I

 ஒரு மொழியைப் பயன்படுத்தத் தெரிந்த எந்தவிதமான மனிதர்களுக்குள்ளும் கவிதை நுழைந்துவிடும். காரணம், கவிதைதான் ஒரு மொழிக்கு ஆதார சக்தி. மொழியை வளப்படுத்துவதும் அதற்குள் ஒரு உயிர் இயக்கத்தை நடத்திக் காட்டுவதும் கவிதைதான். பயன்பட்டுப் பயன்பட்டு நோயாகிப் படுக்கைக்குப் போய்விடாமல் என்றென்றும் வார்த்தையை இளமைத் துடிப்புடன் பாதுகாத்து வருவது கவிதைதான். மொழியை ஒடிப்பது, முறுக்குவது, புதிராக்குவது, எதிர்பாராத, பழக்கமில்லாத விதத்தில் இணைப்பது, அர்த்தவெளியைக் கூட்டுவது, சிதைப்பது, ஒட்டுவது முதலிய உருவாக்கச் செயல்பாடு பலவும் கவிதையில்தான் சாத்தியம். எனவே மொழியால் கவிதை படைக்கப்படுகிறது என்பதைவிடக் கவிதையால் மொழி படைக்கப்படுகிறது என்பதுதான் சரியாக இருக்கும்போல் படுகிறது. மேலும் நுண்கலைகள் எனப் போற்றப்படும் இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம் ஆகியவற்றையும் சிறுகதை, புதினம், நாடகம், திரைப்படம் ஆகியவற்றையும் அழகுப்படுத்தி அவைகளைப் பிறிதொரு மேலான தளத்திற்கு நகர்த்தி மனித ஜீவிதத்தோடு இணைத்து வாழ்வளிப்பது இன்றும் கவிதையின் செயல்பாடாகத்தான் இருக்கிறது.

தமிழ்மொழி இத்தனை படையெடுப்புகளுக்கும், பிறமொழி ஆக்கிரமிப்புகளுக்கும், அதைப் பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பொருளாதாரமும் உலகப்பரப்பில் அநாதவரான இருட்சூழலில் நூற்றாண்டுக் காலமாகவே அமுக்கப்பட்ட வரலாற்றுச் சூழலுக்கு நடுவிலும் இன்றும் ‘சீரிளிமைத் திறம்’(1) குன்றாமல் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மூலக்காரணம் அதன் கவிதை வளம்தான்.இந்தக் கவிதை வளத்தைக் கபிலர், ஒளவையார், வள்ளுவர், இளங்கோ, ஆண்டாள், பாரதியார் முதலிய தனிமனிதர்கள் படைத்தார்கள் எனச் சொல்வது ஆதிக்க மரபு வடிவமைத்த புனைவு. அது உண்மையல்ல. பிறகு என்னவென்றால் வெகுஜன மக்களின் வாழ்க்கைப்பாடே கவிதை வளத்திற்கான ஊற்றாக ஊறிக்கிடப்பதுதான். இம்மக்களின் உளவியலே கவிதை விளைச்சலுக்கான உரம் செறிந்த நிலமாகும். இது எந்த நச்சுச் சூழலிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் புதிரான பிடிபடாத திறத்தோடு பின்னப்பட்டுக் கிடக்கிறது. இது ஆப்பிரிக்கா போன்ற பழங்குடி மக்களுக்கும் பொருந்தும். இத்தகைய தொல் சமூகங்களின் ஆதிமனக் குறியீடுகள், தொன்மங்கள் பலவும் கூட்டு நனவிலிகளாக ஆழ்மனத்தில் படிந்து கிடந்து கவிதைக்கான கருவூலங்களாகத் தொடர்கின்றன.

