வெற்றி அல்லது வீரச்சாவு! என்ற உறுதிப்பாட்டுடன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகிய நான், இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கத்தின் சார்பில் --  இனக்கொலை நடத்திய சிறிலங்காவை காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, மீறி நடந்தால் இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்து கொள்ளக் கூடாது  என்பது முதலான  ஒன்பது கோரிக்கைகளுக்காக -- சென்ற அக்டோபர் முதல் நாள் காலை சென்னை கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே தொடங்கிய 'இறுதி வரைக்குமான உணவு மறுப்புப் போராட்டம்' அக்டோபர் 15ஆம் நாள் மாலை இராசீவ் காந்தி பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நிறைவு பெற்றது.

              இப்போராட்டம் குறித்து எழுந்துள்ள குற்றாய்வுகள் சிலவற்றுக்கு மறுமொழி பகர்வது என் கடமை எனக் கருதி இதனை எழுதுகிறேன்.

1) கோரிக்கைகள் குறித்து:

ஒன்பது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்றாலும், உடனடிக் கோரிக்கையாகவும் முதன்மைக் கோரிக்கையாகவும் வலியுறுத்தப்பட்டது காமன்வெல்த் தொடர்பான கோரிக்கையே என்பது அக்கறையுள்ள அனைவருக்கும் தெரிந்த செய்தி. அந்த ஒரு கோரிக்கையும் மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

அ) இனக்கொலைகார சிங்கள அரசை காமன்வெல்த் அமைப்பிலிருந்து                              வெளியேற்ற வேண்டும்.

ஆ) 2013 நவம்பரில் நடைபெறும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது.

இ) காமன்வெல்த் தலைவர்கள் சந்திப்பு கொழும்பில்தான் நடக்குமென்றால், அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்து கொள்ளக் கூடாது.

     போராட்டம் தொடங்குவதற்குப் பல கிழமை முன்னதாகவே இந்தக் கோரிக்கைகளை வெளியிட்டு விட்டோம். போராட்டக் காலத்திலும் இந்தக் கோரிக்கைகள் பரவலாகப் பல வழிகளில் பரப்புரை செய்யப்பட்டன. ஊடகங்களில் செவ்விகள், உரையாடல்கள், சொற்போர்கள் வாயிலாகவும் இந்தக் கோரிக்கைகளை நான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன். போராட்டத்தை ஆதரித்த இயக்கங்கள், தலைவர்கள் எவரும் இந்தக் கோரிக்கைகளில் குற்றங்காணவில்லை.

     காமன்வெல்த் மாநாட்டுக்குத் தலைமை அமைச்சர் போகாமலிருந்தால் போதாது, இந்தியா சார்பில் யாருமே போகக் கூடாது என்பதுதான் சரி என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. எங்களுக்கும் அதில் எவ்விதக் கருத்து மாறுபாடும் இல்லை.

ஆனால், ஆகச் சிறுமக் கோரிக்கையாக (மிகக் குறைந்தபட்சக் கோரிக்கை) இந்தியத் தலைமை அமைச்சர் போகக் கூடாது என்பதை வலியுறுத்துவது என்று எங்கள் போராட்டக் குழு முடிவெடுத்தது. இதற்கு இரு காரணங்கள் உண்டு: முதலாவதாக, நடக்கவிருப்பது பொதுவாகக் காமன்வெல்த் மாநாடு என்பதை விடவும், குறிப்பாக காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பு  (COMMONWEALTH HEADS OF GOVERNMENT MEETING, சுருக்கமாக CHOGM)  என்பதே சரி. அரசாங்கத் தலைவர்கள் சந்திப்புக்கு அரசாங்கத் தலைவர் போகாமல் வேறு எவர் போனாலும், அரசாங்கத் தலைவர் பங்கு பெறுவதற்கு ஈடாகக் கருதப்படாது.

