கடந்த நவம்பர் 4.11.2013 இந்து நாளிதழில் வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின், ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுவது சம்பந்தமான’ கட்டுரை மிகப்பெரிய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவைகளில் ஓரிரு விவாதங்கள் தவிர அத்தனையும் வெற்று விவாதங்களே. முதலில் இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் குறித்து விரிவாகவும் விசாலமாகவும் பார்க்கலாம்.

1. ஆங்கிலக் கல்வி மோகத்தால் தமிழ்மொழி, இரண்டாவது மொழியாக, முக்கியமற்றதாக, கவனமற்றதாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்களைக் கற்றுக்கொள்ள இருமடங்கு உழைப்பு தேவைப்படுகிறது. ஆகவே அவர்களுக்கு முக்கியமான, முதல்நிலை மொழியான ஆங்கில எழுத்துருவிலேயே தமிழை எழுதலாம். இதனால் குழந்தைகளின் சிரமமும் குறையும். தமிழ் மொழி மீது கவனமும் குவியும். குழந்தைகள் Amma Ingkee Vaa Vaa என்று எழுதும்போது, வெறும் மொழியறிவுக்காக மட்டுமே கற்கும் இரண்டாம் மொழியான தமிழை இன்னும் வேகமாக ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும், வாசிக்கவும் உதவும்.

2. இப்போதுள்ள சூழலே நீடித்தால், தமிழ்மொழி ஒரு வகைப்பேச்சு வழக்காக மட்டுமே சுருங்கிவிடும். அதில் இலக்கியமும் அறிவுத்துறைகளும் நிகழாமல் போகும்.

3. மலாய் போன்ற பலமொழிகள் இன்று ஆங்கில எழுத்துகளிலேயே எழுதப்படுகின்றன. இதனால் அந்த மொழிகள் மேலும் வளப்படுகின்றன. இந்திய மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்பட்டால் எளிதில் அனைவரும் வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான்.

ஜெயமோகனின் மேற்சொன்ன கூற்றுக்கள் இணையத்தில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின.

ஒவ்வொரு காலகட்டத்திலும், இதுபோன்ற தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றிய கருத்துக்கள், வா.செ.குழந்தைசாமி போன்ற பல மொழியியல் வல்லுனர்களால் விவாதங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அப்போதெல்லாம் தற்போதைய பரபரப்பு போல சர்ச்சைகளாகவில்லை. இந்த பரபரப்புக்குப் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியலையும், தென்னக மொழிகளை ஒரே எழுத்துருவின்கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற பத்மவியூகத்தையும் நுட்பமாக இனங்காண வேண்டும்.

வா.செ.குழந்தைசாமி போன்றவர்கள் இந்துத்துவக் கருத்துக்களை முன்வைத்துப் பேசாமல், மொழியியல் ரீதியாக முன்வைத்தார்கள். அது பரபரப்பாகவில்லை. தென்னக மொழிகளை ஒரே கருத்துருவின் கீழ் ஒருங்கிணைக்கலாம் என ஜெயமோகன் முன்வைத்திருப்பது, தங்களது பிரத்யேகமான கலாச்சாரங்களை முன்வைத்த அடையாளமாக விளங்கும் பன்முகத்தன்மை கொண்ட பிராந்திய எழுத்துக்களை ஒழித்துக்கட்டும் ‘அகண்ட பாரத’ ஏகாதிபத்தியப் பார்வை.

ஜெயமோகன் எதை எழுதினாலும் அதை இந்துத்துவப் பார்வை என்றே கூறுவது சரிதானா என்று அலுத்துக்கொள்கிற ‘நேர்மையான நடுநிலைவாதிகளுக்கு’ இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கம் தரலாம்.

தற்போதைய அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் ‘எழுத்துரு மாற்றம்’ பற்றிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், கணினிகளில், கைப்பேசிகளில், இணையதளங்களில் தமிழில் எழுதிப் பேசும்முறை சரளமாக வந்துவிட்டது. மேலும் எளிமைப்படுத்த வந்து கொண்டிருக்கிறது. மொழிமாற்றங்கள், யுனிகோடு முறைகள், தட்டச்சு முறைகள், தமிழுக்கான எழுத்துரு மாற்றங்கள் என்று பல்கிப்பெருகிக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில் தமிழ்மொழி ஏன் ஆங்கில எழுத்துருவுக்கு மாறவேண்டும்?.

