"தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!"  

ஈழத்தில் தமிழின அழிப்பு நடந்தது முதல் இப்பொழுது வரை எத்தனையோ போராட்டங்களை நாம் இந்தப் பிரச்சினைக்காக நடத்தியிருக்கிறோம். ஆனால், இந்த எல்லாப் போராட்டங்களையும் விட உச்சக்கட்டக் குழப்பத்துக்குப் பலியாகி இருப்பது இப்பொழுது நடைபெற்று வரும் ‘இலங்கைப் பொதுநலவாய (காமன்வெல்த்) மாநாட்டுக்கு எதிரான போராட்டம்தான்.

ஒரு பக்கம் ‘பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது எனப் போராடுகிறோம்; மறுபக்கமோ ‘இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது எனப் போராடுகிறோம்! அப்படியானால், மாநாடு இலங்கையில் நடந்தால் தேவலையா? போராடுபவர்களே தங்கள் முதல் கோரிக்கை நிறைவேறாது என்கிற முடிவோடுதான் போராடுகிறார்களா? என்ன குழப்பம் இது! இவை முன்னுக்குப் பின் முரணானவை அல்லவா?

இந்த இரண்டில் சரியான கோரிக்கை எது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்தப் பொதுநலவாய மாநாட்டை இலங்கை ஏன் நடத்துகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! அதைப் புரிந்து கொண்டால் மாநாடு நடக்கவே கூடாதா அல்லது அதில் இந்தியா கலந்துகொள்ளாமல் இருந்தால் மட்டும் போதுமா என்பதைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

இந்த ஆண்டு மட்டுமில்லை, ஈழத்தில் நம் இனத்தையே கொன்று கூறு போட்ட ஓராண்டுக்குள்ளாகவே, அடுத்து வந்த பொதுநலவாய மாநாட்டைத் தான் நடத்திவிடப் பெருமுயற்சி மேற்கொண்டது இலங்கை. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அன்றைய தலைவர் என்ற முறையில் அப்பொழுதைய பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரௌன் அதைத் தடுத்து நிறுத்தினார். (பார்க்க: இங்கே).

“இலங்கை இந்த மாநாட்டை நடத்துமானால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் வலியுறுத்துவேன்” என்ற அவருடைய அதிரடி அறிக்கை இலங்கையை மட்டுமின்றி உலக நாடுகளையே அன்று அதிர வைத்தது! ஆனால், இன்றைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவர் போல் இல்லாதது நமக்குப் பின்னடைவே!

இப்படி, இந்த மாநாட்டை ஒருமுறையாவது நடத்திவிட இலங்கை தொடர்ந்து துடிப்பதற்குக் காரணம் என்ன?

என்னதான், நடந்த இனப்படுகொலையில் இலங்கைக்கு முன்னணியில் நின்று உதவிய நாடு என்றாலும், நடப்பது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் இல்லை, ஈழத் தமிழர்களை அழிப்பதற்கான இனப் படுகொலை என்று புரிந்ததுமே அதை எதிர்க்கத் தொடங்கிய இரண்டாவது நாடு இங்கிலாந்து. (முதல் நாடு வாடிகன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!). அன்று முதல் இன்று வரை ஈழப் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து காய் நகர்த்தி வரும் தலையாய நாடு இங்கிலாந்துதான். அமெரிக்கா கூட இங்கிலாந்துடன் சேர்ந்துதான் இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதே தவிர, தன் சொந்த முனைப்பினால் இல்லை எனச் சொன்னால் மிகையாகாது.

