தேசம் என்றால் என்ன?

                “ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு மற்றும் பொதுக் கலாச்சாரத்தில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்”; என்றார் ஸ்டாலின்.

                பொதுமொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு, பொதுக்கலாச்சாரத்தில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை விரிவாக புரிந்து கொள்ள மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினையும் என்ற ஸ்டாலின் நூலினை பார்க்கவும்.

                பிரதேசம் என்பது குறித்து ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் கூறுகிறேன். ஆங்கிலம் பொதுமொழியாக இங்கிலாந்தும் அமெரிக்காவும் பெற்று இருந்தபோதிலும் அவை இரண்டும் வௌ;வேறு தேசங்களாகத் திகழ்வதற்குக் காரணம் அவை தொடர்ச்சியான நிலப்பரப்பில் வாழவில்லை. மேலும் பொருளாதார ஒருங்கிணைப்போ, மன இயல்போ இல்லை. இந்த காரணங்களால் அவை வௌ;வேறு தேசங்களாகத் திகழ்கின்றன. தமிழை பொதுமொழியாகக் கொண்ட தமிழகமும், தமிழ்ஈழமும் வௌ;வேறு தேசங்களாகத் திகழ்வதற்கு இதே காரணங்களைக் கொள்ளலாம். இதே போல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி போன்ற எண்ணற்ற தேசங்கள் இந்தியாவில் உள்ளன.

                இந்தியாவில் எண்ணற்ற தேசிய இனங்கள் தனக்கான வரலாற்றைக் கொண்ட பல்வேறு வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளன. இவை அனைத்தும் புதிய தேசமாக மாறும் நிகழ்ச்சிப் போக்கில் உள்ளன. அதனால் தான் இந்தியாவில் புரட்சி குறித்து ஸ்டாலின் கூறினார். “இன்று, இந்தியா ஒரே முழுமை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு புரட்சிகர எழுச்சி ஏற்படும் போது, தமக்கென்று தனிப்பட்ட மொழிகளையும் கலாச்சாரங்களையும் கொண்டவையும் இதுவரை அறியப்படாதவையுமான பல தேசிய இனங்கள் அரங்கில் தோன்றும் என்பதில் அய்யமில்லை. பல்வேறு தேசிய இனங்களிடையே பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைக் கொண்டு வருவது என்பது, இந்த தேசிய இனங்களின் மொழிகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு இசைவான முறையிலே நடைபெறும் என்பதில் அய்யமில்லை.” மேலும் கூறுவார் “இந்தியாவின் விசயத்தில் கூட முதலாளித்துவ வளர்ச்சி மேலே செல்லச் செல்ல அதுவரை உறங்கிக் கிடந்த எண்ணற்ற தேசிய இனங்கள் உயிர்பெற்று எழக் காணலாம்.”

                மார்க்சியம் வரலாற்றை தொடர்ந்து இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருப்பதாக பார்க்கிறது. மாறாத நிலையில் வரலாற்றை ஒருபோதும் பார்க்கவில்லை. இதற்கு காரணம் சமுதாயத்திலுள்ள வர்க்க முரண்பாடுகள்தான் என அது கூறுகிறது. மாவோ கூறினார். “சமுதாய மாற்றங்கள் ஏற்பட ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான, சில பத்தாண்டுகள், அவ்வளவு ஏன் புரட்சியின் காலத்தில் ஒரு சில ஆண்டுகள் அல்லது ஓரிரு மாதங்கள் கூட பிடிக்கின்றன. இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம், இயற்கையில் உள்ள உள் முரண்பாடுகளின் வளர்ச்சியே என பொருள் முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்திலுள்ள உள் முரண்பாடுகளின் வளர்ச்சியாகும். அதாவது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமிடையே உள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கிடையே உள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்குமிடையே உள்ள முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியாகும். இம்முரண்பாடுகளின் வளர்ச்சிகளே, சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளி, பழைய சமுதாயத்தை அகற்றி புதிய சமுதாயத்தை நிறுவுவதற்கான உந்து சக்தியை வழங்குகிறது. பொருள் முதல்வாத இயங்கியல் புறக்காரணங்களை புறக்கணிக்கின்றதா? ஒரு போதும் இல்லை. புறக்காரணங்கள் மாறுதல்களுக்கான சூழ்நிலை அகக்காரணங்களோ அடிப்படை. புறகாரணங்கள் அகக்காரணங்கள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது.” மேலும் கூறினார் “வர்க்க சமுதாயத்தில், புரட்சிகளும் புரட்சிப் போர்களும் தவிர்க்கப்படமுடியாதவை., அவை இல்லாவிட்டால் சமுதாய வளர்ச்சியின் எந்த ஒரு பாய்ச்சலையும் நிறைவேற்ற முடியாது. பிற்போக்கு ஆளும் வர்க்கங்களைத் தூக்கி எறிவது சாத்தியமாகாது, மக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதும் முடியாத காரியம் என்பதைப் புரிந்து கொள்ள எங்களுக்குத் துணை செய்கிறது”. எனவே இதிலிருந்து தெரிவது சமுதாய மாற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது சமுதாயத்திலுள்ள வர்க்க முரண்பாடுகள்தான் என அறியலாம்.

                மார்க்ஸ், ஏங்கல்ஸ் முதலாளித்துவ சமுதாயத்திலுள்ள வர்க்க முரண்பாடுகளையும் அதற்கான விதிகளையும் ஆராய்ந்தார்கள் என்றால், லெனின் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிய நிலையில் ஏகாதிபத்தியத்திலுள்ள வர்க்க முரண்பாடுகளையும் புரட்சிக்கான விதிகளையும் கண்டறிந்தார். மா.சே.துங் சோசலிச சமுதாயத்திலுள்ள வர்க்க முரண்பாடுகளைக் கண்டறிந்து அரசியலை ஆணையில் வைத்துத் தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவைகளை வலியுறுத்தினார்.

                சமுதாய வர்க்க முரண்பாடுகள்தான் வர்க்கப் போரட்டமாக அரசியல் அரங்கில், சமுதாயத்தில் வெடிக்கிறது. வர்க்கப் போராட்டம்தான் சமுதாயத்தை முன்னோக்கி உந்தி தள்ளுகிறது. இவ்வர்க்கப் போராட்டத்தை ஆளும் வர்க்கம் தனது அரசியல் அதிகாரத்தைக் கொண்டு மூர்க்கமாக அடக்கி ஒடுக்குகிறது. ஆளும் வர்க்கம் என்கிறபோது ஆளும் அரசியல் கட்சிகளை நினைக்க கூடாது. அவை ஆளும் வர்க்கக் கட்சிகள். இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்கிற போது பெரும் முதலாளி வர்க்கம், பார்ப்பனிய அதிகார வர்க்கம், நிலப் பிரபுத்துவ வர்க்கம் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனை பாதுகாப்பதற்கான அரசியல் அமைப்புகள் தான் பாராளுமன்றம், சட்டமன்றம், இராணுவம், போலீசு, நீதிமன்றம், மாவட்ட, வட்ட, கிராம அலுவலகங்கள். இந்தியாவிலுள்ள ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்திய ஒருமைப்பாடு என தொடர்ந்து காது கிழியும் வகையில் கூச்சலிட்டு வருகின்றன.

இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க அடக்குமுறைக் கருவிகளான இராணுவம், போலீசு, மாவட்ட, வட்ட அலுவலகங்களை மட்டும் அது நம்பியிருக்கவில்லை. மக்களுக்கு அதிகாரம் இருப்பது போன்ற தோற்றத்தைத் தரக்கூடிய பாராளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், பஞ்சாயத்து, பத்திரிக்கைகள், அரசியல் கட்சிகள் போன்ற ஜனநாயக கருவிகளையும் அது நம்பியுள்ளது. சுருங்க கூறின் அரசு என்பது ஒரு வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகும். அதற்கான நிறுவனங்கள் தான் மேலே கூறியவை. இந்த நிறுவனங்களின் மீது ஒரு கட்சி வைத்துள்ள கண்ணோட்த்தைக் கொண்டே அது ஆளும் வர்க்கக் கட்சியா? ஒடுக்கப்பட்டுள்ள வர்க்கங்களின் கட்சியா? என நாம் முடிவு செய்ய முடியும். விவசாயி, தொழிலாளிகளிடையே வேலை செய்கிறார்கள் என்பதைக் கொண்டு அவர்கள் உழைக்கும் மக்கள் தலைவர்கள் என கணக்கிடக்கூடாது. அவர்கள் விவசாயி, தொழிலாளிகளை தந்திரமாக ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய வைக்கும் முதலாளித்துவத் தளபதிகள் என்று புரிந்து கொள்ளவும்.

                நாம் எடுத்துக் கொண்ட பிரச்சினைக்கு வருவோம். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், கோ.சி.மின் ஆகியவர்கள் தேசிய இனப்பிரச்சினைகளை எப்படி கையாண்டார்கள். உலகிலுள்ள சிறிய, பெரிய என அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை முதலில் அவர்கள் அங்கீகரித்தார்கள்.

                சுய நிர்ணய உரிமை என்றால், ஒரு தேசிய இனம் தனது அரசியல், பொருளியல், பண்பாட்டை தானே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை. வேறொரு வகையில் கூறினால் ஒரு தேசிய இனம் தனது தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை. தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் மிகப் பெரும் ஜனநாயக உரிமையாகும். இதன் பொருள் என்ன? ஒரு தேசிய இனம் வேறொரு தேசிய இனத்துடன் அவ்வுரிமையுடன் சேர்ந்து வாழலாம் அல்லது பிரிந்து செல்லலாம், பிற்போக்கான அல்லது முற்போக்கான அரசியல், பொருளியல், பண்பாட்டு கொள்கையை பின்பற்றுவதற்கோ நிராகரிப்பதற்கோ அத்தேசிய இனத்திற்கு முழு உரிமை உண்டு என்பதாகும். இதில் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று சுய நிர்ணயம். மற்றொன்று சுயநிர்ணய உரிமை. விவாகரத்து உரிமையை எடுத்துக் கொள்வோம். அதிலும் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று விவாகரத்து மற்றொன்று விவாகரத்து உரிமை. விவாகரத்து என்பது செயலையும், விவாகரத்து உரிமை என்பது செயலுக்கான உரிமையையும் குறிக்கும். அதே போல சுய நிர்ணயம் என்பது ஒரு தேசிய இனம் தனது அரசியல், பொருளியல், பண்பாட்டை தீர்மானித்தல் என்ற செயலையும், சுய நிர்ணய உரிமை என்பது செயலுக்கான உரிமையையும் குறிக்கும்.

                சுய நிர்ணய உரிமை என்பது தமிழ்ச் சொல் அன்று இதனை தோழர் தியாகு தன் தீர்வு உரிமை என்றும், தன்நிலை தீர்வு உரிமை என்று தோழர் கார்முகியும், தன்னுரிமை என தோழர் பெ.மணியரசனும் மொழி பெயர்த்துள்ளனர். இதில் தோழர் தியாகு மொழி பெயர்ப்பே சரியானது. சுய நிர்ணயம் என்பதை தன்தீர்வு என மட்டுமே மொழி பெயர்க்க முடியும். சுயநிர்ணயம், சுய நிர்ணய உரிமை என்பது வௌ;வேறு பொருள் உடையது. அதனை லெனின் சில இடங்களில் ஒரே பொருளிலும் மிகப்பல இடங்களில் வௌ;வேறு பொருள்களிலும் கையாண்டுள்ளார். தன்னுரிமையை பிரித்து இரண்டுக்கும் ஒரு போதும் இருவேறு பொருள் கொள்ள முடியாது.

                பல தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாட்டை பல்தேசிய இனநாடு என அழைக்கின்றோம். இந்தியாவை பல்தேசிய இன நாடு என குறிப்பிடுகிறோம். இங்கு இந்தி என்ற தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனமாகவும் தமிழ், தெழுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி பொன்ற பல அறியப்பட்ட தேசிய இனங்களும் அரசியல் அரங்கிற்கு வராத இன்னும்பல அறியப்படாத தேசிய இனங்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாக உள்ளன. இந்தி தவிர இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என அழைத்தால் பொருத்தமாக இருக்கும். பல தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் போது அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்றால் அவை சாரம், உள்ளடக்கம் என்ற வகையில் அவைகள் விடுதலைப் பெற்ற தேசிய இனங்கள் எனக் கூறலாம். வடிவம் என்ற வகையில் ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனத்துடன் சேர்ந்தோ தனித்தோ வாழ்ந்தாலும் அதற்கு சுய நிர்ணய உரிமை இருந்தால் உள்ளடக்கம் என்ற வகையில் அது விடுதலைப் பெற்றுள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும்.

                பொதுவாக தேசிய இனப் போராட்டம் ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள ஆளும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்குமான போராட்டமாக ஸ்டாலின் கூறுவார். எனவே இங்கே வர்க்கப் போராட்டமானது தேசிய இனப் போராட்டம் என்ற வடிவம் பெறுகிறது. இதனை மாவோவின் கூற்றில் கூறினால் “தேசியத் தன்மையைக் கொண்ட ஒரு போராட்டத்தில் தேசியப் போராட்டம் எனும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது. அவற்றுக்கிடையிலான ஒற்றுமையை இதுகாட்டுகிறது. ஒரு புறம், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் இருக்கிற பல்வேறு வர்க்கங்கள் எழுப்புகிற அரசியல், பொருளாதார முழக்கங்கள் யாவும் அவ்வர்க்கங்களுக்கிடையிலான ஒத்துழைப்பைச் சீர்குலைப்பதாக இருக்கக்கூடாது. மறுபுறம் (சப்பானை எதிர்ப்பதென்றும்) தேசியப் போராட்டத்தினுடைய முழக்கங்கள் யாவும் எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவான தொடக்க நிலையாக இருக்க வேண்டும். ஒற்றுமைக்கும் தனியுரிமைக்கும் இடையிலும் தேசியப் போராட்டத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையிலும் ஒற்றுமை உண்டு”. எனவே, தேசிய இனப் போராட்டமும் வர்க்கப் போராட்டமே. ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்ட வரலாறே என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறுவது கவனத்திற்க்குரியது.

                தேசிய இன அரசு அமைவது என்பது முதலாளித்துவக் கால கட்டத்தில் தவிர்க்கமுடியாத பொதுவிதியாக இருப்பதை மார்க்சிய அறிஞர்கள் பல இடங்களில் சுட்டிகாட்டியுள்ளனர். லெனின் கூறுவார் “ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவம் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்த தேவைகள் மிகவும் நன்றாக பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதார காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரீக உலகம் முழுமைக்கும் முதலாளித்துவ காலப் பகுதியில் தேசிய இன அரசு மாதிரி படிவமானது, சகஜமானது” என்பார். மேலும் கூறுவார் “முதலாளித்துவமானது, ஆசியாவை தட்டி விழிப்புற செய்துவிட்டு, அந்த மாகண்டத்திலும் கூட எல்லா இடங்களிலும் தேசிய இன இயக்கங்களை வெளிக்கொணர்ந்துள்ளது என்பதும் இந்த இயக்கங்களின் போக்கு ஆசியாவில் தேசிய இன அரசுகளை உருவாக்கும் திசையிலானது என்பதும், இத்தகைய அரசுகள் தான் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான மிகச் சிறந்த நிலமைகளை உத்தரவாதம் செய்யும் என்பதையும் மறுக்க முடியாத உண்மைகள்”.