தமிழில் படிப்பதால் வேலையில்லை என்பது போன்ற ஒரு மேற்கத்தியப் பார்வையைத் தொடர்ந்து இங்கே கட்டமைத்துக் கொண்டேயிருப்பது உலகமயமாக்கலின் ஒருவகை அரசியல், துரதிர்ஷ்டவசமாக வேறு வழியில்லாமல் அந்தப் பார்வையை நிஜமாக்கும் பொருட்டு, சூழலும் அதற்கேற்பத் தகவமைத்துக் கொண்டேயிருக்கிறது. தமிழில் படிக்கும் ஒருவருக்கு எவ்வாறு வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது என்ற ஒரு பார்வையை முன்வைக்காமல் ‘செருப்புக்கேற்ப காலை வெட்ட வேண்டும்’ என்று தரிசனம் கொடுப்பது எந்த ரீதியில்?

குழந்தைப் பருவம் என்பது பல்வேறு விஷயங்களை மிக மிகச் சாதாரணமாகக் கற்றுக் கொள்ளும் திறன் மிக்க காலம் என்று மானுட ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், அப்படியிருக்க இருமொழிக்கூறுகளைக் கற்பது சிரமமானது என்கிறார் ஜெயமோகன். இதற்கு மிஷேல்ஃபூக்கோவையும் சேர்த்து ஆதரவுக்கு இழுக்கிறார்.

இந்த இடத்தில் நுட்பமாகக் கவனியுங்கள்: ‘எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக் கூத்தாட்டப் பயிற்சி’ என்று ஃபூக்கோ சொல்கிற மேற்கோளை எடுத்து உதாரணம் தருகிறார். அது எந்த இடத்தில், என்ன பொருத்தப்பாட்டில் சொல்லப்பட்டது என்கிற விஷயம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில், ஃபூக்கோ சொல்கிற மேற்கோளுக்கும் ஜெயமோகனின் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? ஒரு மண்ணும் இல்லை.

எழுத்துரு மாற்றத்திற்கு, புகழ்பெற்ற மேலைச்சிந்தனையாளரான ஃபூக்கோகூட கருத்துத் தெரிவித்திருக்கிறார் என்பது போன்ற ஒரு மேலோட்டமான நம்பகத்தன்மையைக் கட்டமைக்கும் போலித்தனம் இது.

இவருக்கு உண்மையிலேயே மொழியியல் சிக்கல்கள், முரண்பாடுகள் பற்றித் தெரிந்திருந்தால், மொழியியல் அடிப்படைகளை முன்வைத்து உருவாகிய 20ஆம் நூற்றாண்டின் பிரதான சிந்தனைகளான பின் அமைப்பியல் சிந்தனைகளை முன்வைத்துப் பேசியிருக்கலாம்.

‘மொழி எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதோ அவ்வாறுதான் குழந்தைகள் மனமும் கட்டமைக்கப்படும்’ என்று சொன்ன லக்கானின் கோட்பாட்டை முன்வைத்துப் பேசவேண்டும். பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவுகள், மொழிக்கும் சிந்தனைக்குமுள்ள உறவுகள் பற்றிப் பேசிய தெரிதாவையும், ஃபூக்கோவையும் முன்வைக்க வேண்டும். பெர்டிணான் டி சசூரின் மரபான மொழியியல் கோட்பாடுகளிலிருந்து நோம்சாம்ஸ்கியின் நவீன மொழியியல் மாற்றிலக்கணக் கோட்பாடுகள்வரை (சுருக்கமாகவாவது) முன்வைத்திருக்க வேண்டும்.

அல்லது, இந்த மேலைச்சிந்தனைகள் எதையுமே பேசாமல் ஒழுங்காக தமிழ் எழுத்துருவைப்பற்றிய கருத்துக்களை மாத்திரமே பேசியிருக்கலாம். சும்மா பேர் சொல்லி மிரட்டும் பாச்சாவெல்லாம் இனி பலிக்காது. மேலும் இவர் இது போன்ற மேலைச் சிந்தனைகளைக் கற்றுணர்ந்தவராக இல்லை என்பதை அவரது மேலோட்டமான பார்வையின் தொனி காட்டிக்கொடுத்துவிடுகிறது, அவரது எல்லாக் கட்டுரைகளிலும்.

