமாகியுள்ளதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதற்கு 'அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத்தான் ஆயுதப் போராட்டம் உருவாகும்' என்கிற நிலைப்பாடுதான் காரணம் என அவர் ஒப்புக் கொல்லவில்லை. அதேநேரத்தில் வேறு எந்த அரசியல் காரணங்களையும் அவர் முன்வைக்கவுமில்லை.

இந்த வேளையிலே கீற்று இணையதளத்தில் "அரசின் பயங்கரவாதமும் - அதை மறுக்கும் புரட்சியாளர்களும் - மே நாள் அறைகூவல்" என்ற கட்டுரையை நான் எழுதியிருந்தேன். அதற்கு பதில் சொல்கிற விதமாக தோழர் கி.வே.பொ "தமிழ்நாடு மார்க்சிய லெனியக் கட்சியின் அரசியல், அமைப்பு, வரலாறு பற்றி ஒரு விவாதம் தேவை!" என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதில் "தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியின் தேக்கமும் பெரியார் இயக்கத்தின், அம்பேத்கரிய இயக்கத்தின் தேக்கமும் ஒரு சில அமைப்புகளின் பிரச்சனை அல்ல. இந்த அமைப்புகளின் தத்துவ, அரசியல் அமைப்பு, வரலாறு இவைகளிலுள்ள சிக்கல். எனவே அது தமிழகத்தின் சிக்கலாகும்.'" என்று அரசியல் காரணங்கள்தான் எனத் தொட்டிருக்கிறார். அப்படியான அரசியல் காரணங்கள் எவையென இதிலும் சொல்லவில்லை.

தொடர்ச்சியாக விவாதம் எப்படியிருக்க வேண்டும் என்பதை "எனவே த.நா.மா.லெ.க.வின் மீது ஆய்வைத் தொடங்கியுள்ள தோழர்கள் சில தனி மனித விருப்பு, வெறுப்புகளிலிருந்து சிக்கலை அணுகத் தொடங்க வேண்டாம். த.நா.மா.லெ.க.வின் தேக்கத்தின் மீது எனக்கும் பல கேள்விகள் உள்ளது. அதே வேலை த.நா.மா.லெ.க. முன்வைத்துள்ள மார்க்சிய, லெனினிய, மாவோயியக் கோட்பாட்டைப் பற்றி நின்று பெரியார், அம்பேத்கர் ஆற்றிய மாபெரும் வரலாற்றுப் பணியை வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கி முன்வைத்துள்ள சரியான அரசியல் பாதையைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். த.நா.மா.லெ.க.வை விமர்சனம் செய்வது சரியானது. அதே நேரத்தில் த.நா.மா.லெ.க.வின் அரசியல் பாதையைப் பற்றி தெளிவான விமர்சனத்தை முன் வைத்து விவாதிப்பது தமிழக அரசியல் சூழலில் சரியானதாக இருக்கும்." என்று அறிவுறுத்தியுள்ளார்.

தோழரின் அறிவுறுத்தல் எனக்கும்தான் என்பதை உணர்த்த கீழ்காணும் குறிப்பாக கொடுத்துள்ளார்.

"குறிப்பு:

திருப்பூர் குணா இந்தியப் பொது உடமை இயக்கம் பற்றிய வரலாற்று அறிவோ, தமிழ்ச் சமூக சிக்கல்களைப் புரட்சிகர முறையில் தீர்த்து மனிதகுல விடுதலையை நோக்கி முன்னேற வேண்டும் என்ற மார்க்சியப் பற்று உறுதியோ அற்ற அல்லரசிய போக்கினராக செயல்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தோழமையோடு வேண்டுகிறேன்."

தோழர்களே! த.நா.மா.லெ.க-வின் செயல்முடக்கத்திற்கு 'அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத்தான் ஆயுதப் போராட்டம் உருவாகும்' என்கிற அரசியல் நிலைப்பாடு அடிப்படையானது என்ற எனது விமர்சனத்தை தோழர் கி.வே.பொ தனிமனித விருப்பு, வெறுப்பாகவே பார்க்கிறார். அத்தோடு த.நா.மா.லெ.க முன்வைத்துள்ள சரியான அரசியல் பாதையை, வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

