வல்லபாய் பட்டேல் சிறந்தவரா அல்லது நேரு சிறந்தவரா, வல்லபாய் பட்டேல் ஆளுமை மிக்கவரா அல்லது நேரு ஆளுமை மிக்கவரா போன்ற விவாதங்கள் தொலைக்காட்சிகளில் மிகவும் காரசாரமாக விவாதிக்கப் படுகின்றன. இதன் மூலம் மக்களை இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் நம்மை கட்டாயப்படுத்துகின்றனர்.

நீங்கள் வல்லபாய் பட்டேலை ஏற்றுக்கொண்டால் பாஜகாவையும், சங் பரிவாரங்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக கொலைவெறியன் மோடியையும் எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொள்ளவேண்டும். அதே போல நேருவை ஏற்றுக்கொண்டால் காங்கிரசையும் அதன் அழுகி நாறும் ஊழல்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் மக்களின் கருத்தியல் தளத்தில் பாஜக, காங்கிரசு ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர வேறு மாற்று இல்லை என்ற சூழ்நிலையை ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன.

பாஜகவால் முன்னிறுத்தப்படும் பட்டேலும், காங்கிரசால் முன்னிறுத்தப்படும் நேருவும் வரலாற்றில் வகித்த பாத்திரத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள இந்த சூழ்நிலையில் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தியாவின் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்ததாக மாற்றியமைத்ததிலும், இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெறும் தேசிய இனப்போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்தவர்கள் நேருவும், பட்டேலுமே.

நேருவும், பட்டேலும் தீவிரமான வல்லரசு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1948 டிசம்பரில் காங்கிரசினால் அமைக்கப்பட்ட மொழிவாரி பிரதேசக்குழு "இந்திய ஒற்றுமை, பாதுகாப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காகப் பிரிவினை மற்றும் சீர்குலைவுச் சத்திகள் அனைத்தும் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டுமென்று" கூறியது. அப்போது இந்தியாவின் பெரும்பகுதி சந்தையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மார்வாரி குஜராத்தி முதலாளிகளின் நலனைக் காக்க இந்தியை தேசிய மொழியாக கொண்டுவரவும் இந்தக் கும்பல் முயன்றது (இந்தக் குழுவில் நேருவும் பட்டேலும் இருந்தனர்)

இந்திய பெருங்கடல் பிரதேசத்தை அரசியல் ,பொருளாதார ரீதியில் மேலாதிக்கம் செலுத்த எப்போதும் நேரு, பட்டேல் கும்பல் முயன்று வந்தது. இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக நேரு கருதினார். இந்தியக் கூட்டமைப்பின் சுயாட்சி பெற்ற அலகாக அது இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

காங்கிரசு, பாஜக கும்பலின் தமிழின விரோதப் போக்கிற்கும் இலங்கையில் மேலாதிக்கம் செய்வதற்குமான அரசியல் தளம் அன்றே இடப்பட்டு விட்டதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

மேலும் "பெயரளவிற்கு சுதந்திர நாடக இருப்பினும் நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதிதான்" என்று நேரு கூறினார். அன்றில் இருந்து இன்று வரை நேபாளாத்தில் இந்திய அரசு செய்துவரும் அயோக்கியத்தனங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

1950 நவம்பர் 7ஆம் நாள் பட்டேல் அவர்கள் "வடக்கு, வடகிழக்குப் பகுதியிலுள்ள வரையக்கப்படாத எல்லையும் நமது பகுதிலுள்ள மக்களின் திபெத்திய –சீன சேர்க்கையும் நமக்கும், சீனாவிற்குமிடையே பிணக்கை உருவாக்கும் திறன் கொண்டவைகளாகும். நமது வடக்கு, வடகிழக்குப் பகுதிகளான நேபளாம், பூட்டான், சிக்கிம், டார்ஜிலிங் பகுதி, அஸ்ஸாமின் மலை ஜாதி பகுதிகளிலுள்ள மக்கள் இந்தியாவிற்கான அர்ப்பணிப்பையோ, விசுவாசத்தையோ கொண்டிருக்கவில்லை" என்று நேருவுக்கு எழுதினார். மேலும் "வருங்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் பாதுகாப்பை வலுப்படுத்தும் சாக்கில் இந்தியாவின் மேலாதிக்கம் நேபளாம், சிக்கிம், பூட்டான், டார்ஜிலிங், அஸ்ஸாம் பழங்குடியினர் பிரதேசம் முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும்" என்று கூறினார்

இந்தப் பகுதிகள் இந்திய அரசுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதில் பட்டேலின் பங்கு மிகப்பெரியதாகும். தேசிய இனப்போரட்டங்களால் இன்றும் இப்பகுதிகள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசு தனது கடுமையான இராணுவ ஒடுக்குமுறைகள் மூலம் தேசிய இனப் போரட்டங்களை ஒடுக்கிவருகின்றது.