II

 இன்று கவிதை, சந்தோஷமாய் வாழ்வதாக ஒரு பாவனையை மக்கள் உருவாக்கிக் கொள்ளப் பயன்படும் விளம்பர வாசகங்களுக்கான நகரம்சார் உற்பத்திக் களமாக மாறியிருக்கலாம்; ஒரு வார்த்தைக்கு ஓர் ஆயிரம் என்று இதன் வார்த்தைகள் வியாபார சரக்காகப் போயிருக்கலாம். உலக அளவிலான மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரமென உழைத்துவிட்டுச் சக்கையாக வரும் நவீன மனித உயிர்களுக்குள் சின்னச் சின்ன அழகுணர்வுகளை நிரப்புகின்ற வெறும் நுகர்வுப் பொருளாக மட்டுமே ஆகியிருக்கலாம். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து முகம் காட்டுவதன் மூலம் புவிப் பரப்பு முழுவதும் பரந்துள்ள தமிழ் பேசும் மக்களிடம் ஒரு பயணம் மேற்கொண்டு டாலரோடு திரும்பி சமூக அங்கீகாரத்தோடு உலாவர இந்தக் கவிதை பயன்பட்டுக் கொண்டிருக்கலாம். என் கவிதை இணையதளத்தில் வந்திருக்கிறது, விகடனில் வந்திருக்கிறது என்று தெரிந்த முகங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிப் பாராட்டு மழையில் நனைவதற்குக் கவிதை துணைசெய்து கொண்டிருக்கலாம். படாதபாடுபட்டுப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கவிதையைச் சேர்த்து விட்டோம்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பார்கள் என்கிற மனோலகரியில் மயங்கிக் கிடக்கப் பயன்படலாம். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து லண்டனிலோ நியூயார்க்கிலோ வெளியிட்டு அங்குள்ள அமைப்புகள் வழங்கும் பரிசுகளைத் தட்டிப்பறித்து வந்து உள்ளூர் பத்திரிக்கைகள் அனைத்திலும் ஒன்றுவிடாமல் வெளியிட ஏற்பாடு செய்து மகிழ்ச்சியில் மிதக்கப் பயன்படலாம். கவிதைக்குப் புறம்பான இத்தனை நடவடிக்கைகளுக்கு நடுவிலும் கவிதை இன்னும் தமிழில் பன்முகப்பட்ட வகைகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாதந்தோறும் நூற்றுக்கணக்கான கவிதைத் தொகுப்புகள் பல்வேறு சமூகத் தளத்தைச் சேர்ந்த தன்னிலைகளால் எழுதப்பட்டு வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றன.

II

 ஆங்கில மொழி மாயை தீவிரப்பட்ட சூழலில் கிராமப் பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உச்சரிக்கத் தேவைப்படாத ஒன்றாகத்தான் தமிழ் ஆகிக்கொண்டு வருகிறது; ‘தென்றலில் குளிர்ச்சியா இல்லை, தோப்பில் நிழலா இல்லை, தணிப்பரிதாம் துன்பமிது, தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் நொந்து கொண்டது போலத் தமிழ்த் தெருக்களிலும் தமிழ் இல்லாமல்தான் போய்க் கொண்டிருக்கிறது; வேலை கிடைப்பதற்கு, நீதி கேட்பதற்கு, நவீன கல்வியடைவதற்கு, உயராய்வை நிகழ்த்துவதற்கு, ஏன் குடும்பங்களில் உறவுகளோடு உரையாடுவதற்குக்கூடத் தமிழ் தேவையற்ற ஒன்றாகத்தான் ஆகிவிட்டது. இத்தகைய புதிய காலனித்துவச் சூழலில் தமிழ்க் கவிதைகளுக்கான எதிர்காலம் என்ன என்ற கேள்வி நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. திடுக்கிட வைக்கிறது. பதட்டத்தை உருவாக்குகிறது. ஆனால் இத்தகைய ஆதரவற்ற சூழலிலும்கூடத் தமிழக்கவிதை கொஞ்சமும் வாடாமல் வளர்ந்து வந்திருக்கிறது என்பது வரலாறு.(2) காரணம் கவிதை நிகழ்கால மொழியிலிருந்து மட்டும் பிறப்பெடுப்பதில்லை. முன்னமே சுட்டிக்காட்டியதைப் போல இந்த மண்ணின் பண்பாட்டில் இருந்து, அதிர்ச்சியடைய வைக்கும் புதிய வாழ்விலிருந்து, உள்ளத்தில் அணுக்களாய்ப் படிந்துள்ள ஆதிமனத் தொன்மக் கூறுகளிலிருந்து, ஏற்கனவே பின்னப்பட்டுள்ள எண்ணி மாளாத கவித்துவச் செழுமையிலிருந்து முளைத்துக் கிளம்புவது கவிதை.

எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் சிலம்பும் வள்ளுவமும் கம்பரும் படித்தவர்கள் வாசித்தறியக் கூடிய தளத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை. அவைகள் இந்த மக்களின் வாழ்வோடும் சடங்கோடும் கொண்டாட்டங்களோடும் கலந்து கரைந்து கிடக்கின்றன. இந்த மண்ணின் கிராமங்களுக்குள் அமெரிக்காவின் டாலர் வரலாம்; ஆங்கிலம் வரலாம் ; ஆனால் அவைகள் எம் கிராம தேவதைகளின் திருநீற்றுச் சாம்பலோடுதான் கரைந்தாக வேண்டும். எனவே இத்தகைய ‘இனவரைச் சுவடுகள்’ எதிர்காலத் தமிழ்க் கவிதையையும் எப்போதும் போல் வடிவமைத்துத் தரும் என நம்பலாம்.

 இதற்கு உத்தரவாதம் அளிக்கும் தடயங்கள் என்ன? வரலாறு நெடுகிலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட ஓரத்து மக்கள் தங்களின் நொம்பலப்பட்ட வாழ்க்கையைக் கவிதையாக்க வந்துள்ளார்கள். பாலினத்தால் தங்களுக்கான வாழ்வு வெளியை இழந்த பெண்களும் அரவாணிகளும், (தமிழின வரலாற்றில் அரவாணிகளுக்கான குடும்ப அட்டை, எழுதும் வெளி, முதலியவை நமது இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழ்ப் பல்கலைக்கழகச் சார்பில் அரவாணிகளின் ‘வலியறுத்தல்’ நாடகம் செம்மொழி மாநாட்டில் அரங்கேறி இருப்பது பண்பாட்டு அடிப்படைவாதிகள் நிறைந்த தமிழ்ச் சூழலில் எளிய ஒரு நிகழ்வு அல்ல் வரலாற்றில் பொறிக்கத்தக்கது.) சாதியத்தால் தங்களுக்கான அடையாளங்களை அடைய முடியாமல் தவிக்கும் தலித்துகளும், ஆக்கிரமிக்கப்பட்ட தங்களின் இருப்பிடங்களை இழந்து அலைபாயும் பழங்குடியினரும், பெரும்பான்மையின் ஈவிரக்கமற்ற, தர்க்கமற்ற அட்டூழியங்களுக்குப் பலியாகிக் கொண்டிருக்கும் சிறுபான்மையினரான ஈழத் தமிழர்களும் மலேயத் தமிழர்களும் என விளிம்புநிலைக்கு உள்ளான அனைவரும் இன்று கவிதை எழுதுகின்றனர். இவர்களின் எழுத்தும் வீச்சும் இதயமுள்ளோரைத் துடிதுடிக்க வைப்பதாகவும், உலகப் பரப்பு முழுவதும் சென்றடைவதாகவும் வீறுடன் விளங்குகிறது.

21-ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேசமயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த நாடுகளிலே வாழும் ஈழத்தமிழரின் புதிய படைப்பாற்றல் தலைமை தாங்கும் என்கிறார் எஸ்.பொ.(3)

கொடூரங்கள் உச்சப்படும் காலங்களில்தான் தேள் கொட்டுவது போன்று உரைக்கும் உன்னத இலக்கியங்கள் சரித்திரத்தில் உதயமாகி உள்ளன. மனிதத் தன்மை அறவே அற்ற கொடூரமான உலகப் போர்தான் மனித இனத்திற்கே மகத்தான பெரும் பெரும் கலைப் படைப்புக்களைப் பல்வேறு வடிவங்களில் ஐரோப்பாவிற்கு வழங்கியது. என்ன செய்வது? மனித வாழ்க்கை இத்தகைய முரண்களின் முடிச்சுகள் செறிந்த புள்ளிகளால்தான் நகர்கிறது. தமிழும் தமிழ் இனவாழ்வும், ஓரத்திலும் ஓரமாக ஒதுக்கப்படும் கொடூரச் சூழல்தான் இதன் மகத்தான எழுச்சிக்கும் ஆதார சக்தியாக அமையப் போகிறது. உலகப் பரப்பு முழுவதும் அகதிகள் போல அலைபாயும் தமிழ் மக்களிடம் பிறப்பெடுக்கும் புலம்பெயர் கவிதைகள் எதிர்காலத் தமிழ்க் கவிதையின் வளமாக அமையும் எனத் தோன்றுகிறது.(4) இப்புலம்பெயர் எழுத்துக்களின் களமாகத் தமிழ்மண்ணின் பரப்பிற்கு அயலான பனிப்பிரதேசங்ளும், பாலைவனப் பிரதேசங்களும், அவைகள் தரும் வாழ்வின் வலிகளும் வாதைகளும், கொண்டாட்டங்களும் கொடூரங்களும் அமையும். மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சிகளை மிகவும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் தமிழ் உள்ளம் என அறியப்பட்ட ஒன்று எதிர்கொள்ள நேரும் எனப்படுகிறது.