மலாய் போன்ற மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுகின்றன என்கிறார். அது வரலாற்றுரீதியாக அரேபிய மொழியிலான ஜாவி எழுத்துருவில் கையாளப்பட்டு, 17ஆம் நூற்றாண்டில் டச்சு மற்றும் ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் விளைவாக ஆங்கில எழுத்துருக்களாக மாறியது. மேலும், அதனுடைய மொழி அடையாளம் என்பது முற்றிலும் வேறானது. ‘‘அவர்கள் தங்களுடைய அடையாளமாக மொழியைக் காட்டிலும் மதத்தையே முன்வைக்கின்றனர்’’ என்கிறார் அ.மார்க்ஸ். அதேபோல பிலிப்பினோ மக்களின் பாரம்பரியம் வாய்ந்த தகலாக் (Tagolog) மொழி ரோமன் அகரமுதலியின் எழுத்துருவுக்கு மாறியதில் அதன் ஆன்மாவும் தேடலும் அழிந்து போயிற்று.

முதலில் ஒரு மொழியைப்பற்றிப் பேசுமுன், அந்த மொழியினுடைய ஆன்மாவைப்பற்றி உணர்ந்திருக்க வேண்டும். தமிழின் முதன்மையான படைப்பாளி என்று தனக்குத்தானே மார்க் போட்டுக்கொள்ளும் இவர், மொழியினுடைய ஆன்மாவைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

பழைய ஜெர்மானியக் குடும்பமான இந்தோ ஆர்ய மொழிக் குடும்பத்திலிருந்து தோன்றிய சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளின் அடையாளங்கள், பண்பாடுகள், ஆன்மாக்கள் வேறு.

திராவிட மொழிக்குடும்பத்திலிருந்து தோன்றிய தமிழ்மொழியின் அடையாளங்கள் வேறு.

மொழியின் ஆன்மாபற்றியும், நுண்ணுணர்வுகள் பற்றியும் கவனம் கொள்ளவேண்டும். எழுத்துரு மாற்றத்தின் வாயிலாக மொழியின் ஆன்மாவை அழித்து தனது காலனிய மொழியாக மாற்றும் உபாயங்கள்தான் இன்றைய பின் காலனியத்தின் நவீன வடிவங்கள்.

கலைச்சொற்கள், வேர்ச்சொற்கள், அருஞ்சொற்பொருள் போன்ற பதங்களை எங்கனம் ஆங்கில எழுத்துருவில் இனங்காண்பது? உதாரணமாக ‘கள்’ என்னும் மதுவை ரிகிலி என்று எழுதினால் என்ன வகையான சித்திரம் தோன்றும்? ஆனால், ‘கள்’ என்று எழுதினால் திருட்டு என்னும் பொருள்படுகிறது. அதாவது கள்ளைக் குடிப்பதனால் அது அவனது உணர்வையும், அறிவையும் திருடிக் கொள்கிறது என்று பொருள் தருகிறார் தமிழ்க்கலைச் சொற்கள் உருவாக்கிய பா.வே. மாணிக்கநாயக்கர்.

மேலைய கலாச்சாரங்களிலிருந்து அறிமுகமாகும் ஒரு சில பெயர்ச்சொற்களை தமிழில் மாற்றும்போது அதை அப்படியே பிரதி எடுக்காமல் அதன் வேர்ச்சொற்களைத் தேடிப் போகவேண்டும். சமீபத்தில் பொன்வாசுதேவன், ‘யு டியூப்’ என்பதற்கு ‘நீ குழாய்’ என்று தமிழ்ப்-படுத்தியிருந்தார். இதைத்தவிர்த்து அதன் வேர்களுக்குப் போயிருக்கலாம். சலனக் காட்சிகளை காட்சிப் படுத்தும் Picture Tube என்பதன் அர்த்தத்தில் சுருக்கமாக ‘யு டியூப்’ என்கிறார்கள். .அதை தமிழில் ‘உங்கள் காட்சி’ என்று அர்த்தப்படுத்தலாம். அல்லது ஒரு சில தொழில்நுட்பச் சொற்களை அப்படியே மூலப்பெயரில் அழைப்பது போலவே விட்டு விடலாம்.

‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் இதுபோன்ற புதிய தமிழ்ச் சொற்களை அழகாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஆட்டோ ரிக்ஷாவுக்கு மிக அழகான அர்த்தம் தந்தது பாராட்டப்பட வேண்டியது. ஜப்பானிய மூலத்திலிருந்து வரும் இந்தச் சொல் ‘ஜின் ரிக்கிஷா’ என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு பின்னர் ரிக்ஷாவாக மருவியுள்ளது. ஜின்-மனிதன், ரிக்கி-திறன், ஷா-வண்டி= மனிதத்திறனால் இழுக்கும் வண்டி என்ற அர்த்தம் பொதிந்தது இந்தச் சொல் இதைத்தான் நமது தமிழ்ப் பெருந்தகைகள் ‘தானி’ என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள்! (அதாவது Auto!!).

