போராட்டக் குழு செய்ய வேண்டியது - அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்ற கருத்துக் கணிப்பல்ல! மீனவர் சமுதாயத்திற்கும் அரசியல் பிரதிநிதித்துவம் - அதற்கான மீனவர் தனித் தொகுதி என முன்னேறுவதே ஆகும்!

4/12/2013 அன்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு சுப.உதயகுமார் அவர்கள் "இடிந்தகரைப் போராட்டத்தில் இனி என்ன?" என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்து போராட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார்.

"ஆளும் வர்க்கம் சாதாரண‌ மக்களின் குரல்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதை இங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர். அதே நேரத்தில் இந்த அரசுடன் மோதி வெற்றிப்பெறக் கூடிய சூழலும் இங்கு இல்லை... இதற்கு மேல் அரசை எதிர்த்து எங்களால் போராட முடியாது, அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி எங்களுக்கு இல்லை" என்று 16/10/2013 ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறி இருந்தார். இனி செய்வதற்கு என்ன இருக்கிறது? என்ற அந்த விரக்தியின் குரலைவிட இப்போது செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது என கட்டுரையில் கூறி இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது.

 ஆனால் என்ன செய்யலாம் என திரு சுப.உதயகுமார் அவர்கள் முன் வைத்துள்ள விசயங்களும், முடிவு காண்பதற்கான வழிமுறையும் அடிப்படையில் தவறாக உள்ளது.

"முகநூல் நாடாளுமன்றம் என்ற அரசியல் நடவடிக்கையை தொடங்கி இருப்பதாகவும், அதன் மூலம் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர்(!) மொழிகளில் அறிக்கைகள் தயாரித்து இந்திய நாடெங்கும் பிரச்சாரம் செய்யப் போவதாகவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவை அணுசக்தி மயமாக்க வேண்டுமா? என அனைவரையும் கேட்கப் போவதாகவும், பெரும்பாலோர் ஆமாம் (வேண்டும்) என்று பதிலளித்தால் விட்டுவிடலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

 இதன் சாரம் என்பது பரந்த அளவு பிரச்சாரம் செய்து பார்ப்போம் என்பதே ஆகும். இது வரையிலும் கூட பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் மட்டுமே தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

 தமிழ்நாட்டின் போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தான் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை அள்ளி வழங்கிய போராட்டமாகும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் கூட இந்த அளவு ஆதாரங்களுடனான பிரச்சாரத்தைக் கொண்டிருந்ததா எனத் தெரியவில்லை.

 அப்படியெல்லாம் இல்லை, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நம் பிரச்சாரம் போதுமான அளவு சென்றடையவில்லை என வாதிட முனைவோரை நாம் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வோம். ஆனால் இடிந்தகரை, கூத்தங்குழி, கூடங்குளம் என கடற்கரை கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் சென்றடைந்ததைப் போல் அதை ஒட்டிய வள்ளியூர், நாகர்கோவில், உவரி, தூத்துக்குடி என மீனவரல்லாத மற்ற பகுதிகளிலும் பிரச்சாரம் சென்றடைந்ததுதானே? குறிப்பாக மீனவர் சமுதாயத்தை ஒட்டி வாழும் நாடார் சமூகத்திற்கு இந்த சிக்கல்கள் தெரியுமல்லவா? அப்படி இருக்கும் போது ஏன் நாடார் சமூகம் பிரச்சாரத்தால் கவரப்பட்டு போராட்டத்திற்கு அலைஅலையாக திரண்டு வந்து ஆதரிக்கவில்லை?

 பிரச்சனை பிரச்சாரத்தில் இல்லை. அதுமட்டுமில்லாமல் நாம் மட்டுமே பிரச்சாரம் செய்யவில்லை. நமது எதிரியான அரசும் பிரச்சாரம் செய்கிறது. அது நம்மை விட வலுவாகச் செய்கிறது. இந்த இருவகை பிரச்சாரத்தில் எதை ஏற்றுக் கொள்வது என்பதை மக்களுடைய வாழ்நிலை தான் தீர்மானிக்கிறது.

 கணினி தொழில், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, அடுக்குமாடி குடியிருப்பு என தொழில் வளர்ச்சியடைந்த பெருநகர வாழ்க்கையைத்தான் தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான மக்கள் கனவாக கொண்டிருக்கிறார்கள். இதற்காக சொந்த நிலத்தை பறிகொடுத்துவிட்டு குடிபெயர்கிறவர்களாகவும், குடிபெயர காத்திருப்பவர்களாகவும்தான் மக்களின் மனநிலை உள்ளது.

