2009ல் ஈழத்தமிழர்கள் 1,46,679 பேரை இனப்படுகொலை செய்த இலங்கை மண்ணில் வரும் நவ.10முதல் நவ.17வரை காமன்வெல்த் மாநாடு எனப்படும் இங்கிலாந்தின் காலணி நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. தமிழர்களை இனப்படுகொலை செய்துவிட்டு அங்கு மாநாடு நடத்துவதா என உலகத்தமிழர்கள் அனைவரும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்று வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் பொழுது சந்தடிசாக்கில் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மொத்தமாக தமிழர்களின் கோரிக்கையைப் புறந்தள்ளும் விதமாக புதிய சூழ்ச்சிக் கோரிக்கையை டெசோ அமைப்பு முன்வைத்தது.

இந்த சூழ்ச்சிக் கோரிக்கையை மேலும் சூழ்ச்சிதனமாக இந்தியாவின் தலைமை அமைச்சர் கலந்துகொள்ளக்கூடாது என்று சிலர் வேண்டுமென்றே விஷமத்தனமாக அறிவித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதை எதிர்த்து கோரிக்கையை ஏன் மாற்றுகிறீர்கள் என்று மே 17 இயக்கம் உட்பட பலரும் கேட்டபொழுது வழக்கம்போல அவதூறை அள்ளி வீசுகினார்களே தவிர கேட்ட கேள்விக்கு இதுவரை நேர்மையான பதில் சொல்லாமல் கள்ளமவுனம் காக்கிறார்கள்.

இது இப்படியிருக்க திடீரென்று இப்பொழுது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தாதே என்ற கோரிக்கையும்,இந்தியா அதில் கலந்து கொள்ளக்கூடாது என்பதும் முரணானது இல்லை, இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான் என்று புது விளக்கம் வேறு சொல்லுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த கோரிக்கை சரி என்றுதான் தோன்றும். சற்று உள்சென்று பார்த்தால் தான் தெரியும் இதில் உள்ள வேறுபாடுகளும் சூழ்ச்சிகளும்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடக்கவிடாமல் செய்தால் எதையெல்லாம் நாம் தடுக்க முடியும்.?

1.இராசபக்சே 54 நாடுகளுக்கும் தலைவராவதைத் தடுக்க முடியும்.

 இந்த மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இனப்படுகொலையாளி இராசபக்சேதான் இந்த 54 நாடுகளுக்கும் தலைவராக இருப்பான் என்பது இந்த மாநாட்டின் விதி. இதன்மூலம் இனப்படுகொலையாளி இராசபக்சே சர்வதேசத்தின் முன் புனிதர் பட்டத்துடன் வலம்வருவான். ஒருவேளை இந்த மாநாடு அங்கு நடக்கவில்லையென்றால் இந்த அவலத்தை நாம் தடுக்க முடியும்.

2.இலங்கையில் குவியவிருக்கும் முதலீடுகளையும் அதன்மூலம் நடக்கவிருக்கும் சூழ்ச்சிகளையும் தடுக்க முடியும்.

இந்த காமன்வெல்த் மாநாட்டின் ஒரு பகுதியாக நவ 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கவிருக்கும் காமன்வெல்த் முதலீட்டாளருக்கான மாநாட்டின் மூலம் (commonwealth business forum 2013) இலங்கையில் பெருமளவு முதலீடு இன்னும் சில ஆண்டுகளில் குவியும். அதற்கு ஏதுவாகத்தான் world trade Organisation(WTO)வும் இலங்கைக்கு ஆசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடமாக மூன்றாவது இடத்தையும், உலகிலேயே சிறந்ததாக 81ஆவது இடத்தையும் கொடுத்திருக்கிறது. இதில் ஆசியாவிலேயே பெரிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு முறையே 132 மற்றும் 91ஆவது இடத்தைக் கொடுத்திருக்கிறது. 

