தம் சொந்த சாதிச் சமூகத்தைப் பற்றிய ஒரு தலித் எழுத்தாளரின் நூல் தமிழக அரசின் தடையைப் போலவே கூர்மையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளன. – R.இளங்கோவன் 

ஒவ்வொரு குடிமகனின் குரலையும் கேட்பதற்கு அனுமதிப்பதுதான் ஜனநாயகத்தின் அறவியல் முன் நிபந்தனையாகும். ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக மிகவும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின், உரிமைகளையும் சுதந்திரத்தையும் காப்பாற்றுவது ஜனநாயகத்தின் அரசியல் முன் தேவையாகும். அடையாளமற்று, கடுமையான உழைப்பாளர்களாக, சிறப்பாக வாழ்ந்த நமது முன்னோர்களில் பெரும்பான்மையிரின், வாழ்க்கை இன்னும் வரலாற்றுப் பதிவுகளாக்கப்படவில்லை.

- ஹென்றி லூயி கேட்ஸ் ஜுனியர் மற்றும் கார்னல் வெஸ்ட் – ஆப்பிரிக்க அமெரிக்க நூற்றாண்டு என்னும் நூலிலிருந்து.

தலித் எழுத்தாளர் கே.செந்தில் மள்ளர் அவர்களின் ”மீண்டெழும் பாண்டியர் வரலாறு” என்னும் நூல் வெளிவந்ததிலிருந்து வாழ்த்துக்களும் வசைப்பொழிவுகளும் சம அளவில் வந்து குவிந்துள்ளன. இந்நூல், தமிழகத்தில், அவர் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகமான பள்ளர்களின் வரலாற்று வேர்களை ஆய்வதற்கு முயற்ச்சிக்கிறது. இந்த ஆய்வு எழுப்பியுள்ள சர்ச்சையின் விளைவாக தமிழக அரசு இந்நூலை தடைசெய்தது மட்டுமின்றி இந்நூலின் ஆசிரியர் மீது தேசதுரோக குற்றத்தையும் சுமத்தியுள்ளது.

அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் நூலின் உள்ளடக்கத்தின் ”உண்மைத் தன்மையை” பற்றி கூர்மையான கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அரசின் தடைக்கு எதிராக ஒருமித்த குரலை எழுப்பியுள்ளனர்.

தமிழக அரசு, இந்நூல் பிற சமூகத்தின் மீதும் சாதிகள் மீதும் வசைவுகளை சரமாரியாக அள்ளி வீசுவதோடு நையாண்டியாக வெறுப்பை தூண்டிவிடுவதாகவும் அமைந்துள்ளதாக கூறுகிறது. மேலும், பிற சாதியினரை இழிவுப்படுத்தும் சொல்லாடல்கள் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் என அரசு கருதுகிறது.

பெருவாரியாக, இலக்கியம் மற்றும் வரலாற்று தரவுகளின் அடிப்படையில் நூலாசிரியரால் உண்மையென மேற்கோள் காட்டப்படும் செய்திகள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாக கொள்ள இயலாது என்று வரலாற்றாய்வாளர்கள் உரைக்கின்றனர். இந்நூலாசிரியரின் தலையாய நோக்கம் பள்ளர்கள்தான் மள்ளர்கள்/மல்லர்கள் என்றும், இவர்களே தென் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்கள் என்றும் மெய்ப்பிப்பதாக உள்ளது.

பள்ளர்கள் ஒரு காலத்தில் ஆண்ட சமூகம் என்ற கூற்று யாரையும் புண்படுத்துவதாக இல்லை. ஆனால் பிற சாதிச் சமூகங்களைப்பற்றி குறிப்பிடும்போது நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள அதீதமான வசைச் சொற்கள் அதிர்ச்சியாக உள்ளன. புத்தகம் வெளியிடப்பட்டு ஏறக்குறைய ஓராண்டாகி, சில ஆயிரம் பிரதிகள் விற்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட்த்திலுள்ள சாத்தூரில் ஏப்ரல் 25ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீட்டிற்கு, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது வியப்பாக உள்ளது.