மொழியின் பயன்பாடு, அச்சு ஊடகங்களின் வழி எழுத்து வடிவமாக மாறும்போது ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சில மாற்றங்களை எதிர் கொள்கிறது. முந்தைய மெய்யெழுத்துக்கள் மேலே புள்ளி வைக்கப்படாமல், வாக்கியத்திற்கேற்ப நாம் யூகித்துப் படிப்பது போல அமைந்திருந்தன. (அனனம -அன்னம்) 17 ஆம் நூற்றாண்டில் வந்த இத்தாலிய தமிழறிஞரான வீரமாமுனிவர் மெய்யெழுத்துக்களின் மீது புள்ளி வைத்து எழுத்துருவைச் சீரமைத்தார். அதேபோல ஒகர ஒலிக்கொம்பை (ª), மேலே சுழி போட்டு ஓகார ஒலிக் கொம்பாக (« ) மாற்றினார். மேலும் நெடிலுக்கான துணை எழுத்தை உருவாக்கினார் (£).

அதன்பிறகு அச்சகங்களில் அச்சிடுவதற்கு எழுத்துக்களைக் கையால் எடுத்துக் கோர்க்கும் காலகட்டத்தில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக சுழித்த நிலை கொண்ட லை,னை வகை எழுத்துக்களுக்கு. இந்தவகை எழுத்துக்களை உடைத்து, ஐங்காரப் பகுதியினை (¬) இணைத்து அதை மேலும் எளிதாக்கினார் பெரியார். இவைகளெல்லாம் மிகச் சிறப்பான எழுத்து மாற்றங்கள்.

ஆனால், தற்போதைய கணினி மயமாக்கச் சூழலில் தமிழ் எழுத்துரு முழுமையாக அழிந்து கொண்டிருக்கிறது. கைபேசி மற்றும் இணையத் தில் செயல்படும் பல்வேறுபட்ட வலைத் தளங்களில் கலந்துறவாட தமிழ் மொழியை ஆங்கில எழுத்துருவில் அடித்துத் தூள் பரத்திக் கொண்டிருக்கிறது இளைய தலைமுறை.

இதற்கு முந்தைய மாறுதல்களைப் போல இவை ஏற்றுக் கொள்ளக் கூடியவைதானா? இதனால் பாரம்பரியம் மிக்க தமிழ் மொழியின் கூறுகளுக்கு ஏதும் பங்கம் வந்து சேருமா? தொல் காப்பியம், நன்னூல் மரபில் வரும் இலக்கண மரபை இந்த ஆங்கில எழுத்துருவில் எப்படிக் கொண்டு வருவது? இந்தப் போக்கை எப்படித் திசை மாற்றுவது? இதற்கு மாற்றாக தமிழ் மொழியை எப்படி அதன் ஆன்மா சிதையாமல் புத்துயிர்ப்பாய் கட்டமைப்பது?

என்றெல்லாம் பல்வேறு பார்வைகளில், ஒரு தீவிரத் தமிழ்ப் படைப்பாளியின் மனோநிலையில் கேள்விகள் எழுப்பியிருக்கலாம் ஜெயமோகன். ஆனால் முடிந்த முடிவாக தமிழ்மொழியை ஆங்கில எழுத்துருவில் எழுதுவதுதான் சிறந்தது என்றும், அப்போதுதான் அந்த மொழியைக் காப்பாற்ற முடியுமென்றும் தீர்க்க தரிசனத்தோடு திருவாய் அருளியிருப்பது அவரது படைப்பு மொழிக்குச் செய்யும் பச்சைத் துரோகம்.

அல்லது, எவ்வாறு இந்தச் செயல்பாடுகள் சிறந்தவை என்றோ, இப்படிச் செய்தால் எந்த ரீதியில் மொழி அழியாமல் வளம் பெறும் என்றோ விரிவாகத் தனது பக்க வாதத்தை முன் வைத்திருக்கலாம். ஆனால் பக்கவாதம் வந்த நபர் போல ஒரு பக்க வாதமாகவே பேசுவதுதான் அவருடைய தன்மை, இயல்பு.

இந்த இடத்தில் ‘கிழக்குப் பதிப்பகம்’ உருவாக்கியுள்ள Nhm Writer, Nhm Converter ஆகிய இரு மென் பொருள்களைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. தமிழ் தமிழ் என்று வெற்றுக் கூச்சலிடும் தமிழ்ப் பெருந்தகைகள் செய்யாததை இந்நிறுவனம் செய்துள்ளது. இது உருவாக்கியுள்ள Nhm Converter தமிழுக்கு மிக முக்கியமான கொடை என்றே சொல்ல வேண்டும்.