சுவராசியமான ஒரு விசயத்தை தோழர் கி.வே.பொ நாசுக்காக வெளிப்படுத்துகிறார். அதை முதலில் தெளிவுப்படுத்தினால்தானே உங்களுக்கு வசதியாக இருக்கும். அதாவது த.நா.மா.லெ.க.வின் மூலத்தோற்றம் என்பது T.N.O.C (தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி) ஆகும். இந்தியப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட T.N.O.C 1980-இல் உருவாகுவதற்கு அடிப்படை காரணம் "இந்தியப் புரட்சிகர இயக்கமானது சிதறுண்டும், மக்களிடமிருந்து தனிமைப்பட்டும் கிடக்கிறது; இந்தியப் புரட்சிகர இயக்கங்களின் 'ஆயுதப் போராட்டம் என்னும் இடதுத் தீவிரவாதமும், அரசியல் போராட்டத்தையும்- ஆயுதப் போராட்டத்தையும் ஒரே நேரத்தில் அக்கம் பக்கமாக நடத்த வேண்டுமென்ற இடது சந்தர்ப்பவாதமும்தான்' கட்சியை சிதறடித்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விட்டது; சிதறுண்ட கட்சியை ஒன்றுப்படுத்தவும், தனிமைப்பட்ட கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் புரட்சிகர மக்கள் பாதை அவசியமாகும்; புரட்சிகர மக்கள் பாதை என்பது 'அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத்தான் ஆயுதப் போராட்டம் உருவாகும்' என்கிற அரசியல் நிலைப்பாடேயாகும்; இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர மக்கள் பாதையை முன்வைத்தப் பெருமை தோழர் கார்முகிலையே சாரும்" என்பதே T.N.O.C மற்றும் த.நா.மா.லெ.க.வின் பெருமிதமாகும்.

கட்சியின் முன்னேறிய வரலாற்றைப் பற்றிக் கொள்ளுங்கள் என்றும், முன்னேறிய வரலாறு என்பது தோழர் கார்முகிலின் வரலாற்றுப் பாத்திரமேயாகும் என்றும் த.நா.மா.லெ.க-வில் வலியுறுத்தப்படுவதில் இது முக்கியமானதாகும்.

தோழர்களே! த.நா.மா.லெ.க-வினர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிலைப்பாடென்றுக் கருதும் 'அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத்தான் ஆயுதப் போராட்டம் உருவாகும்' என்பதைத்தான் நாங்கள் குட்டிமுதலாளித்துவ சீர்த்திருத்த(ல்)வாதமென்றும், சட்டவாதமென்றும் கூறுகிறோம். த.நா.மா.லெ.க-வினரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிலைப்பாட்டை விமர்சிப்பதென்பது இயல்பாகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர மக்கள் பாதையை முன்வைத்த பெருமைக்குரிய தோழர் கார்முகில் மீதானதாகவும் இருக்கிறது.

இதைத்தான் தோழர் கி.வே.பொ உட்பட த.நா.மா.லெ.க-வினர் அனைவரும் நம்மை தனிமனித விமர்சனம் செய்ய வேண்டாம் என்கின்றனர். ஒன்றோடொன்றாக பின்னிக் கிடக்கிற இதை நாங்கள் ஏன் பிரிக்க வேண்டும்?

புரட்சிகர அரசியல் போராட்டமும்- அரசியல் போராட்டத்தின் நீட்சிதான் ஆயுதப் போராட்டம் என்னும் சீர்த்திருத்த(ல்)வாதமும்

புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது முன்னணியாளர்களிடமும், மக்களிடமும் இரண்டு வகையில் நடைமுறைப்படுத்துகிற ஒரே நோக்கமுடையதாகும். முன்னணியாளர்கள் மாற்று வர்க்க அரசியலிலிருந்து விடுவிக்கப்பட்டு புரட்சிகர அரசியலால் மக்களை அமைப்பாக்குகிற புரட்சிகர நடைமுறையில் ஈடுபடுத்துவது புரட்சிகர அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கின்ற புரட்சிகர நடைமுறையால் அமைப்பாவதும், அரசியல் புரிதலடைவதும் என்பது புரட்சிகர அரசியல் போராட்டத்தின் மற்றொரு பகுதியாகும்.

சாதிய வன்கொடுமையால் துன்பத்துக்குள்ளாகிற மக்களுக்கு சாதிய வன்கொடுமையைத் தடுப்பதும், வன்கொடுமை செய்கிறவர்களைத் தண்டிப்பதுமான புரட்சிகர நடைமுறைகள்தான் அம்மக்களுக்கு புரட்சிகர அரசியலின் கீழ் அமைப்பாகிற தேவையைக் கொண்டு வருகிறது. அப்படித்தான் தஞ்சை மற்றும் கிழக்கு, தெற்கு மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது.

நில உடைமையாளர்களால் கூலி, ஏழை உழவர்கள் கொடுமைக்குள்ளாக்கப் படும்போது முறையான கூலியையும், தன்மானத்தையும் பெற்றுத் தருவது, தேவைப்பட்டால் அறுவடையைக் கைபற்றுவது என்கிற புரட்சிகர நடைமுறைகள்தான் அம்மக்களுக்கு புரட்சிகர அரசியலின் கீழ் அமைப்பாகிறத் தேவையைக் கொண்டு வருகிறது. அப்படித்தான் சிலிக்குரியின் நக்சல்பாரி மக்களானாலும், தெலுங்கானா மக்களானாலும், தஞ்சை மற்றும் சுற்று வட்டார மக்களானாலும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள்.