இரண்டாவதாக, காமன்வெல்த் தொடர்பான எமது கோரிக்கையின் முதற்பயனே அது ஏற்படுத்தும் உளவியல் தாக்கம்தான். எமது கோரிக்கையின் எந்தக் கூறு வெற்றி பெற்றாலும் அது சிங்களர்களின் பேரினவாதச் சிந்தனைக்கு அடி கொடுக்கும். இந்திய வல்லாதிக்க அரசுக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்குமான முரண்பாட்டை வளர்த்து விடும். மறுபுறம் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஊக்கமளிக்கும். முதற்கூறு வென்றால், அதாவது சிறிலங்கா அரசு காமன்வெல்த்திலிருந்தே நீக்கபட்டால் பெரும்பயன், இரண்டாவது கூறு வென்றால், அதாவது காமன்வெல்த் சந்திப்பு இலங்கையில் நடைபெறா விட்டால் இடைப்பயன், மூன்றாவது கூறு வென்றால், அதாவது சந்திப்பு அங்கு நடந்து இந்தியா புறக்கணித்தால் சிறு பயன், தலைமை அமைச்சர் மட்டும் போகா விட்டால் சிறுமப் பயன். ஆனால் எப்படியும் பயன் உண்டு.

இலங்கையை காமன்வெல்த்திலிருந்து நீக்குவது, காமன்வெல்த் சந்திப்பை இலங்கையில் நடத்த விடாமல் செய்வது, மீறி நடந்தால் இந்தியாவோ பிற அரசுகளோ கலந்து கொள்ளாமல் தடுப்பது, எதுவும் முடியாத போது இந்தியத் தலைமை அமைச்சரையாவது போக விடாமற்செய்வது... இந்தக் கோரிக்கைக் கூறுகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. இவற்றில் ஒன்றுக்கு அழுத்தம் தரும் உத்தி மற்றவற்றைக் கைவிடுவதாகாது. இவற்றில் ஒன்றைச் சாதித்தாலும் மற்றவற்றைச் சாதிப்பதற்குத் துணையாகுமே தவிர தடை ஆகாது. ஏனென்றால் இந்தக் கோரிக்கைகள் ஒவ்வொன்றுமே விளைவளவில் ஒரே திசைவழிப்பட்டவை. காமன்வெல்த்தை விட்டு வெளியேற்றக் கோரும் பெருமக் கோரிக்கையும், இந்தியத் தலைமை அமைச்சர் கலந்து கொள்ளக் கூடாது என்னும் சிறுமக் கோரிக்கையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்லவே அல்ல. ஒரு போராட்டப் போக்கில் இவற்றில் எதற்கு எப்போது எவ்வளவு அழுத்தம் கொடுப்பது என்ற உத்தி “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்” என்ற கட்டளைக்குட்பட்டது. ஒரு கோரிக்கையின் சொற்பொருளை விடவும் விளைபொருள் முகாமையானது என்பதை மறக்கலாகாது.

இந்தியத் தலைமை அமைச்சர் போகக் கூடாது என்பது அற்ப சொற்பக் கோரிக்கையன்று என்பதற்குச் சான்றாகத் தமிழக சட்டப்பேரவையின் ஒருமனதான தீர்மானம் குறித்து தில்லிக்கான சிங்களத் தூதர் வெளிப்படுத்திய எதிர்வினையைக் குறிப்பிடலாம். அதே போல் காங்கிரஸ் தலைமையிலும் அமைச்சர்களிடையிலும் அது கிளப்பி விட்டுள்ள பூசலையும் எடுத்துக் காட்டலாம். இலங்கையை காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் சட்டப் பேரவை கோரியிருந்தாலும், தலைமை அமைச்சர் போகக் கூடாது என்ற சிறுமக் கோரிக்கையே இந்திய, சிங்கள ஆட்சியாளர்களை இந்த அளவுக்கு அலறச் செய்திருக்கக் காண்கிறோம்.   

அண்மைய எடுத்துக்காட்டு ஒன்றைத் தருவதானால், வெலிங்டனில் சிங்களப் படையதிகாரிகளுக்குப் பயிற்சி தருவதை அம்பலப்படுத்தி, தமிழக மக்களின் போராட்டத்தைக் கொண்டு நாம் அதை முறியடித்த போது, அதற்குச்  சிங்கள அரசின் எதிர்வினை எத்துணைக் கடுமையாக இருந்தது எனக் கண்டோம். இந்திய அரசு நயந்து  செகந்திராபாதில் பயிற்சி தருவதாகச் சொன்ன போதும் சிங்கள அரசு அதை ஏற்கவில்லை. தமிழக மக்களின் போராட்ட நெருக்குதலால் இந்தியத் தலைமை அமைச்சர் காமன்வெல்த் சந்திப்பைப் புறக்கணித்தால், அது உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து வேறு வழிகளில் ஏற்படுத்துவதைக் காட்டிலும் கூடுதலான தாக்கத்தைச் சிங்கள மக்களிடமும் ஈழத் தமிழர்களிடமும் ஏற்படுத்தும் என்பதே புறநிலை உண்மை. 