ஒரு சாதிஇந்து சமூகத்தின் குழுவின் தலைவர்கள் இந்நூலுக்கு ஆட்சேபனை தெரிவித்த்தின் விளைவாகவே தமிழக அரசு, அவர்களுக்கு இசைந்து, இந்நூலை தடை செய்திருக்கிறது. தடைசெய்ததற்கான காரணமாக அரசு, இந்நூலில் “எல்லா சமூகத்தினரைப் பற்றியும் அவதூறான, தவறான, ஆட்சேபனைக்குரிய, திரிக்கப்பட்ட உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன” என்றும், இவை ”பல்வேறு சாதிகளிடையே வெறுப்பையும், பகைமையையும் வளர்த்து சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் குலைத்துவிடும்” என்பதால் இந்நூல் தடைச் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

பலதரப்பட்ட அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் இந்த தடையானது ”அடிப்படைச் சுதந்திரத்தை அடியோடு மீறுகின்ற செயல்” என்கின்றனர். அரசியல் சாசனம் (உறுப்பு 19) உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை கருத்துரிமையை அதிகார வர்க்கம் பறிக்கின்ற செயலாகும் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் இதனை அனுமதிக்கலாகாது என்றும் வன்மையாக கண்டிக்கின்றனர்.

ஆனால், மாநில அரசு, மே 30, 2013 இல் வெளியிட்டுள்ள இரண்டு பக்க அரசாணை மூலம் தாம் அறிவித்துள்ள தடையை நியாயப்படுத்தியுள்ளது. குறிப்பாக, புத்தகத்தில் உள்ள ஒன்பது பத்திகளை மேற்கோள் காட்டி, “ஆய்வு என்ற பெயரில் சமுகங்களிடையே வெறுப்பையும் மோதலையும் தூண்டி சமூக நல்லிணக்கத்தை குலைப்பதுதான் இந்நூலின் நோக்கமாக உள்ளது” என்பதை இந்நூலின் உள்ளடக்கமும் மொழி நடையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்கிறது அரசாணை.

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள செய்திகளும் வாதங்களும் பல்வேறு சாதிச் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை குலைத்து வெறுப்பையும் எதிர்ப்பையும் தூண்டி வகுப்புவாத மோதல்களை உருவாக்கும் என்று அரசு தம் வாதத்தை முன் வைக்கிறது.

நூலாசிரியர் செந்திலுக்காக வாதாடும் வழக்குறைஞரான பி.விஜேந்திரன் அவர்கள், தமிழக அரசு, அரசியல் சாசனம் உறுப்பு 19 இல் குறிப்பிட்டுள்ள “சில கட்டுப்பாடுகளுடன்” என்னும் துணைவிளக்கத்தின் கீழ் வசதியாக தஞ்சம் புகுந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A இன் கீழ் நூலாசிரியர் தேச துரோகக் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதோடு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A மற்றும் 153B யின்படி இந்த நூலும் அதன் உள்ளடக்கமும் தண்டனைக்குரியது என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும், குற்றவியல் சட்டம், 1973 பிரிவு 95(1)(a) யின்படி இந்நூலின் பிரதிகள், படிகள், மறுப்பதிப்புகள், மொழிபெயர்ப்புகள் அல்லது புத்தகத்தின் பகுதி/சுருக்கம் ஆகிய அனைத்தும் பறிமுதல் செய்யத்தக்கவை என அரசு அறிவித்துள்ளது.