இவ்வாறு ஒருபக்கம் தமிழ்க் கவிதை எல்லை கடந்த ஒன்றாக, உலகம் தழுவியதாக அமைகிற சூழல் என்றால் மற்றொரு பக்கம் உலகமயம் என்கிற அதிகார ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தன் தனி அடையாளத்தைத் தக்கவைக்க இனவரை சார்ந்த கவிதைகள் முதன்மை இடத்திற்கு வரும்போல் படுகிறது. ஏற்கெனவே இனவரை சார்ந்த எழுத்துக்கள் உரைநடை இலக்கியத்தில் கி.ரா போன்றவர்களால் ‘அந்த வகையில் உச்சம்’ எனச் சொல்லும் அளவிற்கு வந்துள்ளன. கவிதையில் ‘சனங்களின் கதை’(5) எழுதிய பழமலய்யின் கவிதைப் போக்கு இனவரை எழுத்தை மையப்படுத்திப் பரவலாகி விட்ட சூழலில் அந்தப் போக்கு எதிர்காலத்திலும் தொடரும் என நம்பலாம். ஏனென்றால் பழமலய் எழுதிய காலத்தைவிட அதிகமாக இனவரை சாhந்த ஆராய்ச்சிகளும் (6) நாவல்களும்(7) வந்தவண்ணம் இருக்கின்றன. கவிதையிலும் கூட என்.டி.ராஜ்குமார் கவிதைகளில்(8);; மாந்திரீக முறையில் தொன்மங்களும் சிறுமரபுத் தெய்வங்களும் கவிதையாக்கத்திற்குள் நுழைந்து வினைபுரியத் தொடங்கிவிட்டதைப் பார்க்க முடிகிறது. எதிர்காலத் “தலித்”; கவிதைகளின் போக்கும் இன்று மேலோங்கி நிற்கும் சுய இரக்கம், சுய வரலாறு முதலியவற்றைக் கடந்து கிராமம் சார்ந்த சொல்கதைகளையும் தொன்மங்களையும் கனவுகளையும் தனது குறியீட்டு மொழியாகக் கொண்டு வளமடையும் என நம்பலாம்.