மேலும் “முற்போக்கான நாகரிகமுற்றுள்ள மனித சமுதாயம் முழுவதன் உதாரணமும், பால்கன் நாடுகள், ஆசியா ஆகியவற்றின் உதாரணமும் தேசிய இன அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் “பொது வழக்கும்” ஆகும். பல்தேசிய இன அரசு என்பது பின்தங்கிய நிலையை குறிக்கிறது அல்லது அது ஒரு விதிவிலக்கு என்கிற காவுத்ஸ்கியின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை காட்டுகின்றன. தேசிய உறவுகளை பொறுத்த வரையில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான மிகச் சிறந்த நிலமைகளை தேசிய இன அரசுகள் உண்டு பண்ணிக் கொடுக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் பூர்சுவா உறவுகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் அத்தகையதொரு அரசு தேசிய இனங்களை சுரண்டுதலையும், ஒடுக்குதலையும் அகற்றிவிடலாம் என்பதல்ல இதன் பொருள். தேசிய இன அரசுகளை உண்டாக்குவதற்கான தூண்டு சக்தியை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்த பொருளாதார காரணிகளை மார்க்சிய வாதிகள் மறந்துவிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

வரலாற்று பொருளாதார கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் மார்க்சிய வாதிகளின் செயல்திட்டத்தில் உள்ள “தேசிய இனங்களின் சுய நிர்ணயம்” என்பதற்கு அரசியல் சுய நிர்ணயம், அரசின் சுயேட்சை தன்மை, ஒரு தேசிய இன அரசு அமைத்தல் என்கிற பொருள் தான் உண்டு. வேறு பொருள் இருக்கமுடியாது”. தேசிய இன அரசு உருவாவது வரலாற்றில் தவிர்க்கமுடியாத விதியாக இருப்பதை அம்பேத்கரும் உணர்ந்தேயிருந்தார். மொழி வாரி மாநிலங்களுக்கான விவாதத்தில் பங்கு பெற்ற அம்பேத்கர் ஜனநாயகத்தை எளிமை படுத்துவது என்ற அர்த்தத்தில் மொழி வழி மாநிலங்களை அங்கீகரிக்கிறோம். அதே நேரத்தில் அதன் ஆபத்தை சொல்லியாக வேண்டும். ஒரு மொழி மக்களை இணைக்கும் இரு மொழி மக்களை பிரிக்கும் இது வரலாற்று விதி என்றார். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உதாரணமும், ரசியாவின் உதாரணமும் அம்பேத்கர் கருத்தை உறுதி படுத்துகின்றன.

                மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுதுவத்தை வீழ்த்திவிட்டு பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி போன்ற தேசங்கள் (தேசிய இன அரசுகள்) தோன்றின. ரசிய புரட்சியில் பல்வேறு தேசிய இன அரசுகள் தோன்றின. அவைகள் ரசிய ஒன்றியத்திலிருந்து பிறகு பிரிந்து சென்றன. சீன புரட்சியில் சிறுபான்மை           தேசிய இன உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. திபெத் தனியரசுக்கான போராட்டத்தை நடத்தி வருகிறது. இலங்கையில் தனி ஈழத்துக்கான போராட்டம் நடந்து வருகிறது. இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்கள் தனியரசுக்கான போராட்டம் நடத்தி வருகின்றன. இவை யாவும் தேசிய இனங்கள் தனியரசுக்கான போராட்டங்களே ஆகும். இந்த போராட்டங்கள் அனைத்தும் ஒரு தேசிய இனம் ஒரு அரசு என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவையாகும். இதன் சரியான தன்மையின் காரணமாக தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஐநா சபை அங்கீகரித்துள்ளது.

                தேசிய இனப்பிரச்சினையில் மார்க்சிய அறிஞர்கள் என்னென்ன நிலைபாடுகளை கொண்டிருந்தார்கள் என கீழ்கண்ட நாடுகளின் எடுத்துக்காட்டிலிருந்து அறிவோம்.

1.            அயர்லாந்து

2.            நார்வே – சுவீடன்

3.            போலந்து

4.            இந்தோ - சைனா

5.            செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள்

1. அயர்லாந்து

 நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்சு, பிரிட்டன், இத்தாலி, செர்மனி போன்ற தேசங்கள் மேற்கு அய்ரோப்பாவில் தோன்றின. இவை தேசிய இன ஒருமை கொண்ட அரசுகளாக அமைந்தன. ஆனால் அயர்லாந்து இங்கிலாந்துடன் (பிரிட்டனுடன்) இணைந்து பல்தேசிய இன நாடாக தோன்றின. அதில் இங்கிலாந்து அயர்லாந்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தன. இங்கிலாந்தில் ஜனநாயக புரட்சி முடிவுற்று முதலாளித்துவ நாடாக இருந்தது. அயர்லாந்து நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தது. இந்நிலையில் அயர்லாந்து தனது அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தை தொடுத்தது. அப்போது மார்க்ஸ் கருதினார், இங்கிலாந்து முதலாளித்துவ நாடு. அதில் தொழிலாளி வர்க்கம் தோன்றியிருக்கிறது. இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்தும். அப்படி தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்தினால் அதன் மூலம் அயர்லாந்துக்கு விடுதலை கிடைக்கும் என நம்பினார். காலங்கள் கடந்தன. எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. தனது ஆய்வை மறுஆய்வு செய்தார்.இங்கிலாந்து முதலாளி வர்க்கம் அயர்லாந்தை அடிமைப்படுத்தி சுரண்டி இங்கிலாந்து ;தொழிலாளி வர்க்கத்தை பிரபுத்துவ ;தொழிலாளி வர்க்கமாக மாற்றியுள்ளதையும் அது ஊட்டம் பெற்று போராட்ட குணம் இன்றியும் இருப்பதையும் பார்த்தார். எனவே இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்த வேண்டுமானால் அயர்லாந்தை முதலில் விட்டுத் தொலைய வேண்டும் என முடிவுக்கு வந்தார். எனவே மார்க்ஸ் முதலாளிகளின் தலைமையிலான அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார்.இங்குள்ள தனிச்சிறப்பான நிலைமை என்ன? ஒரு ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கம் போராட்ட குணமின்றி ஊட்டம் பெற்று இருந்தால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிவினைக் கோரிக்கையை ஆதரித்து அதன் விடுதலைக்காக போராட வேண்டும் என்பதையே அயர்லாந்து உதாரணம் காட்டுகிறது.

2. நார்வே – சுவீடன்.

