சமீபத்தில் குஜராத் மாநகர நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. மறுபடியும் இந்தியாவில் நீதி செத்து விட்டது எனலாம். அந்த அளவுக்கு பாரபட்சம்! அந்த அளவுக்கு நீதியைக் கொல்லும் ஒரு மனசாட்சி! இப்படியொரு உலகத்தில் வாழ வேண்டுமா என்று (ஜக்கியா ஜாப்ரி நினைக்கலாம்) நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், படிக்கும் போதும், பார்க்கும் போதும் நமக்கே அந்த சிந்தனைகள் வரும்போது, தன் கணவரை இழந்து 12 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும் ஜக்கியா ஜாப்ரிக்கு அந்த சிந்தனைகள் வராமல் இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.

2002 பிப்ரவரி மாதம் நடைபெற்ற குஜராத் இனப்படுகொலையில் 3,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கலவரத்தில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் எந்த வேறுபாடுமின்றி கொல்லப்பட்டார்கள் முஸ்லிம்கள்; கூட்டமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்கள்; பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டார்கள். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் மாநில நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கலவரத்தை கிஞ்சிற்றும் கண்டு கொள்ளவில்லை. கலவரக்காரர்களுக்கு கண்டு கண்டு உதவி செய்தார்கள் என்பது தான் உண்மை.

இதில் குல்பர்க் சொஸைட்டியில் வைத்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஹ்ஸான் ஜாப்ரி உட்பட 69 பேர் அநியாயமாக எரித்துக் கொல்லப்பட்டனர். இதில், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உட்பட பல அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்தும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கலவரக்காரர்கள் ஆயுதங்களுடன் விரட்டி வரும் போது, பாதுகாப்புத் தேடி 68 பேர் இஹ்ஸான் ஜாப்ரியின் வீட்டை நோக்கி பாதுகாப்புக்காக ஓடி வருகின்றனர். வீட்டில் தஞ்சமடைந்தவர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு அதிகாரிகளை நோக்கி போன் செய்கிறார் இஹ்ஸான் ஜாப்ரி. யாரும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. காவல்துறைக்கு போன் செய்து பார்க்கிறார்.

காவல்துறையின் கன்ட்ரோல் ரூம் செயல் இழந்து விட்டது என்பதை உணர்ந்த இஹ்ஸான் ஜாப்ரி வீட்டில் மக்களுடன் என்ன செய்வது என்று தெரியாமல் கைசேதப்பட்டு நிற்கிறார். இத்தனைக்கும் கமிஷனர் அலுவலகம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. ஆனால், யாரும் பாதுகாப்புக்காக வரவில்லை.

சிறிது நேரத்தில் கலவரக்காரர்கள் வீட்டை வந்தடைகின்றனர். கலவரக்காரர்களுடன் இஹ்ஸான் ஜாப்ரி எவ்வளவோ முறையிடுகிறார். இந்த மக்களின் விலை என்னுடைய சொத்து, வீடு, பணம் அனைத்தையும் தருகிறேன். இவர்களை விட்டு விடுங்கள் என்கிறார். சிறிதும் கருணை இல்லாத அவர்கள் இஹ்ஸான் ஜாப்ரியை கண்ட துண்டமாக வெட்டிக் கொலை செய்கின்றனர். அங்கிருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரையும் எரித்துக் கொலை செய்கின்றனர்.

கணவனை இழந்த ஜாக்கியா ஜாப்ரியின் போராட்டம் என்பது வெறும் சாதாரண போராட்டம் அல்ல. இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள சங்பரிவார்களை எதிர்த்து நடக்கும் போராட்டம். குஜராத் முழுவதும் தங்களுடைய அதிகார பலத்தைக் கொண்டு ஆட்டுவிக்கும் நரேந்திர மோடியின் அதிகார பலத்திற்கு எதிரான போராட்டம்.

இதன் ஒரு பகுதியாக மோடியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று அகமதாபாத் மாநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாக்கியா ஜாப்ரி. இந்த வழக்கில் மோடிக்கு தொடர்பில்லை என்று தீர்ப்பளித்துள்ளது அகமதாபாத் மாநகர நீதிமன்றம்.