மேற்படி குற்றங்களுக்காக செந்தில் கைதாகாமல் தப்பியிருந்தாலும் அவருடைய மாமனார் இதே குற்றங்களுக்காக கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

“இந்த் தடையும் தேச துரோகக் குற்றமும் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானதாகும். ஒருவரின் சிந்திக்கும் உரிமையை இந்த நடவடிக்கை தடுக்கிறது என்கிறோம். இதேபோன்ற ஒரு வழக்கில் 2010ஆம் ஆண்டு மகாராட்டிர அரசாங்கம் பேராசிரியர் ஜேம்ஸ்.W.லேய்ன் அவர்கள் எழுதிய “சிவாஜி: இஸ்லாமிய இந்தியாவில் இந்து அரசன்” என்னும் நூலை தடை செய்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் இந்த தடையை நீக்கியது. ஆக, தமிழக அரசு தவறிழைத்துள்ளது” என்று வாதாடினார் விஜேந்திரன். பிற மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் சென்னை, கோவை உட்பட சில “ஒதுக்குப் புறங்களில்” விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தி அரசின் இந்த தடையின் அரசியல் சாசன அடிப்படையை கேள்விக்குள்ளாக்கினார்கள். நூலின் உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவை அறிவார்ந்த அறிஞர்களுக்கு விட்டுவிட வேண்டும்; அதிகாரிகளிடமல்ல என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.

ஆய்ந்தரியாத உடனடி எதிர்வினை

புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை பரிசீலிக்காமல் புத்தக தடையை கண்டிப்பவர்களின் நடவடிக்கை ஆய்ந்தறியாது வினையாற்றும் உடனடி எதிர்வினையாகவே உள்ளது. இந் நூலாசிரியர் இந்த ஆய்விற்கு ”பொறுத்தமற்ற முறையியலை பயன்படுத்தி” சில ”அப்பட்டமான குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசுவதின் மூலமாக அவருடைய ஆய்வு நோக்கம் தோற்றுவிட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தமிழ் இலக்கியத் துறையின் தலைவருமான வீ.அரசு அவர்கள் இவ்வாறு கூறுகிறார்: “இந்த நூலில் ஆய்வு முறையியல் இல்லை. பிரிட்டிஷார் 18ம் நூற்றாண்டு நட்த்திய மக்கள் கணக்கெடுப்பிற்குப் பிறகு எல்லா சாதிச் சமுகங்களும் தம் சொந்தச் ”சாதிப் பெருமையை” முன் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. 18ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 19ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை செந்தில் எழுதியது போன்ற சாதி அடிப்படையிலான நூல்கள் சுமார் 250 வெளிவந்துள்ளன. அவை நான்கு வருண முறையோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் ஒவ்வொரு சாதிக் குழுவும், தம் அதிகார செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவதற்கான போட்டியில், 1990க்குப் பிறகு, சாதி அடிப்படையிலான அரசியலில், மய்யம் கொண்டது. அவ்வகையில் தேர்தல் அரசியலை நோக்கமாகக் கொண்ட இந்த படைப்பும் அந்த வகையிலான ஒன்றாகத்தான் இனம் காண வேண்டும்”.

தலித் அடையாளம் தொடர்பான மறுகட்டமைப்பு முயற்சிகள், குறிப்பாக பள்ளர்களிடயே, அண்மைக்காலமாக ஏற்ப்பட்டுள்ள நிகழ்வாகும். தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஐந்திணை வாழ்க்கையின் ஒன்றான, வயல் மற்றும் வயல் சார்ந்த மருதவாழ்க்கையில் உழவுச் சமூகமாக வாழ்ந்த மள்ளர்களே பள்ளர்கள் என்பதற்கான பல இலக்கியச் சான்றுகள் உள்ளன என்று உரிமைக் கொண்டாடப்படுகிறது. நெல் நாகரீகத்திற்கு சொந்தக்கார்ர்கள் இவர்களே என்றும் இந்திரனை வழிப்படுவதால் இவர்கள் தேவேந்திரக்குல வேளாளர்கள் என்றும் அழைக்கப்படுவதாய் உரிமைக் கோருகின்றனர்.

