இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது(!) பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நம் நாட்டின் பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களின் (15 - 16 வயது) வாசித்தறியும் திறன், கணித அறிவு மற்றும் அறிவியல் அறிவு உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கடைசிக்கு முந்திய இடத்தில் இருக்கிறது என்ற ஒரு புள்ளிவிவரம் நம் அனைவரின் முகத்திலும் ஓங்கி அறைந்து பெரிய மாற்றங்களின் தேவையை உணர்த்தி நிற்கிறது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD - Organisation for Economic Cooperation and Development) சார்பில் பன்னாட்டு மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் (PISA - Programme for International Students Assessment) அடிப்படையில் 15 - 16 வயதுக்குட்பட்ட (10-வது வகுப்பு, அடிப்படைக் கல்வி பெற்றிருக்கக்கூடியவர்கள்) பன்னாட்டு மாணவர்கள் 1) வாசித்தறியும் திறன், 2) கணித அறிவு மற்றும் 3) அறிவியல் அறிவு ஆகியவற்றில் எந்தளவுக்குத் தேறியிருக்கிறார்கள் என்பது மதிப்பீடு செய்யப்பட்டது. வளர்ச்சியடைந்த பல உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த OECD அமைப்பு தங்கள் நாடுகளில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை அறிந்துகொள்ளவும் அவற்றை மேம்படுத்த எவ்வாறு முனையலாம் என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த PISA மதிப்பீடு. மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மதிப்பீட்டில் விருப்பப்படும் நாடுகள் கலந்து கொள்ளலாம். கடந்த 2011-ல் நடந்த மதிப்பீட்டில் முதன்முறையாக கலந்துகொண்ட இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 74 நாடுகள் கலந்துகொண்டன.
 
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தமிழ்நாட்டிலும் இமாச்சல பிரதேசத்திலும் உள்ள 400 பள்ளிகளில் பயிலும் சுமார் 16,000 மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். இந்த மதிப்பீட்டின்படி உருப்போட்டுப் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், ஒரு பகுதியை வாசித்து அதை தெளிவாக அறிந்து கொண்டு அதைச் சார்ந்த கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒரு மாணவர் எப்படி புரிய வைக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே கேள்விகள் அமைந்திருந்தன. மதிப்பீட்டுப் பகுதிகளும் கேள்விகளும் தாய் மொழி (தமிழ் மற்றும் ஹிந்தி) மற்றும் ஆங்கிலத்திலும் இருந்தன. இதைச் சோதிக்க 8 மட்டங்களில் (1a> 1b> 2> 3> 4> 5> 6> 7) கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 1a முதல் 7 வரை செல்ல செல்ல கேள்விகள் கடினமாகிக் கொண்டே செல்லும்; கூடுதலான சிந்தனாசக்தி தேவைப்படும்.

ஒரு மாணவர் தான் வாசித்தறிந்த கருத்துக்களை மற்றவரிடம் ஓரளவாவது விளக்கிச் சொல்ல அவர் 2வது மட்டம் வரைக்கும் தேர்ச்சியாகியிருக்க வேண்டும். இந்த அடிப்படைத் தகுதியை தமிழ்நாட்டு மாணவர்களில் வெறும் 17% மட்டுமே (72வது இடம்) பெற்றிருந்தார்கள். தமிழ்நாட்டிற்குக் கீழே இமாச்சலப் பிரதேசமும் கிர்கிஸ்தானும் இருக்கின்றன. ஒரு மாணவரால் ஒரு பகுதியைப் புரிந்து கொள்ளமுடியாமலேயே இருக்கும்போது பின்வரும் கணிதம் மற்றும் அறிவியல் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க முடியாது என்ற உண்மை பின்வரும் பத்திகளில் பிரதிபலித்திருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் போகிறோம்.

அன்றாட வாழ்வில் எவ்வாறு ஏட்டில் எழுதிவைத்து விடைகாணும் அளவில் நேரடியாக பிரச்சினைகள் வராதோ அதேபோல்தான் கணித அறிவு சோதிக்கப்படும் பகுதியிலும் நேரடியாக எந்தக் கேள்விகளும் கேட்கப்படவில்லை. மாறாக ஒரு சிக்கலுடன் கூடிய ஒரு சூழ்நிலை கொடுக்கப்படும். இதை நன்கு உள்வாங்கிக்கொண்டு இந்தச் சூழ்நிலைக்குத் தகுந்த கணிதப்பகுதி எது என்று கண்டறிந்து, அதற்குத் தீர்வு கண்டு, அந்தத் தீர்வைப் பயன்படுத்தி எப்படிச் சிக்கலைத் தீர்க்கலாம் என்று அணுக வேண்டும். இதிலும் ஒரு மாணவர் தன் அன்றாட வாழ்வில் வரும் கணிதச் சிக்கல்களுக்கு தீர்வு காண அடிப்படை நிலையான 2வது மட்டம் வரைக்கும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழக மாணவர்கள் வெறும் 15% மட்டுமே (72வது இடம்). 

