27 நவம்பர் 2013 அன்று தமிழ் இந்துவில் வெளியான "ஒரு லட்சம் கோடி பர்மா சொத்து: மீட்கும் முயற்சியில் நகரத்தார்" என்கிற குள.சண்முகசுந்தரத்தின் கட்டுரைக்கு எதிர்வினை. அக்கட்டுரையை வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிப்பது பொருத்தமாக இருக்கும். குள. சண்முகசுந்தரத்தின் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்.

*****

அது ஒரு பசுமையான பர்மிய கிராமம். மூங்கில் மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருக்கின்ற ஊர். எங்கு பார்த்தாலும் சலசலத்து ஓடும் சிற்றோடைகள். சிறிது தூரம் நகர்ந்து பார்த்தால் கண்களைக் கொள்ளை கொள்ளும் பசுமையான நெல் வயல்வெளி.

1942 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில் அக்கிராமத்தின் முச்சந்தியில் தெருக்கூத்து கலைஞர்கள் கூடியிருக்கிறார்கள். தெருக்கூத்து கலைஞர்கள் என்று சொல்வதைவிட பர்மிய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரிதாரம் பூசி கூத்துக் கட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அரசியல் களப் பணியாளர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

கூத்து ஆரம்பமாகிறது. சிறிது சிறிதாக மக்கள் வர ஆரம்பிக்கிறார்கள். வயதானவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என்று கூட்டம் கூட ஆரம்பிக்கிறது. வேடிக்கை பார்க்க கூடிய மக்களின் மத்தியில் இறுக்கமான சூழ்நிலை. அவர்களின் கண்களின் ஓரங்களில் கண்ணீர்த்துளிகள் வெதுவெதுப்புடன் வழிந்து ஓடுகின்றன. உவர்க்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அந்த கூத்தின் வழியாக தங்களின் வாழ்க்கை நிலையை நொந்தபடி கூத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா இயற்கை வளங்களும் நிறைந்து இருந்த பொழுதும் அவைகள் தங்களுக்கு பயன்படாதபடி வெள்ளைக்காரர்களும் அவர்களோடு ஒட்டிக்கொண்டு வியாபாரம் என்ற பெயரில் வந்திருக்கிற கறுப்பு நிற அந்நியர்களும் கொள்ளையடிக்கிறார்கள்; நாமோ வறுமையில் அடிமைப்பட்டும் கடன்காரர்களாகவும் அவமானத்திற்கு உள்ளான மக்களாகவும் நம் சொந்த நாட்டிலேயே வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதைக் கூத்துக் கலைஞர்கள் உணர்வுப்பூர்வமாக நடித்துக் காண்பித்துக்கொண்டிருக்கிறார்கள். கூத்துக் கலைஞர்களுடன் சேர்ந்து கூட்டமும் அழுது கொண்டிருக்கிறது.

கூத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது. கடன்பட்ட பர்மிய குடும்பம் வசிக்கும் ஒரு வீட்டிற்கு செட்டியாரும் அவரது ஆட்களும் வருகிறார்கள். கறாரான குரலில் கடனை வட்டியோடு திருப்பிக் கொடு என்கிறார் செட்டியார். என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று செட்டியாரின் கால்களைப் பிடித்து மன்றாடுகிறான் அந்த பர்மியக் குடும்பத்தின் தலைவன். செட்டியாரோ அவனை உதறிவிட்டு வீட்டை ஜப்தி செய்ய தன் ஆட்களுக்கு உத்தரவிடுகிறார். வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் செட்டியாரின் ஆட்கள். அக்குடும்பம் வாழ்வதற்காக சேர்த்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். குடும்பத் தலைவன் அழுதுகொண்டே பார்த்துக்கொண்டிருக்கிறான். பொருட்களைத் தூக்கிக்கொண்டு வருபவர்களை தடுக்க முயலும் அவனின் மனைவியை செட்டியாரின் ஆட்கள் முடியைப் பிடித்து இழுக்கிறார்கள். அதையும்கூட கடன்பட்ட அந்த பர்மியன் அழுதுகொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறான். எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டவர்கள் அவனின் குழந்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிற அந்த மரப்பாச்சி பொம்மையையும் பறிக்க முயல்கிறார்கள். குழந்தை வீறிட்டு அழுகிறது, கொடுக்க மறுக்கிறது. ஆனால் செட்டியாரின் ஆட்கள் பலவந்தமாக பறிக்க முயல்கிறார்கள். அதுவரை எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்து அழுதுகொண்டிருந்த அந்த பர்மியக் குடும்பத்துத் தலைவன் கோபம் கொள்கிறான். தன் குழந்தையின் பொம்மையைக் கூட விட்டுவைக்க மாட்டார்களா இரக்கமற்ற பாதகர்கள் என்று செட்டியாரின் ஆட்கள் மீது பாய்கிறான். கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. "நமது நிலம் நமக்கே சொந்தம்" என்று குரல் எழுப்பியபடியே கோபத்துடன் கலைந்து செல்கிறது.