கணினியில் செயல்படும் தமிழ் எழுத்துக்களை பல்வேறு குழுமங்கள் தங்களது மென் பொருளில், உருக்களாக (Font) வடிவமைத்திருக்கிறார்கள். அதை வணிக நோக்கில் சந்தைப் படுத்துகிறார்கள். ஒரு குழுமத்தின் உருவை வைத்துள்ள கணினியில், வேறு ஒரு குழுமத்தின் உரு செயல்படாத வண்ணம் தந்திரமாக உருவாக்குகிறார்கள். இது வணிக அரசியல். இந்தச் சிக்கல்களை எளிதில் நீக்கியது Nhm Converter பல்வேறு குழுமங்களின் உருக்களையும், நமக்குத் தேவையான எழுத்துரு வடிவத்தில் மாற்றிக் கொள்ள முடியும். கூடவே இணையத்தில் செயல்படும் யுனிகோடு எழுத்துருவுக்கும் மாற்றிக் கொள்ள முடியும்.

இப்போது, கணினித் தொழில்நுட்பத்தில் தமிழ் எழுத்துக்கள் அச்சடிக்கும் முறையை விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ் எழுத்துக்கள் அச்சடிக்கும் முறை தட்டச்சு இயந்திரத்திலிருந்து கணினிக்கு மாற்றலானது. அதாவது விசைப் பலகையில் உள்ள ASDFG என்கிற ஆங்கில எழுத்துக்களை அடித்தால் யளனகப என்ற தமிழ் எழுத்துரு கிடைக்கும். இது நமக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான டைப்ரைட்டர் முறை.

இந்தத் தமிழ் தட்டச்சு முறைகள் பல்வேறு வடிவங்களில் உள் நுழைந்தன. Tamil99 என்ற முறையில், மேற்சொன்ன ASDFG எழுத்து வடிவங்களைத் தட்டினால் அ இ உ . எ என்கிற எழுத்துருக்கள் வரும்.

Phonetic முறையில் இந்த இரண்டு முறைகளிலும் சேராத வேறு எழுத்துக்கள் வரும்.

இப்படிப் பல்வேறு விதமான தட்டச்சு முறைகள் இருக்கின்றன. ஆனால் இந்த முறைகளில் (Phonetic முறை தவிர்த்து) விசைப்பலகையில் உள்ள ஆங்கில எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களாகப் பாவித்து அச்சடிப்பது போலத்தான் வடிவமைக்கப் பட்டிருக்கும். அதாவது ஆங்கில எழுத்துக்கள் ஒரு கோர்வையாக இல்லாமல் கலைந்து கிடப்பதால், அவை நமது மனதில் தமிழ்வரி வடிவமாகவே வடிவம் கொள்கின்றன. உதாரணமாக, ‘அம்மா’ என்று அடிப்பதற்கு டைப்ரைட்டர் முறையில் MKK.H என்று அடிக்க வேண்டும்.

அதேபோல Tamil99 முறையில் வேறுவிதமாக ஆங்கில எழுத்துக்களை அடிக்க வேண்டும். இப்படி அடிக்கும்போது கோர்வையாக உருவம் இல்லாத ஆங்கில எழுத்துக்கள் பற்றிய உணர்வின்றி, தமிழ் எழுத்துக்களின் உணர்வு பாவத்துடன் எழுதலாம்.

ஆனால், Phonetic முறையில் ‘அம்மா’ என்று அடிப்பதற்கு AMMA என்றுதான் அடிக்க வேண்டும். இந்த அச்சடிப்பானது, தொடர்ந்த செயல்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் என்கிற எழுத்துரு மங்கி ஆங்கில வரி வடிவமே மனதுக்குள் உளவியல் ரீதியாகக் கட்டமையும். தமிழ்மொழியில் சிந்தித்து அதை ஆங்கிலமொழி எழுத்துருவில் அச்சடிக்கும்போது மெல்லமெல்ல நமது சிந்தனையும் ஆங்கிலமொழியின் வரிவடிவத்திற்கு மாறிப் போகிறது.

Visible ஆக தமிழ் எழுத்துக்கள் வந்தாலும் Invisible ஆக ஆங்கில எழுத்துருவே கட்டமைகிறது.