Iv
 இந்த உலகத்தை அறிதல் என்பது ஆண்களின் பார்வையிலேயே நிகழ்த்தப்பட்டள்ளது. அறிதல் என்பதும் மனித வாழ்வில் மொழியால் நிகழ்த்தப்படும் ஒரு புனைவுசார் கலைதான். இந்தக் கலையை ஆண்கள் கைப்பற்றிக் கொண்டதன் மூலம் பெண்களின் பார்வை மானிட வெளியில் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆணுடம்பும் பெண்ணுடம்பும் ஒன்றல்ல் அதுபோலத்தான் இந்த உலகம் குறித்த பார்வைகளும் அனுபவங்களும் இருவருக்கும் ஒன்றல்ல் வேறுவேறு. இந்த வேற்றுமைகள் அவைகளுக்கேயுரிய தனித்தன்மைகளோடு கொண்டாடத்தக்கவை. ஆனால் ஆண்களின் அதிகாரக் கட்டமைப்பு மூலம் இந்த வேற்றுமைகள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. அல்லது மேல் X கீழ் எனப் புனையப்பட்டிருக்கின்றன. மனித வாழ்வில் ஓர் அற்புதமான பகுதி அப்படியே இன்மைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தாய்மை என்கிற தனிப்பெரும் அனுபவத்தை எடுத்துக்கொண்டாலும் கூட அதற்கேயுரிய பெண்களின் பார்வை பதிவு செய்யப்படவில்லை. ஆண்களின் நலம் சார்ந்த “பெண் ஒரு ஆயா” என்கிற முறையில்தான்அவள் அறியப்படுகிறாள். இதிலுள்ள மிகப்பெரிய அவலம், பெண்ணே அப்படித் தன்னை அறியும்படியாக இந்த ஆணின் மொழியும் புனைவும் வினைபுரிவதுதான். இந்த அவலத்தைப் புரிந்துகொண்டவர்களாக இன்றைய தமிழ்ப்பெண் கவிஞர்கள் வெளிப்படுகின்றனர். தாய்மையைப் பெண்ணே பெண் பார்வையில் பதிவு செய்யும் பெண்ணியக் கவிதைகள் எதிர்காலத் தமிழ்க் கவிதைக்கு அழகு சேர்க்கும் எனப்படுகிறது. இன்றைய பெண் கவிஞர்கள் இந்தத் தாய்மையின் மீது படிந்துள்ள ஆணாதிக்க அரசியலைப் புரிந்துகொண்டு அதன்மேல் நின்றுகொண்டு எழுதுகிறவர்களாக வெளிப்படுகின்றனர். இந்தப் போக்கு எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக வேகப்படும் என்று நம்பலாம்.

 இதுபோலவே மனித உடல். இதைப்போல ஆர்வம் தரத்தக்க அதிசயமான, திகைப்பூட்டும் ஒன்று வேறுண்டா? ஆனால் பெண் உடம்பை ஒடுக்குவதற்காக அதன்மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் வகை தொகைகள்தான் எத்தனை எத்தனை? உலகக் கண்காணிப்பு அரசியலே பெண் உடம்பைத் தனது கண்காணிப்புக்குள் நிலைநிறுத்தும் ஆணின் அரசியலில் இருந்துதான் தோற்றம் கொண்டிருக்கும் என உறுதியாக நம்பலாம். இந்த உண்மையை இன்றைய தமிழ்ப் பெண் கவிஞர்கள் அந்த உண்மைக்கே உரிய ஆழத்தோடும் வரலாற்றோடும் தீவிரமாக உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். எனவே உடம்பை எழுதுவது என்பதன் மூலம் பெண்ணுக்கான உயிரோட்டமுள்ள வெளியை உருவாக்க முயலுகின்றனர்.

 என் உடலுடன்
 நான் உறங்க வேண்டும்
 இடது கரத்தால் சிவனைப்
 பிய்த்தெறிந்து விட்டு (9)
என்று ஒரு கவிதையில் ஆணின் உடல் அரசியலை உதறிவிட்டுத் திமிறி வெளியேறுவதைக் கவனிக்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கோலோச்சும் ஆண் ஒ பெண், தந்தை ஒ தாய், நான் ஒ நீ,அறிவு ஒ உணர்ச்சி, பண்பாடு ஒ இயற்கை என்று ஆண்கள் கட்டமைத்த இருமைகளிலிருந்து விலகி, பன்முகத்துவத்தை நோக்கிப் பெண் எழுத்துகள் எதிர்காலத்தில் நகரும் எனத் தோன்றுகிறது. அந்நிலையில் வித்தியாசங்களுக்கு இடையில் மேல் கீழ் எனப் புனைகிற அதிகாரச் செயல்பாடுகள் மட்டுப்படும் என நம்பலாம்.