இப்படிப்பட்ட பட்டேலை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்ட மோடியும், பாஜகவும் தனித் தமிழீழத்தை பெற்றுத்தருவார்கள் என்று இங்குள்ள தமிழினவாதிகள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலே முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

காஸ்மீர் மக்களுக்கு நேருவும் பட்டேலும் செய்த துரோகங்கள் வரலாற்றால் மறக்கப்பட முடியாதவை. அங்கே இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் பிணங்களுக்குப் பின்னால் நேரு, பட்டேல் போன்ற ஏகாதிபத்திய வெறி பிடித்த பாசிஸ்டுகளின் செயல்படுகள் உள்ளன‌.

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக செயல்பட்ட நேரு '1949-1950-ல் திட்டக்குழு முன்னிலையில்' தொழிற்துறையில் இந்தியாவை மாபெரும் வளர்ச்சிடையச் செய்ய வேண்டியது என்பது தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொறுப்பாகும். தென் கிழக்கு ஆசியாவின் நெருக்கடி சூழ்நிலைக்கு அது தேவைப்படுகிறது என்றும் புவிக்கோளத்தின் இப்பகுதியில் எழுச்சியுற்றுள்ள கம்யூனிச அலையை அரணாக நின்று நிறுத்த இந்தியா ஒரு வலுவான நாடாக இருக்க வேண்டும்”என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நேரு தன்னை ஒரு நாத்திகவாதியாக காட்டிக்கொண்டாலும் அடிப்படையில் பார்ப்பனியத்தை விரும்புகிறவராகவே இருந்தார். இடஒதுக்கீட்டை மிகக்கடுமையாகவே எதிர்த்தார். 1961‍ ஜூலை மாதம் மாநில முதலச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார். மேலும் இரண்டாந்தர மனிதர்களைக் கொண்டு நமது பொதுத்துறையையோ அல்லது வேறெந்தத் துறையையோ நாம் நிர்வாகிக்க முடியாது என்று கூறினார். நேருவின் இந்த முடிவால் அன்றில் இருந்து இன்றுவரை பொதுத்துறை மற்றும் பிற துறைகளில் பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகின்றது.

நேரு எப்போதும் மதவாதிகளிடம் சரணாகதி அடையும் போக்கையே கடைபிடித்தார். அவர் பிரதமராக இருந்தபோதுதான் 1949 டிசம்பர் 22-23 ஆம் தேதி இரவில் பாபர் மசூதிக்குள் இராமர் சிலை வைக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தில் அந்த சிலை அகற்றப்படவே இல்லை.

காந்தி கொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டே ஆண்டுகளில் நீக்கப்பட்டது. நேரு இதைப்பற்றி எப்போதும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

காந்தியின் மரணத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆஸாத், ஜெயபிரகாஷ்நாராயணும், பி.ஜி.கோஷிமும் பட்டேலை பகிரங்கமாகவே கண்டனம் செய்தனர். ஆனால் நேரு அரசாங்கம் வல்லபாய் பட்டேலிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தியதாகத் தெரியவில்லை. காந்தியின் கொலையில் பட்டேலுக்கு உள்ள தொடர்பைப் பற்றி வலுவான ஆதரங்கள் இருந்தும் நேரு அதைப் பற்றி கவலைப்படவில்லை.

வல்லபாய் பட்டேல் காங்கிரசில் இருந்தாலும் அவரது சொல்லும் செயலும் அவர் ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதையே காட்டியது.

6/01/1948 இல் கோல்வால்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நாட்டினை நேசிக்கும் தேசபக்தர்கள் என்று கூறுகிறார். மேலும் ஆர்.எஸ்.எஸ்.சை காங்கிரசுடன் இணைப்பதற்கு அவர் பல முறை கோல்வால்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். "காங்கிரசில் சேர்வதன் மூலமே ஆர்.எஸ்.எஸ். மனிதர்கள் தங்களது தேசபக்த முயற்சிகளை மேற்கொள்ள முடியுமே தவிர தனியாக இருப்பதன் மூலமும் காங்கிரசை எதிர்ப்பதன் மூலமும் அல்ல" என்றார். ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டபோது அதன் அமைப்பு விதிகளை போலியாக மாற்றி எழுதி அதன் மீதான தடையை நீக்குவதற்கு பேருதவி புரிந்தார்.

மோடிக்கு பட்டேலை பிடிப்பதற்கு இதுவே காரணம். பட்டேல் காங்கிரசில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதுவே.

நேருவாகட்டும் பட்டேலாகட்டும் இருவருமே பார்ப்பன பாசிசத்தின் வெவ்வேறு முகங்கள் என்பதுவே உண்மை. இருவருமே ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள். இந்திய பாட்டாளி வர்க்கத்தின் விரோதிகள்.

காங்கிரசையும், பாஜகாவையும் தமிழினத்தின் நலம்விரும்பிகள் போல காட்ட முற்படும் அயோக்கியர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்துவோம். இவர்களுக்காக ஓட்டு கேட்டு வரும் ஓடுகாலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம். இது பெரியார் பிறந்த மண் என்பதை அவர்களுக்கு உரக்கச் சொல்வோம்.

Pin It