  1. 2)      போராட்டக் குழுவின் அமைப்பு வடிவம் குறித்து:

இறுதி வரை உணவு மறுப்பு என்ற போராட்ட முடிவு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புக் குழுவில் எடுக்கப்பட்டது. கோரிக்கைகளின் முதல் வரைவினை நான் எழுதி அமைப்புக்குள்ளேயும் வெளியிலும் விவாதத்துக்கு விட்டுத் திருத்தங்கள் செய்தோம். எமது அமைப்பின் வலுக்குன்றிய நிலையையும், வேறு அமைப்பு சார்ந்த அல்லது அமைப்பே சாராத ஆற்றல்களை இம்முயற்சியில் இணைத்துக் கொள்வதன் தேவையையும் கருதிப் பார்த்து நானே என் சொந்த மதிப்பீட்டின் படி பொருத்தமான தோழர்களைத் தெரிவு செய்து போராட்டக் குழுவை உருவாக்கினேன். (சிறைப்போராட்ட அனுபவங்கள் இந்த வகையில் எனக்கு உதவின.)  பொருத்தமான தோழர்கள் இன்னும் பலரும் கூட இருக்கலாம். ஆனால் என் நோக்கத்துக்கு இவ்வளவு பேர் போதும் எனக் கருதினேன். இவ்வாறு நான் தெரிவு செய்த தோழர்களில் அமைப்புச் சார்ந்தவர்கள் அவரவர் அமைப்பின் இசைவைப் பெற்றுத்தான் குழுவில் சேர்ந்தார்கள். ஆனால் அந்தந்த அமைப்புகளின் சார்பில் (அமைப்புகளின் ‘பிரதிநிதி’களாக) அவர்கள் இடம் பெறவில்லை.

போராட்டக் குழுவுக்கு ‘இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்’ என்று பெயரிட்டோம். இது கூட்டியக்கமோ கூட்டமைப்போ அன்று என்பதைப் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம். போராட்டம் தொடங்கிய பின் நடந்த முதல் கலந்தாய்வுக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே போராட்டக் குழு அமைப்பாளர் தோழர் மதியவன் இதைத் தெளிவுபடுத்தியதோடு, ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தலாம் என்று முன்மொழியவும் செய்தார். அந்த முன்மொழிவு ஏற்கப்படாததால்தான் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆங்காங்கு முன்முயற்சி எடுக்கும் அமைப்புகளின் பெயரிலோ ‘இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்’ என்ற பெயரிலோ மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு போராட்டத்துக்கென்று அமைக்கப்பட்ட போராட்டக் குழு, அவ்வளவுதான்.

போராட்டப் போக்கில், குறிப்பாக உணவுமறுப்புப் போராட்டத்தை நீடிப்பது அல்லது கைவிடுவது குறித்து, போராட்டக் குழுவில் இடம் பெற்ற தோழர்கள் சார்ந்த அமைப்புகளின் முன்மொழிவுகளை நானும் போராட்டக் குழுவும் ஏற்க மறுத்த நேர்வுகளும் உண்டு. இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் ஏன் இந்த அமைப்பைச் சேர்க்கவில்லை, அந்த அமைப்பைச் சேர்க்கவில்லை என்ற கேள்வியே எழாது.

தமிழகத்தில் கொள்கை வழிப்பட்ட ஈழ ஆதரவுக் கூட்டமைப்பு ஒன்றின் தேவை உள்ளது என்ற எண்ணம் எமக்கும் உள்ளது.  இந்தத் தேவையை நிறைவு செய்வது பற்றி நாம் இப்போதாவது கருதிப் பார்க்க வேண்டும்.

(போராடிய எனக்கும் எனக்குத் துணைநின்ற தோழர்களுக்கும் அரசியல் அல்லாத தனிப்பட்ட உள்நோக்கம் கற்பித்துச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் விடைபெறும் தகுதியே இல்லாதவை என ஒதுக்கித் தள்ளி விடுகிறேன். கொள்கை, நடைமுறை சார்ந்த குற்றாய்வுகளுக்கு மட்டும் விடை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.) 