தனது பழக்கப்பட்ட மனத்திற்கு இதமானவைதான் உயர்ந்தவைகள் என “மற்றவைகளுக்குள்” பார்வை செலுத்த மறுக்கிற அடிப்படைவாதிகள் சமய வெளியில் மட்டுமல்ல, கவிதை உலகிலும் எப்பொழுதும் இருந்து வருகிறார்கள். எனவே அரசியல் கவிதைகள் என ஒரு வகைப்பாட்டையே அங்கீகரிக்க மறுக்கிறவர்கள் தொடர்ந்து இருந்து வந்தாலும் எதிர்காலத் தமிழ்க்கவிதையில் இந்த அரசியல் கவிதைகளும் அறவே இல்லாமல் போய்விடாது. ‘அறம்’ என்கிற ஒன்று, மனித சமூக வெளியின் ஆதாரப் புள்ளியாகும்; கவிதைக்கும் கவிஞர்களுக்கும் அவர்களின் இருப்பிற்கும் இதுதான் ஆதாரம். எனவே வருங்காலத்தில் நுகர்வு வெறியை ஏற்படுத்தி பெருவாரி மானுடர்களின் வாழ்வையே ஒட்ட உறிஞ்சும் சந்தைச் சமூகத்தை விமர்சித்தும், உலகமயம் என்கிற பேரில் வல்லரசுகளுக்கு வெளியே, வல்லரசுகளின் மொழிக்கு வெளியே வாழ்தல் என்பது எந்தச் சமூகத்திற்கும் எந்த மொழிக்கும் சாத்தியமில்லை என்று ஊரையெல்லாம் கொள்ளையிட்டுத் தன் உலையில் மட்டுமே போட்டுக்கொள்ளும் கொடூரமான நிதிமூலதன வல்லரசுகளைக் கண்டித்தும், உலகம் வெப்பம் அடைவதற்கும் சுற்றுச்சூழல் மானுட சமூகத்தையே பயமுறுத்தும் அளவிற்கு மாசுபட்டுச் சீரழிவதற்கும் தங்களின் அதீதமான நுகர்வு வெறியும் அதிகார ஆணவப்போக்கும் தான் காரணமென்பதை அறவே உணராமல் மூன்றாம் உலக நாடுகளின் ஏழ்மையும்(அந்த ஏழ்மைக்கும் தாங்கள்தான் காரணம் என்பதையும் உணராமல்) மக்கள் தொகைப் பெருக்கமும்தான் காரணமெனக் கற்பித்து இந்தப் பூமிமண்டலத்தின் இருப்பையே விளிம்புநிலைக்குத் தள்ளியிருக்கும் முதலுலக நாடுகளின் சுயநலத்தைச் சாடியும் அரசியல் கவிதைகள் உலகம் முழுவதிலும் உற்பத்தியாவது போலவே தமிழிலும் அதற்கான தீவிரத் தன்மையோடு உற்பத்தியாகும். அறத்தின் வலிமை அப்படிப்பட்டது. “அறம் பாடிற்றே ஆயிழை கணவ!”(10) என்று சங்கச் சான்றோர் ஒருவர் சுட்டிக்காட்டியது கவிதையின் இந்தத் தவிர்க்க முடியாத வினைபுரிதலைத்தான். இத்தகைய அரசியல் கவிதைகளின் அடர்த்தியான வீச்சில் இருந்துதான் ஒரு பாய்ச்சலாக வாழ்வின் தீமையையும் அழகையும் ஒருசேர படைக்கின்ற பிரம்மாவாகக் கவிஞர்கள் உருவாகுவர்.

தேசியம் என்கிற தன் கால அரசியல் கவிதையிலிருந்துதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாரதி அறுபத்தாறு, ஞானரதம், கனவு, பாஞ்சாலி சபதம் என்கிற உன்னதங்களை உருவாக்குகிற ஊடகமாகப் பாரதியார் உயர்ந்தார் என்பது நமது சம காலத்தில் கிடைக்கிற சான்று. அப்படி எதிர்காலத் தமிழ்க் கவிஞரை உருவாக்கி விடுவதற்கான சமூகக்களம் எல்லோரும் அறியத் திறந்தபடிக் கிடக்கிறது. எனவே மேற்கண்ட பன்முகப்பட்ட தளத்தில் தமிழ்க்கவிதை எப்பொழுதும் போல் எதிர்பார்க்கிற விளைச்சலை எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு வழங்கும் என நம்பலாம். ஆனாலும் ஊடகங்களின் அதுவும் காட்சி ஊடகங்களின் உலக வணிகக் கலாச்சார வலைப்பின்னலுக்கு முன் இந்நூற்றாண்டு மனித வாழ்வு நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊடகம் எவ்வளவு பெரிய நுண்மையான கலையழகையும் மொண்ணையாக்கி அதன் உயிராற்றலைச் சிதைத்து வெறுமனே நுகர்பொருளாக மட்டுமே ஆக்கிவிடக் கூடிய நிகரற்ற சக்தி வாய்ந்தது. இந்தக் குருட்டுத்தனமான வன்முறையை எதிர்காலத் தமிழ்க்கவிதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில்தான் இதன் எதிர்கால வாழ்வு அமைந்திருக்கிறது என எச்சரிக்கத் தோன்றுகிறது.