 இவ்வாறு பெருநகரங்களின் வளர்ச்சியையே தங்களின் வளர்ச்சியாக நம்பி ஏமாந்திருக்கும் மக்களிடம் அரசின் பிரச்சாரம் செல்லுபடியாகிறது. பெருநகரங்களின் வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை, மின்சாரத்திற்கு அணு உலை தேவை என அரசின் பிரச்சாரத்தால் மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு பகுதி ஆபத்தை சந்திப்பது பரவாயில்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் தான் மக்கள் வேறு வழி இல்லை என அணு உலையை அனுமதித்து அமைதி காக்கிறார்கள்.

மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் வாழ்நிலையின் கண்ணோட்டம் குறித்து நம்பிக்கை வரவில்லை என்றால் இன்னொரு உண்மையைப் பரிசீலியுங்கள். இதே நாடார் சமூகத்தின் பெரும்பான்மை மக்களை காவு வாங்க காத்திருக்கிறது, "சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு". இதற்காக ஒட்டுமொத்த நாடார் சமூகமும் கொந்தளித்து எழுந்து விட்டதா?

இல்லை. காரணம் என்ன? நாடார் கணிசமானப் பிரிவினர் ஆசிரியர் துறை, காவல்துறை என சலுகை பெற்ற அரசுத்துறைகளில் செல்வாக்கு செலுத்துகின்றனர். துணி, பலசரக்கு, பாத்திரம், நகை என பெரும்வணிகத்திலும் இவர்களில் குறிப்பிட்ட பிரிவினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களும், இவர்களின் வாரிசுகளும், இதுவரை சிக்கல் இல்லாமல் பொருள் ஈட்டிய சில்லரை வணிகர்களின் படித்த வாரிசுகளும் கூட பெருநகர வளர்ச்சியையும், பெரும் மூலதன நுழைவையும் ஆதரிக்கிறவர்களாகவே உள்ளனர். பிறகு எப்படி இவர்கள் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கத் துணிவார்கள்?

 ஆகவே பிரச்சாரம் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு காணும் ஒரே வழிமுறையல்ல. அதுவும் ஆளும் வர்க்கத்தின் சீர்திருத்த பொருளாதாரத்தின் விளைவுகளை ஆதரித்து நிற்கும் மக்களிடம் நாம் செய்யும் பிரச்சாரம் மட்டுமே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிடாது.
 
அணு உலை என்பது மீனவர் சமுதாயத்தின் உடனடி பிரச்சனையே ஆகும். அணு உலைகளின் ஆபத்தென்பது ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் பிரச்சனையானது தான். ஆனால் அது எங்கு நிறுவப்படுகிறதோ அங்குள்ள மக்களுக்கு உடனடிப் பிரச்ச்னையாகிவிடுகிறது. அணு உலைகள் வெடிக்கும் போதான பேரழிவுகளின் போதுதான் அது உலகு தழுவிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அணு உலை சாதாரண‌மாக இயங்கத் தொடங்கிய உடனேயே அது அமைந்திருக்கும் பகுதி மக்களின் பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதனால் தான் அமைகின்ற பகுதியில் உள்ள மக்கள் அதை உடனடியாக எதிர்க்க முன் வருகிறார்கள்.

அணு உலைகள் எல்லோருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் உலகில் முதல் அணு உலை நிறுவும் போதே உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்குமே! அல்லது முதல் அணு உலை வெடித்த போதே உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து அணு உலைகள் இல்லாத உலகாக மாறி இருக்க வேண்டுமே!

 செர்னோபில், புகுசிமா அணு உலைகள் வெடிப்பில் இருந்து பாடம் கற்று கூடங்குளம் கொதித்தெழுந்தது என்றால் அங்கே அணு உலை அமைந்ததால்தான். இது தவறல்ல இதுதான் சமூக இயல்பு.

 ஆகவே கூடங்குளத்தில் அணு உலை அமைந்ததால் அதன் ஆபத்தை மீனவர் சமுதாயம் உணர்ந்ததும், அதற்காக முன்நின்று போராடிக் கொண்டிருப்பதும், அது மீனவ மக்களுக்கே முதன்மையானதாக இருப்பதும் சரியே ஆகும். இதனால் அம்மக்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் எனப் பொருளாகாது.

