'தமிழீழ விடுதலை' எனும் உயரிய கோரிக்கையை நெஞ்சில் ஏந்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிஞ்சிற்றும் சமரசமின்றி ஆயுதப் போராட்டம் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், போர் முடிந்தது எனவும் சிங்களப் பேரினவாத அரசு அறிவித்தது. முள்ளிவாய்க்கால் பேரவலம் மனிதகுல வரலாற்றிலே மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. கொத்துகொத்தாக தமிழர்கள் சாகடிக்கப்பட்டார்கள். அந்நாளை நினைக்கும் போதெல்லாம் கண்களில் இன்றைக்கும் நீர் கசியாமல் இல்லை; உள்ளமெல்லாம் குமுறுகிறது; இதயமே நின்றுவிடும் போலிருக்கிறது.

இனவிடுதலைக்காக எந்த ஒரு இழப்பையும் ஏற்க தயங்காதவர்கள் விடுதலைப்புலிகள். தாயக விடுதலைக்காக‌ தன்னுயிரை இழக்க மாவீரர்கள் அஞ்சவில்லை; மாறாக மரணத்தை நெஞ்சிலே (சயனைட்) கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். இனவிடுதலை ஒன்றைத் தவிர வேறெந்த சமரசத்தையும் ஏற்காமல் களப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் போற்றுதலுக்குரியவர்கள். 'விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த வீரர்கள் அனைவரும் சமமே, யாருக்கும் கூடுதல் சிறப்போ, சலுகையோ கிடையாது' என்ற உயரிய நோக்கத்தில் தான் மாவீரர்கள் நாள் என்ற ஒற்றை நாளை அறிமுகம் செய்தார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன். ஆனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டதாக சொல்லும் பழ.நெடுமாறனோ பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் பிணத்தின் மீது அருவருப்பான அரசியலை அரங்கேற்றத் துணிந்துவிட்டார்.

யாழ் பல்கலைகழகத்தை எரித்த சிங்களப் பேரினவாதிகளுக்கும், பாபர் மசூதியை இடித்து, குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கோரத் தாண்டவம் ஆடிய மோடி மஸ்தான்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை அகராதியில் தேடிப்பார்க்கிறேன்; எந்த வேறுபாடுகளும் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஆனால் நெடுமாறன் போன்றவர்களின் கண்களுக்கு மட்டும் ராஜபக்சே படுபாவியாகவும், மோடி தமிழர்களை காக்க வந்த இரட்சகராகவும் தெரிகிறார் போலிருக்கிறது. அதிதீவிர இந்துத்துவவாதி பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு நெடுமாறனின் உலகத் தமிழர் பேரமைப்பு மூலம் உலகப் பெருந்தமிழர் பட்டத்தைக் கொடுத்த போதும், அதே மேடையில் அதை எதிர்த்த தோழர் நீலவேந்தன் அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியபோதும் நெடுமாறனின் காவிமுகம் அம்பலப்பட்டு போனது. இது மறுபதிப்பு என்று நினைக்கிறேன்.

களப்போரிலும், சிங்களப் பேரினவாத அரசாலும் படுகொலை செய்யப்பட மாவீரர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைத்திருக்கிறார்கள். அதன் திறப்புவிழா முறையே நவம்பர் 08,09,10 மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தனியார் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் நெடுமாறன் "எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவாக இதை அரங்கேற்ற இருக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார். இங்குதான் எனக்கு முரண்பாடு ஏற்படுகிறது. இதுநாள் வரை முள்ளிவாய்க்கால் முற்றத்தை நடராசன் தன் சொந்தக்காசில் செய்கிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் நெடுமாறன் இப்போதுதான் சொல்கிறார், இது ஒட்டுமொத்த தமிழினத்தின் விழா என்று. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, தமிழ்த் தேசிய கருத்துடையவர்களோடும், தமிழீழ விரும்பிகளோடும் எவ்வித ஆலோசனைகளையும் கேட்காமல், தமிழர்களிடம் நிதி வாங்காமல், ஒட்டுமொத்த தமிழினத்தின் விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பண முதலைகளிடம் மட்டும் காசை வாங்கிகொண்டு முற்றம் அமைத்திருக்கிறார்.