கிடைத்திருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி கணித உதவியுடன் முரண்பாடில்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்திச் சிந்திப்பதே அறிவியல் அறிவாகும். அறிவியல் அறிவுப் பகுதியிலும் அன்றாடம் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தியே கேள்விகள் அமைந்திருந்தன. இதிலும் வெறும் 15% தமிழக மாணவர்களே அடிப்படைத் தகுதியாகிய 2வது மட்டம் வரைக்கும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். 60% தமிழக மாணவர்களால் 1வது மட்டத்தையே தாண்ட முடியவில்லை. இதிலும் தமிழகத்தை அடுத்து கிர்கிஸ்தானும் (73வது இடம்) இமாச்சலப் பிரதேசமும் (74வது இடம் கடைசி) இடம்பிடித்திருந்தன.

இந்த மூன்று தேர்விலும் முதலிடம் பிடித்த நாடு நம் எதிர்பார்ப்புகளையும் மீறி சீனாவாக இருக்கிறது. வாசித்தறியும் திறனில் சீனாவை அடுத்து கொரியாவும், கணித அறிவில் சீனாவை அடுத்து சிங்கப்பூரும், அறிவியல் அறிவில் சீனாவை அடுத்து பின்லாந்தும் இடம்பிடித்திருக்கின்றன. மொத்தமாகச் சேர்த்து பார்க்கும்போது கிடைக்கும் ஒரு வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் சீனாவில் கடைக்கோடி மாணவன் தமிழகத்தின் தலைசிறந்த மாணவனைவிட 3 மடங்கு அறிவுள்ளவனாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஆங்கிலத்தையே தாய்மொழியாகக் கொண்டவையும் பெரும்பாலான இந்திய மக்களால் (அறிவு தாட்சண்யமின்றி) 'ஆ"வென வாய்பொளந்து அண்ணாந்தே பார்க்கப்படும் நாடுகளான இங்கிலாந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வரிசைப்பட்டியலில் முறையே 25 மற்றும் 15வது இடத்திலும் (வாசித்திறியும் திறன்), 28 மற்றும் 31வது இடத்திலும் (கணித அறிவு), 16 மற்றும் 23வது இடத்திலேயும் (அறிவியல் அறிவு) இருக்கிறார்கள்.

சிங்கப்பூரைத் தவிர அனைத்திலும் முதல் 5 இடங்களை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பெறாத பின்லாந்து, கொரியா போன்ற நாடுகளே பெற்றுள்ளன. சிங்கப்பூரில் ஆங்கிலவழிக் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. தாய்மொழி வழியிலும் அல்லாமல் ஆங்கில வழியிலும் அல்லாமல் நாம் ரெண்டுங்கெட்டான்களாகவே இருக்கிறோம் என்ற உண்மை உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தால் நம் கல்வி நிறுவனங்களிலிருந்து சிந்தனையாளர்கள் உருவாகமாட்டார்கள் என்பது திண்ணம்.

PISA மேலும் பல தகவல்களையும் கொடுத்துள்ளது. அவையென்னவென்றால்

1) பெற்றோர்களின் பொருளாதாரத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டபின், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை

2) மாணவர்களின் பள்ளிப்பருவ துவக்க நாட்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோர்களையுடைய மாணவர்கள் கணிசமான தேர்ச்சியை பெற்றிருக்கிறார்கள்

3) மாணவர்களுக்கு கூடவேயிருந்து வாசிக்கக் கற்றுக்கொடுத்த பெற்றோர்களையுடைய மாணவர்கள், ஏழைகளாயிருந்தாலும், நல்ல தேர்ச்சியை பெற்றிருக்கிறார்கள்

4) பெற்றோரோடு அந்நியோன்யமாக பழகும் மாணவர்களும் நல்லத் தேர்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள்

5) மகிழ்ச்சிக்காக ஆர்வத்தோடு தினமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நல்ல தேர்ச்சியை பெற்றிருக்கிறார்கள் (பொதுவாக பெண்களும் வசதிவாய்ப்புகளுள்ள ஆண்களும் மகிழ்ச்சிக்காக புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாயிருக்கிறார்கள்)

6) பள்ளிகளைப் பொறுத்தவரை, வெளிப்படைத்தன்மை கொண்ட, கற்பிப்பதிலும் மாணவனை மதிப்பீடு செய்வதிலும் சுய அதிகாரம் கொண்ட பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நல்ல தேர்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள்.