இந்த அச்சடிப்பு மென்பொருள்களில் எல்லாவிதமான முறைகளையும் உட்கொண்டு தயாரிக்கிறார்கள். அதில் அதிகப்பயனாளர்களால் பின்பற்றப்படுவது இந்த Phonetic முறை என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இது ஒரு அபாயமானபோக்கு என்பதையும் நாம் உணரவேண்டும். டைப்ரைட்டர் முறையிலோ, Tamil99 முறையிலோ அல்லது வேறு முறைகளிலோ தமிழ் எழுத்துருவை வடிவமைப்பதே சாலச்சிறந்தது.

தொல்காப்பியம், தொ.பொ.மீ, கால்டுவெல், நன்னூல்மரபு என்றெல்லாம் மொழியியல் சிறப்புக்கூறுகளை விரிவாக முன்வைத்து ஜல்லியடிக்கப்படவேண்டிய மரபான சூழல் அல்ல இது. தற்காலத் தொழில் நுட்ப வளர்ச்சியில் மொழியியல் சந்திக்கும் நவீன சிக்கல்கள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. அந்தப் பொருத்தப்பாட்டில் தற்காலத்திய பிரச்னைகளைத்தான் முன்வைத்துப் பேச வேண்டும்.

தற்போதைய நவீன மனித வாழ்வியலில் மொழியின் பங்கு முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. இன, மொழி, மத அடையாளச் சிக்கல்கள் உலகெங்கும் தங்களது உரையாடல் களை முன்வைத்து பிறமொழிக் குடும்பங்களை காலனியமாக மாற்றுவதில் முனைகின்றன. அச்சு ஊடகத்துறை கணினித் தொழில் நுட்பத்தின் Virtual ஆக மாறி சர்வதேச மொழியியல் கூறுகளுடன் கலந்துரையாடும் சூழல் வாய்க்கப் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில் நம் மொழியின் அடையாளத் தையும் காத்துக் கொண்டு சர்வதேச மொழியியல் கூறுகளுடன் கலந்துரையாடவும், சர்வதேச அரங்கில் தனித்துவமாக அமரவும் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன் உள்ள சவால்.

கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்ற பண்டைய ஊடகங்களிலிருந்து வளர்ச்சியடைந்து காகிதத் திற்கு வந்த தமிழ் மொழி மரபு, அடுத்த கட்டத் திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது. தற்போதைய உலகமயமாக்கச் சூழலில் ஒரு மொழியானது ஊடக வளர்ச்சிக்கேற்ப, கைபேசி, கணினி போன்ற மின்னணு ஊடகங்களில் செயல்படும் மொழியாகத் தன்னை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை நேர்ந்திருக்கிறது. ஆனால், உலகமயமாக்கலின் அரசியல், சிறு மொழிகளைப் பெரு மொழிகளுக்குள் கபளீகரம் செய்யும் போக்கை திசைகளெங்கும் ஏவிவிடுகிறது. (சிறு தெய்வங்களை பெரு தெய்வங்களுக்குள் அபகரித்துக் கொண்ட நமது முந்தைய வரலாற்றை ஒரு கணம் நினைவில் வையுங்கள்.)

இதிலிருந்து தப்புவிக்க தமிழ் மொழியை, கணினி உலகத்தில் தனித்துவமிக்க மொழியாக மாற்ற வேண்டும்.

முதலில் கணினியின் செயல்படு அமைப்பைப் பற்றி (Operating System) சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதன் முதலாக கணினியை அறிமுகப்படுத்திய ஐபிஎம், ஆப்பிள் போன்ற குழுமங்கள் வியாபார நோக்கத்துடன் சந்தைப்படுத்தலின் கூறுகளையே முன்வைத்தார்கள். அதிகளவில் பயன் கொண்ட ஆங்கில எழுத்துருவை மையமாக வைத்து இயங்கும் டாஸ், விண்டோஸ், லினக்ஸ் போன்ற செயல்படு அமைப்புகளை கணினியில் நிறுவினார் கள். அதன் விளைவாக மென்பொருள் எழுதும் சி,சி++ போன்ற கணினி மொழிகளும் ஆங்கில எழுத்துருவின் குறியீடுகளைத்தான் நிரலாக வைக்க வேண்டிய சூழல் உருவானது.

விசைப்பலகையில் எந்த எழுத்துருவில் அடித்தாலும் கணினிக்குள் ‘சுழியம்’, ‘ஒன்று’ என்ற இரண்டு எண்களின் அடிப்படையில்தான் பதிவாகும். 0 1 என்கிற இந்த இலக்க (Binary Digit) எண்களை ASCII CODE (American standard code for Information Interchange) என்னும் அட்டவணை (Table), ஆங்கில எழுத்துருக்களாக மாற்றுகிறது.