இந்த தீர்ப்பு நீதியை நம்பும் மக்களுக்கு தலையில் விழுந்த இடியாக கருதப்படுகிறது. ஆனால், 12 வருட காலமாக போராடி வரும் ஜக்கியா ஜாப்ரி சிறிதும் போராடிவதில் பின் வாங்கவில்லை. மேலும், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.

இந்தத் தீர்ப்பை பற்றி திருவாளர் மோடி சுதந்திரம் அடைந்து விட்டதாக உணர்ந்தேன். இந்தத் தீர்ப்கைக் கேட்டு நிம்மதியடைந்÷தன். குஜராத் கலவரம் என்னை மன வேதனையடையச் செய்தது என்று தன்னுடைய வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இது அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளியிட்டன. தற்பொழுது, வெளியிட்டுள்ள இந்த கருத்து மக்கள் மத்தியில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

குஜராத் கலவரம் நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இது நாள் வரை கலவரம் தொடர்பாக எந்தவித பொறுப்பும் ஏற்று ஒரு அறிக்கை கூட விட்டது கிடையாது நரேந்திர மோடி. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய சொந்த இடங்களில் தங்குவதற்கு பயந்து அகதிகள் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

அவருடைய இந்த கண்துடைப்பு அறிக்கைகள் வெறும் ஏமாற்று வேலை என்பதை மக்கள் அறிவார்கள். அதேப்போன்று, குஜராத் கலவரம் தொடர்பாக இவர் இதற்கு முன்பு விட்ட பேட்டிகளும், அறிக்கைகளும் மக்கள் முன் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலோர் மஹாராஷ்ட்ரா எல்லையில் உள்ள அகதிகள் முகாம்களில் கூட்டம் கூட்டமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு போதிய உதவிகள் இல்லாமல், அரசுகள் கண்டு கொள்ளப்படாமல் கைவிடப்பட்டவர்களாக இருந்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

ஒரு நாள் அகமதாபாத் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த நரேந்திர மோடியிடம், வெளியில் காத்திருந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் கேட்டார்: உங்களுடைய சொந்த நாட்டு மக்கள் மஹாராஷ்ட்ரா எல்லையில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளார்களே. மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்களே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, மோடி எந்தவித சலசலப்புமின்றி அந்த பத்திரிகையாளர்களிடம் கேட்டார்.

யார் சொன்னது அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று. அவர்கள் அங்கு சந்தோஷமாக இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று பொறுப்பில்லாமல் ஒரு பதிலை அளித்தார் மோடி.

இந்த பதில் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களால் மறு கேள்வியை கேட்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், குஜராத்தில் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நாய்க்குட்டிகள் என்று விமர்ச்சிப்பதில் மோடி கிஞ்சிற்றும் கவலைப்பட்டது கிடையாது. இப்பொழுது, நீதிக்கண்ணீர் வடிக்கிறார் நரேந்திர மோடி.

அதுமட்டுல்லாமல், குஜராத் கலவரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள், ஊடகங்களுக்கு ஒரு பொறுப்பான பதில் அளிக்க முடியாத ஒரு கையாளாகத முதல்வர் தான் மோடி என்பதை ஒட்டுமொத்த இந்திய மக்களும் புரிந்து வைத்துள்ளார்கள்.

இப்படி, முஸ்லிம்களின் மேல் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து, அவர்களை மேலும் மேலும் மன வேதனைக்கு தள்ளி, எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றினார் மோடி. குஜராத் கலவரத்தின் போது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அரசு துறைகளுக்கும் தெளிவாக கட்டளையிட்டிருந்தார்.

“கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்ட கரசேவகர்களின் உயிர்களுக்காக, இந்துக்கள் பலிவாங்க தயாராகி விட்டார்கள். அவர்களை யாரும் தடுக்க வேண்டாம். அவர்கள் விருப்பப்படியே விட்டு விடுங்கள். அவர்களுடைய தாகத்தை தணித்துக் கொள்ளட்டும்” என்று உத்தரவிடுகிறார். அதன் வெளிப்பாடு தான் குஜராத் கலவரம். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டது.