'இந்தியாவின் சூழ்நிலைகளை உள்வாங்கிக்கொள்ளாமல் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. எந்த வகையான பள்ளிகளை மாதிரிகளாக எடுத்துக்கொண்டார்கள் என்ற முழுவிவரம் தெரியவில்லை. அடுத்த மதிப்பீட்டில் (2013-ல்) கலந்துகொள்ளப் போவதில்லை" என்பதுதான் இதற்கு எதிர்வினையாக அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. மேலும் சிலர் இந்திய மாணவர்களின் திறனை வெளிநாட்டு அமைப்புகள் மதிப்பீடு செய்து கொள்ளமுடியாது என்றும் எதிர்வினை புரிந்துள்ளனர். இந்த கருத்துக்கள், கெட்ட செய்தியை தூதாகக் கொண்டு வந்த புறாவை வறட்டிச் சாப்பிடுவதுற்கொத்ததும், துக்க செய்தி கொண்டு வந்த தபால் காரரை அடித்து விரட்டுவதற்கும் சமமானது. இதை மேற்கத்தைய, கிழக்கத்தைய நாடுகளுக்கிடையேயான வேறுபாடாகக் கருத வாய்ப்பில்லை ஏனெனில் ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்த பெரும்பாலான நாடுகள் இந்த மதிப்பீட்டில் கலந்துகொண்டிருக்கின்றன. சரி, PISA அறிக்கையை வெளிநாட்டு மதிப்பீடு என்று புறந்தள்ளினாலும் நம்முடைய நாட்டில் நடத்தப்படும் ASER (வருடாந்திர கிராமப்புறக் கல்வித்தகுநிலை அறிக்கை - 2012) அறிக்கையை எளிதாக நிராகரித்துவிட முடியாது. அந்த அறிக்கையின் சாராம்சம் என்னவெனில்,

1) 5வது வகுப்பு படிக்கும் பாதி பேர்தான் 3வது வகுப்பில் கற்றுக் கொடுத்தப் பாடத்தை வாசிக்கமுடிந்தது

2) 5வது வகுப்பில் படிக்கும் பாதி பேர்தான் கடன் வாங்கிக் கழிக்கும் கணிதத்திறனைப் பெற்றிருந்தனர்

3) 5வது வகுப்பில் படிக்கும் கால்வாசி பேர்தான் வகுத்தல் கணக்கைத் தெரிந்திருந்தனர்.

மேலும் கடந்த ஆண்டுகளை வைத்துப் பார்க்கும்போது நிலைமை மோசமாகிக்கொண்டே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வியறிவு பெறுவது ஒவ்வொரு இந்தியனின் உரிமை என சொல்லப்படும் இந்நாட்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு மாணவர்கள் தங்களின் ஆரம்பக்கல்வி உரிமைக்காகக் கட்டணம் (பெற்றோரின் தகுதியினடிப்படையில்) செலுத்துகிறார்கள் என்ற வருத்தமான செய்தியையும் அவ்வறிக்கைத் தாங்கிவருகிறது. இந்த விழுக்காட்டின் அளவு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கிறது. இவ்வாறு கட்டணம் செலுத்தியும் தரமான கல்வி மாணவர்களுக்குக் கிடைக்காததை, கிராமம் கிராமமாகத் தங்கள் கடைகளைத் திறந்திருக்கும் கல்வி வள்ளல்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் துரோகமாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.

நம்முடைய இந்த மோசமான நிலையை நேர்மறையாக அணுகி, இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்து அதைச் சரிசெய்து நம் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்வதே இப்போதைக்கு நம் முன் இருக்கும் அவசரத் தேவை. இல்லையென்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிப் போகும். குறிப்பாக எந்த மொழியில் கல்விக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும், அரசின் பங்கு, பெற்றோர் - மாணவர் உறவின் முக்கியத்துவம் போன்றவை இப்போது முன்னிறுத்தப்பட்டு தீர்வு காணப்படவேண்டிய தலையாய கேள்விகள். அந்த ஒரே நோக்கத்திற்காகத்தான் இந்த மதிப்பீட்டையே OECD நாடுகள் செய்கின்றன, எந்த ஒரு உண்மையையும் இப்படியாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.

- பா.மொர்தெகாய் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It