மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி பயனீட்டாளா்களின் நலனை பாதுகாக்கிறது என்பதனை புரிந்து கொள்வது பயனீட்டாளா்களுக்கு அவசியமாகிறது. ஏனெனில் ஆணையம் கேள்வியே கேட்க முடியாத அமைப்பு?.

கடந்த ஜனவரி 2012ல் வாரியம், குறுகிய கால மின் கொள்முதலுக்கு (ஓராண்டுக்குட்பட்டது) ஒப்பந்தப்புள்ளி கோரியது. வெளிமாநில மின் உற்பத்தியாளர்கள், யூனிட் ரூபாய் நான்கிலிருந்து ஐந்து ரூபாய் வரை கோரியிருந்தனர். தமிழகத்தில் உள்ள உற்பத்தியாளர்கள் யூனிட் ரூ 6.28லிருந்து ரூ 6.40 வரை கோரியிருந்தனர். இரண்டுக்கும் இருந்த இடைவெளி இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இருந்தது. தமிழக உற்பத்தியாளா்களின் ஒருங்கிணைப்பாளரான “இந்துபாரத்” ஒரு வழக்கை தொடுத்து தடையுத்திரவும் பெற்றது. வாரியம் தமிழக உற்பத்தியாளா்களிடமிருந்து தனியாக மற்றொரு ஒப்பந்தப் புள்ளியையும் கோரியது. இதற்கான இறுதி தேதி 22-3-012 என நிர்ணயித்தது.

இந்துபாரத்தும் அதன் துணை நிறுவனங்களுமே தோராயமாக 400 மெகாவாட் அளவுக்கு விற்க இருந்தன. 26-3-2012ல் “இந்துபாரத்” தன் வழக்கைத் திரும்ப பெற்றுக்கொண்டது. உடனே 27-3-2012 அன்று இரண்டாவது ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டு அதே 6.28லிருந்து 6.40 வரை விலையேற்கப்பட்டது. முதலாவது ஒப்பந்தப் புள்ளியில் வெளிமாநில மின்சாரமாக தோரயமாக 13,000 மில்லியன் யூனிட்டும் தமிழக கொள்முதலாக 6833 மில்லியன் யூனிட்டும் கொள்முதல் செய்ய முடிவுசெய்தது வாரியம். 30-3-2012ல் தமிழகத்தில் மின்கட்டண உயா்வை அறிவித்து உத்திரவிட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதன் உத்திரவில் 70.840 மில்லியன் யூனிட்டே போதுமானது என்றும், இதில் கொள்முதல் யார், யாரிடம் என்ன விலைக்கு என்பதனையும் நிர்ணயித்தது ஆணையம். அதே நேரத்தில், வாரியம் நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தம் செய்திருந்த GMR, PPN, சாமல்பட்டி பவா், மதுரை பவா், இவா்களிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் அவசரத் தேவைக்காக 2000 மில்லியன் யூனிட் ரூ. 4-க்கு மிகாமல் கொள்முதல் செய்துகொள்ளவும் அது அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு மேலும் மின்கொள்முதல் தேவைப்படுமானால், ஒருவார காலத்திற்குள் ஆணையத்தை அணுக வேண்டுமெனவும் உத்திரவிட்டிருந்தது.

ஆனால், உத்திரவிட்ட நாளிலிருந்தே வாரியம் மேலே குறித்த நான்கு ஒப்பந்ததாரா்களிடமிருந்து யூனிட் ரூ. 8.52லிருந்து ரூ.13.99 விலையில் மின்சாரம் வாங்கிக்கொண்டிருந்தது. வாரியத்தின் மின்கட்டமைப்பின் கட்டுப்பாட்டு தகவல்கள் இணையாகவே ஆணையத்தின் தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆணையம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