  1. 3)      உணவுமறுப்புப் போராட்டம் நிறைவு குறித்து:

கோரிக்கைகளுக்கும் உணவுமறுப்புப் போராட்டத்துக்கும் தமிழக அளவில் மிகப் பரவலான ஆதரவு திரட்டுவது என்று முடிவு செய்து, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், குழுக்களுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் கூட வேண்டுகோள் கடிதம் அனுப்பினோம். ஒருசிலர் விடுபட்டிருந்தால் அது எங்கள் பிழைதான். எங்கள் போராட்ட உத்தியின் கூறுகள்:

1) விடாக்கண்டனாக உள்ள முதற்பகையை (diehard first enemy) அறவே தனிமைப்படுத்துதல்.

2) பிற பகைவர்களைச் செயலிழக்கச் செய்தல் (neutralisation), இயன்றால் முதற்பகைக்கு எதிராகத் திருப்ப முயலுதல்.

3) நட்பு ஆற்றல்களின் ஊசலாட்டத்தைப் போக்கி நெருக்கமாக ஒன்றுபடுத்துதல்.

4) முழுக்க நம்பகமான நட்பு ஆற்றல்களை உறுதியாகச் சார்ந்து நின்று போராட்டத்தை முன்னெடுத்தல்.

கோட்பாட்டளவில் இதுவே அனைத்தளாவிய ஐக்கிய முன்னணிப் பேருத்தி (All-in United Front Strategy) எனப்படும். நம்முடையது மிகச் சிறிய போராட்டம்தான். ஒரு புரிதலுக்காகச் சொல்வதென்றால், சப்பானிய வன்படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் தோழர் மாவோ தலைமையில் சீனப் பொதுமைக் கட்சி இந்தப் பேருத்தியை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது.

ஒவ்வொரு தூலமான (concrete) சிக்கலையும் அதைச் சூழ்ந்துள்ள தூல நிலைமைகளையும் கணக்கில் கொண்டுதான் ஒரு தூலமான போராட்டத்திற்குரிய பகைநிலை, நட்புநிலை, இரண்டுங்கெட்டான் நிலைகளைக் கணிக்கவும், அந்தக் கணிப்பின் அடிப்படையில் போராட்ட உத்திகளை வகுக்கவும் வேண்டும். பொறுமையும் நிதானமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் எல்லா நிலைகளிலும்  எல்லாரையும் ஒருங்கே பகைத்துக் கொள்ளும் அணுகுமுறை நமக்கும் நம் மக்களுக்கும் தோல்வியைத் தரும். பகைவனுக்குத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து வெற்றியைக் கையளிப்பதில் போய் முடியும்.  மக்கள்-போராட்டத்தின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல்  பொறுப்பற்ற முறையில் புரட்சிகர வாய்வீச்சில் ஈடுபடுவது – லெனின் சொன்னது போல் – செயலற்ற தீவிரவாதமே (passive radicalism) தவிர வேறன்று.         

இலங்கையில் காமன்வெல்த் - எதிர்ப்பியக்கத்தின் பார்வையில் இந்திய அரசுக்கெதிரான அனைத்து ஆற்றல்களையும் நம் போராட்டத்துக்கு ஆதரவாக அணிதிரட்டவே முயன்றோம். இவர்களில் சிலர் தரும் ஆதரவு நிலையற்றதாக, உறுதியற்றதாக, உள்நோக்கங்கொண்டதாக, உதட்டளவிலானதாக இருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியாத செய்தியன்று. என்றாலும் அரசியலில் உள்நோக்கங்களைக் காட்டிலும் புற விளைவுகளே முகாமையானவை என்ற தெளிவு எங்களுக்கு இருந்த காரணத்தால், எவரது ஆதரவைக் கண்டும் நாங்கள் மிரளவில்லை. ஏனென்றால் எங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தோம். எவருடைய ஆதரவுக்காகவும் அவற்றில் சிறு மாற்றமும் செய்து கொள்ள மாட்டோம் என்பது எங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கே தெரிந்த செய்திதான்.   