உலகையே ஆட்டிப் படைக்கும் இருபெரும் நாடுகளுள் ஒன்றான பிரிட்டன், ஈழப் பிரச்சினையில் தனக்கு எதிராக இருப்பது எப்பொழுதும் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல என்பதை உணர்ந்திருக்கும் இலங்கை, பிரிட்டனுடனான தன் உறவை வலுப்படுத்திக் கொள்ள, பிரிட்டனும் பிற நாடுகளும் ஈழப் பிரச்சினையில் தனக்குத் தொடர்ந்து அளித்து வரும் அழுத்தத்தை நிறுத்தி இந்தியா போல அவர்களையும் தனக்கு ஆதரவாகத் திருப்ப மேற்கொள்ளும் முயற்சிதான் இந்தப் பொதுநலவாய மாநாடு! அதாவது, நேர்மை பேசும் அரசு அலுவலர்களைக் கவிழ்க்கக் குறுக்குவழியில் பணம் ஈட்டும் முதலாளிகள் நடத்தும் விருந்து போல. வடநாட்டில், தேர்தலில் வென்றவன் மற்ற கட்சிகளுடன் தனக்கு எந்தப் பகைமையும் இல்லை என்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து வெற்றி விழா விருந்து கொண்டாடுவானே அது போல.

ஆக, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! ஈழப் பிரச்சினையில் தமிழர் தரப்பை வலுவிழக்கச் செய்வதற்காக இலங்கை மேற்கொள்ளும் இந்தப் பன்னாட்டு முயற்சியை (International Effort) முறியடிக்க வேண்டுமானால் நாம் இந்த மாநாட்டையே முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டுமா அல்லது இந்தியா மட்டும் இதில் கலந்துகொள்ளாமல் இருந்தால் போதுமா? ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் இங்கிலாந்து முதலான நாடுகளைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஆத்திரேலியா போன்ற தமிழர் ஆதரவு நாடுகள் போகக்கூடாதா அல்லது ஏற்கெனவே இலங்கையின் காலடியில் விழுந்து கிடக்கும் இந்தியா போகக்கூடாதா? யார் இந்த மாநாட்டுக்குப் போவது நமக்கு மிகுந்த பாதிப்பை விளைவிக்கும்? நம் நண்பன் நம் எதிரியுடன் சேர்வது நமக்கு ஆபத்தா அல்லது நம் எதிரியின் நண்பன் அவன் வீட்டுக்குப் போவது ஆபத்தா? சிந்தியுங்கள்! நாம் யாரை நோக்கிப் போராட வேண்டும்? எந்த அலுவலகங்களுக்கு முன்பாகப் போராட வேண்டும்? இந்திய நடுவணரசு அலுவலகங்களுக்கு முன்பாகவா அல்லது இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாகவா? கனிவு கூர்ந்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

“ஏன், இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு  முன்பாகக் கூடத்தானே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன?” என நீங்கள் கேட்கலாம். ஆம்! தூதரகங்களுக்கு முன்பாக‘வும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதுதான் சிக்கல். நடுவணரசு அலுவலகங்களைப் பூட்டுதல், தொடர்வண்டியை மறித்தல், உண்ணாநிலை, பொதுக்கூட்டம்... இப்படிப் பல போராட்டங்களுக்கிடையில், பத்தோடு பதினொன்றாகத் தூதரகங்களுக்கு முன்பாகவும் போராடுகிறோம்! இது எப்படிப் பலனளிக்கும் நண்பர்களே? 

நினைத்துப் பாருங்கள்! கடந்த ஆண்டு, இதே நவம்பர் திங்களில் நபிகள் நாயகம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு திரைப்படம் அமெரிக்காவில் வெளிவந்ததே, அப்பொழுது நாம் எப்படிப் போராடினோம்? ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக மட்டும் குவித்தோம். உலகெங்கும் உள்ள எல்லா இசுலாமியத் தோழர்களும் சொல்லி வைத்தாற்போல் இதையே செய்தார்கள். அந்தப் போராட்டத்தின் வழிமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடு இருந்திருக்கலாமே தவிர, அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது முழுக்க முழுக்க அமெரிக்கத் தூதரகங்களை நோக்கி மட்டுமே என்பதில் மாற்றம் இல்லை. அதனால்தான் உடனடியாக அந்தப் படத்தை எடுத்தவர் சிறைப்படுத்தப்பட்டார். 