மள்ளர்கள்தான் பள்ளர்கள் என்பதும், இவர்களோடு தென் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களுக்குள்ள தொடர்பை நிறுவுவதுதான் இந்நூலின் நோக்கமாக தெரிகிறது. பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளவர்க்ளோடு பள்ளர்களையும் இணைத்துப் பார்த்தல் கூடாது என்பதற்கு நூலாசிரியர் சங்க இலக்கியங்களிலிருந்தும், கல்வெட்டு மற்றும் செப்பேடுகளிலிருந்தும், இன்னும் முனைவர் குஸ்தாவ் ஓப்பர்ட், N.C.கந்தய்யா பிள்ளை, தேவ நேயப்பாவாணர், K.R.அனுமந்தன், டி.கே. வேலுப்பிள்ளை, போன்ற ஆய்வாளர்களின் ஏராளமான படைப்புகளை மேற்கோள் காட்டியிருக்கின்றார்.

எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான, மனித உரிமைக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவருமான அ.மார்க்ஸ். “இந்நூலின் ஆசிரியர் வலியுறுத்தும் இதே கருத்தை குருசாமி சித்தர் உட்பட பல எழுத்தாளர்களின் ஆய்வுகளை ஏராளமாக பயன்படுத்தியிருக்கின்ற காரணத்தினாலேயே, இந்த படைப்பை ஒர் ஆழ்ந்த, அசலான படைப்பாக கொள்ள முடியாது” என்கிறார். எட்வர்ட் பால்ஃபோர், எட்கர் தர்ஸ்டன், சீனிவாச ஐயங்கார் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் மள்ளர்களையும் பள்ளர்களையும் இணைக்கும் கோட்பாடு நூலாசிரியரின் கூற்றோடு ஒத்துப்போவதை மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

624 பக்கங்களைக் கொண்ட சிறப்பு அட்டையுடன் மிகவும் நேர்த்தியாக 1500 உரூபா விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் ஒடுக்கப்பட்ட சாதிப் பற்றிய குடிமரபியல் ஆய்வு என்று கோருகிறது. ஆனால் நூலாசிரியர் நாயக்கர்கள் போன்ற வடுக வந்தேரிகளால் தமிழர்களும் அவர்தம் பண்பாடும் அழிக்கப்பட்டது என அழுத்தமாக கூறுகிறார்.

கோவை மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினரும், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்களில் ஒருவருமான A.V.K.மள்ளர் அவர்கள் புத்தகத்தில் உள்ள “தவறான உள்ளடக்கத்தை” தாம் ஏற்று கொள்ளவில்லை என்கிறார். ஆனால் இந்த நூல் மீதான தடையையும் நூலாசிரியர் மீது தொடுக்கப்பட்டுள்ள தேசதுரோகக் குற்ற நடவடிக்கையையும் நாம் எதிர்க்கின்றோம்; காரணம், இது தனி மனிதனின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது” என்கிறார். மேலும், இந்த படைப்பை குறுகிய சாதிக் கண்ணோட்ட்த்தில் பார்க்க்க்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

தடையை எதிர்ப்போம்

இப்புத்தகத்திற்கு ஆதரவானவர்கள், குறிப்பாக அறிவர் வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள், திராவிட இயக்கம் தமிழ் அடையாளத்தை அழித்துவிட்டது என்னும் ஆசிரியரின் அடி நாதமான கூற்றை ஆதரிக்கிறார்கள். அண்மையில் சென்னையில், கருத்துரிமை பாதுகாப்பு மய்யம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்ட்த்தில், உரையாற்றிய பலரும் தமிழ் தேசியம்தான் தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்க உதவும் என்று தெரிவித்தார்கள். அவ்வகையில் இந்த கருத்தாக்கத்தோடு செந்திலையும் அவர்தம் படைப்பையும் தமிழ் தேசிய அடையாளத்துடன் பொருத்திப் பேச இவர்கள் தயங்கவில்லை.

புகழ்பெற்ற எழுத்தாளரான மனுஷ்யபுத்திரன், இக்கூட்ட்த்தில் பேசியபோது, செயலூக்கமுள்ள அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் இந்த தடையை எதிர்க்க வேண்டுமென உரைத்தார். அதே நேரத்தில் வரலாற்றை பதிவு செய்யும்போது பிற சமூகங்களை காயப்படுத்துகின்ற வகையில் எழுதக்கூடாது அந்த வகையில் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் தம் பொறுப்பிலிருந்து நூலாசிரியர் தவறியிருக்கிறார்” என்று மனுஷ்யபுத்திரன் கூறினார்.