உணவுமறுப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே செப்டம்பர் 26ஆம் நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுபட்ட அரசியல் ஆற்றல்களும் கலந்து கொண்டனர். காட்டாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் அரசியலில் எதிரெதிர் முகாமில் இருப்பவை. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யாவும் தொல். திருமாவளவனும் ஓரணியாக நின்று முழக்கங்கள் எழுப்பிடக் கண்டோம். தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் பொதுவாகத் தேர்தலைப் புறக்கணிப்பவர்களும் – தலித் அமைப்புகளும் இசுலாமிய அமைப்புகளும் – திராவிட அமைப்புகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் – அமைப்புசாரா தமிழ் உணர்வாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்று திரண்டனர். இந்தக் கொள்கை வழிப் போராட்ட ஒற்றுமையின் தேவையை அனைவரும் ஏற்று வலியுறுத்தியதை நான் தொலைவிலிருந்து (மருத்துவமனையில் இருந்த படி) கேட்டு மகிழ்ந்தேன். இந்த வகையில் போராட்டம் தொடங்கும் போதே வெற்றிதான் என்று உடனிருந்த தோழர்களிடம் சொன்னேன்.

பிறகு நடந்தவை – உயர் நீதிமன்றத்தில் நாம் வழக்காடிப் பெற்ற வெற்றி, திருவள்ளுவர் கோட்டம் அருகில் அக்டோபர் முதல் நாள் நாம் அமைத்துக் கொண்ட களம், அணி அணியாகத் தலைவர்களும் தொண்டர்களும் மாணவர்களும் தொழிலாளர்களும் பொதுமக்களும் வந்து தெரிவித்த ஆதரவு, ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், உலகத் தமிழர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு – அனைவரும் அறிந்தவையே.

விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, நாம்தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, தமிழர்நலம் பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, மே 17 இயக்கம், சேவ் தமிழ்ஸ், காஞ்சி மக்கள் மன்றம், தமிழர் எழுச்சி இயக்கம், உறவுகள், நீதியின் குரல், தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழர் குடியரசு முன்னணி, தமிழ்த் தேச மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, தொழிலாளர் சீரமைப்புக் குழு, தமிழ்த் தேசிய மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியக்  குடியரசு இயக்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை,  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ... இந்தப் பட்டியல் நீண்டு நீண்டு செல்லக் கூடியது. வைகோ, திருமா, சீமான், வேல்முருகன், ஜவாகிருல்லா ... இப்படிப் பலதரப்பட்ட தலைவர்களும் தொண்டர்களும் வாய்மொழி ஆதரவு தெரிவித்ததோடு நில்லாமல், உருப்படியான பல உதவிகளும் செய்தார்கள். குறிக்கப்பெற்ற பெயர்களை விடவும் குறிக்காமல் விட்ட பெயர்களே கூடுதல் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனால் ஈண்டு நான் எழுதுவது குற்றாய்வுகளை எதிர்கொள்வதற்காகத்தானே தவிர, நன்றிக் குறிப்புக்காக அன்று. இந்த அமைப்புகள், தலைவர்களில் யாரும் எமது கோரிக்கைகளையோ போராட்ட முறையையோ -- வெளிப்படையாகவோ எங்களிடம் தனிப்பட்டோ – எவ்வகையிலும் குறைகூறவில்லை என்பதைப் பதிவு செய்வதே என் நோக்கம்.

குற்றாய்வுகளில் மையமாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்குதான் என்பதால், அது பற்றிக் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும். எமது போராட்டக் குழுவின் சார்பில் அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு கேட்டோம். மூன்றாம் நாள் திரு பொன்முடியும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனும் நேரில் வந்து கலைஞர் சார்பில் ஆதரவு தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த தொல். திருமாவளவன் “திமுக சார்பில் திரு மு.க.ஸ்டாலின் தலைமையில் தில்லிக்கு ஒரு குழுவை அனுப்பலாம்” என்று முன்மொழிந்தார்.

நான்காம் நாள்... உண்ணாவிரதத்தைக் கைவிடும் படி கலைஞர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு நான் நன்றி சொல்லி, என் உயிர் குறித்துக் கவலைப்படுவோரின் அக்கறையைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் இப்போராட்டத்தின் கோரிக்கைகளே என் உயிர் என்று தெளிவுபடுத்தி உணவுமறுப்பைக் கைவிட மறுத்தேன் என்பது அனைவரும் அறிந்ததே. எவர் வேண்டுகோளுக்காகவும் நான் என் உறுதியிலிருந்து மாறவில்லை.  .

