கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள், கிறிஸ்துமஸ் கொண்டாடியபோதே, பா.ஜ.க.வின் தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது. கடந்த 13ஆம் தேதி மாலை, சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு மோடி சென்று, ‘தேநீர்’ அருந்தியபோது, அவர்களின் மலினமான தேர்தல் பரப்புரை உத்திகள், அவற்றின் உயரத்தைத் தொட்டன.

modi rajini 480

‘தலைவர் எவ்வழி, தானும் அவ்வழி’ என்று, மறுநாள் வைகோவும், நடிகர் ரஜினிகாந்தை அவர் இல்லம் சென்று சந்தித்துள்ளார். இப்போது காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன், தானும் அவரை விரைவில் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ‘மதுரை சந்திப்புகள்’ முடிந்து இப்போது ‘சென்னை சந்திப்புகள்’ தொடங்கியுள்ளன போலும்!

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, பா.ஜ.க. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கிவரும் என்பதைத்தான் மோடி & ரஜினி சந்திப்பு எடுத்துக்காட்டுகின்றது.

‘ரஜினிகாந்த் மோடிக்கு ஆதரவு’ என்று அந்தச் சந்திப்பை ஊடகங்கள் ‘மொழிபெயர்க்கின்றன’. ரஜினி நேரில் சென்று மோடியைச் சந்தித்திருந்தால் அப்படி எழுதுவது சரி. ஆனால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடிதானே ரஜினியைச் சென்று சந்தித்துள்ளார். கேட்டால், தேநீர் அருந்தப் போனார் என்கின்றனர். பாவம், அன்று சென்னையில் எல்லாத் தேநீர்க் கடைகளையும் மூடிவிட்டார்கள் போலிருக்கிறது!

இன்னொன்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டியுள்ளது. சென்னையில் ஏதோ ஒரு தேர்தல் கூட்டத்திற்கு வந்தவர், அப்படியே தன் ‘பால்ய காலச் சினேகிதர்’ ரஜினியையும் சந்தித்தார் என்றால்கூட, அது இயல்பானதுதான்! ஆனால், உண்மை வேறு மாதிரியாக உள்ளது.

“கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி, மோடி சென்னை வந்துவிட்டதால், அவரது பிரச்சாரத் திட்டத்தில் சென்னை இடம்பெறவில்லை. ரஜினியைச் சந்திப்பது உறுதியானதும், திடீரெனப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்” என்கிறது, தினமணிக் (15.04.2014) கட்டுரை.

ஆக மொத்தம், கூட்டத்திற்கு வந்த வழியில் மோடி, ரஜினியைச் சந்திக்கவில்லை. ரஜினி, தன்னைச் சந்திக்கக் கொடுத்த நேரத்தில் அதற்காகச் சென்னைக்கு வந்த மோடி, ஒரு கூட்டத்திலும் பேசிவிட்டுப் சென்றிருக்கிறார் என்பது தெளிவாகின்றது. எனவே, ரஜினியைச் சந்திப்பதுதான் முதன்மையானது. கூட்டம் பேசுவதும், மக்களைச் சந்திப்பதும் இரண்டாமிடத்தில்தான் உள்ளன. இதுதான் ‘பிரதமர் வேட்பாளரின் உயரம்’ என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும்.

பிறகு, மீனம்பாக்கம் பொதுக்கூட்டததில், மோடி பேசி முடித்ததும், மோடி குறித்து ரஜினி பேசியதை, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மேடையிலேயே படித்துக் காட்டியுள்ளார். தனிப்பட்ட சந்திப்பு, தேனீர் குடிப்பது மட்டும்தான் நோக்கம் என்றால், அங்கு நடந்தவைகளைப் பொதுக்கூட்டத்தில் கூற வேண்டிய தேவை என்ன?

நாடக அரசியல் & மலிவான நாடக அரசியல்தான் & அரங்கேறியுள்ளது என்பதை இப்போது நம்மால் தெளிவாக உணர முடிகிறது.

‘மோடி அலை’ வீசுகின்றது என்றால், இத்தனை மலிவான உத்திகளைப் பா.ஜ.க. ஏன் கையாள வேண்டும்? நடிகர் கார்த்திக்கை நம்பி, நூற்றாண்டுப் பெருமை கொண்ட காங்கிரஸ் களத்தில் நிற்பதைப் போல, நடிகர் ரஜினிகாந்தை நம்பித்தான் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது என்பது வெளிப்படை.