 கெயில் நிறுவன எண்ணெய் குழாய் பதிப்பினால் பாதிப்புக்குள்ளாகும் குறிப்பிட்ட மக்கள் அதற்காகப் போராடினால், தனித்து விடப்பட்டுள்ளார்கள் என்றாகுமா? முல்லைப் பெரியாறு அணையைக் காக்க தேனி மாவட்ட மக்கள் மட்டுமே முன்னணியில் இருப்பதால் அவர்கள் தனித்து விடப்பட்டதாகுமா? நர்மதை அணையை எதிர்க்கிற குறைந்த அளவிலான எளிய மக்கள் தனித்து விடப்பட்டவர்களா?

 எல்லாப் போராட்டங்களிலும் உடனடி ஆபத்துக்குள்ளாகிறவர்கள்தான் முன்னணியில் நிற்பார்கள்; தொடர்ந்து முன்னெடுத்தும் செல்வார்கள். அந்த வகையில் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் மீனவ மக்களின் முதன்மைப் பாத்திரம் வரலாற்றில் தவிர்க்க முடியாததே ஆகும்.

இந்த நிலையில் நாம் என்ன செய்வது?

 இருக்கின்ற அரசுகள் கார்பரேட் நிறுவனங்களின் அரசுகளாகும். அவை கார்பரேட்டுகளின் அணு உலைகளை அதிகாரத்தோடு நிறுவிக்கொண்டிருக்கின்றன. இந்த கார்பரேட் அரசுகளின் சீர்திருத்த பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்து நிற்கும் மக்களும் தங்களின் அமைதியின் மூலம் அரசுக்கு ஆதரவளிக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்றாகாது. அரசுகளின் பிடியில் இருக்கும் மக்களை போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றுவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதே நமது உடனடி கடமையாகும்.

 போராடுகிற எந்தப் பிரிவு மக்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை உலகுக்குச் சொல்ல, தங்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க பல்வேறு மன்றங்களில் உள்ள தங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறுதான் தலித்துகள், மதச் சிறுபான்மையினர், பழங்குடியினர் என பல்வேறு தரப்பினரும் தங்களது நலனை தற்காத்துக் கொள்கின்றனர். அவ்வாறான அரசியல் பிரதிநிதித்துவம் மீனவர் சமுதாயத்திற்கு இதுவரை இல்லை. அதை அடைவதே இப்போதைக்கு உடனடி கடமையாகும்.

எது அரசியல் பிரதிநிதித்துவம்?

 மீனவர், மலைவாழ் மக்கள், பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு சமூகப் பிரிவினர்களுக்குமானதுதான் இந்த அரசு என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த அரசு சுரண்டும் வர்க்கங்களுக்கானதுதான் என நம் எல்லோருக்கும் தெரியும்.

 இருந்தும் இவ்வரசுகள் மக்களிடம் தாம் அனைத்து பிரிவினருக்குமானது என நம்ப வைக்கிறது. அதற்காக அனைத்துப் பிரிவினருக்கான பிரதிநிதிகளை சுரண்டும் வர்க்கம் தானே தயாரிக்கிறது. இப்பிரதிநிதிகள் மூலம் ஆளும் வர்க்க கட்சிகளைக் கட்டி செயல்படுத்துகிறது. அவர்களை மக்கள் நடுவே செயல்பட வைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறுகிறது. அவர்களையே பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற அவைகளுக்குத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. இதன்மூலம் சுரண்டும் வர்க்கம் போலி மக்கள் பிரதிநிதிகளையும், போலி மக்களாட்சி முறையையும் உருவாக்கி வைத்துள்ளது.

 இந்த ஏற்பாடு சுரண்டும் வர்க்கத்திற்கு மிகவும் அவசியமானதாகும். தனது அளவற்ற சுரண்டலால் மக்கள் கொதிப்படைந்து புரட்சி நடந்துவிடக்கூடாதென எச்சரிக்கை அடைவதற்கு இந்த ஏற்பாடு அவசியமாகிறது. சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவான மக்கள் பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். தேவையான நேரத்தில் அவர்கள் திற‌மையாக செயல்படுகிறார்கள். தாங்கள் பங்கேற்றுள்ள பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிமன்ற அரங்குகளில் அவர்கள் மக்களுக்காக குரல் கொடுப்பது போல் நடிக்கிறார்கள். அதன்மூலம் சுரண்டும் வர்க்கத்திற்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். உடனே அரசு தலையிடுகிறது. சுரண்டும் வர்க்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் சமரச நடவடிக்கையாக இடைக்காலத் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.  சுரண்டும் வர்க்கம் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்கிறது. மக்களும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறார்கள்.