ஏழாம் நாள் என்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்த பிறகும் உணவு மறுப்பைத் தொடர்ந்தேன்.

பதினொன்றாம் நாள் இராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு கீழ்ப்பாக்கத்திலுள்ள மக்கள் கல்வி மாமன்றத்தில் உணவு மறுப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். 13ஆம் நாள் தோழர் சுபவீ திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர்களுடன் என்னை வந்து பார்த்தார். என்ன செய்தால் நீங்கள் உணவு மறுப்பைக் கைவிடுவீர்கள்? என்று கேட்டார். “என் கோரிக்கையை ஓரளவாவது ஏற்கச் செய்தால்...” என்று பதிலளித்தேன். இங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று தில்லிக்குப் புறப்படுவதாக இருந்தால் முடித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார். “இல்லை, அவர்கள் பதில் வாங்கி வரட்டும்” என்றேன். “பதில் பாதகமாக அமைந்து விட்டால்...” என்று அச்சத்துடன் கேட்டார். “எந்த பதிலோ வாங்கி வரட்டும்” என்றேன். சுபவீ ஆலோசனைப்படி கலைஞருக்கு ஒரு கடிதமும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு ஒரு கடிதமும் நேரில் சேர்ப்பித்தோம்.

அன்றிரவு அனைத்து இயக்கத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. போராட்டத்தை விரிவுபடுத்துவதாகவும் தீவிரப்படுத்துவதாகவும் தலைவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் என் உடல்நிலை மோசமாகி விட்டதைக் கருத்தில் கொண்டு விரைவில் உணவுமறுப்பைக் கைவிடும்படி வலியுறுத்தினார்கள். வெற்றி அல்லது வீரச்சாவு என்பதில் நான் உறுதியாக இருப்பதைச் சொன்னேன். சிறும வெற்றியாவது இல்லாமல் என்னால் உணவுமறுப்பைக் கைவிட முடியாது என்று தெளிவுபடுத்தினேன்.

அன்றிரவு போராட்டக் குழு கூடிய போது, தமிழ்நாடெங்கும் போராட்டம் விரிவடைந்து வருவதையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடனே நடத்தவிருக்கும் போராட்டத்தையும், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், மே 17,  எஸ்.டி.பி.ஐ., பல்வேறு மாணவர் அமைப்புகள் அடுத்தடுத்து நடத்தவிருக்கும் போராட்டங்களையும், பிற அமைப்புகள் கூட்டாகவோ தனித்தோ நடத்தக் கூடிய போராட்டங்களையும், குறிப்பாக மேதா பட்கர் அனைத்திந்திய அளவில் இதற்கென இயக்கம் நடத்துவதாக உறுதியளித்திருப்பதையும் நம் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள வெற்றியாகக் கருதலாம், அந்த அடிப்படையில் உணவு மறுப்பை முடித்துக் கொள்ளலாம் என்ற கருத்து பேசப்பட்டது. தில்லியிலிருந்து ஒரு பதில் கிடைத்தால் அதை இன்னொரு சிறும (குறைந்தபட்ச) வெற்றியாகக் கருதலாம், இரண்டும் கிடைத்தால் நல்லது, என்ன கிடைக்கிறது என்று இன்னும் ஓரிரு நாள் பொறுத்துப் பார்க்கலாம் என்று நான் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அக்டோபர் 14ஆம் நாள் (உணவு மறுப்பிலும் 14ஆம் நாள்) காலை உணவுமறுப்பைக் கைவிடும்படி பல்வேறு தலைவர்களும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அண்ணன்  வைகோ தோழர் பாவேந்தனைtத் தொலைபேசியில்  அழைத்து, இன்றிரவு நேரில் வருகிறேன், நாளை மதியத்துக்குள் தியாகுவின் உண்ணாவிரதத்தை முடித்தாக வேண்டும் என்று சொல்லியிருந்தார்.  

