முக்கனிகளுள் ஒன்றான பலா-சுவையும் சத்தும் மிகுந்த முந்திரி விளைச்சலுக்கு பெயர் பெற்ற அன்றைய தென்னாற்காடு ஜில்லா, திருக்கண்டீஸ்வரம் கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். நெய்வேலி சுற்று வட்டாரங்களில் அவருக்கு 600 ஏக்கர் நிலம் இருந்தது. தென்னாற்காடு ஜில்லா சேர்மன், கடலூர் முனிசிபாலிட்டி சேர்மன், அண்ணாமலைப் பல்கலைக்கழக கவுன்சில் மெம்பர், ரெயில்வே போர்டு மெம்பர் போன்ற மதிப்பு வாய்ந்த பதவிகளை வகித்து வந்த அந்த விவசாயியின் பெயர் திரு.ஜம்புலிங்கம் என்பதாகும். அவர் தனது நிலத்தில் விவசாயப் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்க துளையிடும் போது நீருடன் கலந்து கறுப்பு நிறத் துகள்களும் வெளியேறுவதைக் காண்கிறார். அத்துகள்களை சேகரித்துக் கொண்டு அன்றைக்கிருந்த ஆங்கிலேய அரசின் புவியியல் துறையிடம் கொடுத்து பரிசோதிக்கச் சொல்கிறார்.

neyveli_power_plant_600

1934-35ஆம் ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட முயற்சிக்கு 1943ஆம் ஆண்டுதான் தக்க பதில் கிடைக்கிறது. அந்தாண்டுதான் Geological survey of India-வானது ஆழ்துளைகள் போட்டு சோதனை செய்து நெய்வேலி பகுதியில் சுமார் 500 மில்லியன் டன்கள் பழுப்பு நிலக்கரி படிமம் இருப்பதாக அறிவித்தது. இப்பழுப்பு நிலக்கரியை எரியூட்டி மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை அறிந்துகொண்ட ஜம்புலிங்கம் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் அவர்களை அணுகுகிறார். தொழில் துறையை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த காமராசர் இச்செய்தியை பண்டிதர் நேரு அவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார். இவ்விருவரின் விடா முயற்சிக்கு நேருவின் ஆதரவும் கிடைக்கவே நெய்வேலியில் சுரங்கம் அமைக்கும் பணிக்கு 1946ஆம் ஆண்டு ஹெச்.கே.கோஷ் எனும் பொறியாளர் பணியமர்த்தம் செய்யப்படுகிறார். அப்பொறியாளர் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குத் தேவையான மேல் மண் நீக்கப் பணியை 1946அம் ஆண்டு துவக்குகிறார். 175 ஆழ் துளைகள் போடப்பட்டு நெய்வேலி பகுதியில் 2000 மில்லியன் டன்கள் நிலக்கரி படிமம் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு தனது பயணத்தைத் துவக்கிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 1956ஆம் ஆண்டு ஒரு கம்பெனியாக பதிவு செய்யப்படுகிறது. காமராசர் முதலமைச்சராக இருந்த 1957 மே 20ஆம் நாளன்று பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்களால் சுரங்கம்-I என்று இன்று அழைக்கப்படும் முதலாவது சுரங்கம் துவக்கப்பட்டது. கிட்டத்தட்ட 80-90 மீட்டர் ஆழத்தில் மணற் படுகையைப் போல் படிந்து கிடக்கும் நிலக்கரியை அடைந்து அதனை வெட்டும் பணி 1961 ஆம் ஆண்டு ஆரம்பமானது. 1964இல் அன்றைய நிலக்கரி மற்றும் சுரங்கங்களின் அமைச்சர் நீலம் சஞ்சீவரெட்டி மற்றும் ரஷ்ய நாட்டு மின்சக்தி அமைச்சர் பி.எஸ்.நெ·ப் ரோஸி ஆகியோர் முன்னிலையில் 50 மெகாவாட் திறன் அனல்மின் நிலையம்-I உதயமானது. இந்த ரீதியில் முளைத்து- துளிர்விட்டு இன்று ஆண்டுக்கு 1500 கோடி லாபம் காய்க்கும் பெரும் விருட்சமாய் வளர்ந்து 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற ஓர் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக பசுமையாய் காட்சியளிக்கிறது இந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி
நிறுவனம்.

