இருபது ஆண்டுகால கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் களம் தற்போது சோர்வடைந்து வருகிறது. 1988ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் கடந்த சில மாதங்களாக புயலாக உருவெடுத்து தற்போது கரையைக் கடந்து சென்று விடுமோ என்ற அச்சம், என்னைப் போன்ற கூடங்குளம் போராட்டத்தை நேசிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு உருவாகி இருக்கிறது.

koodankulam agitation 602

அப்படி அது கரையைக் கடந்து தொய்வடையுமானால் அதன் முழு பொறுப்பும் உதயகுமாருக்கோ அல்லது இடிந்தகரை மக்களுக்கோ அல்லது அணு உலை எதிப்பு போராட்டக் குழுவினருக்கோ மட்டுமானதல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அணு உலையினால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து சிறு குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதைப் போன்று போராட்டக் குழுவினர் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்திய பின்பும், இஸ்ராயீல் மக்கள் இறைத்தூதர் மோசேயிடம் குதர்க்கமாக கேள்வி கேட்டதைப் போன்று கேட்டு தன்னை மேம்பட்டவர்களாகக் காட்ட நினைக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள், கேவலம் அரசியலுக்காக தமிழர்களின் உயிரை பலிகேட்கும் அரசியல்வாதிகள், ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தமிழக பொது மக்கள் அனைவரும் மிதப்பில் இருப்பது இந்திய ஒருமைப்பாடு என்ற கருத்தியலை நகைப்புக்கு உள்ளாக்குவதைப் போன்றுதான் உள்ளது.

தற்போது இந்த நீண்ட நாள் போராட்டத்தை வீரியம் இழக்கச் செய்ய மத்திய, மாநில அரசுகள் செய்த சூழ்ச்சிகள் வெற்றியடைந்து கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் காரணம்தான். செப்டம்பர் 13ல் கூடங்குளத்தில் நடத்த துப்பாகிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் கொந்தளித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் உயிரோடு விளையாடும் பிரச்சினையை மீனவர்களின் பிரச்சினை என்றும், கத்தோலிக்க கிறித்தவர்களின் பிரச்சினை என்றும் இருட்டடிப்பு செய்ததில் எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஒன்றாக கைகோர்த்தது, தமிழகத்தின் அல்லது இந்தியாவின் மிகவும் தரம் தாழ்ந்த அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் அரசியல் பாதை வெற்றி தராது என்று தெரிந்த பின்பும் அதை தேர்ந்தெடுத்ததற்கு முதுகில் குத்திய அதிமுக அரசும், போராட்டக் குழுவினருடன் இருந்த தமிழக அரசியல் பேச்சு புலிகள் சிலர் எதிர் முகாமில் சென்று கேவலமான அடைக்கலம் தேடியதும் கூட ஒரு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். முக்கிய காரணமாக மீண்டும் தமிழ்ச் சமூகத்தைதான் குற்றம் சுமத்துவேன். தென்னக தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலில் பல்வேறு ஆபத்துகளை விளைவிக்கும் இந்த அணு என்ற சாத்தானை விரட்ட ஒன்றாக கைகோர்த்திருக்க வேண்டிய தமிழ்ச் சமூகம், இடிந்தகரை மக்களை இந்திய அரசிடம் அடகு வைத்து விட்டு வேடிக்கை பார்ப்பது எவ்வளவு கொடூரமான அரசியலாக‌ உள்ளது.

வைகோ போன்ற பச்சை அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களின் பிணங்களை வைத்து இதுவரை அரசியல் நடத்தி வந்தனர். தற்போது அரசியல் நடத்த இன்னும் அதிகமான பிணங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு இடிந்தகரை மக்களின் பிணங்களை காவு வாங்க நினைக்கிறார்கள். இதே போன்ற பச்சோந்திகளை இன்னும் போராட்டக் குழுவினர் நம்பி கொண்டிருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. சமீபத்தில் குமரி தொகுதியில் பிரச்சாரத்தில் இருந்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமாரை சந்தித்து இது குறித்து கேட்டபோது 'அவர்கள் மீண்டும் எங்களோடு வந்து சேருவார்கள்' என்று அவர் கூறியது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த போராட்டக் குழுவினருடன் மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உட்பட சிறுபான்மையின, தலித்திய, தமிழ்த் தேசிய அமைப்புகள் மட்டுமே கைகோர்த்துள்ள சூழ்நிலையில் தேசிய அளவில் அவர்களுக்கு ஆம் ஆத்மி போன்ற கட்சியின் ஆதரவு தேவைப்படுவது கட்டாயமாக உள்ளது. என்றாலும் போராட்டக் குழுவைச் சார்ந்த தமிழ்த் தேசிய ஆர்வலரான முகிலன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் போராட்டக் குழுவினரை சிதறடிப்பதற்காக அரசே சில எதிர்ப்பு குழுக்களை ஊக்கப்படுத்தி வருகிறது. ஆண்டன் கோமஸ், டி.எஸ்.எஸ். மணி போன்றோர் போராட்ட குழுவினருக்கு எதிரான போட்டி போராட்டக் குழுக்களை கட்டமைத்து வருவது எவ்வளவு பெரிய ஆபத்து? ஆண்டன் கோமஸ் வெளிப்படையாகவே அதிமுகவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். காஷ்மீர் உட்பட அனைத்துப் போராட்டங்களும் வெற்றியடையாமல் போனதற்கு காரணம் போட்டி போராட்டக் குழுக்கள்தான். முகிலன் போன்றோர் இதன் ஆபத்தை உணர்ந்ததால்தான், ஆம் ஆத்மியை உதயகுமார் தேர்ந்தெடுத்ததில் கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் முரண்பட்டு பிரிந்து போகாமல் இன்னும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சிக்கலான தருணத்தில் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஒன்றிணைய வேண்டும். இல்லாவிட்டால் அணு உலை கதிர் வீச்சால் மடியும் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தமிழ்க் குழந்தைகளின் மரணத்திற்கும் அனைத்து தமிழ்ச் சமூகத்தையும் சர்வதேச சமுதாயம் காறி உமிழும்.

- ஷாகுல் ஹமீது, உதவி ஆசிரியர், தினமுரசு & குமரி முரசு நாளிதழ் (கைப்பேசி 9585209518, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It