அதே 14ஆம் நாள் மாலை நான் இராசீவ் காந்தி பொது மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். என் உடல்நிலை படுமோசமாகி விட்டதாகவும், எந்நேரமும் எதுவும் நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்தார்கள். ஆனால் எவ்வித சிகிச்சையும் ஏற்க மறுத்து உணவுமறுப்பைத் தொடர்ந்தேன். அன்றிரவு 8 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் வந்தார். தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கலைஞருக்கு எழுதிய கடிதத்தின் ஒளிப்படியை என்னிடம் சேர்ப்பித்தார். உடனே உணவுமறுப்பைக் கைவிடும் படி கலைஞர் கேட்டுக் கொண்டதாகவும் சொன்னார். கலைஞர் எடுத்த முயற்சிக்காக நன்றி தெரிவித்தேன். ஆனால் போராட்டக் குழுவினருடன் கலந்து பேசி நாளை காலை முடிவை அறிவிப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

தலைமையமைச்சரின் கடித விவரம் அனைவரும் அறிந்த ஒன்றே. காமன்வெல்த் தொடர்பான நம் கோரிக்கைகள் எதுவும் அதில் திட்டவட்டமாக ஏற்கப்படவில்லை. அப்படி எந்த வாக்குறுதியும் இல்லை. முடிவெடுக்குமுன் தமிழ் மக்களின் உணர்வுகளையும் கணக்கில் கொள்வதாக மட்டுமே உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழியின் அடிப்படையில் கலைஞர் முயற்சி எடுத்து என் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகுவின்) உணவுமறுப்பை முடித்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்திய அரசு குறித்து நமக்கு எவ்வித மயக்கமும் இல்லை. மன்மோகனின் வார்த்தையை நம்புவது, நம்ப மறுப்பது என்ற கோணத்தில் இச்சிக்கலை அணுகுவது அகநிலைப் பார்வையாகி விடும். சிங்களப் பேரினவாத அரசுக்கு எல்லா வகையிலும் உடந்தையாக இருந்த இந்திய அரசு -- 2009, 2011  காமன்வெல்த் அரசாங்கத் தலைவர் சந்திப்புகளில் இலங்கையில் அடுத்த சந்திப்பை நடத்துவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவளித்த இந்திய அரசு – 2013  சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு முதற்பெரும் காரணியமாகிய இந்திய அரசு – இந்தச் சிக்கல் முழுவதையும் இதுவரை இந்தியாவின் அயலுறவுக் கொள்கை நலன், இந்தியாவின் புவிசார் அரசியல் என்ற பெயரில் இலங்கையுடன் நட்பு, தமிழர்கள்பால் பகைமை ஆகிய நோக்கில் மட்டுமே அணுகிப் பழகிய இந்திய அரசு – அந்த அரசின் தலைமை அமைச்சர் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஒரு காரணியாகக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க உறுதியளிக்கிறார் என்றால், அது எவ்வளவு உறுதியற்ற உறுதிமொழி என்றாலும், நாம் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தொடரும் போராட்டத்தில் அதையும் ஒரு கருவியாக்கிக் கொள்வதுதான் அறிவுடைமை. யார் கொடுத்த உறுதி? யார் வழியாகக் கொடுத்த உறுதி? என்பதையெல்லாம் விட புறநிலையில் அந்த உறுதியை நம் மக்களின் வெற்றிக்கும் பகையின் தோல்விக்கும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்றுதான் பார்க்க வேண்டும்.

உணவுமறுப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பும் தொடர்ந்து கொண்டிருந்த போதும் எங்கள் கோரிக்கைகளையும் போராட்டத்தையும்ம் ஆதரித்த பல தலைவர்களும், இந்திய அரசின் கொடுந்தன்மையை எடுத்துக்காட்டி, அது நமக்கு எந்த விடையும் சொல்லாது என்றுதான் எச்சரித்து வந்தார்கள். இந்திய அரசின் தன்மை பற்றிய அவர்களது கருத்தில் முழு உடன்பாடு கொண்டிருந்தாலும், தமிழ் மக்களின் போராட்டத்தைக்கொண்டு இந்திய அரசை சற்றேனும் அசைக்க முடியும் என்று நம்பினோம். தொடர்ச்சியான போராட்டத்தின் வாயிலாக இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று இப்போதும் நம்புகிறோம். இந்திய அரசை நம்பிப் போராடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அரசை நம்பவில்லை என்பதால்தான் கடுமையாகவும் விடாப்பிடியாகவும் போராட வேண்டியுள்ளது.