இப்பொழுது ஒப்பந்தப் புள்ளிக்குத் திரும்புவோம்.இந்த மின்கொள்முதல் ஜூன் மாதம் தொடங்கி (2012) அடுத்தாண்டு மே மாதம் (2013) வரைக்குமானது. மார்ச் மாதத்தில் ஒப்பந்தப் புள்ளிகளை தீர்மானித்த வாரியம் மே மாதத்திலேயே, ஆணையத்தின் ஒப்புதலுக்கு மனு செய்தது. 21-5-2012ல் அனுமதி கோரும் PPAP 2/2012, என வெளி மாநில கொள்முதலுக்கும், PPAP 3/2012, என தமிழக கொள்முதலுக்குமான மனுக்கள் விசாரணைக்கு வந்தன‌. மேற்படி நமது அமைப்பின் (தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு) சார்பில், ஆஜராகி இக்கொள்முதல் விலை அதிகம், இக்கொள்முதல் மின்சாரத்தின் விலையைக் கடுமையாக பாதிக்கும் எனவே இது மக்கள் மன்றத்தில் கருத்துக் கேட்புக்காக வைக்கப்படவேண்டுமென வேண்டுகோளை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்தோம்.

இந்த விலைக் கொள்முதலுக்கு வாரியம் ( Full Board) ஒப்புதல் பெறப்பட்டதா என்ற கேள்வியை ஆணையம் எழுப்பியது. ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின் (Full Board) ஒப்புதலுக்கு வைக்கப்படுமென வாரியத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அனுமதித்தவுடன், இதனைச் சொல்லி வாரிய அனுமதியைக் கேட்பீர்கள். எனவே வாரிய அனுமதியோடு வர ஆணையம் உத்திரவிட்டது.

உடனே இந்துபாரத் உயா்நீதிமன்றத்தில் தங்கள் மின்சாரத்தை விற்க முடியவில்லையென வழக்கு தொடுத்தது. வாரியத்தின் மனுக்களான PPAP 2/13, PPAP 3/13 ம், மின்சாரச் சட்டம் 62(1) ன் பிரிவின் கீழும் அனுமதிக்க கேட்டிருந்தது. இந்து பாரத்தின் வழக்கு பிரிவுகளைக் குறிப்பிடவில்லை. ஆனால் வாரியத்தரப்பில், ஆஜாரான அட்வகேட் ஜெனரல், பிரிவு 63ன் படி ஆணையத்தின் ஒப்புதல் தேவையில்லையென்று தெரிவித்திருந்தார். உயா்நீதிமன்றம், 30-6-2012க்குள் கொள்முதல் குறித்து முடிவெடுக்க உத்திரவிட்டது. வாரியத்தின் ( Full Board ) கடந்த ஆண்டைப்போல (2011-12) ரூ. 5.05க்கு கொள்முதல் செய்யவும், மீண்டும் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்தது 29-6-2012ல் மீண்டும் ஆணையத்தின் விசாரணைக்கு வந்தபொழுது நாம் தமிழக மின்கொள்முதல் விலையை( PPAP 3/2012) அதிகம் எனவும், எரிவாயுவைப் பயன்படுத்தும் அபான், பென்னா நிறுவனங்களிடமிருந்து யூனிட் ரூ. 3.22, ரூ. 3.43க்கு கொள்முதல் செய்யும்பொழுது அதே போன்ற எரிவாயு நிலையங்களிலிருந்து 6.40 என்பது ஏற்ககூடியதல்ல எனவும் தெரிவித்தோம். அதே போல நிலக்கரியை எரிபொருளாக கொண்ட பிற மாநில மின்சாரம், தமிழக எல்லையில் ரூ. 5க்கு கீழாக தரப்படும்பொழுது தமிழக நிலக்கரி மின்சாரம் 6.40 என்பது நியாயமான விலையல்ல எனவும் தெரிவித்தோம்.

“உயா்நீதிமன்றத்தில் பிரிவு 63ன் கீழ் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக வாரியம் சொல்லியிருக்கிறது. ஆனால் மனுவில் 62(1) யையும், 63 பிரிவையும் சொல்லியிருக்கிறீர்கள். எனவே எந்தப் பிரிவின் கீழ் வழக்காக பதிவுசெய்யப் போகிறீர்கள்? இந்த இரண்டு பிரிவுகளுக்கு கீழும் ஒரு மனு தாக்கல் செய்ய முடியாது" என வாரியத்தை ஆணையம் கேள்வி கேட்டது. எனினும் ஜீன் மாதத்தில் மட்டும் யூனிட் ரூ. 5.05க்கு கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்கியது ஆணையம்.

