வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. மழை இல்லாமல் ஒரு பக்கம், வெள்ளத்தால் பலஆயிரக்கணக்கான விளைநிலங்கள் அழிந்து வருவது மற்றொரு பக்கம். இப்படி மாறி மாறி விவசாயிகளின் நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இது போதாது என்று மத்திய அரசின் கீழ் இயங்கும் கெயில் என்ற நிறுவனம் எரிவாயுக் குழாய்களை கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஏழு (7) மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக 817 கிலோமீட்டர் தூரம் எரிவாயுக் குழாய்கள் கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தில் 5 அடி ஆழத்தில் எரிவாயுக் குழாய்கள் புதைக்கப்படுகின்றன. ஆனால் விவசாய நிலங்களில் மேல் இருந்து 1.5 (ஒன்றரை) அடி ஆழத்தில் தான் எரிவாயுக் குழாய்கள் உள்ளன. இப்படி இருக்கும் போது உழுது, விதைப்பது கூட பெரும் பிரச்சனையாக இருக்கும். எனவே இத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல போராட்டங்களையும் நடத்தினர். இதனையடுத்து தமிழக அரசு விவசாயிகளை அழைத்து கருத்து கேட்கும் கூட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தியது. இதன் பின்னர் விவசாயிகளின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த தமிழக அரசு, கடந்த ஏப்ரல் மாதம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

அதில் விவசாயத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி எரிவாயு குழாய்களைப் பதிக்க வேண்டும் என்றும், விளைநிலங்களில் இதுவரை பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கெயில் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “கெயில் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக மீண்டும் எரிவாயுக் குழாய்கள் கொண்டு செல்லலாம்”என்ற அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இத்தீர்ப்பு தொடர்பாக பலரும் பல கருத்துகளை வெளியிட்டனர். இத்திட்டத்தை ஆதரித்துப் பேசுபவர்கள், “இத்திட்டத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டது உண்மைதான். சில விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். உதாரணமாக, மேட்டுர் அணை கட்டும்போது சில விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இது போலதான் இத்திட்டமும், எனவே பலரின் பலனை கருத்தில் கொண்டு சில விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பொறுத்துக் கொள்ள வேண்டும், இதனால் தமிழகத்தில் குறைந்த செலவில் எரிவாயு கிடைக்கும், மின் உற்பத்தி அதிகரிக்கும், இதன் மூலம் மின்வெட்டு குறையும்” என்ற பொய்யான கருத்தை வைக்கின்றனர்.

இங்கு ஒரு விசயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், மேட்டூர் அணை கட்டும்போது சில கிராமங்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அங்கு நிலங்களை அரசு எடுத்துக் கொண்டதும், அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதும் இரு தரப்புக்கும் இடையிலான ஒரு முறை நடந்த ஒப்பந்தம் தான். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பும் ஒருமுறைதான். அதன் பின்பு அங்கு எந்த தொடர்ச்சியும் இல்லை.

ஆனால் இத்திட்டம் அதுபோன்றதில்லை. எந்த விவசாயியின் நிலத்தின் வழியாக எரிவாயுக் குழாய் கொண்டு செல்லப்பட்டுள்ளதோ அவர்தான் அதன் பின்னர் அந்தக் குழாயில் ஏற்படும் எந்த பாதிப்பிற்கும் பொறுப்பு என்று சட்டம் சொல்கிறது. இதனால் விவசாயிகள் அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கமுடியாது. காலாகாலத்துக்கும் அந்த இடத்தில் மரம் நடவோ, கட்டிடம் கட்டவோ முடியாது. அந்தக் குழாயில் வேறு யாரேனும் பாதிப்பு ஏற்படுத்தினால் கூட அதற்கும் அந்த விவசாயிதான் பொறுப்பேற்றாக வேண்டும்.

இதனால் தான் விவசாயிகள் எரிவாயுக் குழாய்களை தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி பதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர். விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை கொண்டு செல்லும் போது தமிழகத்தில் குறைந்த செலவில் எரிவாயு கிடைக்கும், மின் உற்பத்தி அதிகரிக்கும், இதன் மூலம் மின்வெட்டு குறையும் என்று சொல்பவர்களிடம், எரிவாயுக் குழாய்களை தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டிப் பதித்தால் இவையெல்லாம் கிடைக்காதா? என்ற கேள்வியை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதற்கு கெயில் நிறுவனத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

வேறுவழியே இல்லைஎன்ற நிலை இல்லை. சரியான மாற்றுவழி உள்ள நிலையில் ஏன் விவசாயத்தை அழிக்க முனைகிறது இந்திய அரசின் கெயில் நிறுவனம்?

விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காத அரசு, மக்கள் தங்கள் உயிராக நினைக்கும் விளைநிலங்களை அழிக்க நினைக்கும் அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்?

- சோ.அன்சாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It