வலிமை மிக்க ஒரு வல்லாதிக்க அரசோடு வரலாற்று நியாயமும் அறவலிமையும் தவிர வேறு கருவி ஏதும் கையிலின்றிப் பொருதுகையில் சிறுசிறு சிறும வெற்றிகளையும் கூட படிகளாகக் கொண்டு முன்னேற வேண்டிய தேவை உள்ளது. இந்த அரசியல் போராட்டத்தைப் படையியல் சமர்க் களங்களோடு ஒப்புநோக்கினால் இந்தத் தேவையை எளிதில் உள்வாங்க இயலும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம், இலங்கையைப் புறக்கணிக்கும் இயக்கம், காமன்வெல்த் எதிர்ப்பு ஆகியவை குறித்துக் குறுகிய காலத்தில் பரவலான விழிப்புணர்வைத் தோற்றுவித்ததும், தமிழகத்தின் அரசியல் ஆற்றல்களை காமன்வெல்த் போராட்டத்தில் ஒருமிக்கச் செய்ததும், விரைவாக அவர்கள் களம் காணத் தூண்டுகோலாக இருந்ததும், ஆங்காங்கு வெடித்தெழுந்த மாணவர் போராட்டங்களும், ஊடகங்களில் இதை மைய விவாதப் பொருளாக்கிப் பகையாற்றல்களைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியதும் ... இந்த நற்பயன்கள் எல்லாம் பதினைந்து நாள் பட்டினிப் போராட்டத்துக்கும் அதை மையமாகக் கொண்டு எழுந்த மக்கள் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றிகளே. இந்த வரிசையில் கடைசியாக வந்ததே தலைமை அமைச்சரின் கடிதம். நாங்கள் போராட்டக் குழுவில் விவாதித்து, இரு சிறும வெற்றிகளில் ஒன்றாவது ஈடேறாமல் உணவுமறுப்பைக் கைவிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தோம். இப்போது எங்களுக்கு இரு சிறும வெற்றிகளுமே ஒருங்கே கிடைத்து விட்டதால் என் உணவு மறுப்புப் போராட்டம் வெற்றிகரமான முடிவுக்கு வந்தது. போராட்டக்குழு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

பதினைந்தாம் நாள் மதியம் முடிந்திருக்க வேண்டிய உணவுமறுப்புப் போராட்டம் தமிழகக் காவல்துறை அரசியல் ஏவல்துறையாகச் செயல்பட்டு ஏற்படுத்திய அற்பத்தனமான இடையூறுகளால் மாலை 4 மணிக்குத்தான் நிறைவு பெற்றது. அப்போது நடந்த ஊடகச் சந்திப்பின் போது மேற்சொன்ன செய்திகளையெல்லாம் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்க என் உடல்நிலையோ மனநிலையோ இடந்தரவில்லை. இப்போது அந்தக் குறையை என்னால் இயன்ற வரை சரி செய்திருப்பதாக நம்புகிறேன்.

இந்த என் எழுத்தின் அடிப்படையில் ஆக்கவழிப்பட்ட விவாதத்துக்கு அணியமாக உள்ளேன்.

இறுதியாக நான் வலியுறுத்திச் சொல்ல விரும்பும் இரண்டு:

1) உணவுமறுப்புப் போராட்டத்தின் நிறைவு என்பது ஒரு போராட்ட வடிவத்தின் முடிவுதானே தவிர போராட்டத்தின் முடிவு அன்று. விவாதங்களைக் காத்திரமான முறையில் நடத்திக் கொண்டே போராட்ட ஒற்றுமையை விரிவுபடுத்தவும் உறுதிப்படுத்தவும் உழைப்போம்.

2) வெற்றி அல்லது வீரச்சாவு! இந்த உறுதிப்பாட்டிலிருந்து இறுதிவரை நான் பிறழவே இல்லை. மேற்சொன்னது போன்ற சிறும வெற்றியாவது கிடைத்திருப்பதாய் நானும் தோழர்களும் உண்மையாக நம்பியதால்தான் உணவுமறுப்பை முடித்துக் கொண்டேன். இல்லையேல் இதை எழுத நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். ஆனால் என் உயிரிழப்பு இப்போராட்டத்துக்கு உரமூட்டியிருக்கும் என்றுதான் இப்போதும் நம்புகிறேன்.

 சிறு வெற்றிதான்! அதைப் பெருவெற்றியாக மாற்றப் பாடாற்றுவோம்!  முதல் வெற்றிதான்! அதை முழு வெற்றியாக்க உழைப்போம்!

- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It