ஆராய்ச்சி என்பது மனித சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மட்டும் இல்லாமல் அது ஒரு படிப்பாகவே வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பல துறைகளிலும் ஆராய்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஆராய்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது.

buddha_450ஆராய்ச்சி மாணவனாக இருக்கிற எனக்கு, ஆராய்ச்சி முறைக்கு சமயங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக, பகுத்தறிவின் மீது கட்டப்பட்ட பௌத்தம் ஆராய்ச்சி முறைக்கு ஏற்றதாக அமைந்து காணப்படுவதை  நான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் புத்தரைப் பற்றியும் பௌத்தம் பற்றியும் எழுதிய “புத்தரும் அவரது தம்மமும்” என்ற நூலின் வழியாக புரிந்துகொண்டேன். அந்நூலை முதுகலை படிக்கும் போதே ஒருமுறை வாசித்து இருப்பினும் ஆராய்ச்சி மாணவனாக நான் இருந்து மீண்டும் ஒருமுறை வாசிக்கும்போது ஆராய்ச்சி முறை எவ்வாறு அமைய வேண்டும் என்கின்ற பௌத்த கருத்துக்கள் என்னைப் பெரிதும் ஈர்த்துள்ளது. எனவே, அந்நூலை அடிப்படையாகக் கொண்டு பௌத்தத்திற்கும் ஆராய்ச்சி நெறிமுறைக்கும் உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ளவும் விளக்கவும் முற்படுகிறேன்.

பண்டைய இந்திய சமயங்கள் அவர்கள் நினைத்த ஒரு பொருள் பற்றி சிந்தித்தும், அவர்கள் கண்டுபிடித்த ஒரு கருத்தை விளக்கியும் வந்திருக்கிறார்கள். இந்திய மரபில் சமயங்களோடு இணைந்தே தத்துவமும், மொழியும், இலக்கணமும் போன்ற கல்வி முறை வளர்ந்து வந்திருக்கிறது. எனினும், அவை இந்திய சமூக அமைப்பினாலும், இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறு காரணங்களினாலும் தொடர்ச்சி பெறாமல் அக்கல்வி முறை தேய்ந்துபோய் விட்டது.

சமயங்கள் ஒரு பொருள் (எப்பொருளாக இருப்பினும்) பற்றி ஆராய்ந்து, அதற்காக அவர்கள் வெளிப்படுத்திய கருத்து அல்லது முடிவு என்பனவற்றில் ஒரு ஆய்வுத் தன்மை அடங்கியிருக்க வேண்டும். ஒரு பொருளை அறிய புத்தர் அல்லது பௌத்தம் உதிர்த்த கருத்துக்களை இன்றைய ஆராய்ச்சி முறைக்கு ஏற்றதாக எவ்வாறு அமைகிறது என்று பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இது பௌத்தத்தின் கருத்துகள் இன்றைய ஆராய்ச்சி முறைக்கு எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதையும் பண்டைய காலத்தில் தோன்றிய பார்ப்பனிய கருத்துருவாக்கம் அது தோற்றம் பெற்ற பண்டைய காலத்திலேயே பயனற்ற ஒரு தத்துவமாக விளங்கியபோதிலும் இன்று அது நம் காலத்து வரையும் வந்து சேர்ந்துள்ள நிலையில் அது எவ்வாறு இன்றைய ஆராய்ச்சி முறைக்குப் பொருத்தம் பெறாமல் இருக்கிறது என்பதயும் விளக்கும்.

                ஒரு பொருள் பற்றி ஆராய்ந்து முடித்த ஒரு ஆராய்ச்சியாளர் அப்பொருள் பற்றிய எல்லா செய்திகளையும் அறிந்துவிட்டதாக கூறிவிடமுடியாது. ஒரு பொருள் பற்றிய அறிவின் முடிவை இறுதியாக ஒன்றை வரையறுத்துவிட முடியாது. ஆய்வில் அதன் முடிவாக சில கருத்துரைகளை வழங்கலாம். அவ்வாய்வே அப்பொருள்பற்றி வந்த ஆய்வில் இறுதியானதாக இருக்க வேண்டும் என்றோ புதிதாக அப்பொருள் பற்றி ஆய்வு தேவையில்லை என்றோ கூறமுடியாது.