இக்கட்டுரையை நான் எழுதும் போது என்னோடு பணிபுரியும் தெலுங்குதேச நண்பர் உடனிருந்தார். என்ன கட்டுரை என்று விவரம் கேட்டதும், நான் எனக்குத் தெரிந்த ஈழ வரலாற்றையும், ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் கூறி அதற்கான நினைவுச் சின்னங்களை அமைக்கிறார்கள் என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார் 'இது ஒட்டுமொத்தமாக தமிழினத்தின் விழா என்று சொல்கிறீர்கள், அப்படியானால் இதில் ஒட்டுமொத்த தமிழர்களின் பங்களிப்பும் ஏன் புறக்கணிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் முன்னிறுத்துகிறார்கள்" என்று. என்ன செய்ய நாங்கள் பெற்றிருக்கும் தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்று சொன்னேன். மேலும் அவரிடம் நான் சொன்னேன் 'நன்கு வளர்ந்து நிற்கும் மரம் கூட சொல்லும் அது வளர்ந்த மண் வளத்தையும், அதை பராமரித்தவரின் பெருமையையும்' ஆனால் ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பாக நினைவு முற்றம் அமைக்கும் பெரும்பணியிலே "ஈழம் அமைந்துவிடாதா? எம்மக்களின் கண்ணீருக்கும், செந்நீரும் ஆறுதல் கிடைத்துவிடாதா?" என்ற ஏக்கத்தோடு தெருவில் நின்று போராடிய எம்போன்ற சாமான்யர்களைப் புறக்கணித்துவிட்டு, சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் கூட்டு சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் சிறப்பையும், வலிகளையும், வேதனைகளையும் அவர்கள் காலடியிலே சமர்ப்பிக்கிறார்கள்.

'இன்றைக்கு வார ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் முற்றம் தந்த முனைவரே நீவிர் வாழிய பல்லாண்டு' என்று. வரும் காலங்களில் அந்த முற்றத்தை பார்வையிடுபவர்களின் கண்களில் ஈழத்துயரமோ, தமிழினத்தின் சிறப்போ தெரியப் போவத்தில்லை. மன்னார்குடி மன்னர் நடராசனின் கொடைவள்ளல் தன்மையும், பெருமையுமே எஞ்சி நிற்கும். இது தமிழினத்திற்கு செய்யும் துரோகமில்லையா? என்று கேட்டு வெட்கம் விட்டு அழுதேன்.

இதிலே இன்னொரு கேவலமும் அரங்கேறுகிறது. '80 காலகட்டங்களில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் தோளோடு தோள்நின்ற அய்யா வீரமணி, இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இனப்படுகொலையை நிறுத்தக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரைத் துறக்கத் துணிந்த தொல்.திருமாவளவன், பல ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து போராடி வரும் சுப.வீ, 'காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் மாநாட்டிலே இந்தியா கலந்துகொள்ளக்கூடாது' என்பதற்காக தன்னுயிரையும் இழக்கத் துணிந்த தோழர் தியாகு போன்றவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலைமை அப்படி இருக்க எம்போன்ற சாமானியர்களின் நிலையெல்லாம் அப்படி ஒன்றும் மோசம் இல்லை என்றே நினைக்கிறேன்.

அதே வார ஏட்டில் 'பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவோம், ஆனால் ஈழப் படுகொலைகளுக்கு துணைபோன துரோகிகளுக்கு நாங்கள் அழைப்பு அனுப்பவில்லை' என்று நெடுமாறன் அறச்சீற்றம் காட்டி இருக்கிறார். தேர்தல் அரசியலிலே அவரவருக்கென்று ஒரு பார்வையும், தனிப்பட்ட விருப்பங்களும் இருக்கவே செய்யும். அதையெல்லாம் மனதிலே வைத்துக்கொண்டு ஈழவிடுதலைப் போரில் இதுபோன்ற இழிவான அரசியலில் ஈடுபடுபவர்களை அந்த மாவீரர்களின் ஆன்மா கூட நிச்சயம் மன்னிக்காது. ஈழப்போர் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அது உள்நாட்டு சிக்கல் என்றளவிலே உலகநாடுகளும், இந்தியாவும் கருதின. 1983 ஜூலையில் வெலிக்கடைச் சிறையில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகுதான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசு நடத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் அம்பலப்பட்டது. திருமாவின் ஈழவிடுதலைப் போரும் அப்போதே தொடங்கிவிட்டது. அப்போது திருமா கல்லூரி மாணவராக இருந்தவர். விடுதலைச் சிறுத்தைகள் என்ற அமைப்பை தொடங்குவதற்கு முன்பாகவே திருமாவளவன் ஈழவிடுதலைக்காகப் போராடி இருக்கிறார். கல்லூரி மாணவராக இருந்தபோது கண்ணதாசன் இலக்கியப் பாசறையின் பொதுச் செயலாளராக இருந்த அவர் அந்த இலக்கியப் பாசறையைக் கொண்டு மயிலாப்பூர் நகர் முழுதும் ஈழவிடுதலையை ஆதரித்து சைக்கிள் பேரணி செய்திருக்கிறார். இப்படி கையில் இருந்த ஒவ்வொன்றையும் கருவிக‌ளாக்கி ஈழ விடுதலைக்காகப் போராடியவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனை முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வுக்கு அழைத்து சிறப்பு செய்வதன் மூலம், தமிழர்களின் ஈழ உணர்வை, இந்திய ராஜபக்சே நரேந்திர மோடியின் காலடியில் அடகு வைக்கத் துணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