இந்த வழக்கில் மோடி உட்பட 61 அதிகாரிகள் மீது தொடர்பிருப்பதாக ஜக்கியா ஜாப்ரி அவர்கள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அகமதாபாத் மாநகர நீதிமன்றம் கிஞ்சிற்றும் நீதிக்கு கருணை காட்டாமல், அநீதிக்கு துணை நின்று தீர்ப்பை வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த வழக்கில் மனுதாரியான ஜக்கியா ஜாப்ரியின் மனுவை அகமதாபாத் மாநகர நீதிமன்றம் டிசம்பர் 26ம் தேதி நிராகரித்தது. நீதிபதி சரியாக 11 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தார். பயங்கர எதிர்பார்ப்பு காத்திருந்தது. நீதிமன்ற வளாகம் முழுவதிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர். நேரம் சென்று கொண்டே இருந்தது. ஆனால், நீதிபதி வழக்கின் பைலில் கையெழுத்திடவில்லை. சரியாக 2 மணிக்கு நீதிபதி கூறினார், 3 மணிக்கு வழக்கு வரும் என்று. இறுதியாக 4.15 மணிக்கு வழக்கு வந்தது. அப்பொழுது வழக்கறிஞர் தீர்ப்பின் காப்பியை கேட்டார். நீதிபதி வழக்கின் மனுவில் கையெழுத்திட்டுவிட்டு கூறியதாவது, நீங்கள் தாராளமாக மேல் நீதிமன்றத்தில் முறையிடலாம்.

அங்கிருந்தவர்களுக்கு என்னவென்றே புரியவில்லை. அதன் பிறகு தான் அதனுடைய அர்த்தம் புரிந்தது. நீதிபதி மனுவை நிராகரித்து விட்டார். இந்தத் தீர்ப்பு ஜாக்கியா ஜாப்ரி மற்றும் மகன் தன்வீர் ஜாப்ரிக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது.

தீர்ப்பைக் கேட்ட ஜாக்கியா ஜாப்ரி கண்ணீர் விட்டு அழுதார். நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “தீர்ப்பைக் கேட்டு மன வேதனை அடைந்தேன். தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்” என்றார் நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் பொழுது மாநகர நீதிமன்றம் பெரும்பான்மைக்கு ஆதரவான மனநிலையை விரும்புவதாக எடுத்துக்காட்டியது.

உயர்நீதிமன்றமும அந்த மனநிலையில் இருக்காது என்று நம்புகிறோம். தீர்ப்பு குஜராத் மொழியில் இருந்தது. ஜாக்கியா ஜாப்ரியின் சட்டக் குழு டெல்லியில் இருந்தது. பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனுப்பப்பட்டது.

ஜாக்கியா ஜாப்ரி மனுவில் 2002 கலவரம் நடக்கும்போது, நரேந்திர மோடி அலட்சியமாக இருந்தது மற்றும் கலவரத்திற்கு உடந்தையாக இருந்தது என்றும் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியதே மோடி தான் என்றும் வழக்கு தொடர்ந்தார். அதனால், அவரை விசாரிக்க வேண்டும் என்றார்.

 மேலும், 3,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலவரங்கள் மூலம் எரித்துக் கொல்லப்பட்டதில் மோடியின் பெரிய சதி இருக்கிறது என்று ஜாக்கியா ஜாப்ரியின் வழக்கறிஞர் வாதிட்டார். பாதிக்கப்பட்டதில் அனைவரும் முஸ்லிம்கள் ஆகும். இதில், குல்பர்க் சொஸைட்டியில் வாழ்ந்த நடுத்தர மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்தனர். குல்பர்க் சொஸைட்டியில் 68 பேரையும் தீ வைத்து எரித்தனர்.