 நெப்போலியன் போர்களின் போது நார்வேயினரின் விருப்பத்திற்கு எதிராக மன்னர்களால் நார்வே ஸ்வீடனனுக்கு அளிக்கப்பட்டது. நார்வே – சுவீடன் இரண்டும் இணைந்து பல்தேசிய இன நாடுகளாக இருந்தன. ஸ்வீடன் ஒடுக்கும் தேசிய இனமாக இருந்தது. ஆகையினால் நார்வே பிரி;ந்துபோக போராடியது. அப்போது லெனின் சுவீடன் தொழிலாளி வர்க்க கடமை என்ன? நார்வே தொழிலாளி வர்க்க கடமை என்ன? என வேறுபடுத்தினார். சுவீடன் நிலப்புத்துவ வர்க்கம் நார்வேமீது போர்த்தொடுக்கவும் எண்ணியிருந்தது. இந்நிலையில் சுவீடன் தொழிலாளி வர்க்கம் நார்வே பிரிந்து போவதற்கு ஆதரவு அளிக்கவேண்டும். சுவீடன் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடவேண்டும் என லெனின் கூறினார்.நார்வே பிரிந்து போய் ஒரு முடி அரசு அமைக்க பெரும்பான்மையினர் எண்ணியிருந்தனர். இந்நிலையில் பெரும்பான்மையினர் விருப்பத்திற்கு இணங்கி முடி அரசை ஆதரிப்பது அல்லது நார்வே தொழிலாளி வர்க்கம் குடியரசுக்காக போராடுவதுடன் நிலைமை பக்குவமாக இருந்தால் நார்வே விடுதலைப் புரட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என்றார்.

 இங்குள்ள தனிச்சிறப்பான நிலைமை என்ன? ஸ்வீடன் தொழிலாளி வர்க்கம் நார்வே தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள் வௌ;வேறாக இருந்தன. சுவீடன் தொழிலாளி வர்க்கமும், நார்வே தொழிலாளி வர்க்கமும் இணைந்து புரட்சி நடத்துங்கள் என வறட்டுத்தனமாக லெனின் வாதிடவில்லை. நார்வே பிரிந்து போவதை சுவீடன் தொழிலாளி வர்க்கம் ஆதரித்ததால் வர்க்கப் போராட்ட நிலைமைகள் பாதுகாக்கப் பட்;டதாக லெனின் பார்த்தார். தேசிய இனப் பிரச்சினை ஸ்வீடன், நார்வே வழியில் தீர்க்கப்பட வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார்.

 3. போலந்து

 போலந்து ருஸ்ய மன்னன் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த ஒரு தேசம். ருசியா என்பது பல்தேசிய இன நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். ருஷ்ய புரட்சி பல தேசிய இனங்கள் சேர்ந்து ஜார் ஆட்சியை வீழ்த்தி புரட்சி நடத்தி தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையுடன் சேர்ந்து வாழ்ந்த நாடு. ஜார் ஆட்சியில் ஒடுக்கும் தேசிய இனம் ருஷ்ய தேசிய இனமாகவும் ; ஒடுக்கப்படும் தேசிய இனம் பலவாகவும் இருந்தன. போலந்து ருஷ்யாவிலிருந்து பிரிந்து போவதற்கு விடுதலைக்கேட்டுப் போராடியது. அப்போது மார்;க்ஸ் அதனை ஆதரித்தார்.மார்;க்ஸ்க்குப்பின் லெனின் காலத்திலும் போலந்து போராடிக்கொண்டிருந்தது. லெனி;ன் போலந்தின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்தார், பிரிவினையை எதிர்த்தார். அதைப்பற்றி பேசும் போது ஸ்டாலின் கூறுவார், மார்க்ஸ் போலந்து பிரிவினையை ஆதரித்ததற்கும் லெனின் போலந்து பிரிவினையை எதிர்த்ததற்கும் உள்ளடக்கம் ஒன்றுதான் என்றார். என்ன உள்ளடக்கம்?

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ஒடுக்கும் தேசிய இனமான ருஸ்ய தொழிலாளி வர்க்கம் போராட்ட குணமின்றி இருந்தது. போலந்து ஜார் மன்னனின்; பிற்போக்கிற்கு எதிராக போராடியது. அந்நிலையில் மார்க்ஸ் போலந்து பிரிவினையை ஆதரித்தார். லெனின் வாழ்ந்தபோது ஒடுக்கும் தேசிய இனமான ருஷ்யத் தேசிய இனத்தில் தொழிலாளி வர்க்கம் லெனின் தலைமையில் தேசிய இனங்களின் சுய நிர்ணய அங்கீகரித்து ஜார் மன்னருக்கு எதிராக போராடியது. இந்நிலையில் நாங்கள் போலந்து சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம், எங்களுடன் சேர்ந்து போராடுங்கள் என்றார் லெனின். இதைப்பற்றி ஸ்டாலின் கூறும் போது மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் போலந்தின் தலைநகரமான வார்ச புரட்சிகரமானதாக இருந்தது. லெனின் வாழ்ந்த போது போலந்தின் தலைநகரான வார்சாவைக் காட்டிலும் ருஷ்யாவின் தலைநகரமான பீட்டர்ஸ்பர்க் புரட்சிகரமாக இருந்தது என்பார்.

லெனின் கால ருஷ்யாவின் தனிசிறப்பான நிலைமை என்ன? ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான தொழிலாளி வர்க்கக் கட்சி இருந்ததும் அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து போராடியதுமே. தேசிய இனப் போராட்டம் ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள ஆளும் வர்க்கத்தும் ஒடுக்கப்படும.; தேசிய இனத்துக்குமான போராட்டம் என்றேன் . இந்நிலையில் ஒடுக்கும் இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பலம் மற்றும் அதன் நடத்தை முக்கியத்துவம் பெறுகிறது. ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கம் அதே தேசிய இனத்திலுள்ள ஆளும் வர்க்கத்தை வீழ்த்துவதால் தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள் வீழ்த்தப்படுகிறார்கள் என்று அர்த்தம். இந்நிலையில் ஒடுக்கும் தேசிய இனத் தொழிலாளி வர்க்கம் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து போராடும்போது ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போய்தான் சுய நிர்ணய உரிமையை பெற வேண்டும் என்ற தேவை இல்லை. அதனால்தான் போலந்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனின் போலந்து பிரிந்து போவதை எதிர்த்து வாதிட்டு இருக்க முடிந்திருக்கும். அதே நேரத்தில் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை போலந்துத் தேசிய இனத்திற்கு மட்டுமே உண்டு.. ருஷ்ய புரட்சிக்குப் பின் போலந்து பிரிந்து போனது என்பது தனிக் கதை.

4. இந்தோ – சைனா

 வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகியவற்றைக் கொண்ட பல் தேசிய இன நாடு இந்தோ – சைனா. இது பிரெஞ்ச், ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆக்ரமிப்புக்கு உள்ளான நாடு. கோசிமின் இந்தோ- சைனா கம்ய+னி;ஸ்ட் கட்சியை கட்டினார் முதலில.; பிறகு அதனை வியட்நாம் கம்ய+னி;ஸ்ட் கட்சி என மாற்றினார். இந்தோ-சைனா சமஷ்டிக் குடியரசு அரசாங்கத்தை உருவாக்குவது என்ற கட்சியின் முழக்கம் வியட்நாமிய ஜனநாயகக் குடியரசை உருவாக்குவது என்ற முழக்கமாக மாற்றப்பட்டு வியட்நாம் புரட்சியை சாதித்து காட்டினார். மூன்று தேசிய இனங்களுக்கும் பொது எதிரியாக வல்லரசுகள் இருந்தபோதிலும் பொது எதிரிக்கு எதிரான தேசிய இனங்களி;ன் ஒற்றுமை என அவர் வாதிட்டுக் கொண்டிருக்கவில்லை.

5. செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள்

 ஜாரிச ரஷ்யாவிலிருந்து போலந்தின் தேசிய இன விடுதலை இயக்கத்தை ஆதரித்த மார்க்ஸ், செக் மக்கள், தென் ஸ்லாவியர்களின் தேசிய இன இயக்கங்களை ஆதரிக்கவில்லை. ஏன்? ஜாரிசம்தான் அன்று மிகப் பெரிய தேசிய இன ஒடுக்குமுறை நாடாக இருந்தது. ஜாரிசத்தின் வலிமையையும், செல்வாக்கையும் எதிர்த்து ஜரோப்பிய ஜனநாயகம் நடத்திய போராட்டத்தில் அதன் நலன்களை கருத்தில் கொண்டு மார்க்ஸ் போலந்து விடுதலைக்கு ஆதரவாக நின்றார். அப்போதிலிருந்து 1890 வரையிலும்கூட ஜாரிசமானது பிரான்சுடன் கூடிக் கொண்டு ஏகாதிபத்திய தன்மை அற்ற, தேசிய இன அடிப்படையில் அமைந்த ஜெர்மனிக்கு எதிராக ஒரு பிற்போக்கு யுத்தத்தை நடத்தும் அபாயம் இருந்தபோது ஜாரிசத்துக்கு எதிராக போராட வேண்டிய முதல் பணியென்று கருதினார் எங்கெல்ஸ். செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள் ஆகியோரின் தேசிய இன இயக்கங்கள் ஜாரிசத்திற்கு ஆதரவாக நின்றன.

1848 ல் புரட்சிகரமான தேசிய இனங்கள் சுதந்திரத்திற்காகப் போராடின. அச்சுதந்திரத்தின் முதன்மை எதிரி ஜாரிசம். செக் மக்களும், தென் ஸ்லாவியர்களும் ஜாரிசத்தின் புறக்காவல் நிலையங்களாயிருந்தனர் என லெனின் கூறுவார். பொது நலனுக்கு சிறு நலன் கட்டுப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் மார்க்சும், ஏங்கல்சும் செயல்பட்டார்கள். எனவே ஒரு தேசிய இன இயக்கத்தின் விடுதலைப்போராட்டமானது ஒரு பெரும் பொது எதிரிக்கு உதவும் பட்சத்தில் அதனை நாம் ஆதரிக்கக்கூடாது. . பொது நலனுக்கு சிறு நலன் கட்டுப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில.; ஒரு தேசிய இன விடுதலையை முன்னிட்டு உலகப் போர் தோன்றும் பட்சத்தில் அந்த தேசிய இனத்தின் விடுதலை எதிர்க்கப்பட வேண்டும் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. பேரழிவிலிருந்து உலகை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

 எனவே தோழர்களே இந்த நாடுகளின் உதாரணங்களிலிருந்து நாம் பெறப்படும் முடிவு என்ன? ஒரு தேசிய இனத்தின் பிரிவினையை மூன்று காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்க வேண்டும்.

1.            ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான தொழிலாளி வர்க்கம் இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் நிலையில் .

2.            ஒரு தேசிய இனத்தின் பிரிவினை பிற்போக்கு பெரும் வல்லரசுக்கு உதவும் நிலையில்.

3.            ஒரு தேசிய இனத்தின் பிரிவினை உலகப் போரை தோற்றுவிக்கும் நிலையில்.

                 மற்ற எல்லா நிலையிலும் பிரிவினைக்கு தலைமை தாங்க வேண்டு;ம்.

தமிழக விடுதலை புரட்சி

                இந்தியா என்பது பல்தேசிய இன நாடு. இதில் ஒடுக்கம் தேசிய இனம் இந்தி தேசிய இனம். இதில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பல. அதில் தமிழ் தேசம் தனக்கான வரலாற்றை கொண்ட மிகப் பெரும் தேசிய இனமாகும். தமிழகத்தில் 8 கோடி பேர்களை கொண்டது. தமிழ் தேசிய இனம் தனக்கான அரசியல் , பொருளியல், பண்பாட்டை தீர்மானித்துக் கொள்ளும் சுய நிர்ணய உரிமை இல்லாத அடிமை தேசிய இனமாகும். இதற்கென்று சட்;;ட மன்றம் உள்ளது. அதற்கு அரசுரிமை கிடையாது. ஒரு சட்டத்தை இயற்றுவதற்கோ அதனை நடைமுறைப்படுத்துவதற்கோ அதிகாரம் கிடையாது. டெல்லிக்கு கங்காணி வேலை செய்வதற்கே இதற்கு முழு உரிமை உண்டு. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மன்றத்தை டெல்லி நினைத்தால் கலைத்துவிடும். இந்த அச்சத்தின் காரணமாக தமிழக முதலமைச்சர் தமிழக மக்களுக்கு விசுவாசியாக இருப்பதைவிட டெல்லியின் விசுவாசியாக மாற்றப்படுகிறார். தமிழக சட்ட மன்றம் என்பதே தமிழர்களுக்கு அதிகாரம் உள்ளது போன்ற மாயையை தமிழ்; மக்களுக்கு அளிக்கக்கூடியதே.

 உலகின் பழமையான மொழிகள் இன்றுவரை உள்ளது என்றால் 1. தமிழ் 2. கிரேக்கம் 3. சீனம். இதில் கிரேக்கம், சீனம் இரண்டு மொழிகளிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இலக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கு அறிஞர்கள் தேவை. ஆனால் தமிழ் அப்படியன்று. அது கன்னித்தமிழ். இந்தியாவில் இந்தியே ஆட்சி மொழி. ஆங்கிலம் துணை ஆட்சிமொழி. மொழி பிரச்சினை தோன்றும் போது இ;ந்தி தேவமொழியாகவும், தேவ நாகரி எழுத்து வடிவம் கொண்டதாகவும் மற்ற மொழிகள் நீச பாசையாகவும் கூறி புறக்கணிக்கப்பட்டன.

 தமிழகத்தின் பொருளாதாரம் மார்வாடி சேட்டுக்கள், குஜராத்திகள் கையில் உள்ளன. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலை போய் வடக்கு இங்கு வந்து வாழ்கிறது.தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது என ஐயா பழ நெடுமாறன் கூறுவார்.

 தமிழகத்தின் உயரியப் பண்பாட்டை வலியுறுத்தக்கூடிய இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டு மேலைப் பண்பாடும், பார்பனியப் பண்பாடும் திணிக்கப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி , தின, வார, மாத ஏடுகள் இதனைத் தீவிரப்படுத்துகின்றன. தமிழகத்தின் எல்லைகளை மத்திய அரசு நினைத்தால் மாற்றிவிடலாம். ஏன் தமிழகம் ஒன்று இல்லை எனக் கூறவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. இந்நிலைமைகளை எதிர்த்து தமிழக மக்கள் தொடர்ந்து போராடியே வந்துள்ளனர். இப்போராட்டம் எல்லை மீட்பு போராட்டமாகவும் மொழி உரிமைக்கானப் போராட்டமாகவும், மொழி வழி மாநிலங்களுக்கானப் போராட்டமாகவும் நடந்துள்ளன. இப்போராட்டங்களைத் தமிழ்த் தேசிய இன விடுதலை போராட்டமாக தி.மு.க வளர்த்தெடுக்கத் தவறி ஆளும் வர்க்கத்துடன் சமரசமாக சென்ற நேரத்தில், ஒன்றுபட்ட இந்தியக் கம்யனிஸ்ட் கட்சி தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்போம் என்று நிறுத்திக் கொண்டது. தன்னெழுச்சியாக தோன்றிய இப்போராட்டம் உணர்வுபூர்வமான தலைமை இல்லாமல் விடுதலைப் போராட்டமாக பரிணமிக்க முடியாமல் போனது.

 பல் தேசிய இன அரசு என்பது ஏதோ காரணங்களால் பிற்போக்கானது என காவுட்ஸ்கி கூறியதை லெனின் ஒத்துக்கொள்வார். இந்திய அரசு என்பது பிற்போக்கானது. சாதிய ஒடுக்குமுறையும் தேசிய இன ஒடுக்குமுறையும் கொண்ட சிறைக்கூடம். இந்த சிறைக்கூடத்திலிருந்து நாம் விடுதலைப் பெற வேண்டும்.

