கூடங்குளம் அணுமின் நிலையைப் பிரச்சினை சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் திரு. சுந்தரராஜன்,வழ்க்கறிஞர் புகழேந்தி ஆகியோரால் தொடரப்பட்ட மூன்று வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அறவழியில் போராடும் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றமும் வலியுறுத்தியிருப்பதை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரவேற்கிறது.

உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், அணுஉலையை தகர்க்கப் போகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள், எனவே போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறும் காலம் வரவில்லை என்ற உண்மைக்குப் புறம்பான கருத்தைத் தெரிவித்தார்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைமையில் மீனவ மக்கள் நடத்தும் எங்கள் அறவழிப் போராட்டம் அகில உலகத்தாலும் பாராட்டப்படும்போது, திருநெல்வேலி மாவட்ட மற்றும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் திட்டமிட்டு எங்களை ஒரு வன்முறைக் கும்பல் என்று சித்தரித்து, மக்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போட்ட வண்ணம் இருக்கின்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்பு வருகிற இந்த நாளை மனதிற்கொண்டு, இடிந்தகரையில் வசித்து வரும் போராட்டக் குழுவைச் சார்ந்த அருட்தந்தை மை.பா. சேசுராசன், இன்னும் 18 பேரோடு கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக ஒரு பொய் வழக்கை நேற்று (யூலை 29, 2013) பதிவு செய்திருக்கிறார்கள். போராடும் மக்கள் மீதான வழக்குகளை எந்த நிலையிலும் கைவிடக் கூடாது, இவர்களை வன்முறைவாதிகளாக சித்தரித்து, தோற்கடித்தே தீர வேண்டும் என்று அரசுகள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது.

உள்ளூர் மக்கள் அச்சங்களை மதிக்க மாட்டோம், உணர்வுகளை ஏற்க மாட்டோம், அவர்கள் ஒத்துழைப்பின்றி பாசிச முறைகளைக் கையாண்டு அடுத்த அறுபது ஆண்டுகள் கூடங்குளம் அணுஉலையை ஓட்டலாம் என்று நினைப்பது ஒரு மக்கள் விரோதப் போக்காகவே அமையும். கேரளாவிலே ஓர் அணுமின் நிலையம்கூட அமைக்க மாட்டோம், கர்நாடகாவிலே அணுமின் நிலையக் கழிவுகளைக்கூட புதைக்க மாட்டோம், தமிழகத்திலே தமிழர்களைப் பிரித்தாண்டு எப்படி வேண்டுமானாலும் நடத்துவோம் என்று செயல்படுவது ஏற்றுக் கொள்ளப்படமுடியாதது.

கூடங்குளம் பிரச்சினையை திசை திருப்பாது, வீண் பிடிவாதத்தைக் கைவிட்டு, அறவழியில் போராடிய மக்கள் மீதுப் போட்டிருக்கும் பொய் வழக்குகளை தமிழக அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை

Pin It