இந்த கூத்தை மனதில் வைத்துக்கொண்டு அடுத்த பகுதியை வாசியுங்கள்.

*****

சிங்கப்பூர், மலேசியா, சைகோன்(வியாட்நாம்), இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகளில் வியாபாரம் செய்யச் சென்ற தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள செட்டிநாடு மற்றும் செட்டிநாட்டைச் சுற்றி உள்ள மக்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் மியான்மருக்குச் செல்கிறார்கள். "லேவாதேவி" என்று சொல்லப்படுகிற வட்டித் தொழில்தான் செட்டிநாட்டுப் பகுதிகளில் இருந்து சென்ற செட்டியார்களின் முதன்மையான தொழில். "ஆடிக்கு தை ஒரு வருடம்" என்பது இவர்களின் வட்டிக் கணக்கு என்று பேச்சு வாக்கில் சொல்லப்படும் செய்தி. அதாவது ஆடியிலிருந்து தையை ஏழு மாதங்கள் என்றில்லாமல் ஒரு ஆண்டுக் கணக்காக காண்பிப்பார்கள் என்பதுதான் இதன் அர்த்தம். அதாவது அநியாய வட்டி!

இயற்கை வளங்கள் நிறைந்த மண்ணைக்கொண்ட பர்மிய மக்கள் இயற்கையின் மதிப்பில்லா அந்த வளங்களை வியாபார நோக்கத்துடன் அணுகாமல் இயற்கையுடன் ஒன்றிய வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். முறையான நெல் விவசாயம் கூட தெரிந்திராத மக்களாக இருந்திருக்கிறார்கள். எப்படி கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்த பொழுது இங்குள்ள மக்கள் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணினார்களோ அதேபோல பர்மாவிற்குச் சென்ற இந்த செட்டிநாட்டுப் பகுதி மக்கள் பர்மியர்கள் சோம்பேறிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுகிறார்கள். பர்மியர்கள் உழைப்பதற்கு விரும்பாத மக்கள் என்ற அனுமானத்துடன் அவர்களது நிலங்களை நாம் பெற்றால் நாம் விவசாயம் செய்ய முடியும் என்று முடிவு செய்கிறார்கள். எல்லா ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இருக்கிற பொதுவான பண்பு இது.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வியாபாரத்தை ஆரம்பித்தது போல செட்டிநாட்டு மக்கள் பர்மாவில் தங்கள் வட்டித் தொழிலை ஆரம்பிக்கிறார்கள். "ஆடிக்கு தை ஒரு வருடம்" என்கிற கணக்கில் வட்டித் தொழில் சூடு பிடிக்கிறது. வட்டி வாங்கி செலவு செய்ய பர்மிய மக்கள் பழக்கப்படுத்தப்ப‌டுகிறார்கள். வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால் வட்டிக்கு ஈடாக தங்களது நிலங்களை கொடுக்கும் அவல நிலை அந்த மக்களுக்கு ஏற்படுகிறது.

நிலங்களைப் பெற்ற செட்டிநாட்டுப் பகுதி மக்கள் தங்களுக்குத் துணையாக மேலும் பலரை செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து தருவிக்கிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். விவசாயம் செழிக்கிறது. செட்டிநாடு வளம் கொழிக்கிறது. செட்டிநாடு எங்கும் பர்மா காடுகளை அழித்து கொண்டு வரப்பட்ட தேக்குகளால் இழைக்கப்பட்ட வீடுகள் விண் முட்ட எழுந்து நிற்கின்றன.