இந்த 0 1 என்கிற இலக்கங்கள் அதிகமாக அதிகமாக கணினியில் நிறுவியுள்ள உள்ளடுக்குகளின் (BITS) கொள்ளளவு அதிகமாகிறது. 8 BITS, 16 BITS, 32 BITS என்று அவை வளர்ச்சியடைகின்றன.

இதில் குறைந்த எழுத்துக்கள் கொண்ட ஆங்கில எழுத்துருவை செயல்படுத்த அதிகக் கொள்ளளவு தேவையில்லை. ஆனால், தமிழ் மற்றும் சீன, ஜப்பான் மொழிகளை ASCII CODE போன்ற ஒரு அட்டவணையாக மாற்ற அதிகக் கொள்ளளவு தேவைப்படுகிறது. ஏனெனில் இந்த எழுத்துருவின் எண்ணிக்கையும் அதிகம். வடிவமும் அதிக அடுக்குகளை (BITS) வேண்டுகிறது.

அதனால் அவைகளை ஒரு வணிக நோக்குக் கருதி ஆங்கில எழுத்துருவிலேயே வைத்திருக்க சின்னச்சின்ன மாற்றங்கள், சின்னச்சின்ன சலுகைகள் கொடுத்து தனது கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது ஏகாதிபத்திய உலகச்சந்தை. அதையே அரசியல் நலனாக முன்வைத்து அமல்படுத்துகிறது ஏகாதிபத்திய நுண்ணரசியல்.

அவர்கள் ஒதுக்கியுள்ள குறைச்சலான அடுக்குகள் தங்களது ஆயிரக்கணக்கான எழுத்துக்களுக்குப் போதாது என்று சீனாவும் ஜப்பானும் கோபித்துக் கொண்டு, தாங்களே அதற்குரிய மென்பொருளை, செயலிகளை, நிரல்களைத் தயாரிப்பதாகக் களம் இறங்கியது.

சர்வதேசச் சந்தையில் அதிக விற்பனையாகும் வியாபாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா அமெரிக்க ஏகாதிபத்தியம்? உடனே, சீனா, ஜப்பான், கொரியன் மூன்று நாடுகளையும் இணைத்து CJK என்ற கூட்டிணைவை ஏற்படுத்தி மிகப்பெருமளவில் அடுக்குகளை ஏற்படுத்தித் தந்தது.

தென்கிழக்கு ஆசிய மொழிக்குடும்பம் என்ற விதத்தில் சொல்லப்படும் சீனா, ஜப்பான் கொரியன் மூன்று நாடுகளின் எழுத்துருக்களும் சிறு மாற்றங்களுடன் கூடிய சித்திர எழுத்துக்கள். அவைகளை ஒன்றிணைத்தல் என்பது எளிமையும், அதேசமயம் வணிக நோக்கும் கொண்டது.

சமீபத்தில், FTA (China-Japan-South Korea Free Trade Agreement) என்னும் உடன்படிக்கை ஒப்பந்த அமைப்பை உருவாக்கி வணிகரீதியான செயல்பாடுகளில் இறங்கியிருப்பதற்கும் இது ஒரு முன்னோட்டம்.

ஆனால், தமிழுக்கு எந்தவிதமான நெறியாண்மையும் இல்லை.

இப்போது, மறைந்துபோன தந்திக்குறிப்பு முறைகள் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தந்தித் தகவலைப் பரிமாறிக் கொள்ளும் எழுத்துருக் குறியீட்டின் வகையான இந்த மோர்ஸ் தந்திக்குறிப்பு ஆங்கில எழுத்துரு வழியாக உலகெங்கும் அறிமுகமானது. ஆனால் காலமாற்றத்தில் அந்தந்த நாடுகளின் எழுத்துருவுக்கு மாறியது. இந்த முறை சீன எழுத்துக் குறியீடாக சீனத் தந்திக் குறிப்பாக மாற்றம் பெறும் போது இலக்கங்கள் அதிகமாகின்றன என்கிறது MORSE CODE. அதே சீனத் தந்திக்குறிப்புகள் கொரியனுக்கும் பொருந்துகிறது. இந்த மோர்ஸ் சங்கேதக் குறிகளை மாற்றம் செய்து தமிழ் எழுத்துருவில் தந்தியை உருவாக்கிய அ. சிவலிங்கனாரின் வெற்றியையும் இங்கு நினைவு கொள்ள வேண்டும்.

சரி. இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் என்ன?