மூன்று மாபெரும் சுரங்கங்கள், 2490 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்கும் மூன்று அனல்மின் நிலையங்கள், இந்தியாவெங்கும் துணை நிறுவனங்கள் - விரிவாக்கத் திட்டங்கள் என பதிமூன்றாயிரம் நிரந்தர தொழிலாளர்கள், அதேயளவு ஒப்பந்தத் தொழிலாளர்கள், நான்காயிரம் பொறியாளர்கள்-அதிகாரிகள் பணியாற்றும் பரந்துபட்ட மக்களுக்கு வாழ்வளிக்கும் லாபகரமான பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வருகிறது இன்றுவரை.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் பெரும்பங்காற்றி வரும் இந்நிறுவனம் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுமைக்குமான பெருமளவு மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

தமிழ் நாடு:680.40 மெகாவாட், கர்னாடகா:304 மெகாவாட், ஆந்திரா:277 மெகாவாட், கேரளா:211.80 மெகாவாட், பாண்டிச்சேரி:96.80 மெகாவாட் என்பதன் அடிப்படையில் நெய்வேலி மின்சாரம் தென் மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஒரு அனல்மின் நிலையத்தின் மொத்த உற்பத்தியில் 15 சதவிகிதம் Transmission loss ஆகவும் 6 சதவிகிதத்தை நிறுவனப் பயன்பாட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டு விடுகிறது. இவற்றைக் கணக்கில் கொண்டுதான் நெய்வேலியில் 2490 மெகா வாட் உற்பத்தி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

விரிவாக்கத் திட்டங்கள் :

1) இராஜஸ்தான் மாநிலத்தில் என்.எல்.சி.யின் துணை நிறுவனம் 2010-11 முதல் 1114.18 கோடி முதலீட்டில் இயங்கி வருகிறது. இங்கு இயங்கும் 'பர்சிங்சர் அனல்மின் நிலையத்து'க்கு ஆண்டுக்கு 2.1 மில்லியன் டன்கள் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு , 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

2) நெய்வேலி பகுதியில் அனல்மின் நிலையம்-IIஇன் விரிவாக்கமாக 2x250 மெகாவாட் திறன் அனல்மின் நிலையம் 2453.57 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

3) கரியைக் கொண்டு இயக்கப்படும்(coal based power project) 2x250 மெகாவாட் அனல்மின் நிலையம் 4909.54 கோடி முதலீட்டுடன் தூத்துக்குடியில் தமிழ் நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து செயல்பட இருக்கிறது; கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

4) குஜராத் மாநிலம் வலியா-மங்ரோல் பகுதியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம்/1000 மெகாவாட் அனல்மின் நிலையம் அமையவுள்ளது.

5) ஒரிஸ்ஸா மாநிலத்தில் நிலக்கரியில் இயங்கும் 2000 மெகாவாட் அனல்மின் நிலையம் வரவுள்ளது.

6) இராஜஸ்தான் மாநிலம் ஹட்லா-பித்னாத் பகுதியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம்-250 மெகாவாட் அனல்மின் நிலையம் அமையவுள்ளது.

7) இராஜஸ்தான் மாநிலம் ரிரி பகுதியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம்/500 மெகாவாட் அனல்மின் நிலையம்,

8) மத்தியப் பிரதேசத்தில் 1000 மெகாவாட் அனல்மின் நிலையம்,

9) ஜார்கண்ட் மாநிலத்தில் 1000 மெகாவாட் அனல் மின் நிலையம் திட்டமிடப்பட்டுள்ளது.

10) தமிழ் நாடு-ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன்கள் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் சுரங்கம்/1000 மெகாவாட் அனல்மின் நிலையம்,

11) நெய்வேலி பகுதியில் மூன்றாவது சுரங்கம் மற்றும் 1000 மெகாவாட் திறன் மூன்றாவது அனல்மின் நிலையம்,

12) சீர்காழியில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கானத் திட்டம்,

13) உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 'ராஜ் வித்யூத் உத்பதான் நிகாம் லிமிடெட்' நிறுவனத்துடன் 51:49 என்ற விகிதத்தில் இணைந்து 14375.40 கோடி முதலீடு மூலம் 3x660 மெகாவாட் அனல்மின் நிலையம் துவங்குவதற்கு சமீபமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

14) ஒரிஸ்ஸா மாநிலம் தலபிரா என்னுமிடத்தில் 'MCL' - 'ஹிண்டால்கோ' நிறுவனங்களுடன் இணைந்து 15 சதவிகித முதலீட்டுடன் 'MNH சக்தி லிமிடெட்' எனும் புதிய கூட்டு நிறுவனம் ஒன்றையும் நிறுவவுள்ளது.