‘மோடி, நிர்வாகத் திறமை மிக்கவர்’ என்று ரஜினி சான்றிதழ் கொடுத்துவிட்டாராம். அதனை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்று பா.ஜ.க. நம்புகின்றது. இன்னும் யார் யாரிடம் சான்றிதழ் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்களோ தெரியாது. ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றாலும், மோடியின் மூகமூடிகள் ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டிருப்பதை இனி அவர்களால் தடுக்க முடியாது.

முதலில் முகமூடி பற்றியே பேசலாம். நான் பிரதமரானால், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பேன். அருணாசலப் பிரதேசத்தின் முழுப் பகுதியையும் மீட்பேன் என்று பேசி வருகின்றார் மோடி. அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு வருவோர் அணிந்து கொள்வதற்காக, மோடியின் முகத்தைக் காட்டும் லட்சக்கணக்கான முகமூடிகளை பா.ஜ.க.வினர் வாங்கியுள்ளனர். சீனாவை எதிர்க்கப்போவதாகக் கூறும் அவர்கள், அத்தனை முகமூடிகளையும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்துள்ளனர் என்னும் உண்மையை எப்படிச் சொல்லிச் சிரிப்பது?

குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மோடிதான் காரணம் என்கின்றனர். ஏதோ குஜராத், பீகாரைப் போலப் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்ததைப் போலவும், மோடி முதலமைச்சராகித்தான் அதனை உயர்த்தினார் என்பது போலவும் கூறுவது எவ்வளவு பெரிய பொய்! இந்தியாவின் பொருளாதாரத்தையே, குஜராத் சேட்டுகளும், ராஜஸ்தான் மார்வாரிகளும்தாமே தங்கள் கைகளில் வைத்துள்ளனர். இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மாநிலங்களைப்போல, மேற்கு மாநிலங்கள் பின்தங்கியவை அல்ல. பிறகு எப்படி, அந்த மாநிலத்தின் வளத்தை மோடி கூட்டினார் என்று கூற முடியும்?

சரியாக ஆய்வு செய்தால், மோடியின் ஆட்சிக் காலத்தில், குஜராத்தின் வளர்ச்சி விகிதம் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது என்பதுதான் உண்மை.

1981 & 85 காலகட்டத்தில், மாதவ்சிங் சோலங்கி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அம்மாநிலத்தின் வளர்ச்சி 16.29 சதவீதத்தை எட்டியது. பிறகு, 1990களில் சிமன்பாய் படேல், சிபல்தாஸ் மேத்தா ஆகியோர் அங்கு முதலமைச்சர்களாக இருந்தபோது, 16.73 சதவீதம் வளர்ச்சியைக் குஜராத் கண்டது. 2002இல் மோடி முதல்வரானார். இன்று அங்கு பொருளாதார வளர்ச்சி, 9.35 சதவீதமாக உள்ளது. இது எப்படி ஒரு மாநிலத்தின் வளர்ச்சியாகும் என்பதைப் பொருளாதார மேதைகள்தாம் கூற வேண்டும்.

அடுத்ததாக, ஊழலை ஒழிப்போம் என்று அவர்கள் நாடு முழுவதும் பேசி வருகின்றனர். நம் அருகில் உள்ள கர்நாடகாவை எடுத்துக் கொள்ளலாம். பா.ஜ.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா ஏன் பதவி விலக நேர்ந்தது? ரெட்டி சகோதரர்களுடன் சேர்ந்து, பெல்லாரிப் பகுதியில் கனிம வளங்களைச் சுரண்டினார் என்னும் ஊழல் வழக்கிலேதான் அவர் சிறை சென்றார். அவரைக் கட்சியிலிருந்தே விலக்கி விட்டோம், இப்போது கட்சி ‘பரிசுத்தம்’ ஆகிவிட்டது என்று பறைசாற்றிய பா.ஜ.க.வினர், ஏன் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தனர்? ஊழல் வழக்குகள் முடிந்து விட்டனவா? அவர் நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டதா?

பெல்லாரி ஊழல் வழக்கில் சிக்கிய ஸ்ரீராமுலுவைத்தான், இன்று பா.ஜ.க. பெல்லாரித் தொகுதியில் வேட்பாளராகவே நிறுத்தியுள்ளது. இதுதான் பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு லட்சணம்.