                 “அறிவு என்றும் இறுதியானது. எப்போதும் அறிய வேண்டியவை சில இருந்துகொண்டேயிருக்கும்” (ப.375) என்றார் புத்தர். புத்தரின் இந்தக் கருத்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் “அறியக் கிடக்கிற அனைத்தையும் அறிந்துவிட்டதாக யாரும் உரிமைகோர இயலாது. எப்போதேனும் நாம் அறிய விரும்புகிற அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிந்துவிடுவதுமில்லை. எப்போதும் அறியப்டாததென சில இருக்கவே செய்கின்றன” என்று விவரிக்கிறார். இதனால் ஆய்வு என்பது நீண்டுகொண்டேயிருக்கக் கூடிய ஒன்று எனவும் அதற்கு முடிவில்லை என்றும் அறியலாம்.

                ஆய்வில் அனுமானம் அல்லது யூகம் என்பது ஆய்வின் ஒரு படிநிலையாக அமைந்துள்ளது.  அனுமானத்திற்குக் காரணம் அவசியமாகிறது. தன்னுடைய அனுமானத்திற்கான காரணத்தை ஒன்றையோ பலவற்றையோ கூறி அனுமானத்தை சரியாக நிரூபணம் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு, தான் கருதிய அனுமானத்தை நிரூபணம் செய்ய முடியாதபோது “அனுமானம் தவறு” என்று ஒப்புக்கொள்ளுதல் ஆய்வின் நேர்மைத் தன்மையைக் காட்டும். அனுமானம் நிரூபணம் செய்யப்படாமல் அது நிரூபணம் செய்யப்ப்டவில்லை எனினும் என் அனுமானம் சரியே அதுவேதான் இறுதி என்று சொல்லுகிற ஆய்வு முடிவு ஆய்வாகாது.

                உலகம் படைக்கப்பட்டதாக அதாவது கடவுள்களால் (பிரம்மா, பிரஜாபதி போன்றவர்கள்) படைக்கப்பட்டதாக பார்ப்பனியம் கூறுகிறது. உலகம் இருப்பது என்பது உண்மை. உலகத்தை கடவுள் படைத்தார் என்பது அனுமானம். உலகத்தை கடவுள்தான் படைத்தார் என்பது ஆய்வின் முடிவு.

                உலகத்தை கடவுள் படைத்தார் என்ற அனுமானத்திற்கும் உலகத்தை கடவுள்தான் படைத்தார் என்ற ஆய்வின் முடிவிற்கும் இடயே இட்டு நிரப்ப வேண்டிய சரியான அல்லது மிகச் சரியான காரணங்களை விளக்க பார்ப்பனியம் தவறவிட்டபோதும் அனுமானத்தையே முடிவு என அழுத்தமாக கூறுவதனால் அது வெறும் அனுமான ஆய்வாகவோ யூக ஆய்வாகவோ முடிந்துவிடுகிறது. இதில் ஆய்வின் நேர்மைத் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. எனவே, உலகம் படைக்கப்பட்டது என்பதில் நம்பிக்கைக் கொள்ளாத புத்தர் இது போன்ற ஆய்வுகளை “யூகக்கோட்பாடுகள்” என்று கூறுகிறார். புத்தர் யூகக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றை முற்றிலும் மறுக்கிறார்.

                ஆய்வில் அனுமானம் ஒரு படிநிலை என்ற போதும் அதை நிரூபணம் செய்யாமல் அதையே இறுதி படிநிலையாக விதண்டாவாதம் செய்யும் எந்த ஒரு ஆய்வும் ஆய்வாகது. “யூகக்கோட்பாடுகளால் மனிதர்களோடு தொடர்பு கொண்டு வாழும் மனிதர்களுக்கு நன்மை இல்லை” (ப.375) என்று புத்தர் கூறினார். இதிலிருந்து ஆய்வு என்பது மனித சமூகத்திற்குப் பயன்பாடு உடையதாக இருக்க வேண்டும் என்று புத்தர் கருதியதையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

                ஆய்வு என்பது அறிவியலை, சமூக அறிவியலை அடியொட்டியதாக அமைய வேண்டுமே தவிர கற்பனாவாதத்திலோ மூடநம்பிக்கையிலோ அமையக்கூடாது. மூட நம்பிக்கையை ஏற்க மறுத்த புத்தர் தன்னுடைய தம்மத்தில் “பிரக்ஞை” என்பதை முக்கியத் தூணாக அமைத்துக்கொண்டார். “பிரக்ஞை என்பது எதையும் உள்ளது உள்ளபடி புரிந்துகொள்வதாகும்” (ப.441). ஆய்வு உள்ளதை உள்ளபடியே ஆராய வேண்டும். அது தமக்குத் துணையாக மூடநம்பிக்கையையோ, கற்பனாவாதத்தையோ இதற்கு ஒத்த வேறொன்றையோ கொள்ளக்கூடாது. உள்ளதை உள்ளபடி ஆராய வேண்டுமென்றால் உண்மையை ஆராய வேண்டும் அதன்படி உண்மையை உரைக்க வேண்டும் என்று பொருள். ஆய்வு உண்மைக்கே முதலிடம் தர வேண்டும். புத்தர் உண்மையையே வலியுறுத்தினார்.