திருமா, சுபவீ இருவர்களும் கலைஞரை ஆதரிக்கிறார்கள்; அதனால் அவர்கள் துரோகியாகிப் போனார்கள். பாவம்... தோழர் தியாகு அப்படி என்ன மன்னிக்கவே முடியாத குற்றத்தை செய்துவிட்டார்? 'தமிழ் ஈழத்தின் தவம்' என்று பிரபாகரனால் பாராட்டப்பட்ட (?) நெடுமாறன் எதிரிகளை இடிக்காமல், தோழமைகளைப் புறந்தள்ளுவது சங்கடமாக இருக்கிறது. சர்வதேச அளவில் பேசப்படவேண்டிய ஈழச் சிக்கலை, வெறும் கருணாநிதி எதிர்ப்பாக மட்டுமே சுருக்கிய பெருமை நெடுமாறன் வகையறாக்களையே சாரும். அவர்கள் பாணியிலே சொல்ல வேண்டுமானால் உணர்வாளர்களைப் புறக்கணித்ததை விட தீவிர இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பி.ஜே.பி.யின் பொன்.ராதாகிருஷ்ணனை சிறப்பு செய்ததன் மூலம் உலகத்தமிழர்களுக்கே துரோகம் இழைக்கிறார் நெடுமாறன். விடுதலைப் புலிகளுக்கோ, ஈழத்தமிழர்களுக்கோ சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்கள் பி.ஜே.பி யினர். ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ ஈழத்திற்காகவே முழுநேரமாய் போராடினார்கள். 2009 ஆம் சனவரி திங்களில் மறைமலை நகரில் நடந்த உண்ணாவிரதப் போரில் 360 சிறுத்தைகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். 36 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். ஆதிக்க சாதிக்காரர்களின் அடாவடி இன்றைக்கும் சேரியில் நடந்துகொண்டிருந்தாலும் 'ஈழத்தமிழனுக்காக சேரித்தமிழர்களை ஒருங்கிணைக்கும் திருமாவின் முயற்சி நல்ல பலனளிக்கும்' என்று இதே நெடுமாறன் தான் 'திருமாவின் களப்பணியில் கால் நூற்றாண்டு' எனும் ஆவணப்பதிவில் கூறி இருக்கிறார்.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்தவர் சு.சாமி. இலங்கைத் தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று சொன்னவரும், இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு (சாஞ்சி) சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்தவர் சுஷ்மா சுவராஜ். இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொன்னவர் 'ரவிசங்கர பிரசாத்'. இப்படிப்பட்ட தமிழீழ விரோதக் கருத்துக்களை கொண்டவர்கள் அனைவரின் இருப்பிடமும் பா.ஜ.க. அப்படிப்பட்ட கட்சியின் பிரதிநிதியாக பொன்.ராதாகிருஷ்ணனை அழைக்கும் நெடுமாறனுக்கு...