இப்படி எத்தனையோ குறைகள். ஆனால் எல்லாவற்றையும் மறைத்தபடி, மோடி & ரஜினி சந்திப்பை ஏடுகள் சில பாராட்டித் தள்ளுகின்றன. இதே காட்சியைச் சற்று மாற்றிச் சிந்திக்கலாம். தலைவர் கலைஞர், ரஜினி வீட்டிற்குச் சென்று ‘தேநீர் குடிக்கத்தான் வந்தேன்’ என்று கூறியிருந்தால், எத்தனை ஏடுகள் எள்ளி நகையாடி இருக்கும்! “கருணாநிதிக்குத் தோல்வி பயம் & ரஜினியைப் பார்த்துக் கெஞ்சல்” என்று தலைப்புச் செய்தி அன்றோ வெளியாகி இருக்கும். ஆளுக்கொரு நீதி என்பதுதான் இன்றைய ‘பத்திரிகா தர்ம’மாக உள்ளது.

‘மோடிதான் சிறந்த நிர்வாகி’ என்கின்றனர். ‘பா.ஜ.க.தான் நாட்டைச் சிறப்பாக ஆளும்’ என்கின்றனர். நாட்டை ஆள்வது இருக்கட்டும், வேட்பு மனுவை ஒழுங்காக நிரப்பக்கூட அவர்கள் கற்கவில்லையே! சிதம்பரம் தொகுதியில் ஒன்றும், நீலகிரித் தொகுதியில் இரண்டுமாக, அந்தக் கூட்டணியைச் சேர்ந்த மூன்று வேட்புமனுக்கள் தள்ளுபடி ஆகியுள்ளனவே... இந்தக் கூத்தை என்னவென்று சொல்வது?

இதற்காக வெட்கப்பட வேண்டியவர்களோ, வேறு விளக்கங்களைக் கூறுகின்றனர். பா.ஜ.க. கூட்டணியின் ‘பிதாமகர்’ தமிழருவி மணியன், “நீலகிரித் தொகுதியில், பா.ஜ.க. கூட்டணி வாக்காளர்கள் அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்” என்கிறார்.

அப்படியானால் இது திட்டமிட்டே நடைபெற்ற சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது. போகட்டும், பா.ஜ.க. அணியில் உள்ள தே.மு.தி.க மற்றும் பா.ம.க. உறுப்பினர்கள் அ.தி.மு.க.விற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுவரைத் தன் பக்கம் ஜெயலலிதா இழுத்துக் கொண்டாரே, அதற்காகவா?

தே.மு.தி.க.வையும், அதன் தலைவர் விஜயகாந்தையும் அரசியல் அரங்கை விட்டு ஒழிப்பேன் என்று ஜெ. அறைகூவல் விடுத்தாரே, அதற்காகவா?

எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், விஜயகாந்தைப் பலமுறை இழிவாகப் பேசினாரே, அதற்காகவா?

மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பலரைச் சிறையில் தள்ளினாரே, அதற்காகவா?

 எதற்காக என்பதை நண்பர் மணியன்தான் கூற வேண்டும்.

அ.தி.மு.க. மட்டுமில்லை, பா.ஜ.க.வும் விஜயகாந்தை அவமானப்படுத்திக் கொண்டுதானே உள்ளது. ஊர் ஊராகச் சென்று, மோடியைப் பிரதமர் ஆக்குங்கள் என்று வாக்குக் கேட்கிறார் விஜயகாந்த். ஆனால் சென்னை வரும் மோடியோ, ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்றல்லவா தேநீர் குடிக்கிறார்.

அந்தத் தேநீரை விஜயகாந்த் வீட்டிலோ, மருத்துவர் வீட்டிலோ குடித்திருக்கக் கூடாதா? அல்லது அவர்கள் ஒரு மாலையில் ஒரு குவளைத் தேநீரைக் கொடுக்கமாட்டோம் என்றா கூறிவிடுவார்கள்?

ரஜினிகாந்த் வீட்டிற்குப் போய் மோடி குடித்த தேநீருக்கு, எதிர்காலத்தில் பா.ஜ.க. கொடுக்க வேண்டிய விலை மிகக் கூடுதலாக இருக்கப் போகிறது!

- சுப.வீரபாண்டியன் (subavee11@gmail.com)

Pin It