நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் சேர்பியா புலிகளை காக்க ஒரு வன விலங்கு ஆய்வுக் குழு கண்டறிந்த விசயங்களை தொகுத்து வழங்கினார்கள். 

புலிகளின் முக்கிய உணவு காட்டுப் பன்றிகள், ஆகவே அந்தப் பன்றிகள் நன்கு வாழ ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் புலிகளை காப்பாற்றலாம் என எண்ணினார்கள். ஆனால் பன்றிகளின் பிரச்னை வேறு விதமாக இருந்தது., பன்றிகள் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கொட்டைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவை. அந்த மரங்கள் பெருவாரியாக வெட்டப்படுகின்றன ஆதலால் அந்தக் காட்டுப்பகுதியில் உள்ள மரங்களை காப்பாற்றுவதன் மூலம் இரு வகை விலங்குகளை காப்பாற்றலாம் என முடிவுக்கு வந்தனர்.

இன்றைய மக்களின் உணவுச்சங்கிலியை ஆராய்ந்தால் வியப்பாக இருக்கும். சென்னை நகரில் ஒரு KFC உணவகத்தில் சாப்பிடும் ஒரு IT ஊழியருக்கு முப்பதாயிரம் சம்பளம் எனக் கொள்வோம்., அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கிக்கான மென்பொருளை நிர்வகிக்கும் பணியில் இருக்கிறார். அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பலரும் மருத்துவர்கள். அந்த மருத்துவர்களுக்கு சம்பளம் தருவது அந்தந்த மருத்துவமனைகள் தரும் நல்ல மருந்துகள். அந்த மருந்துகளின் மூலப் பொருள்களில் பாதி இந்தியா, கிழக்காசியாவில் இருந்து ஏற்றுமதி ஆகிறது.

இதை நீங்கள் இன்று செல்வந்தராக இருக்கும் எவருடனும் தொடர்புபடுத்தி பார்க்கலாம். நீங்கள் எங்கே இருந்து ஆரம்பித்தாலும் அதன் தொடக்கப்புள்ளி ஒரு விவசாயியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

நகரங்களில் இருக்கும் சிறு, பெரு வணிக நிறுவங்களில் நடக்கும் வியாபாரம் அனைத்தும், கிராம மக்களின் நேரடி அல்லது அவர்களால் பயன்பெரும் அடுத்தநிலை மக்களால் மட்டுமே இருக்கும்.

இந்தியாவின் பிரதமர் மண்மோகன்(எழுத்துப் பிழையல்ல) சொல்வது போல், அனைத்து விவசாயிகளும் இன்றே உடனுக்குடன் விவசாயத்தை கைவிட்டுவிட்டார்கள் என கற்பனை செய்து பாருங்கள்.

மாடுகளுக்கு தீவனம் கிடைப்பது அரிதாகும். பால் உற்பத்தி குறையும்.

சரக்கு வாகனங்களின் தேவை இருக்காது. குட்டி யானை, ட்ர்யாக்டர், கதிர் அடிக்கும் எந்திரம்... உர நிறுவனங்கள் தேவை இல்லை.. அதன் ஊழியர்களும் தேவை இல்லை.

காய்கறி சந்தைகள் முழுவதுமாக தேவை இல்லை.

விவசாய மக்கள் வேறு வேலை தேடி நகரங்களுக்கு வருவார்கள். கிராம மக்கள் தொகை கணிசமாகக் குறையும்.

யாருமே இல்லாத கிராமத்தில் எதற்கு அரசு மருத்துவமனை, பேருந்து, காவல் நிலையம், சாராயக் கடை, செல் போன் கோபுரம், பள்ளி, கோவில்? அவற்றையும் மூட வேண்டும்.

பாதிக்கு பாதி அரசு பணியாளர்கள் தேவை இல்லை.

நாட்டின் உணவுப் பொருள் இறக்குமதி அதிகரிக்கும்.

தண்ணீர் பம்ப் நிறுவனங்களை மூட வேண்டி வரும்.

ஆசீர்வாத கோதுமை, ஆச்சி ஊறுகாய், நல்லெண்ணை என அனைத்து நிறுவனங்களும் மூட வேண்டி வரும்.