நிலத்தடியில் உள்ள நிலக்கரியை வெட்டி எடுக்காமல் பூமிக்கடியிலேயே எரிவாயுவாக மாற்றியமைத்து சுரங்கங்களைத் தோண்டாமலேயே அந்த எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்ப சாத்தியக் கூறுகளையும் இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையம், உத்தரபிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய ஒன்றிரண்டு திட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து விரிவாக்கத் திட்டங்களையும் தனது சொந்த முதலீட்டிலேயே துவங்கி செயல்படுத்தவுள்ளது இந்நிறுவனம். ஐம்பத்தாறு ஆண்டுகளில் இவ்வளவு அபாரமான வளர்ச்சியை எந்தவொரு தனியார் நிறுவனத்தின் முதலீட்டு உதவியுடனோ அல்லது தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்று நிதியாதாரம் திரட்டியதாலோ அல்லாமல் சொந்த செயற்பாட்டு முயற்சியால் மட்டுமே கண்டடைந்துள்ளது இந்த நிறுவனம்.

இப்போது என்.எல்.சி.யின் ஐந்து சதவிகித பங்குகளை பொதுமக்களுக்கு விற்று 460 கோடி நிதியைத் திரட்டப் பரிந்துரை செய்துள்ளதாம் 'செபி' என்ற 'இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்'. இராட்சத வள்ர்ச்சியைக் கண்டு வரும் இந்நிறுவனத்தின் பங்குகளை விற்க அனுமதிக்கமாட்டோம்; இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை இப்படி படிப்படியாக விற்பதன் மூலம் அரசு நிறுவனங்களுள் தனியார் ஆதிக்கத்தை வலிமைபடுத்த நினைக்கிறது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்று என்.எல்.சி. தொழிலாளர்கள் போராடினர்.

'செபி'யின் வழிகாட்டுதல்படி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முன்வருவது தனியாருக்கு அல்ல, மாறாக பொதுமக்கள் பயன்பாட்டு பிரிவின் கீழ் பொதுமக்களுக்கே விற்கப்படுகிறது என்கிறது அமைச்சர்கள் வட்டாரம். இவர்கள் சொல்லும் பொதுமக்கள் குக்கிராமத்து கருப்பாயியோ-முனுசாமியோ அல்ல; பங்கு வர்த்தகம் எனும் சூதாட்ட சந்தையில் கோடிகளில் விளையாடும் மேல் தட்டு வர்க்கமான முதலாளிகளே. பங்கு விறபனை மூலம் கிடைக்கும் நிதியை என்.எல்.சி. விரிவாக்கத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதும் அழும் பிள்ளையை அடக்குவதற்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்கும் முயற்சிதான்.

இந்நிறுவனம் வளர்ந்த விதம் குறித்து முன்பே பார்த்தோம்; இவர்களது ஆலோசனையைக் கேட்டு வளர்ந்து நிற்பதல்ல என்.எல்.சி.. நலிவடைந்து வரும் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கும் அரசு நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் பகாசூர கம்பெனிகளிடம் குவிந்து கிடக்கும் வராக்கடனை வசூலிக்கும் எண்ணம் இவர்களுக்கு வராது, உலக வங்கியில் குறட்டைவிடும் கறுப்பு பணத்தை வெளியே எடுக்கும் எண்ணம் எப்போதுமே வரவே வராது. இப்படியெல்லாம் கேட்பவர்களும் மூதாதையர்களின் தியாகத்தால் உருவான, ஆண்டுக்காண்டு அதிக லாபம் ஈட்டி வரும், எங்களது கடின உழைப்பில் உயர்ந்து நிற்கும் என்.எல்.சி.யை ஐந்து சதவிகிதமல்ல அரை சதவிகிதம் கூட விற்க விடமாட்டோம் என்பவர்களும் இந்த நாட்டின் பொதுமக்கள்தான்.