(1) 1983 ஆம் ஆண்டு பிரபாகரன் தமிழகத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது மாணவர் படையை கூட்டிக் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொன்ன, 1983 ஆம் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாணவர் போராட்டம் நடத்திய, 'விடுதலைப் புலி' எனும் கையெழுத்து ஏடு நடத்திய, 80களில் வைகோவை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் "இந்திய அரசின் கொலைக் குற்றம்" (பின்பு அது கலைஞரின் அறிவுறுத்தலால் "குற்றவாளிக் கூண்டில் இந்திய அரசு" என்று பெயர் மாற்றப் பட்டது) என்ற கருத்தரங்கை நடத்திய திருமாவை மட்டும் அழைக்க தங்களுக்கு மனமில்லை. காரணம் திருமா தி.மு.க. கூட்டணியில் இருந்தார். அதனால் துரோகியாகிப் போனாரா?

(2) கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணியில் வைத்துக் கொண்டே, வைகோவை கூட்டணியில் வைத்துக் கொண்டே, பழ.நெடுமாறனோடு நட்பு பாராட்டிக் கொண்டே, காங்கிரசை விட்டு தி.மு.க விலகினால் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்த ஜெயலலிதாவை வைகோ உள்ளிட்டவர்கள் ஆதரிக்கலாம். புலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னவரோடு, பிரபாகரனை கைது செய்து, இந்தியாவில் தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவரோடு, போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவரோடு, அய்யா நெடுமாறனை 18 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு, அண்ணன் வைகோவை 10 மாதம் பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தவரோடு அவர்கள் கூட்டணி அமைக்கலாம். ஆனால் ‘தி.மு.க. அணியும் வேண்டாம்; அதிமுக அணியும் வேண்டாம். தமிழ்த் தேசிய தோழமைகள் அனைவரும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டுவோம்!’ என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தொடர்ந்து அறைகூவல் விடுத்து, அதற்கு யாரும் செவிமடுக்காத சூழலில் வேறுவழியின்றி தி.மு.க.வோடு கூட்டணியில் இருந்த திருமா மட்டும் துரோகியாகிப் போனாரா?

(3) அ.தி.மு.க. அணியில் இருந்த‌ கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., அ.தி.மு.க. அணியில் சேர இருந்த பா.ம.க. வோடு, அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்து வந்த பழ.நெடுமாறனோடு, அ.தி.மு.க.வுக்கு எல்லா வேலைகளையும் செய்து வந்த எம்.நடராசனோடு எதைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணியைப் பற்றி கவலைப் படாமல், அரசியல் ஆதாயத்தை பற்றி கவலைப் படாமல், தேர்தலைப் பற்றி கவலைப் படாமல் தி.மு.க. அணியில் இருந்தாலும் ஆறு மாதம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் கைகோர்த்து களப்பணியாற்றிய திருமா மட்டும் துரோகியாகிப் போனாரா?

(4) தமிழீழம் என்ற கருத்தியலையே ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. அணியில் இருந்ததாலே தமிழீழ தோழமைகள் ஆகிப்போனார்கள்; ஆனால் இந்திய நாடாளுமன்றத்திலேயே, 'தமிழீழம் ஒன்றே இறுதி தீர்வு' பேசிய திருமா தி.மு.க. அணியில் இருந்ததாலே துரோகியாகிப் போனாரா?

(5) 1983 ஆம் ஆண்டு தோழர் தியாகு சிறையில் இருந்த போது 1500 சிறைக் கைதிகளோடு சேர்ந்து ஈழத்திற்காக போராட்டம் நடத்தினார் . மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈழ எதிர்ப்புக் கொள்கையை கண்டித்துப் பேசியதால் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஈழ கோரிக்கையை ஏற்றுகொள்ளாத கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. அணியில் இருந்ததாலே தோழமைகளாகிப் போனார்கள். ஆனால் இதுநாள்வரை கலைஞரை எதிர்த்தும் பேசி இருக்கிற தியாகுவின் உண்ணாநிலைப் போராட்டப் பந்தலுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வந்ததாலே துரோகி ஆகிப்போனாரா?

(6) ஈழத்தை ஆதரித்து பேசியதற்காகவே நெடுமாறனையும், வைகோவையும் பொடாவில் கைது செய்த ஜெயலலிதாவின் அண்டர்கிரவுண்ட் ஆலோசகர் நடராசன் தோழமை; ஆனால் பொடா சட்டம் அமலில் இருந்த காலங்களில் கூட ஈழ அரசியலைத் துணிந்து பேசிய அய்யா சுப.வீ. துரோகியாகிப் போனாரா?