மனித வாழ்வு குறித்த அனைத்தையும் வடிவமைப்பவைகளாக இந்த ஊடகங்கள் பிரமாண்டமானவைகளாகப் பேருருவம் எடுத்துள்ளன. எதை எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு உரையாடுவதற்கான ஒன்றாக எடுத்துக் கொள்வது என்பவற்றைக்கூடத் தீர்மானிப்பவைகளாக ஊடகங்கள் விளங்குகின்றன. எனவே சமூகத்தில் கைவிட்டு எண்ணக்கூடிய ஊடகவாதிகளே எல்லாம் அறிந்த ஏகாம்பரங்களாக ‘உலா’ வருகின்றனர்; எனவே அவர்கள், நுகர்கின்றவர்களாக மற்ற அறிவாளிகள் உட்பட அனைவரையும் வெளியே நிறுத்தி மௌனமாக உறைய வைத்து விடுகின்றனர்; இதனால் சந்தைப் பொருளாதாரத்தால் ஓர் இடத்தில் ‘மூலதனம்’ குவிவதற்கு வாய்ப்பாகிப் போவது போல, இத்தகைய ஊடகத்தின் அமைப்பு முறையினால் ‘அறிவும்’ படைப்பாற்றலும் ஓர் இடத்தில் குவிக்கப்பட்டு மற்றவர்கள் அனைவரும் வெறுமனே உண்டு உறங்கி விழிக்கிற நுகர்வு மிருகங்களாக ஆக்கப்படும் மிகப்பெரிய கொடூரம் நிகழ வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத் தமிழ்க் கவிதை இத்தகைய போக்கிற்கு எதிராகச் சமர்புரிகிற அதன் போர்க் குணத்தில்தான் வேர்கொண்டிருக்கிறது. போர்க் குணம் இல்லாமல் வாழ்வு வளர்ச்சி அடைந்ததாகச் சரித்திரம் இல்லை; இது கவிதைக்கும் பொருந்தும்.

அடிக்குறிப்பு

1. சுந்தரம் பிள்ளை. பெ., மனோன்மணீயம் நவீன நாடகம்(1891), மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை.

2. இடைக்காலத்தில் மணிப்பிரவாள நடை என ஒன்று உருவாகி நிலைபெறும் அளவிற்குச் சமஸ்கிருத செல்வாக்கு உச்சத்தில் இருந்தபோதிலும் கம்பன் போன்றவர்களால் தமிழ்க் கவிதை வளம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

3. இரவிக்குமார்.பா.,(தொ.), எஸ்.பொ. முன்னீடுகள், (2009), மித்ரா புக்ஸ், சென்னை. ப.173

4.  “இது யாருடைய வாழ்வு
 யார் பட்டி மந்தைகள் நாம்
 கூடல் கழிதல் பெருகல் பிரிதலென்று
 நம் இருப்பு யாருடைய கணித விளையாட்டு
 எது பகடை எவர் காய்கள்
 இது எவருடைய சதுரங்கம்”

- வ.ஐ.ச. ஜெயபாலனின் இந்தக் கவிதை புலம்பெயர் வாழ்வின் வலியைப் பதிவு செய்துள்ளது.
 
5. பழமலய், பழமலய் கவிதைகள்(2009), காவ்யா வெளியீடு, சென்னை.

6. பக்தவத்சல பாரதியின் ‘பண்பாட்டு மானிடவியல்’ போன்ற நூல்கள்.

7. சோளகர் தொட்டி, ஆழிசூழ் உலகு, மீன்காரத் தெரு, சாய்வு நாற்காலி முதலிய இனவரை நாவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

8. என்.டி. ராஜ்குமார், கல் விளக்கு
 
9. மாலதி மைத்ரி, நீலி(2005), காலச்சுவடு, நாகர்கோவில், ப. 67

10. புறநானூறு, பா.எண். 34

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It