ஏற்கனவே நெய்வேலி நிறுவனத்தின் பங்குகள் 6.44 சதவிகிதம் விற்கப்பட்டுள்ளன. 1.44 சதவிகித பங்குகளை LIC நிறுவனமும் மீதி 5 சதவிகிதத்தை என்.எல்.சி. தொழிலாளர்களும் பங்கு போட்டு வாங்கிக்கொண்டனர். தொழிலாளர்களால் வாங்கப்பட்ட அப்பங்குகள் இப்போது அவர்களிடம் இல்லை; அப்பகுதியில் இயங்கிவரும் ஒரு சிட்பண்ட் நிறுவனம் ஏஜெண்டுகளை நியமித்து தொழிலாளர்களின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்துக்கொண்டது என்பதுவே நிதர்சனம். எனவே பொதுமக்களுக்கு என்று விற்கப்படும் இப்பங்குகள் பிறகு பண முதலைகளிடம் போய் சேர்ந்துவிடுகிறது; எத்தனை சதவிகிதம் விற்கப்படுமோ அத்தனை சதவிகிதம் தனியார் மயமாவதற்கு சமம் என்ற கருத்து மேலோங்குவதற்கு கடந்த கால அனுபவம் நமக்கு வாய்ப்பளித்துள்ளது.

இந்த அனுபவங்களோடுதான் நெய்வேலி தொழிலாளர்கள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ள தனது பங்குகளை என்.எல்.சி. நிறுவனமே திரும்பப் (Retain) பெற்றுக்கொள்ள வேண்டும், இந்திய பங்கு விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் தனது பங்கு விற்பனை பட்டியலிலிருந்து இந்நிறுவனத்தை நீக்கவிட்டு, விதிவிலக்கு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரினர். இறுதியாக தமிழக முதல்வர் தலையிட்டு தமிழக அரசின் தொழில் நிறுவனங்களான சிப்காட், டிட்கோ போன்றவை இப்பங்குகளை வாங்கிக்கொள்ள தயாராக உள்ளன என்று அறிவிக்கவே தற்காலிக மாக பிரச்சினை முடிவுக்கு வந்தது; அரை மனதாக ஏற்றுக்கொண்டனர் தொழிலாளர்களும். ப.சிதம்பரம் கம்பெனி என்.எல்.சி. பங்குகளை வாங்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளதை முறியடிக்கவே மண்புமிகு அம்மா அவர்கள் இத்தனை ஆர்வம் காட்டினார் என்றும் பகிரங்கமாகவே பேசப்பட்டது.

என்.எல்.சி. மட்டுமல்ல 'இந்தியாவின் நவீனக் கோவில்கள்' என்று வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படுவதன் மூலம் அந்நிறுவனங்களின் நிதி நிர்வாகம், உற்பத்தி பொருட்கள் மீதான விலை நிர்ணயம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் பங்குதாரர் என்ற அடிப்படையில் தனியார் ஆதிக்கம் நுழைவதற்கு வாசல் திறந்து விடப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் கோட்பாடுகளை பொதுத்துறை நிறுவனங்கள் கடைபிடிக்க நேரிடும்போது அரசு நிறுவனங்களுக்கேயுள்ள சிறப்பு குணமான சேவை மனப்பான்மை இல்லாமல் போய்விடும்; குறைந்த உள்ளீடுகள்(inputs) அதிக உற்பத்தி எனும் நவீன காலத்து திருத்தியமைக்கப்பட்ட உற்பத்தித் திறன் கோட்பாடு பிரகாரம் முதல் அடி வேலையாட்களின் எண்ணிக்கைமேல் விழுகிறது; அதாவது ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் வேலை வாய்ப்பும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு என்பதும் பறிபோகும் நிலை உருவாகும்.

என்.எல்.சி.யின் துணை நிறுவனங்கள் இந்தியாவெங்கும் இன்று பரவியுள்ளபோதும் இவ்வளர்ச்சிக்கு தக்கவாறு வேலை ஆட்களின் எண்ணிக்கை பெருகவில்லை.1995களில் பதினெட்டாயிரமாக இருந்த நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை இப்போது பதிமூன்றாயிரமாக குறைந்துவிட்டது. வெறும் 6.44 சதவிகித பங்குகள் விற்கப்பட்டுள்ள நிலையிலேயே நிலவரம் இப்படியென்றால் இன்னும் அதிகமாக விற்கப்பட்டுவிட்டால் என்னவாகும்? பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்த்ப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களுமே அதிகம் வசிக்கின்றனர்; என்.எல்.சி. நிறுவனத்தால் இவ்விரு பிரிவு மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலனடைந்து வருகின்றனர்.