வேலை இல்லாத மக்கள் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும்.
 
ஒரு விவசாயி தற்கொலை செய்கிறான் என்றால் நகரத்தில் பத்து பேருக்கு விரைவில் வேலை போகப் போகிறது என்று அர்த்தம்.

சரி... விவசாயத்தை எவ்வாறு காப்பது?

அனைத்து நதிகளும் கடலில் கலக்காமல் இருக்குமாறு ஒவ்வொரு இருபது கிலோ மீட்டருக்கும் ஒரு சிறிய தடுப்பணை.

அனைத்து நதிகளின் மேற்பரப்பிலும் மேற்கூரை போல சூரிய மின் சக்தி தகடுகளை உயரமாகப் பதித்தால் மின்சாரமும் கிடைக்கும் நீர் ஆவியாகாமலும் தடுக்கலாம்.

குளம் குட்டைகள் தூர் வாரப்பட்டு, அவற்றின் மேலும் சூரிய மின் சக்தித் தகடுகள் பொருத்துதல்.

இலவசமாக சொட்டு நீர் பாசனம் செய்து கொடுத்தல்.

உர நிறுவனங்களை அரசே ஏற்று நடத்துதல்.

விவசாய நிலங்களில் பாதாள அல்லது மேற்புற மழைநீர் சேமிப்புக் குட்டைகள் அமைத்து, அவற்றை சொட்டு நீர்ப் பாசனம் செய்யும் குழாய்களுடன் இணைப்பது.

விவசாயப் பொருள்களை அரசு பேருந்துகளில் கொண்டு செல்ல மேற் கூரை மற்றும் அடி பாகத்தில் காற்றோட்டமான இட வசதி செய்து தருவது.

ஏற்றுமதி வாய்ப்புள்ள பயிர்களை வளர்த்தல்.

நகரங்களில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு குழாய்களை அமைத்து அதில் பாதியை நகரத்தின் நிலத்தடி நீரைக் காக்கவும், மறு பாதியை நதிகளில் உள்ள தடுப்பணைகளுக்கும் செலுத்த வேண்டும்.

முழுக்க முழுக்க விவசாயிகள் மட்டுமே இருக்கும் வாரியம் ஒன்றை அரசு ஏற்படுத்தி, அவர்களின் தீர்மானங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். (அரசு என்பதே மக்களுக்காக என்றால், விவ்சாயிகள் தானே இந்த நாட்டின் அதிக மக்கள்?). அந்த வாரியம் மட்டுமே விவசாயப் பொருள்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை மாநிலம் முழுவதும் நிர்ணயிக்க வேண்டும்.
 
தெருவுக்கு ஒரு IT நிறுவனம் வந்தாலும் இந்த நாடு என்றுமே விவசாய நாடு தான்.

மாபெரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்து வருகின்றன. இந்திய விவசாய நிலங்களை அதுபோன்ற நிறுவனங்கள் கையில் அரசால் விற்பனை செய்யப்பட்டு, அதே நிலங்களில் முன்னாள் விவசாயிகள் தினக் கூலிகளாக வேலை செய்யும் அவலம் வந்து விடக் கூடாது.

கடந்த பத்தாயிரம் வருடமாக நிலையான தொழிலாகவும் வாழ்வாதாரமாக இருந்த விவசாயம், கடந்த முந்நூறு வருடமாக விவசாயியையும், விவசாயத்தை மேம்படுத்துவது எப்படி என ஆராய ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள் இன்று, "விவசாயமே தேவையில்லை" எனச் சொல்ல வைக்கின்றன. ஒட்டு மொத்த மனித சமூகமும் விவசாயம் மட்டும் செய்தால் மட்டுமே, இந்த புவி இருக்கும் வரை மனிதர்கள் இருப்பார்கள்.

நான் விவசாயி அல்ல, என் தந்தையும் விவசாயி அல்ல., வெட்கப்படுகிறேன். இருக்கும் விவசாயிகளையாவது காக்க வேண்டும்.

- தமிழ்நுட்பத் தம்பி

Pin It