தமிழ் தமிழ் என்று முழங்கும் தமிழ்ப் பெருந்தகைகள் வெற்று கோஷங்களை நிறுத்திவிட்டு, தமிழ்மொழியை இணையத்தில் அதன் அடையாளத்துடன் சுயமாகச் செயல்படுவதற்கான அடிப்படைகளை நிறைவேற்ற களத்தில் இறங்க வேண்டும்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி என்னும் கைபேசியின் தொடு திரையில் ஒரு ஊர்ப் பெயரை எழுதினால், அது உடனே கூகுள் வரைபடத்திற்குப் போய் அந்த இடத்தைக் காட்சிப் படுத்துகிறது. ஆங்கில எழுத்துருவின் வளர்ச்சி இவ்வளவு அசுர வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இதுபோன்ற கவர்ச்சிகளில் மயங்கிப் போய், நோகாமல் நோன்பு கும்பிட்டுக் கொண்டிருக்கிறது தமிழ். இதுபோன்ற கண்ணிகளிலிருந்து மொழியை மீட்டெடுக்க, மொழியியல் வல்லுனர்கள், கணினி மென்பொருளாளர்களுடன் இணைந்து தமிழுக்கு அனைத்துவிதமான மென்பொருள்களையும் உருவாக்க வேண்டும்.

அதேசமயம் தமிழ் சொற்களஞ்சியங்களும், கலைக்களஞ்சியங்களும் கணினி மயப்படுத்தப்பட வேண்டும். சமயம், இலக்கியம், வரலாறு போன்ற கூறுகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஆ. சிங்காரவேலு முதலியாரின் ‘அபிதான சிந்தாமணி’ நூல் எதிர்வரும் இளையதலைமுறையினருக்கு மிகப்பெரிய பொக்கிஷம் என்று சொல்லலாம். இதுபோன்ற களஞ்சியங்கள் பெரியளவில் நிறுவப்படவேண்டும். நவீன தமிழ்விமர்சகராக 80களில் அறியப்பட்ட வேத சகாய குமார், கணினியில் நிறுவியுள்ள விமர்சனச் சொற்களஞ்சியம் இந்தவகையில் முக்கியமானது. நவீனதமிழ் இலக்கியத்தின் விமரிசனச் சொற்கள், ஆளுமைகள், கோட்பாடுகள், தகவல்கள் என்ற ரீதியில் அது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழில் இயங்கும் ‘விக்கிப்பீடியா’ கூட சமீபகாலமாக புதியவர்களின் பதிவேற்றத்தில் பயனுள்ளதாக மாறிக் கொண்டிருக்கிறது.

இவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழுக்கான மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும். அதேசமயம் தமிழ்மொழி தனித்தீவாக கணினியில் மாறிவிடாமல் உலகமொழிகளுடன் கலந்துறவாடும் தன்மையுடன் வடிவமைக்கப்பட வேண்டும்.

முதன்மையாக, கூகுள் குழுமம் தயாரித்துள்ள மொழியாக்க மென்பொருளான Google Translate இந்தச் சூழலில் தேவையான ஒன்று. ஆனால், அந்த மென்பொருள் இலக்கணப் பார்வையோ நெறிமுறைகளோ இன்றி, மிக மிக மேலோட்டமாக, மொழிபற்றிய புரிதல்களோ, பொருத்தப்பாடுகளோ இன்றி ஒரு இயந்திரத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை சீர்படுத்த வேண்டும். அல்லது இவைகளைக் கணக்கில் கொண்டு மொழியாக்க மென்பொருளை உருவாக்க வேண்டும்.

இப்படியான, கணினியில் தமிழ் மொழி-யியல் பயன்பாடுகளை கவனம்கொண்டு தமிழ்மொழியியலாளர்களும், கணினி மென்பொருள் வல்லுனர்களும் இணைந்து மொழியியல் வளர்ச்சி (Language Planing) க்கான பாதையை வகுக்க வேண்டும்.

அரசும், மக்களும் இணைந்து மொழிக்கொள்கைத் (Language Policy) திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து, ஒரே எழுத்துருவை முன் வைத்து ‘அகண்ட பாரதம்’ காணும் பத்மவியூகத்திற்குள் நுழைந்தால் மீளும் வழிதெரியாமல் அழிந்து போய்விடும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே - என்ற நன்னூல் மரபில் ஒரு எச்சரிக்கையும் மறைந்திருப்பதை நாம் இப்போதாவது உணர வேண்டும்.

- கௌதம சித்தார்த்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It