                இன்னும் இரண்டு பொருள் குறித்து சொல்லியாகவேண்டும். ஒன்று புதிய ஜனநாயக புரட்சி குறித்து, மற்றொன்று பாட்டாளி வர்க்க சர்வதேசியம் குறித்து. நிலபிரபுதுவத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய தேசங்கள் உருவாக்கத்திலிருந்து தேச உருவாக்கமும் ஜனநாயக புரட்சியும் பிரிக்கமுடியாத பகுதிகளாக இருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டுவார். உலகம் முழுவதும் முதலாளித்துவமானது நிலப்பிரபுதுவத்தை வீழ்த்தும் காலக்கட்டம் என்பது தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது என லெனின் கூறுவார். எனவே தேசிய இன இயக்கம் தான் புதிய ஜனநாயக புரட்சியை நிறைவேற்றும் இயக்கம். தேசிய இன இயக்கம் அடிப்படையில் நான்கு பண்பு கூறுகளை கொண்டிருக்கிறது என ஸ்டாலின் கூறுவார்.

1.            மொழி, கலை, இலக்கிய, கலாச்சார மறுமலர்ச்சிக்கானது.

2.            ஒரு விவசாய இயக்கம்.

3.            ஒரு ஜனநாயக இயக்கம்.

4.            ஒரு தேசிய இன அரசை நிறுவுவதற்கான இயக்கம்.

                இவற்றினை தொகுத்த தோழர் கார்முகில் “உண்மையில் நிலப்பிரபுதுவத்தின் மீதான முதலாளித்துவத்தின் வெற்றியும், தேசங்களின் உருவாக்கமும் தேசிய இயக்கங்களுடன் இணைந்ததாகும்” என்பார். “எந்தளவுக்கு பாட்டாளிகளும், விவசாயிகளும் தேசிய இன இயக்கத்தில் பங்கு கொண்டார்கள் என்பதை பொறுத்தே தேசிய இன இயக்கத்தின் வலிமை தீர்மானமாகியது” என்றார் ஸ்டாலின். லெனின் கூறுவார் “தேசிய இனம், அரசு என்ற பிரச்சினைகளையும் அதே வரலாற்று அடிப்படையில் தான் மார்க்சிய சோசலிசம் வைக்கிறது- சென்ற காலத்தை விளக்குவது என்ற அர்த்தத்தில் மட்டும் அல்ல எதிர்காலத்தை அச்சமின்றி முன்னறிந்து கூறி அதனைச் சாதிப்பதற்குத் தைரியமான நடைமுறைப் பணி மேற்கொள்வது என்ற அர்த்தத்திலும், தேசங்கள் என்பவை சமுதாய வளர்ச்சியின் முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்கமுடியாத படி உண்டாகிற ஒரு படைப்பு, ஒரு வடிவமாகும். தொழிலாளி வர்க்கம், “தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல்” தானும் “தேசிய தன்மை பெறாமல்” (இந்த சொல்லின் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல) அது பலம் பெற முடியவில்லை, பக்குவம் பெற முடியவில்லை, உருவாக முடியவில்லை”. விவசாயிகளும் தொழிலாளிகளும் தேசிய இன இயக்கத்தில் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை லெனினும் ஸ்டாலினும் எடுத்து கூறுவதை கவனிக்கலாம். “தேசிய இன ஒடுக்கு முறை இருக்கும் ஒரு நிலையில் தேசிய இன விடுதலைப் பணியை புறக்கனிப்பது சோசலிஸ்டுகளின் நோக்கு நிலையின்படி சந்தேகத்திற்கு இடமற்ற தவறாகும்” என்றார் லெனின். ஆக தேசிய இன இயக்கம் தான் புதிய ஜனநாயக புரட்சிக்கான இயக்கமாகும்.

                மற்றொன்றான பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பதன் பொருள் என்ன? ஒவ்வொரு தேசிய இனமும் தனது சொந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடும் அதேவேளையில் உலகில் பிற நாடுகளில் நடைபெறும் சமத்துவத்திற்கான போராட்டங்களை ஆதரிக்கவேண்டும் என்பதே. சமத்துவத்திற்கான போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும் தனித்தன்மையிலான வடிவத்தில் நடைபெறுகிறது. அந்த தனித்தன்மைகளை கண்டறிவதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. இந்திய புரட்சியாளர்கள் கூறுவது போல தமிழ்த் தேசிய விடுதலை போராட்டம் என்பது குறுகிய இனவாதமன்று. இன்று தமிழ்த் தேசிய இனம் எதிர்க் கொண்டிருக்கும் கடமைகள்

1.            பன்னாட்டு ஆதிக்க எதிர்ப்பு

2.            இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு

3.            நிலப்பிரபுதுவ எதிர்ப்பு

4.            சாதி ஆதிக்க பார்பனிய எதிர்ப்பு ஆகியனவாகும்.

                இவைகளை வீழ்த்துவது தான் தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய கடமையாகும். உலகம் முழுவதும் போராடுகிற ஆற்றல்களுக்கு துணையாக போராடுவதுதான் சர்வதேசிய கடமையாகும். தமிழ்த் தேசிய விடுதலைக்காய் நிற்கிற நம்மை சர்வதேசிய கடமைச் செய்ய எதுவும் தடுப்பதில்லை. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களின் விடுதலை போரட்டங்களை நாம் முரணின்றி ஆதரிக்கிறோம். பல் தேசிய இன நாட்டில் கட்சி கட்டுவது குறித்து அதாவது தேசிய இனத்திற்கு மட்டுமே கட்சியா? அல்லது எல்லா தேசிய இனங்களுக்கும் சேர்த்து ஒரு கட்சியா? என ஆய்வு செய்த தோழர் கார்முகில் பல்தேசிய இன நாட்டில் ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான பாட்டாளி வர்க்கம் இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து போராடும் பட்சத்தில் மட்டுமே ஒரே கட்சி ஒட்டுமொத்த புரட்சி சாத்தியம் என அவர் துல்லியமாக கூறியுள்ளதை பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கண்ணோட்டத்திலிருந்து மறுக்க இயலாது.

தேசிய இனக் கடமையை நிறைவேற்றாத யாரும் நிச்சயமாக சர்வதேசிய வாதிகளாக இருக்க முடியாது என தோழர் கார்முகில் வாதிடுவது நூற்றுக்கு நூறு சரியே. இது குறித்து இந்தியப் புரட்சியாளர்கள் மௌனம் சாதிப்பது ஏனோ? இந்தியப் புரட்சி கட்சி தொடங்கி சுமார் 90 ஆண்டுகள் ஆகியும் ஏன் புரட்சி வெற்றிபெற முடியவில்லை என அவர்கள் ஆய்வுக்கே உட்படுத்தவில்லை. புரட்சி அடிக்கடி நடைபெறும் என அம்பேத்கர் கூறுவார். அதன் பொருள் என்ன? ஒரு நாட்டின் தனித் தன்மைகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே தோழர் கார்முகிலின் நீண்ட மேற்கோளை கீழே தருகிறேன். “ஒடுக்கும் தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்கம் பலமாகவும். புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் நிலையிலும் இருக்குமாயின், (ரசியா, சீனா போல) இரு தேசிய இனப் பாட்டாளிகளும் ஒரே வேலைத்திட்டத்தின் கீழ் ஒரே கட்சியில் இணைவதும் சாத்தியமே. அதாவது ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரித்து அதற்காகப் போராடுமாயின் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் தேசிய விடுதலை என்ற கோரிக்கையை தானும் சுயநிர்ணய உரிமை என்பதாக மாற்றிக்கொண்டு அதனுடன் ஒரே கட்சியில் ஒன்றிணைய முடியும். இது சாத்தியம் என்பது மட்டும் அல்ல. இத்தகைய நிலைமையில் இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் ஆகும். காரணம் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைக்கும் வழிவகுக்கக் கூடியதாகும்”.