இந்தச் சூழலில்தான் பர்மிய மக்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நேரத்தில் வன்முறையில் இறங்குகிறார்கள். மேலே சொன்ன தெருக்கூத்தெல்லாம் ஊரெங்கும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தங்களது சொத்துகளை மீட்கும் பொருட்டு உச்சபட்சமாக கொலை கூட செய்கிறார்கள். நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருந்த செட்டியார்கள் போட்டதை போட்டபடி உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்து தமிழகம் வருகிறார்கள் அவர்களோடு வேலைக்குச் சென்ற மற்றவர்களும் தப்பித்து ஊர் வந்து சேர்கிறார்கள்.

இவையெல்லாம் வரலாறு. இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் போட்டபடி போட்டுவிட்டு வந்த அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மறுபடியும் மீட்கிறோம் என்று ஒரு கூட்டம் கிளம்பி இருப்பதுதான்.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்தது. அவர்களுக்குத் துணையாக இங்கிலாந்து அரசு வந்தது. முடிவில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தார்கள் . இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது செட்டிநாட்டுப் பகுதி மக்களின் பர்மிய ஆக்கிரமிப்பு. பர்மா இங்கிலாந்து அரசின் ஆளுமைக்கு கீழ் வந்த பிறகு  இவர்கள் பர்மாவிற்கு வியாபாரம் செய்யக் கிளம்புகிறார்கள். ஆனால் பர்மாவிற்கு வியாபாரம் செய்யச் சென்ற இவர்களுக்கும் இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனிக்கும் நோக்கம் ஒன்றுதான். அந்தந்தப் பகுதிகளில் உள்ள பூர்வகுடி மக்களின் வளங்களை சுரண்டுவதுதான். இதற்கு சட்டப்பூர்வமான பெயர் வியாபாரம்!

உலகெங்கும் இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத்தான் பூர்வகுடிகள் போராடி தங்கள் மண்ணை மீட்டெடுக்கிறார்கள். இத்தகைய போராட்டங்கள்தான் உலகம் முழுவதும் நடக்கிற விடுதலைப் போராட்டங்கள். நாம் கிழக்கிந்திய கம்பெனியையும் இங்கிலாந்து அரசையும் விரட்டி நமது மண்ணை மீட்டெடுத்தோம். அதேபோல பர்மியர்களும் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அவர்களது மண்ணை மீட்டெடுத்தார்கள்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் கிழக்கிந்திய கம்பெனி முதலாளிகளின் வாரிசுகள் 2013ல் திரும்பி வந்து எங்களது பாட்டனார்கள் இங்கே சொத்துகளை வைத்திருந்தார்கள், எங்களுக்கு இங்கே இடமிருந்தது திருப்பித் தாருங்கள் என்று கேட்டால் திருப்பிக் கொடுப்போமா? ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்திருந்த மன்னர்களின் உடைமைக‌ளையே நாட்டுடைமையாக மாற்றி வைத்திருக்கிறோம். பிறகு எப்படி வெள்ளைக்கார முதலாளிகளின் வாரிசுகளுக்கு கொடுப்போம்? அதேபோல மியான்மரிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட செட்டிநாட்டு மக்கள் மியான்மருக்குத் திரும்பிச் சென்று இவையெல்லாம் எங்கள் இடம், எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று கேட்பது மட்டும் எவ்வகையில் நியாயம்? அநீதியானது இல்லையா? இந்த அநீதியான செயலைச் செய்வதற்குத்தான் இங்கு சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தலைமை தாங்குவது மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். இவர்களுக்குப் பெயர் முதலீட்டாளர்கள்!

"சொத்துக்களை மீட்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு போனால், யாரையும் பர்மாவுக்குள் நுழைய விட மாட்டார்கள். அதற்காகத்தான் முதலீட்டாளர்கள் குழு என்று மாற்றினோம்” என்று வெளிப்படையாகவே சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். இப்படி உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்து மியான்மருக்குள் செல்பவர்கள் எப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அந்த சொத்துக்களைத் திரும்பப் பெற முடியும் என்கிற ஐயம் இயல்பாகவே எழுகிறது.  சுதர்சன நாச்சியப்பன் சொல்வதைப் பார்க்கும்பொழுது மியான்மரில் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடப் போகிறார்கள் என்பது புலனாகிறது.

தங்களது மண்ணை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்களைத்தான் பர்மிய மக்கள் விரட்டினார்களே ஒழிய சாதாரண உழைக்கும் மக்களை அல்ல. நிலங்களை ஆக்கிரமிக்காமல் நகர்ப்புறங்களில் குடியேறிய உழைக்கும் மக்கள் இன்றும் மியான்மரில் எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் பர்மியத் தமிழர்களாக மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார்கள்.