மீண்டும் 10-8-2012ல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றும் பங்கேற்றோம். பிரிவு 62(1) அல்லது பிரிவு 63 என்ற முடிவில்லாத நிலையில் வழக்கு தள்ளிப்போனது. இதன் சாரத்தில் உள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டிய நாம், கொள்முதல் பிரச்சனையல்ல ஆனால், கொள்முதல் விலையே பிரச்சனையென்பதனைத் தெளிவுபடுத்தி கடிதம் எழுதினோம். வழக்கில் நம்மையும் சேர்த்துக் கொள்ள உள்முறையீடு (Implending ) மனுவையும் தாக்கல் செய்தோம்.

நமது மனு 28-9-2012ல் விசாரணைக்கு வந்தது. நமது வேண்டுகோளை வாரியம் எதிர்த்தது. மனு 63ன் கீழே பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தது. ஆனால் ஜீன் மாதத்திற்குப் பிறகும், தமிழக கொள்முதல் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. ஆணையம் இதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், கொள்முதல் ஆணையத்திற்கு தெரிந்தே இருந்தது. ஒரு வாரத்திற்குள் அனுமதி வாங்கவேண்டுமென 30-3-2012ல் உத்திரவிட்ட ஆணையம், எந்த கேள்வியும் எழுப்பவில்லை.

நமது குறுக்கீடு வந்தவுடனே, தமிழக உற்பத்தியாளா்கள், தங்கள் விலையை ரூ. 6.40 லிருந்து ரூ. 5.50க்கு குறைத்துக் கொண்டார்கள். இந்த ரூ. 5.50 விலையிலேயே கொள்முதல் தொடா்ந்தது.

இறுதியாக நமது மனுவை அனுமதிக்கும் விசாரணை 13-12-2012ல் எடுத்துக்கொள்ளப்பட்டது. வாரியம் பிரிவு 63னையே வலியுறுத்தி, ஆணையம் ஒப்பந்தவிலையில் தலையிட முடியாது என்று தெரிவித்தது. நமது தரப்பில் பிரிவு 63ன் படி எடுத்துக்கொள்ள வேண்டுமானால், குறுகிய கால கொள்முதலுக்கு மத்திய அரசின் வழிகாட்டு உத்திரவு அவசியம். இதனைச் சொல்லித்தான் பிரிவு 63 ஆணையத்தின் அனுமதி தேவையில்லை எனச் சொல்லுகிறது. ஆனால் குறுகிய கால (ஓராண்டுக்குள்ளானது) கொள்முதலுக்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறி 15-5-2012ல் தான் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொள்முதல் அளவையும், விலையையும் ஆணையம் ஒப்பந்தப்புள்ளி வழங்கும் முன் தீர்மானித்து தரவேண்டும். இந்த வழக்கில் ஒப்பந்தப்புள்ளி 27-3-2012லேயே ஆணையத்தினை கேட்காமலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே மனு பிரிவு 63ன் படியானால், இது அனுமதிக்கு தகுதியானதல்ல ( Unsustainable ) என வாதிட்டோம். உத்தரவு பின்னா் வழங்கப்படுமென ஆணையம் தெரிவித்தது.

ஆனால் 13-12-2012க்குப் பிறகு கொள்முதல் காலம் முடியும்வரை நமது மனு மீதான உத்திரவு வழங்கப்படவேயில்., வாரியமும், மின் உற்பத்தியாளா்களும் எந்த தடங்கலும் இல்லாமல், தங்கள் வணிகத்தை நடத்தி முடித்தார்கள்.