ஏழை-எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நன்னோக்கு அடிப்படையில் நேருவின் கலப்புப் பொருளாதார (mixed economic policy) கொள்கையின்கீழ் தோற்றுவிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இலாப நோக்கில் மட்டுமே செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு, தனியார் பங்குதாரர்களை உள்வாங்கிக் கொள்ளும்போது அங்கு முதலாளித்துவ பொருளாதாரம் மூக்கு நுழைக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, என்.எல்.சி. மட்டுமல்லாமல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கெதிரானப் போராட்டங்களையும் கூட மத்திய அரசுகளின் மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகளுக்கெதிரான போராட்டங்களாகவே பார்க்க வேண்டும்.

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் மற்றும் பங்கு விற்பனை ஒழுங்கு முறை ஆணையம் ஆகிய இவற்றின் வழிகாட்டுதல்கள் பொதுத்துறைகளின் 49 சத்விகித பங்குகள் வரை விற்பதற்கு அனுமதி வழங்குகிறது. இதன்படி வருங்காலத்தில் என்.எல்.சி.யின் பங்குகளும் விற்கப்படுமானால் அப்பங்குகளை வாங்குபவர்களின் சார்பான இயக்குனர்கள் நெய்வேலி மின்சார விலையினை மாற்றியமைக்க வேண்டுமெனக் கோரமாட்டார்கள் என்று நிச்சயமாக கூறமுடியுமா? தமிழக அரசு இன்றைய நிலவரப்படி நெய்வேலி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.1.67 க்கும் அதிகபட்ச விலையாக ரூ.2.17 க்கும் பெற்று வருகிறது என்பதைக் குறிப்பிடத்த்க்கது. இதே நிறுவனம் தனியாருக்கு குறைந்தபட்ச விலையாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.41 என்று நிர்ணயம் செய்துள்ளது.

நெய்வேலி பகுதியிலேயே 'STCMS' கம்பெனியின்' ஜீரோ யூனிட்' எனும் தனியார் அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி மூலம் செயல்படும் அந்நிறுவனம் தமிழகத்துக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6.00க்கு மேல் என்ற வகையில் விற்பதாக தெரிய வருகிறது. எனவே என்.எல்.சி. பங்குகளை மக்களுக்கு என்று சொல்லிக் கொண்டு தனியாருக்கு விற்பதன் மூலம் மின்சாரத்தின் மீதான விலை நிர்ணய உரிமையையும் அப்பங்குதாரர்களுக்கு விட்டுக் கொடுக்கும் நிலைமை ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது.

நிறுவன முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு நிறுவனம் தனது செயல்திட்டங்களை மாற்றியமைக்க நினைப்பது தவறாகாதுதான், அத்திட்டம் மக்களுக்கு பயன்படும் வகையில் முற்போக்கானதாக இருக்கும்போது. என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவு அவ்வகைபட்டதாக இருப்பதாகத் தோன்றவில்லை. தனியார் தொழில் நிறுவனங்கள் கூட பங்குகளை விற்பதன் மூலம் நிதியாதாரத்தைப் பெருக்கி முன்னேற்றம் காண்கின்றன; மற்றபிற பொதுத்துறைகளான BHEL, ONGC, COAL, NTPC போன்றவற்றின் பங்குகள் விற்கப்பட்டுள்ள நிலையில் என்.எல்.சி. பங்குகள் விற்கப்படும்போது மட்டும் ஏன் போராட்டங்கள்? என்று பங்கு சந்தை அறிவு வட்டாரம் கேட்கிறது. ஏனென்றால் என்.எல்.சி. எனும் இந்த பொதுத்துறையின் இயக்கமும் வளர்ச்சியும் நெய்வேலி சுற்று வட்டார மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. எவ்வாறெனில் நெய்வேலி சுரங்கங்கள் செயல்படவும் விரிவடையவும் அம்மக்கள் தங்களது நிலங்களை வழங்க முன்வரவேண்டும். பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தொய்வில்லாமல் நடப்பதற்கு நிலம் என்ற மூலக்கூறு பொதுமக்களிடமிருந்ததுதான் பெறப்பட்டாக வேண்டும் என்பதை மேற்படியானவர்கள் புரிந்துகொண்டால் நல்லது. மற்றபிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு இது போன்ற நிர்பந்தம் இல்லை.