ஒரு பூர்வகுடி மக்களின் மண்ணைக் களவாட முயல்பவர்கள் உலகத்தில் உள்ள மற்ற பூர்வகுடி தேசிய இனங்களின் உரிமைப் போர்களுக்கு எதிரானவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பதை வரலாறு முழுவதும் காண்கிறோம். இவர்கள் வியாபாரிகள், ஆக்கிரமிப்பாளர்கள். இவர்களது நோக்கம் பணம் ஒன்றுதான். இதனால்தான் ஈழம் எரிகிற பொழுது கூட ஈழ ஆக்கிரமிப்பாளர்களுடன் சுதர்சன நாச்சியப்பன் போன்றோர் தோளோடு தோள் கொடுத்து இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தார், இன்றும் தொடர்கிறார். ஆகையால் பூர்வகுடி தேசிய இனங்களின் உரிமை பற்றி பேசுபவர்கள் அனைவரும் சுதர்சன நாச்சியப்பனின் இந்த முயற்சியைக் கண்டிக்க வேண்டும். தமிழர் பெருமை, தமிழுணர்வு என்கிற பெயர்களில் தமிழ் மக்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போய்விடக் கூடாது. பர்மியர்களின் சொத்து பர்மியர்களுக்கே என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சரி இதில் கவனிக்க வேண்டிய சமகால அரசியல் நகர்வுகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

1. இராணுவ ஆட்சியில் மக்களின் சுதந்திரம் பறி போகிறது என்பதனால் பர்மிய மக்கள் போராடி தேர்தல் ஜனநாயகத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிற நேரம் இது. இராணுவ ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நிலங்களைக் கையகப்படுத்த முனையாத அந்நியர்கள் ஜனநாயக ஆட்சி ஏற்படப் போகும் சூழலில் அம்மக்களின் நிலங்களை கையகப்படுத்த முதலீட்டாளர்கள் என்கிற வேடத்தில் உள்ளே நுழைய முயல்கிறார்கள் என்பதைக் காணும் பொழுது இந்த தேர்தல் ஜனநாயக அரசியல், முதலீடு என்கிற மாயை போன்றவை மக்களைச் சுரண்டுவதற்குத்தான் பயன்படுமோ என்கிற ஐயம் எழுகிறது.

2. நான்கு ஆண்டு காலமாக இரகசியமாக நடந்துகொண்டிருந்த இந்த நடவடிக்கைகளை தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வு மேலோங்கி இருக்கிற இந்த நேரத்தில் ஊடகத்தில் வெளியிடுவதன் மூலம் பர்மாவில் தமிழர்கள் அநியாயமாக தங்கள் நிலங்களை இழந்தது போலவும், அவைகளை மீட்டெடுப்பதற்கு ஒரு தமிழர் படை கிளம்ப போவது போலவும் பிம்பத்தை கட்டமைத்து தமிழ்த் தேசிய உணர்வை தங்களது ஆக்கிரமிப்பு முயற்சிக்கு துணை சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் சுதர்சன நாச்சியப்பனோ அவரின் பின்னால் அணி வகுப்பவர்களோ எக்காலத்திலும் தமிழர் சுயநிர்ணய அரசியலுக்கு துணை நிற்காதவர்கள். தமிழ்த் தேசிய உணர்வு என்பது தமிழர்களின் சுயநிர்ணயித்திற்குத்தானே தவிர இன்னொரு தேசிய இனத்தை ஆக்கிரமிப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

3. உச்சபட்சமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல சுதர்சன நாச்சியப்பனுக்கு இந்த நடவடிக்கையின் மூலம் இரட்டைப் பலன்கள். ஒன்று இந்த நடவடிக்கை வெற்றி பெற்றால் கிடைக்கப் போகிற பணம். மற்றொன்று இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த செட்டியார் இன மக்களின் ஒரே பிரதிநிதி என்பது போல வலம் வருகிற நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை தனக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்வது. இது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் சிதம்பரத்துக்கு எதிராக அரசியல் செய்து வரும் சுதர்சன நாச்சியப்பனுக்கு எதிர்காலத்தில் உதவக் கூடும் என்கின்ற கணக்கு ஆகும்.

- க.பாண்டியராசன், சிவகங்கை மாவட்ட மதிமுக இளைஞரணிச் செயலாளர், (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 9952291651)

Pin It