இடையில், மின்சார வாரியம், மின்கட்டணம் பட்டியலுக்கான மனுவினை சமா்பித்தது. அதில் 9.845 மில்லியன் யூனிட் ரூ. 3.12 வீதம் குறுகிய கால கொள்முதல் செய்துள்ளதாக சொல்லியிருந்தது. நாம் இது தவறானத் தகவல் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தோம். வெளி மாநிலக் கொள்முதல் ரூ. 4 தொடங்கி ரூ. 5 எனவும், தமிழக உற்பத்தியாளர்களிடம் ரூ.5.50 எனவும் கொள்முதல் செய்திருக்கும் போது எஞ்சிய மின்சாரம் 85 பைசாவுக்கே கொள்முதல் செய்திருந்தாலேயே இது சாத்தியம் என்றும் மக்கள் மன்றத்தில் வைத்தோம். மின்கட்டண உத்திரவு 20-6-2013 வெளியிடப்பட்டது. நமது உள்முறையீடு ( Implending ) மனு உத்திரவிடப்படாமலேயே இருந்தது.

12-7-2012 அன்று இந்தக் கட்டுரையாளன் ஆணையத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில ஆவணங்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டான். மாலை 4.30 மணியளவில் பணிமுடிந்து திரும்பும்பொழுது, 15-7-2013 தேதிக்கான வழக்கு பற்றிய அறிவிக்கை நேரிடையாக வழங்கப்பட்டது. அதில் PPAP 3/2012 எனவும், மனுதார‌ரான வாரியம் மட்டுமே குறிக்கப்பட்டிருந்தது. நமது உள்முறையீட்டு மனுவோ, மனுதாராக நமது இயக்கமோ குறிக்கப்படவில்லை. நாங்கள் மனுதார‌ராக இல்லாத போது எதற்காக அறிவிக்கை தரப்படுகிறது என்ற கேள்வியைம் எழுப்பினாலும் பதில் சொல்வார் யாருமில்லை. என்றாலும் அறிவிக்கையைப் பெற்றுக் கொண்டோம். 13,14-7-2013 சனி, ஞாயிறானதால் ஆணையத்திற்கு விடுமுறை.

15-7-2013 காலை 11 மணியளவில் கட்டுரையாளனுக்கு தொலைபேசி மூலமாக, நமது மனுவின்மீது உத்திரவிடப் போவதாகவும், நாம் வரவேண்டுமென்றும் ஆணையத்தின் சார்பில் சொல்லப்பட்டது. நான் கோவையில் இருப்பதால் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதனைத் தெரிவித்தேன். ஆணையம் 15-7-2013 தேதியிட்டு வழக்கு பட்டியலையும், அதில் நமது இயக்கத்தின் எனது பெயரையும் குறித்திருக்கிறதை, வலைதளத்தில் காணமுடிந்தது.

தீர்ப்பு என்ன? எந்த அனுமதியும் இல்லாமலேயே, கொள்முதல் செய்ய அனுமதித்துவிட்டது ஆணையம். மொத்தமாக எல்லா கொள்முதலையும், மின்சார கட்டண உயா்வில் அனுமதித்தாயிற்று. இனி எஞ்சியது சாம்பல் மட்டுந்தான். அதனை 15-7-13ல் நம்மை கலந்து கொள்ளாவிடாமல் செய்து கரைத்தது ஆணையம்.

மின்கட்டண மனுமீதான நமது கருத்து மின்னஞ்சல் மூலமாக வந்தது என்பதற்காக ஒதுக்கிவிட்டதாக சொல்லியது ஆணையம். மனுதாருக்கு தெரிவிக்காமலேயே ஆணையையும் வழங்கியுள்ளது. காற்றில் பறந்தது என்னவோ மக்கள் நலன் தான்.

6833 மில்லியன் யூனிட்(683.3 கோடி) கொள்முதலில் நமது தலையீட்டால் யூனிட் 6.40 லிருந்து ரூ. 5.50க்கு குறைந்தது. இதனால் வாரியத்திற்கு 615 கோடி கொள்முதல் செலவீனத்தில் குறைந்திருக்க கூடும்.

நம்மால் இதுமுடியுமென்றால், ஆணையம் செயல்பட்டிருந்தால்….?
ஆனால்….,

…இப்படியாகச் செய்தது ஒழுங்குமுறை ஆணையம்.

- சா.காந்தி, தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111

Pin It