தொழிலாளர்களின் கூலி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிர்வாகத்தோடு போராடுவது, கருங்காலிகளைத் தண்டிப்பது, காவல்துறை மற்றும் கூலிப்படைகளின் தாக்குதல்களை முறியடிப்பது போன்ற புரட்சிகர நடைமுறைகள்தான் தொழிலாளர்களைப் புரட்சிகர அரசியலின் கீழ் அமைப்பாகிறத் தேவையைக் கொண்டு வருகிறது. அப்படித்தான் நெசவாளர்கள், பஞ்சாலைத் தொழிலாளர்கள் உட்பட கணக்கில்லாத் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அணி திரண்டார்கள்.

இப்படி புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது புரட்சிகர நடைமுறையைக் கொண்டதாகவே உள்ளது. இப்புரட்சிகர நடைமுறையில் ஆயுதங்களும் (அது எதுவாகவும் இருக்கக் கூடும்) கையாளப்படும். ஆனால் தோழர் கார்முகிலின் 'அரசியல் போராட்டத்தின் நீட்சிதான் ஆயுதப் போராட்டம்' என்னும் நிலைப்பாடு என்பது மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கவும், பாதுகாப்பளிக்கவும் கூட எந்த வித ஆயுதங்களையும் எடுக்க விடாமல் தடுத்து விட்டது. புரட்சிகர நடைமுறையைக் கைகழுவியக் கட்சியை மக்களும் கைகழுவினர். தனிமைப்பட்டக் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகக் கூறியவர் மீண்டும் கட்சியை மக்களிடமிருந்துப் பிரிக்கவே செய்தார்.

இதைத்தான் நாங்கள் 'அரசியல் போராட்டத்தின் நீட்சிதான் ஆயுதப் போராட்டம்' என்பது புரட்சிகர மக்கள் பாதையல்ல குட்டிமுதலாளிய சீர்த்திருத்தப் பாதையென்கிறோம்.

1980களில் நடந்த ஆயுதப் போராட்டங்களும்- தோழர் கார்முகிலின் அரசியல் போராட்ட முடிவும்

இந்தியப் புரட்சிக்கு மக்களைத் திரட்டுவதற்கு ஆயுதப் போராட்டம் என்பது தடியும், தவறுமாகும் எனத் தோழர் கார்முகில் கூறியபோது, இந்தியாவில் பஞ்சாபிலும், வடகிழக்கு மாகாணங்களிலும், கஷ்மீரத்திலும், தெலுங்கானாவிலும் மக்களின் பங்களிப்போடு ஆயுதப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. இவை பற்றி எந்த விளக்கமும், விவாதமும் இல்லாமல் இந்தியாவுக்கே அரசியல் போராட்டம்தான் சரியென வைத்தார்.

இது என்ன வகையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு?

இப்போது தோழர் கி.வே.பொன்னையனிடமும் த.நா.மா.லெ.க தோழர்களிடமும் சில கேள்விகள் கேட்கிறோம்-

1. புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது புரட்சிகர நடைமுறையோடு இணைந்ததா? இல்லையா?

2. புரட்சிகர நடைமுறைக்கு ஏதேனும் வகை ஆயுதங்கள் அவசியமா? இல்லையா?

3. புரட்சிகர நடைமுறை இல்லாமல் மக்கள் புரட்சிகர அரசியலின் கீழ் அமைப்பாக வேண்டிய அவசியம் உள்ளதா?

4. நீங்கள் குட்டிமுதலாளிய வர்க்கப் பின்புலத்திலிருந்து வந்தவாறே ஆயினும் உங்களை பாட்டாளிவர்க்க பிரதிநிதியாக்க அமைப்பு என்ன மாதிரியானப் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது?

5. நீங்கள் அஞ்சி நடுங்கிப் பின்வாங்கியப் புரட்சிகரப் போராட்டங்கள் எவை?

6. நீங்கள் குட்டிமுதலாளியக் கண்ணோட்டத்தில் பின்வாங்கிய போது தோழர் கார்முகிலோ மற்றவர்களோ தலைமை தாங்கியப் போராட்டங்கள் எவை?

7. தோழர் கார்முகில் 'அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத்தான் ஆயுதப் போராட்டம் உருவாகும்' என்ற நிலைப்பாட்டை முன்வைத்தது இந்தியா முழுமைக்குமா? இல்லையா?

8. தோழர் கார்முகில் 'அரசியல் போராட்டத்தின் நீட்சியாகத்தான் ஆயுதப் போராட்டம் உருவாகும்' என்ற நிலைப்பாட்டை முன்வைத்த போது இந்தியாவில் பஞ்சாபிலும், வடகிழக்கு மாகாணங்களிலும், கஷ்மீரத்திலும், தெலுங்கானாவிலும் மக்களின் பங்களிப்போடு ஆயுதப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தனவா? இல்லையா?

9. தோழர் கார்முகிலின் நிலைப்பாடு பஞ்சாபிற்கும், வடகிழக்கு மாகாணங்களுக்கும், கஷ்மீரத்திற்கும், தெலுங்கானாவிற்கும் சேர்த்தா? இல்லையா?

10. தோழர் கார்முகிலின் நிலைப்பாடு புரட்சிகர மக்கள் திரள் பாதையா? குட்டிமுதலாளிய சீர்த்திருத்தப் பாதையா?

- திருப்பூர் குணா

Pin It