நீதிபதி பி.ஜே. கான்ட்ரா கூறுகையில், மோடி மற்றும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என 59 பேர் மீது வழக்கு தொடர போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறினார். மேலும், கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்டு செய்யப்பட்டது என்பதையும் நிராகரித்தார். மேலும், நீதிபதி கலவரம் நடைபெறும் போது, அமைதியை ஏற்படுத்துவதற்காக ராணுவத்தை வரவழைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மோடி செய்தார் என்றார்.

 மோடிக்கு ஆதரவான சிறப்பு புலனாய்வுக் குழு 2012ல் தாக்கல் செய்த இறுதி அறிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும் இந்த அறிக்கையை கூர்ந்து பார்த்தால் மோடிக்கு எதிரான எந்தவித ஆதாரமும் இல்லை என்றது. சதி, உடந்தை, வெறுப்பை தூண்டியது, கடமை தவறுதல் போன்ற மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஆர்.பி. குமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோர்களின் சாட்சியம் நம்பகத் தன்மை இல்லை என்பதை காரணம் காட்டி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இப்படி மோடியின் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அகமதாபாத் மாநகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது, வெறும் குஜராத் கலவரத்தை மட்டும் நியாயப்படுத்தவில்லை. மாறாக, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்த கலவரங்கள், இனப்படுகொலைகள் என அனைத்தையும் நியாயப்படுத்துவதாக கருதலாம்.

ஒட்டுமொத்த உலக அரங்கிலும் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வுகளான பாபரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் குஜராத் 2002 கலவரம் ஆகும். இந்த நிகழ்வுகள் சிறுபான்மை சமூகமாக கருதப்படும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடியாகும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு விஷயத்தில் 21 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் தொடர்ந்து நீதிமன்றத்தையும், ஆளும் அரசுகளையும் நம்பி வெறுத்து போய்விட்டனர். இருந்தாலும், போராட்டத்தை கைவிடவில்லை. நீதிமன்றத்தையே நாடினர்.

அதேப்போன்று தான், 2002 குஜராத் கலவரம். 3,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்ட நிகழ்வு.

இன்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய சொந்த இடத்திற்கு செல்வதற்கு பயந்து வருகின்றனர். இதற்கெதிராக போராடி வரும் ஜக்கியா ஜாப்ரி மற்றும் மனித உரிமைப் போராளி டீஸ்டா செடல்வால்ட் போன்றவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனாலும், 12 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டு வருகின்றது. அகமதாபாத் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மறுபடியும் நீதியை கொன்று விட்டது எனலாம்.

இந்த இரு நிகழ்வுகளுக்கு காரணமான சங்பரிவார்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கு அதிகார பலம் இருக்கின்றது. அதனால், அவர்களால் நீதியை விலைக்கு வாங்க முடிகின்றது. அதனால், நீதியை விட, அநீதியின் கால்கள் வெற்றி பெறுகின்றனர். இது நீண்டகாலம் தொடராது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். வரலாறுகளும் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன. நீதிக்கான போராட்டத்தில் தோல்வி என்பது தற்காலிகமானது தான். அது நிரந்தரமானதல்ல.

நிச்சயமாக ஒரு நாள் வரும். அப்பொழுது நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியாது. இதையும் வரலாறுகள் தான் பதிவு செய்கின்றன. “உலக மக்களையும், சீன மக்களையும் நீங்கள் ஏமாற்றி விட முடியாது. ஏனென்றால், உலக நீதிமன்றத்தில், மக்கள் நீதிமன்றத்தில் நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். அப்பொழுது குற்றவாளிகள் யார் என்று கேட்பார்கள். அப்போது, நாங்கள் குற்றவாளிகள் அல்ல; நீங்கள் தான் குற்றவாளிகள் என்று உலக மக்கள் சொல்வார்கள்.

 சீனாவின் புரட்சியாளர் மாவோவின் மனைவி

அதேப்போன்று தான் ஒருநாள் வரும். உலக மக்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் யார் என்று கேட்கப்படும். அப்பொழுது குற்றவாளிகளாக நீங்கள் இருப்பீர்கள். முஸ்லிம்களும், தலித்துகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் நீதிபதிகளாக இருப்பார்கள். அந்த நீதிமன்றத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என்பது தான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

- நெல்லை சலீம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It