ஆனால், மதத்துக்கு ஒரு பாதிப்பு என்றால் மந்தை மந்தையாகக் கூடத் தெரிகிற நமக்கு, இனத்துக்கு ஒரு பாதிப்பு என வரும்பொழுது அப்படி ஓரணியில் நிற்க ஏன் கசக்கிறது? ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை இப்படி எந்த ஓர் ஒற்றுமையும் நமக்குள் இல்லை. ஒரு பக்கம் ஊர்வலம், இன்னொரு பக்கம் கையெழுத்து இயக்கம், வேறொரு பக்கம் மாநாடு என ஆளுக்கொரு வகையில் போராடிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றை இலக்கைக் குறிவைத்து ஒரே மூச்சாக நடத்துவதற்குப் பெயர்தான் போராட்டமே தவிர, இப்படி ஆளாளுக்கு அவரவருக்கு வசதிப்பட்ட வகையில் நடத்தினால் அஃது அவரவர் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வெறும் விளம்பர முயற்சிதான்! 

இசுலாமிய உடன்பிறப்புக்களின் மேற்கண்ட போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிரே வெற்றிபெற்ற அந்தப் போராட்டத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாவா? ஒரு முறை, ஒரு போராட்டம், குறிப்பிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வெற்றியடைந்தால் அடுத்த முறை அதே போன்ற ஒரு பிரச்சினை தலைதூக்கும்பொழுது மறுபடியும் அதே பாணியிலான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்பது கூட நமக்குத் தெரிய வேண்டாவா? இதைக் கூட யாராவது வந்து நமக்குச் சொல்லித் தர வேண்டுமா? 

எனவே, போராளித் தோழர்களே! போராட்டத் தலைவர்களே! மாணவப் புலிகளே! கட்சித் தோழர்களே! பொதுமக்களே! அனைவரும் ஒன்று திரளுவோம்! ஏற்கெனவே இலங்கையின் நட்பு நாடான இந்தியா இந்த மாநாட்டுக்குப் போவதாலோ போகாமல் இருப்பதாலோ நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதையும் மாறாக, தனக்கு எதிராக இருக்கும் இங்கிலாந்து முதலான நாடுகளையும் நட்பாக்கிக் கொள்ளவே இலங்கையால் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு அந்த நாடுகள் போவதுதான் நமக்கு ஈடு செய்ய முடியாத அரசியல் வலுவிழப்பை ஏற்படுத்தும் என்பதையும் முதலில் புரிந்து கொள்வோம்! 

ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மொத்தமாகத் தீக்குளித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்திய அரசை நோக்கிய நம் போராட்டங்களைக் குறைத்துக்கொண்டு, தன் தூதரகத்துக்கு முன் ஒரு சிறு கூட்டம் கூடினாலும் உடனே அந்நாட்டுப் பிரதமருக்கு அழுத்தம் தருகிற இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாக நம் போராட்டங்களை ஒருமுனைப்படுத்துவோம்! இந்த மாநாட்டை முதல் நாடாகப் புறக்கணித்த கனடாத் தூதரகத்துக்கு முன் நன்றியறிவித்தல் கூட்டம் நடத்துவோம்! கனடாவைப் பின்பற்றுமாறு மற்ற நாட்டுத் தூதரகங்களுக்கு முன்பாகக் கூக்குரல் எழுப்புவோம்! அறவழியில், நன்னெறியில் உலகமே திரும்பிப் பார்க்கும் விதத்தில் போராடுவோம்! இந்த மாநாடே நடக்கவிடாமல் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவோம்! சிங்கள-இந்திய-தி.மு.க சூழ்ச்சியை முறியடிப்போம்! வரலாறு போற்றும் வெற்றியை நமதாக்குவோம்!

வெல்க தமிழர்! தமிழர் வென்றால்தான் வாழும் தமிழ்! (பி.கு: இலங்கைப் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது எனப் பிரிட்டன் இளவரசரிடம் கோரிக்கை விடுத்து மடல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. நீங்களும் அனுப்ப வேண்டாவா? சொடுக்குங்கள் இங்கே!)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.