                தேசிய இனங்களுக்கிடையே உள்ள தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட நலன் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது சில நிலைமைகளில் தேசிய இனங்கள் பிரிந்து போவதிலிருந்து அடையப்படுகின்றன. ஒடுக்கும் தேசிய இனமான இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் பிற்போக்கில் ஊட்டம் பெற்று போராட்ட உணர்வின்றி இருந்த போது தான் மார்க்ஸ் அயர்லாந்து பிரிந்து போவதை ஆதரித்தார். மார்க்ஸ் காலத்தில் ஒடுக்கும் தேசிய இனமான ரசிய தொழிலாளி வர்க்கம் உருப்பெற்று வளராத நிலையில் தான் ரசிய தேசிய இனத்திலிருந்து போலந்து பிரிந்து போவதை மார்க்ஸ் ஆதரித்தார். ஒடுக்கும் தேசிய இனமான சுவீடன் தொழிலாளி வர்க்கம் பலமில்லாத நிலையில்தால் நார்வே பிரிந்து போவதை லெனின் ஆதரித்தார். இந்தோ-சைனாவை பல்வேறு ஏகாதிபத்தியங்கள் ஒடுக்கும் நிலையில்தான் இந்தோ-சைனா கம்யூனிஸ்ட் கட்சியை கட்டிய கோசிமின் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி கட்டி புரட்சியை முன்னெடுத்தார். மேற்கண்ட நிலைமைகள் நமக்கு உணர்த்துவதென்ன? ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான தொழிலாளி வர்க்கம் இல்லாதபோது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை அதாவது பிரிந்து போவதை ஆதரிக்கும் போதே வர்க்கப் போராட்ட நலனும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் பாதுகாக்கப்படுகின்றன.

ஒடுக்கும் தேசிய இனமான ரசியாவில் பலமான தொழிலாளி வர்க்கம் தோன்றி அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து போராடிய போதுதான் போலந்து பிரிவினையை லெனின் எதிர்த்தார். ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளி பாட்டாளி வர்க்கத்தின் பலம் மட்டும் அவற்றின் நடத்தையை மார்க்சிய அறிஞர்கள் முக்கியமாக கருதினார்கள். ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கத்தை சர்வதேசிய உணர்வில் பயிற்றுவிப்பதற்காக அவர்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து போராட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். இது சில வேலைகளில் தேசிய இனங்கள் பிரிந்து போவதை ஆதரிப்பதாக முடிகிறது. அயர்லாந்து, போலந்து பிரிவினையை ஆதரித்த மார்க்சு, ஏங்கல்ஸ், நார்வே பிரிவினையை ஆதரித்த லெனின் பிரிவினைவாதிகளா அல்லது இனவாதிகளா! உறுதியாக இல்லை. ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மைகளை ஆய்வு செய்து வழிகாட்டிய பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதிகள்.

                இந்தியப் புரட்சியாளர்கள் இந்திய ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப்பட்ட அரசின் எல்லைக்குள் தேசிய இனங்கள் பலவந்தமாக சேர்ந்து வாழ்வதையே பாட்டாளி வர்க்க சர்வதேசியம் எனக் கருதுகிறார்கள். தேசிய இனங்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து போவதை பிரிவினைவாதம் அல்லது இனவாதம் எனக் கொச்சைப்படுத்துகின்றனர். இப்படிக் கூறுவது மார்க்சியமன்று. ஒடுக்கும் தேசிய இனத்தில் புரட்சியை முன்னெடுக்கும் பலமான தொழிலாளி வர்க்கம் இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து போராடும் நிலையில் மட்டுமே ஒரு அரசின் எல்லைக்குள் புரட்சி சாத்தியம். இது மட்டுமே பாட்டாளி வர்க்க சர்வதேசியம். சொந்தமாக சிந்திக்க கூடிய யாவரும் இதனை புரிந்துகொள்ளமுடியும்.

ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கத்தையே பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வில் பயிற்றுவிக்க மார்க்சிய அறிஞர்கள் முதன்மையான கடமையாக கருதினார்கள். ஏனெனில் ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி மற்ற ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலையைப் பெற்றுத்தரும். ஆனால் ஒடுக்கப்படும் தேசிய இன தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி மற்ற தேசிய இனங்களின் விடுதலையை பெற்றுத்தருவதில்லை. எனவே இந்தியத் தேசியத்திற்குள்ளாகவே இன்றைய நிலையில் தேசிய இனங்களின் விடுதலையை முன்வைப்பது போகாத ஊருக்கு வழி காட்டும் கானல் நீரே. ஏனெனில் இந்தியாவில் தேசிய இனங்களின் வளர்ச்சி நிலைமை வௌ;வேறு நிலையில் உள்ளன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்கள் தங்களது விடுதலைக் கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து போராடி வருகின்றன. தமிழ்த் தேசிய இனத்தில் இப்போது தான் தேசிய இன விடுதலைக்கான கோரிக்கை எழுப்பப்படுகிறது. 1938 கால கட்டத்தில் தமிழகத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி ஏற்பட்டு அடங்கி பிறகு உயிர்ப்பெற்று வருகிறது.          

ஜார்கண்ட், உத்ரகண்ட் போன்ற தேசிய இனங்கள் இப்போதுதான் மாநில உரிமைக்காகப் போராடி அவ்வுரிமையை அடைந்தன. இன்றும் சில தேசிய இனங்கள் அரசியல் அரங்கிற்கு வராமல் உறக்க நிலையில் உள்ளன. ஆக தேசிய இனங்கள் தங்களை தேசமாக மாற்றிக் கொள்வதற்கு பல்வேறு வளர்ச்சி நிலையிலுள்ளன. இந்நிலையில் இந்திய முழுமைக்கும் ஒரே கட்சி ஒட்டுமொத்தப் புரட்சி சாத்தியமில்லை. எனவே தேசிய இனங்களுக்கு ஒரு கட்சி, தமிழகத்திற்கு ஒரு கட்சி மட்டுமே புரட்சியை முன்னெடுக்கும். அது தமிழ்த் தேசிய விடுதலை புரட்சியாகும்.

                ஒரு தேசிய இனத்தில் வேற்று மொழியினரை அதிகமாக அனுமதிப்பது சுய நிர்ணய உரிமை கோட்பாட்டுக்கு எதிரானதாகும். சுய நிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டை தீர்மானிக்கும் உரிமை எனப் பார்த்தோம். பல தேசிய இனங்கள் அவ்வுரிமையுடன் சேர்ந்து வாழ்வதாக வைத்துக்கொள்வோம். ஒரு தேசிய இனத்தின் உரிமை பாதிக்கப்பட்டால் அத்தேசிய இனம் பிரிந்து போகக் கூறும். அப்போது அத்தேசிய இனத்தில் பிரிந்து போவது குறித்து ஓட்டெடுப்பு நடைபெறும். இந்நிலையில் அத்தேசிய இனத்தில் மிகு எண்ணிக்கையில் வேற்று மொழியினரை அனுமதித்தால் பிரிந்து போவதற்கு எதிராக வேற்று மொழியினர் வாக்களிப்பர். அதன் மூலம் அத்தேசிய இனம் பாதிக்கக்கூடும். அதன் தாயகம் பறிபோகும். இந்தியாவில் இந்தியப் புரட்சியாளர்கள் உலகமயம் எதிர்க்கிறார். ஆனால் இந்திய மயம் ஆதரிக்கிறார்கள். இந்திய மயம் என்பது அரசியல், பொருளியல், பண்பாட்டில் மட்டும் நடந்தேறவில்லை.