மேலும் இந்த மாநாட்டின் மூலம் காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளும், எங்குமில்லாத கொடுமையாக காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத நாடுகளான சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு இலங்கையில் முதலீடுகளை கொட்டப்போகின்றன. உதாரணமாக

  • ஆஸ்திரேலியா அரசு இலங்கையில் சுமார் $350மில்லியன் மற்றும் $750 மில்லியன் அமெரிக்க டாலரில் கேளிக்கை விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா போன்ற பல கட்டுமானங்களை கட்டப் போகிறது.http://uk.reuters.com/article/2013/09/12/srilanka-packer-casino-idUKL3N0H82O620130912 

இப்படி பல நாடுகளின் நிறுவனங்கள் இப்பவே முதலீடுகளுக்கான திட்டத்துடன் இருக்கையில் இந்த மாநாடு மட்டும் நடைபெறுமாயின் மேலும் பல லட்சம் கோடிகளுக்கான முதலீடுகள் இலங்கையில் குவிந்து தனது இரத்தக்கறை படிந்த இனக்கொலை கறையை இந்த நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசு மறைக்கும். ஆனால் இந்த மாநாட்டை இங்கு நடத்த விடாமல் தடுத்தால் இந்த ஆபத்தை நாம் தடுக்கலாம்.

3. சிங்களவர்கள்தான் இலங்கையின் பூர்வகுடிகள் என்று சர்வதேசத்தை நம்பவைக்கும் முயற்சியைத் தடுக்க முடியும்.

 இந்த மாநாட்டின் இன்னொரு பகுதியாக நடக்கவிருக்கும் commonwealth communal festival(CCF)காமன்வெல்த் காலச்சாரத் திருவிழாவின் மூலம் இலங்கைக்கு வரவிருக்கும் சர்வதேசப் பத்திரிக்கையாளர்களுக்கும், 54 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கோவில்கள், பழக்கவழக்கங்கள், உணவுகள் மற்றும் நடனம் போன்ற பலவகையான பண்பாட்டு விழுமியங்கள் காட்டப்படும். இப்படி நடக்கும் இந்தத் திருவிழா நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்டு தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் இடங்கள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் மறைக்கப்படவிருக்கிறது. http://www.chogm2013.lk/Commonwealth_Festival.php

இதன் மூலம் இலங்கை என்பது ஒரே கலாச்சாரத்தையும் ஒரே பண்பாட்டையும் கொண்ட மக்கள் வாழும் நாடு என்றும், இங்கிருக்கும் சிங்களவர்களே இந்த மண்ணின் பூர்வகுடிகள் எனவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக சர்வதேசத்தின் முன் நிரூபிக்கவே இந்தத் திருவிழா பயன்படப் போகிறது. தமிழர்களின் தனிநாட்டுக்கான கோரிக்கையை இல்லாமல் செய்வதற்கான ஒரு செயல் திட்டம் தான் இந்த திருவிழா. ஆகவே இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாமல் தடுத்தால் இந்த அக்கிரமத்தை நாம் தடுக்கமுடியும்.

4. 54நாடுகளோடு இலங்கை செய்யவிருக்கும் இராணுவ மற்றும் இராஜதந்திர நகர்வுகளை தடுக்க முடியும்.

இறுதியாக இந்த மாநாட்டின் முக்கிய அம்சமான காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் நவ15 முதல் 17வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் மூலம் இலங்கையானது தனது இராணுவ மற்றும் இராஜதந்திர நடவடிக்கையை மேம்படுத்த புதிய புதிய ஒப்பந்தங்கள் போட நிறைய வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக

  • பாகிஸ்தான் இராணுவம் இலங்கைக்கு இராணுவ உதவியாக அதிவேக விமானங்கள் தரப்போகிறது. அதற்கான ஒப்பந்தம் இந்த மாநாட்டில் தான் கையெழுத்தாகப் போகிறது. http://www.dailymirror.lk/news/37722-pakistan-to-sell-jf-17-fighter-jets-to-sl-report.html 
  • அமெரிக்காவானது இலங்கைக்கு தனது இராணுவத்தைக் கொண்டு பயிற்சி அளிக்கப்போகிறது. அதற்கான ஒப்பந்தமும் இந்த மாநாட்டில் கையெழுத்தாகப் போகிறது. 
  • மலேசியா அரசின் ராணுவ உதவியைப் பெற இலங்கை தீவிரமான முயற்சியை எடுத்து வருகிறது. அதற்கான செயலாகவே கடந்த ஒரு மாதத்தில் இலங்கை வெளிவிவகார மந்திரி G.L.பெரிஸின் மலேசியப் பயணம். 
  • இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை செய்துகொண்ட முன்று நாடுகளுக்கான கடல்சார் உடன்படிக்கை http://www.maritimeindia.org/india%E2%80%99s-maritime-cooperation-agreement-maldives-and-sri-lankaசமீபத்தில் கையெழுத்தானது. சீனாவுடன் இலங்கை செய்துள்ள இராணுவ கேந்திரமான துறைமுக ஒப்பந்தம்.