 இந்த இடைக்காலத் தீர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் டாக்டர் அம்பேத்கர் கூட தலித் மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம் என்று போராடினார். தலித் மக்களின் பிரதிநிதிகளை உருவாக்க தனித் தொகுதிகளைப் பெற்றுத் தந்தார். இதை இஸ்லாமியர்களும், பழங்குடி மக்களும் போராடிப் பெற்றுள்ளனர்.

 இந்த போலி அரசியல் பிரதிநிதித்துவம் அம்மக்களுக்கு முழுவிடுதலையைப் பெற்றுத் தராது. ஆனால் உயிர்வாழும் நடவடிக்கையில் அரசோடு பேரம் பேசவும், தமது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ளவும் இது உதவும். இது முக்கியமாக தமது நியாயமான கோரிக்கைகளை உரிய மன்றங்களிலும், அரங்குகளிலும் பேசி பரந்துபட்ட ஆதரவைத் திரட்ட முடியும். தங்களது போராட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல முடியும்.

 மீனவர் சமுதாயத்திற்கு இந்த வாய்ப்பு இல்லவே இல்லை. அதனால் தங்களது உன்னதமான போராட்டத்தில் துளி முன்னேற்றமும் இல்லாமல் கையறு நிலையில் உள்ளனர். இதுவரை அரசியல் நெருக்கடிகளை சந்தித்திராத மீனவர் சமுதாயம் நிலவும் அரசு குறித்தோ, அதில் தமக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்தோ சிந்திக்கவேயில்லை. வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கும். இயற்கையோடு பின்னிப் பிணைந்த மீனவர்களின் வாழ்நிலை என்பது அரசு குறித்து சிந்திப்பதற்கு அவசியமற்று இருந்தது. கடலும், கடல் சார்ந்த வற்றாத வளமும் அவர்களை அதிகாரம் குறித்து கவலையற்று இருக்கச் செய்தது. நிலையான செல்வம் நிறைந்து கிடப்பதால் அதைப் பதுக்கி பாதுகாக்க வேண்டிய அவசியம் மீனவர்களுக்கு இல்லை. இவ்வாறு தனிச்சொத்துடைமையில் சிக்காத மீனவர்களில் ஆண்டான்- அடிமை முறைகளில்லை. எனவே அவர்களுக்கு ஒருவரை ஒருவர் ஆட்சி செய்வதற்கான அரசும், அதிகாரமும் தேவைப்படவில்லை. ஆதலால் மீனவர்கள் நிலவி வரும் அரசு குறித்து கவலையற்றிருந்தனர்.

இதுவரை மீனவர்கள் தேர்தலில் வாக்களித்திருந்தாலும் அது அவர்களின் சுய முடிவுக்கானதல்ல. அவர்களின் ஊர்க்கமிட்டி மற்றும் அதனோடு தொடர்புடைய தேவாலய நிர்வாகங்களின் விருப்பம் சார்ந்ததாகவே இருக்கும். மீனவர்களைப் பொருத்தவரையில் அவர்களது ஊர்க்கமிட்டிகளும், தேவாலய நிர்வாகங்களுமே அதிகாரம் உடையவையாகும். மீனவர்களின் வாழ்க்கையை இவைகள்தான் தீர்மானித்தன. ஆனால் தற்போது நிலைமை தலை கீழாகிவிட்டது. மீனவர்களின் வாழ்க்கையை படிப்படியாக கார்ப்பரேட் நிறுவனங்களும், அவைகளின் அரசும் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டன. மீனவர்களுக்குச் சொந்தமான இயற்கை வள‌ங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. சேது சமுத்திரத் திட்டம், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், பெருந்தொழில் சுற்றுலா மையங்கள், இறால் பண்ணைகள், கடற்கரைப் பண்ணை விடுதிகள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள் என மீனவர் சமுதாயத்தின் தலைகள் மீது இடிகளை இறக்கிக்கொண்டிருக்கிறது கார்ப்ப‌ரேட் நிறுவனங்கள். இத்தோடு சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. இப்பொது அணு உலைகள் எல்லாவற்றிலும் பேராபத்தாக வந்து தாக்குகிறது.