                ஒரு ஆய்வாளன் தன்னுடைய ஆய்வில் தவறே நேராது எனவோ தவறே இல்லை எனவோ அதுவே முடிவு எனவோ வாதிக்கக் கூடாது. புத்தர் மனித சமூகத்தின் வாழ்வியலுக்குத் தம்மத்தை ஒழுக்கமாக போதித்தார். அவையே புத்தரின் தம்மம். இது மிக உயர்ந்த கோட்பாடாக இருந்தபோதிலும் பௌத்தத்தில் தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவதும் தம்மம் அல்ல என்றே கருதப்படுகிறது. இதற்கு மாறாக, பார்ப்பனியம் வேதங்கள் முடிவானவை என்றும் வேதங்கள் தவறேயற்றவை என்றும் வாதிக்கிறது. இவற்றை மறுதலித்த புத்தர் வேதங்கள் புனிதமானவை என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ‘புத்தர் தன்னுடைய சாசனங்களுக்குத் தெய்வீகம் இருப்பதாகவும் தம் போதனை குறைவற்றது என்றும் உரிமை கொண்டாடவில்லை’ (ப.305). ஆய்வாளன் எந்த ஒரு ஆய்வையும் புனிதமாக போற்றப்படக்கூடாது.

                ஆய்வாளன் தன்னுடைய ஆய்வு முடிவானது என்றும் தவறேயற்றவை என்றும் அறிவிக்கும்போது வாசிப்பாளனுக்கு அவ்வாய்வின் மீது எந்தவிதமான ஒரு கேள்வியை எழுப்ப அது தடைசெய்கிறது. ஆய்வு மேன்மேலும் விவாதத்தை தனக்குள் கொண்டிருக்க வேண்டும். வேதங்கள் பற்றிய பார்ப்பனிய கருத்து மனிதச் சிந்தனைக்கு ஆய்வின் அதன் இயல்பான போக்கிற்குத் தடைசெய்கிறது.

                ஒவ்வொரு ஆய்வேடோ புத்தகமோ கருத்தோ அதன் மீது மீண்டும் மீண்டும் ஆராய்ச்சியை செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒன்றைப் பற்றி சொல்லப்பட்ட கருத்து இறுதியானது, தவறேயற்றது, புனிதமானது என்கிறது பார்ப்பனியம். “அனைத்துமே பரிசீலனைக்கும் மறுபரிசீலனைக்கும் உட்பட்டாக வேண்டும் என்கிறது பௌத்தம்” (ப.381). இங்கு சமகால ஆய்வு முறைக்கு பௌத்த கருத்துக்கள் பெரிதும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது.

                யூகக்கோட்படுகளை ஏற்க மறுத்த புத்தர் உண்மை என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது நிரூபணம் செய்யப்பட வேண்டும் என்று வாதித்தார். பௌத்தம் எதையும் மெய்ப்பிக்க இரு வழிமுறைகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று, புலன்களால் உணரப்படுதல் வேண்டும். மற்றொன்று, அனுமானித்து அறியப்படுதல் வேண்டும். ஆராய்ச்சி முறையின் அடிப்படையான அம்சங்களை பௌத்தம் தன்னகத்தே கொண்டுள்ளது. பார்ப்பனிய ஆய்வுமுறை என்பது ஆய்வு முறைக்கு ஒவ்வாததாகவும் நேர்மையின்மையும் கொண்டுள்ளது. பண்டைய பௌத்த ஆராய்ச்சி முறை என்பது இப்பொழுது மட்டுமில்லாமல் எப்பொழுதும் ஆராய்ச்சி முறைக்கு ஏற்றதாக அமைந்துள்ளதற்கு அடிப்படைக் காரணம் அது அறிவை அடிப்படையாகக் கொண்டு ஒரு அறிவியல் ஒழுங்குமுறையைக் கடைபிடித்து வருவதேயாகும்.

- இ.ஜெயபிரகாஷ், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புது தில்லி. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It