ஒரு தேசிய இனத்தை கலப்பின தேசிய இனமாக மாற்றுவதிலும் நீடிக்கிறது. இந்தியாவிற்குள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் இன்றும் இந்தியாவிலுள்ள தேசிய இன மக்களுடன் தங்களை இணைத்துக்கொள்ளாமல் இருப்பது கவனத்துக்குரியது. தமிழகத்திலுள்ள பார்ப்பனர்கள் தங்களை தமிழர்களாக உணர்வதில்லை. அவர்கள் தங்களை இந்திய தேசிய வாதிகளாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஏனெனில் இந்திய தேசியம்தான் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக அவர்களது ஆதிக்கத்திற்கு அரணாக இருக்கிறது. மொழி தேசிய இனங்கள் பிரிந்தால் தங்களது மேலாண்மை சிதைந்துவிடும் எனக் கருதுகிறார்கள். இது உண்மையே. அதே நேரத்தில் பார்ப்பனர்களிள் ஒரு சில ஜனநாயக, புரட்சிகர ஆற்றல்கள் தங்களை மொழி தேசியங்களுடன் இணைந்து வருவது வரவேற்கத்தக்கது.

முதலாளியாக இருந்த எங்கெல்ஸ் முதலாளித்துவத்தை வீழ்த்த புறப்பட்டார். அதேபோல கருப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளையர்களும் முன் வந்தனர், அவ்வியக்கங்களில் பங்குபெற்று சிறைசென்றனர். அதேபோல தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் பார்ப்பனர்கள் முன் வரவேண்டும். 1956 நவம்பர் 1- மொழி மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் குடியேறிய வேற்று மொழியினர் தமிழத்திலிருந்து வெளியேற வேண்டும், அதே போல் பிற தேசிய இனங்களில் குடியேறிய தமிழகர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என தோழர் பெ.மணியரசன், தோழர் தியாகு ஆகியோர் போராடுவது சரியே. தாயகம் திரும்பும் தமிழர்களின் தகுதிக்கு ஏற்ப தமிழகத்தில் அவர்களுக்கு வேலைவழங்கப்படும். இது சுய நிர்ணய உரிமைக் கோட்பாடே.

                தேசிய இனங்கள், தேசங்கள் ஜனநாயக அடிப்படையில் இரண்டறக்கலத்தலில் லெனின் ஆர்வம்காட்டினார். அவர் கூறினார் “பலாத்கார அடிப்படையிலான அல்லது தனி விசேச உரிமைகளின் அடிப்படையிலான தேசங்களின் இரண்டறக் கலத்தல் தவிர மற்றெல்லா விதமான இரண்டறக் கலத்தலையும் அது வரவேற்கிறது”. மேலும் “எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகு தான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதேபோல, ஒடுக்கப்படும் எல்லா தேசங்களுக்கும் முழுவிடுதலை என்ற – அதாவது, பிரிந்து போவது என்றால் அதற்குத் தடையேதும் இல்லை, சுதந்திரம் உண்டு. இடைநிலைக் காலத்துக்குப் பிறகுதான் தேசங்கள் தவிர்க்க முடியாதவகையில் ஒன்றுபடுவது, இரண்டறக் கலத்தல் என்ற நிலையை அடைய முடியும” மேலும் “சிறு தேசங்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை என்பது கற்பனைரீதியானது சாத்திய மற்றது என்றும், பொருளாதாரக் குவிவு மட்டுமின்றி அரசியல் குவிவும் கூட முற்போக்கானது என்றும் முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் கூச்சலிடுகிறார்கள். இதற்கு மாறாக இந்தக் குவிவு எப்பொழுது ஏகாதிபத்தியம் அல்லாத குவிவாக இருக்கிறதோ அப்பொழுது முற்போக்கானது என்றும், எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கங்கள் தாங்களே விரும்பி ஒன்றிணைவதன் மூலம்தான் தேசங்கள் ஒன்றுபடுதலைக் கொண்டுவர வேண்டுமேயன்றி பலாத்தாரத்தினால் அல்ல என்றும் இம்முறையில்தான் மார்க்சால் வாதிக்க முடிந்தது!”.

                எனவே இந்தியாவில் தேசிய இனங்கள் பிரிந்து போவது, தமிழகம் தேசிய விடுதலை புரட்சியை கோருவது இனவாதம் பிரிவினைவாதம் என இந்தியப் புரட்சியாளர்கள் கூறுவது அவர்களது விருப்பமே அன்றி மார்க்சியமன்று.

                எனவே, தமிழகத்தில் புதிய ஜனநாயக புரட்சி வெற்றிபெற தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சி இயக்கத்தை கட்டுவோம். அவ்வியக்கம்தான் புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்யும்.

                ரசியாவில் ஒடுக்கும் தேசிய இனத் தொழிலாளி வர்க்கம் பலமாகவும், புரட்சியை முன்னெடுக்கும் நிலையில் இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து போராடியதால், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு தேசிய இனப் பிரச்சினை முதன்மையாக இல்லாம் நிலப்பிரச்சினை முதன்மையாக இருந்தது. வியாட்நாமில் ஆக்கிரமிப்பு செய்த ஏகாதிபத்தியங்களுக்கும் வியட்நாமிக்குமான முரண்பாடு முதன்மையானதாக இருந்தது. ஆகையினால் வியட்நாம் விடுதலை செய்வது முதன்மையானதாகவும், நிலப்பிரச்சினை இரண்டாம் நிலையில் தள்ளப்பட்டு வியட்நாம் விடுதலைக்குப் பிறகு நிலச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தில் இந்தியாவிலிருந்து தமிழகம் விடுதலை பெறுவது முதல் நிலையிலும் தமிழகம் விடுதலை செய்த பிறகே நிலச் சீர்திருத்த முறையில் புதிய ஜனநாயகப் புரட்சிப் பணி நிறைவு பெறும்.

எனவே! நாம் தமிழ்த் தேசிய விடுதலைப் புரட்சியை முன்னெடுப்போம்.

             டெல்லியில் இருப்பது சாதிய ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்குமுறை கொண்ட பார்ப்பனிய ஏகாதிபத்திய அரசு!

             சென்னையில் இருப்பது டெல்லியின் எடுபிடி அரசு!

             நமக்கு வேண்டும் தமிழ்த் தேசிய அரசு!

தொகுப்புக்கான ஆதார நூல்கள்:

1.            தன்னுரிமை குறித்த விவாத குறிப்புகள்.

2.            சமூக நீதித் தமிழ்த்தேசம் இதழ்கள் - ஆசிரியர் தியாகு

3.            பாட்டாளி வர்க்கத்தின் தேசிய கொள்கை - தோழர் கார்முகில்

4.            தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் - தோழர் பெ.ம.

5.            லெனின் நூல்கள் -                1. தேசிய இனப்பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும்

                                                2. ஏகாதிபத்திய பொருளாதார வாதமும் மார்க்சியத்தை இழிவு படுத்தும் கேலிச்                                               சித்திரமும்

                                                3. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம்

6.            ஸ்டாலின் நூல் - மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினையும்

7.            தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடு – பழ நெடுமாறன்

8.            கோசிமின்- ஒரு போராளியின் கதை – என். ராமகிருஷ்ணன்.

9.            முரண்பாடு பற்றி – மாவோ. 

- பாரி, அமைப்புக்குழு உறுப்பினர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தொடர்புக்கு: 9715417170, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It