 இனி ஒரு நொடிகூட மீனவர் சமுதாயம் தானுண்டு, கடலுண்டு, தன் வாழ்வு உண்டு என்றோ, தமது சிக்கல்களை ஊர்க் கமிட்டிகளும், தேவாலய நிர்வாகங்களும் தீர்த்துவைக்க முடியும் என்றோ சும்மா இருக்க முடியாது. மீனவர் சமுதாயத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கிற கார்ப்ப‌ரேட் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடியாக வேண்டும். அப்போராட்டம் முழு வெற்றியை அடையும் வாய்ப்புகளுக்காக பல இடைநிலை நிவாரண‌ங்களையும், இடைக்காலத் தீர்வுகளையும் பெற்றாக வேண்டும். அதற்கு அரசோடு பேரம் பேசுகிற அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றாக வேண்டும்.

 அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இப்போது மீனவர் வாழ்வை மீனவர்களே தீர்மானிக்கிற அரசியல் அதிகாரத்திற்கான நீண்டகால இலக்கோடு இணைந்துவிட்டது. ஆகவே மீனவர் சமுதாயத்தின் அணு உலை எதிர்ப்பு என்கிற போராட்டத்தோடு சேது சமுத்திரத் திட்டம், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், பெருந்தொழில் சுற்றுலா மையங்கள், இறால் பண்ணைகள், கடற்கரை பண்ணை விடுதிகள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள், சிங்கள கடற்படை கொலை வெறியாட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் போராட்டங்களுடன் இணைந்துவிட்டது.

 எனவே மீனவர் சமுதாயம் தங்களின் வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு முன்நிபந்தனையாக இருக்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான அரசியல் பிரதிநிதித்துவமும், மீனவர் தனித் தொகுதிகளும் உடனடி தேவையாகி விட்டது. அரசியல் பிரதிநிதித்துவம் - அதற்கான தனித்தொகுதி என உடனடி கோரிக்கையை முன்வைத்து உடனே எழட்டும் இடிந்தகரைப் போராட்டம்.

 தமிழ்நாட்டின் நீண்ட, தொடர்ச்சியான 1076 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 8 லட்சத்திற்கும் மேலான மீனவ மக்கள் வாழ்கின்றனர். கிட்டதட்ட 495க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்துவரும் இம்மக்களுக்கு இதுவரை தனித்தொகுதிகள் இல்லாதது அரசியல் அநீதியாகும்.

 இதனால் நித்தம் நித்தம் செத்துக்கொண்டிருக்கும் மீனவ மக்களின் அவலநிலை உலகத்தின் கவனத்திற்கு வராமல் தடுக்கப்படுகிறது. இனியும் இந்த நிலை நீடிக்குமே ஆனால் தமிழ்நாட்டின் மீனவர் சமுதாயம் அடியோடு அழிந்து போகும். ஆகவே இப்போதே மீனவர்களுக்கான தனித்தொகுதிகளைக் கேட்டு போராட்டத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டும்.

 ஆம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் நாம் உடனடியாக இக்கோரிக்கையை முன்னெடுப்பதன் மூலம் உலகத்தின் கவனத்தை மீண்டும் இடிந்தகரை மற்றும் அனைத்து மீனவ சமுதாயத்தின் பக்கம் திருப்ப முடியும். இதன்மூலம் மீனவர் நலனை விவாதிப்பதற்கான பலவகை தளங்களை அடையமுடியும். எல்லா தளங்களிலும் அணு உலை எதிர்ப்பின் நியாயத்தை இயல்பாக முன் வைக்கமுடியும்.

 இதனை தற்போது மீனவர் சமுதாயத்துடன் ஒன்று கலந்துவிட்ட போராட்டக்குழுவே திற‌ம்பட ஏற்று வழிநடத்த முடியும். ஏனெனில் மீனவர் சமுதாயத்தில் இடிந்தகரை தான் இப்போது விழிப்படைந்த பகுதி. இடிந்தகரை மக்களுக்கு போராட்டக்குழுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை.

 ஆகவே போராட்டக்குழுவின் தலைமையில் இடிந்தகரை போராட்டம் மீனவர்களுக்கான தனித்தொகுதி கோரிக்கையை முன்னெடுத்து தமிழ்நாட்டையும், இந்திய துணைக் கண்டத்தையும் உலுப்பட்டும்.

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It