(7) தமிழினத்திற்காவும், தமிழீழக் களங்களிலே கூடுதலாக செயல்படவேண்டிய தேவை இருந்ததாலுமே அய்யா சுப.வீ அவர்கள் தன்னுடைய ஆசிரியர் பணியைக்கூட துறந்தார். ஈழத்தமிழர்களுக்காக‌ சிறை சென்றவர். பொன்.ராதாகிருஷ்ணன், நடராசன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை நெடுமாறன் நாட்டுமக்களுக்கு விளக்க வேண்டும்.

திருமா, அய்யா சுபவீ, தோழர் தியாகு போன்றவர்களைப் புறக்கணித்ததன் மூலம் இன்னொரு சந்தேகமும் வலுப்பெறுகிறது. அதாவது 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அதிலே இருந்தவர்கள் அனைவரும் அ.தி.மு.க. அணியைச் சார்ந்தவர்கள், ஆதரவாளர்கள்; திருமாவைத் தவிர. அந்த இயக்கத்தை கட்டியதில் நடராசனின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால் அதற்கு முதலில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்றே பெயர் வைத்தார்கள். கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பால் தான் அது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரே மாற்றப்பட்டது. இது ஒருபுறமிருக்க துரதிஷ்டவசமாக 2011யில் ஜெயலலிதா முதல்வரானதும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடங்கிப்போனது. அதன் பிறகு எவ்வித செயல்பாடுகளிலும் அது ஈடுபட‌வில்லை. ஜெயலிதாவை முதல்வராக்கவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்தவர்கள், இப்போது 2014இலே நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிற சூழலில் தான் நவம்பரில் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா நடத்துகிறார்கள். இதிலே பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். அதையும் இதையும் பொருத்திப் பார்த்தால் மோடியை பிரதமராக்குவதற்கே முற்றம் அமைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை அமர்த்தியத்தைப் போல காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க.வை அமர்த்தத் துடிக்கிறார்கள். ஈழ விவகாரத்திலே பா.ஜ.க.வின் கொள்கை என்ன? அதன் வெளியுறவுக் கொள்கை என்ன? காங்கிரசின் கைகளில் படிந்திருக்கும் ரத்தத்தைக் கொண்டு மோடியின் மீது வழிந்தோடும் ரத்தத்தை துடைத்து விட முடியுமா?

தமிழீழத்திற்காவும், தமிழினத்திற்காகவும் தொடர்ந்து போராடிவரும் உணர்வாளர்களையும், ஒட்டுமொத்தமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் புறக்கணித்து விட்டு சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் கூட்டு சேர்ந்துகொண்டு அமைக்கும் இது நினைவுச் சின்னமல்ல; தமிழினத்தின் அவமானச் சின்னமாக அமையப்போகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலைஞரைப் புறக்கணிக்க ஜெயலலிதா என்னென்ன வழிமுறைகளை செய்தாரோ, அதே வழிமுறையைத்தான் இன்று முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் பணியில் உணர்வாளர்களைப் புறக்கணிக்க நெடுமாறனும் கடைபிடிக்கிறார்..! மாவீரர்களின் தியாகங்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தமிழர்களின் உணர்வுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்து விட்டு, தனது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப மதவாதிகளோடும், சாதியவாதிகளோடும் கூட்டணி சேர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பதற்கு, அது ஒன்றும் நெடுமாறன் வீட்டு காதணி விழா அல்ல. இதன்மூலம் ஈழ உணர்வையும், தமிழகத்தில் நடைபெறும், நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் மன்னார்குடி மன்னர் நடராசனுக்குத் தாரை வார்க்கிறார் நெடுமாறன்.

ஈழத் துயரங்களையும், தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் காழ்ப்பு அரசியல் பார்வையில் இருந்து விலகி இனவிடுதலை என்ற ஒரே புள்ளியில் நின்று உற்று நோக்கும் எவருடைய கண்களுக்கும் ஆசிரியர் வீரமணி, திருமா, அய்யா சுப.வீ., தோழர் தியாகு போன்றவர்களின் உணர்வும், உழைப்பும் புலப்படுவதை எத்தனை நெடுமாறன்கள் வந்தாலும் தடுக்க முடியாது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை..!

- அங்கனூர் தமிழன் வேலு

Pin It