இச்சூழ்நிலையில் என்.எல்.சி.க்கு தங்களது ஜீவாதாரமான் நிலங்களை வெறும் பணத்துக்காக வழங்குவ்தில்லை. நெய்வேலி நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்கள் என்ற உரிமை உணர்வோடு தமக்கில்லை என்றாலும் தங்களது வாரிசுகளுக்காவது இன்றில்லை என்றாலும் என்றைக்காவது ஒருநாள் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் நிலங்களை வழங்குகின்றனர். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, 'செபி'யின் வழிகாட்டுதல் என்ற பெயரில் இந்நிறுவனத்தின் பங்குகளில் மெல்ல மெல்ல தனியார் ஆதிக்கம் நுழைந்து விட்டால் வீடு-நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என்பது எட்டாக்கனியாகிவிடும் என்று அம்மக்கள் அஞ்சுகின்றனர். அம்மக்கள் நிலம் வழங்க மறுப்பார்களேயானால் என்.எல்.சி. சுரங்கங்களின் இயக்கம் முடங்கிவிடும். எனவே மற்ற பொதுத்துறை நிறுவன்ங்களின் பங்கு விற்பனை நிலவரத்தோடு இந்நிறுவனத்தையும் ஒப்பிட்டு பேசக்கூடாது. இவற்றினை எல்லாம் கருத்தில்கொண்டு நியாயமாகப் பார்க்கப்போனால் அணுசக்தி-இரயில்வே துறைகளுக்கு பங்கு விற்பனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது போலவே என்.எல்.சி. நிறுவனத்துக்கும் அளிக்கப்படவேண்டும்.

இந்திய நாட்டின் பொருளாதார அந்தஸ்தை காக்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்படக்கூடாது என்ற கருத்தும் இன்னொரு பக்கம் இருக்கவே செய்கிறது. 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அன்றைய மத்திய அரசுகள் இதே போன்று பத்து சதவிகிதப் பங்குகளை விற்க முயற்சித்தன. அப்போது என்.எல்.சி. தொழிலாளர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தி மத்திய அரசின் முடிவுகளை தள்ளிப்போட வைத்தனர். அதே அனுபவங்களோடு இப்போதும் போராடினர். முதல்வர் ஜெயலலிதாவின் தலையீட்டால் பொதுமக்களுக்கு என்ற பெயரில் தனியாருக்கு போகவிருந்த என்.எல்.சி.யின் ஐந்து சதவிகித பங்குகள் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடம் போய் சேர்ந்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் என்.எல்.சி.யின் பங்குகள் LIC உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவங்களிடம் 4.67 சதவீதம்,வங்கிகள்- கார்ப்பரேட் நிறுவனங்களிடம் 0.28 சதவீதம், பொதுமக்களிடம் 1.29 சதவீதம், தமிழ் நாடு அரசின் தொழில் நிறுவனங்களிடம் 3.56 சதவீதம் போக மத்திய அரசின் வசம் 90.20 சதவீதம் உள்ளது.

கோடிகளில் புரளும் நமது அரசியல் வாதிகளுக்கும், பங்கு சந்தை வியாபார கரடிகளுக்கும் வேண்டுமானால் என்.எல்.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு ஒரு சாதாரண செயல்பாடாகத் தெரியலாம். அந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், வீடு-நிலம் வழங்கியவர்கள் என்ற உரிமையில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நெய்வேலி பகுதி மக்களுக்கும் இது ஜீவாதாரப் பிரச்சினை. இவ்வளவையும் மீறி நமது அரசாங்ககங்கள் தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் எனும் கொள்கைகளின்படி வருங்காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்றுவிடலாம். வழக்கமான மறதி வியாதிக்கு ஆளாகி என்.எல்.சி. தொழிலாளர்களும் மக்களும் அரசியல்வாதிகளை மன்னித்தும் விடலாம். மக்களுக்கு பயன்படட்டும் என்ற உயரிய நோக்கில் தனது 600 ஏக்கர் நிலத்தை வழங்கிய-பசுமையான நெய்வேலி நகரின் மேலும் நெய்வலி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் மீதும் பெருமையாய் அலைந்து கொண்டிருக்கும் ஜம்புலிங்கத்தின் ஆன்மா மன்னிக்காது.

- வெ.வெங்கடாசலம்

Pin It