இதுபோன்ற பல்வேறு நாடுகளுடன் இலங்கை தனது இராணுவ ரீதியிலான நடவடிக்கையை பலப்படுத்த இது ஒரு வாய்பாக அமையும். மேலும் இலங்கை மீது வரும் காலங்களில் வரும் இராசதந்திர அழுத்தங்களையும் இந்த நாடுகளின் துணையோடு இலங்கை எளிதில் வெல்ல முடியும். இப்படியாக இலங்கை இந்த மாநாட்டின் மூலம் பலம்பெறும். ஆனால் இந்த மாநாட்டை இங்கு நடத்தவிடாமல் செய்தால் இந்த பேராபத்தைத் தடுக்க முடியும்.

இப்படியாக இனப்படுகொலை இலங்கையில் இந்த மாநாடு நடக்கவிடாமல் செய்தால் நாம் மேற்சொன்ன அனைத்தும் நடக்காமல் தடுக்க முடியும். சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கையைத் தனிமைப்படுத்தி இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற வழிவகை செய்ய முடியும்.

இந்தியாவின் தலைமை அமைச்சரோ அல்லது இந்தியாவோ கலந்து கொள்ளவில்லையென்றால் என்ன நடக்கும்?

  • இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவில்லையென்றால் என்னவாகும், மாநாடு திட்டமிட்டபடிநடக்கும்,
  • ராஜபக்சே காமன்வெல்த்தின் தலைவராக வலம் வருவது நிகழும்.
  • கமலேஷ் சர்மா மூலமாக காமன்வெல்திற்குள் கிடைத்த அங்கீகாரமும் இலங்கைக்கு உறுதிப்படுத்தப்படும்.
  • இந்தியா தவிர்த்த நாடுகளுடன் இலங்கை வர்த்தகம்-ராணுவ உறவு- ராஜீய உறவுகளை பலப்படுத்தும்,
  • ஏர்டெல் நிறுவனத்தின் உபயத்தினால் நடக்கும் வர்த்தக மாநாட்டின் மூலமாக இலங்கையில் மூலதனமும், சந்தையும் பலப்படும்.(ஏர்டெல் நிறுவனத்தினை இந்திய அரசினால் தடுக்க இயலாது. ஏனெனில்அது இலங்கையினுள்ளும் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்குவதால் இது சாத்தியப்படாது.)
  • இலங்கை ’சிங்களவர் நாடு’ என்ற பிரச்சாரம் பரப்பப்படும். இதுபோல பல நிகழ்வுகள் நடக்கும்.

இல்லையில்லை இந்தியாவின் தலைமை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை யென்றால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருக்கும் உறவில் விரிசல் ஏற்படும் என்று சொல்வீர்களானால், உதாரணமாக 2011ல் ஆஸ்திரேலியாவில் நடந்த 22வது காமன்வெல்த் மாநாட்டில்கூட இந்தியாவின் தலைமை அமைச்சர் பங்கேற்கவில்லை. இதனால் இந்தியாவிற்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் என்ன உறவு முறிந்தா போய்விட்டது? அதன்பிறகுதான் கோவாவில் கேளிக்கை விடுதி, கல்விக்கான ஒப்பந்தம் என பலவகையான இராஜிய உறவுகள் நடந்தேறின. ஆகவே இந்த இரண்டு கோரிக்கையும் முரணானது இல்லை என்பது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை.

எனவே தமிழர்களின் கோரிக்கையான காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்பதுதான் சரியானதாக இருக்கும்.

- சு.கி.கொண்டல், மே-17இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It