சென்னை கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான செல்வா ”தீண்டப்படாதோர் என்ற முறையில் சமூக ஒதுக்குமுறைக்கு இலக்கான காரணத்தினால் ஏற்பட்ட உளவியல் வடுவை நூலாசிரியர் தாங்கியிருக்கின்றார். அவருடைய கோபத்தின் தீபிழம்பு வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. ஆனால் மற்றவர்களுக்கு அவருடைய மொழி நாகரீகமற்றதாக தெரிகிறது“ என்றார்.

”செந்தில் அவர்கள் இரண்டாம் தரவுகளின் அடிப்படையில் தொடுத்துள்ள குழந்தைத்தனமான வசைச் சொல்லாடல்கள் அவருடைய இந்த முயற்சியை வெற்றுப் படைப்பாக மாற்றியுள்ளது” என்கிறார் அ. மார்க்ஸ்.

சில செயற்பாட்டு குழுக்கள், நூலாசிரியர் தம் சொந்தச் சாதியை ஆண்ட பரம்பரையோடு (பாண்டியர்களோடு) அடையாளப்படுத்த அவர் மேற்கொண்ட மேலோட்டமான முயற்சியே என்றும் இது தர்க்க ரீதியாக பொருந்தாது என்றும் பார்க்கின்றனர். “ஆதிக்க சக்திகளிடமிருந்து நமது அடையாளத்தை மீட்க நாம் தொன்று தொட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். உழவில் ஊன்றி நில உடைமையாளர்களாக இருந்த பள்ளர்களின் நிலங்கள் அரச ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டன” என்கிறார் தலித் தலைவரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர் கே. கிருஷ்ணசாமி அவர்கள்.

வாதக் கோட்பாட்டு அணுகுமுறை

ஹென்றி லூயி கேட்ஸ் ஜூனியர் அவர்களின் காலத்தால் அழியாத ”நம் வேர்களைத் தேடி” என்னும் நூலை ஒப்பிடும்போது இந்நூல் முயற்சி படுதோல்வியே. கேட்ஸ், நம்பகமான, பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள் இல்லாத சூழ்நிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மரபணு மாதிரிகளை மிகவும் சிரமப்பட்டு திரட்டி, அவர்களின் வேர்களை அறிந்துகொள்ள, மரபணுவிய ஆய்வினை மேற்கொண்டார். வரலாற்று ஆய்வாளர்கள், தடைசெய்யப்பட்ட இந்த புத்தகம் நுட்பமாக இல்லை என்கின்றனர். சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியாக இருக்கின்ற M.லக்‌ஷ்மணன் அவர்கள் இது ஒரு ”வரலாற்றியலற்ற ஆய்வு” என்று கூறுகிறார். ”இத்தகைய வாதக் கோட்பாட்டு அணுகுமுறை (Polemical Approach) பல சாதி சமூகமான தமிழகத்தில் தேவையற்ற பகைமையை ஏற்படுத்தும்” என்கிறார். 

ஃப்ரண்ட் லைன் (FRONT LINE) நிருபர் சந்தித்த எழுத்தாளர்கள் அனைவரும் , இத்தகைய ஒரு நுட்பமான தலைப்பை ஒட்டி எழுதும் போது எழுத்தாளர் முதிர்ச்சியுடன், பகுத்தாய்ந்து அணுகவேண்டும் என்றனர். சென்னைக் கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட அருகோ அவர்கள் ”ஒரு வருடத்திற்கு முன் வெளிவந்து ஒரு குறிப்பிட்ட சாதி வட்டத்திற்குள் மட்டுமே வலம் வந்த இந்நூலை தமிழ் நாடு முழுக்க, அனைவரும் நாடுகின்ற நூலாக மாற்றிய தமிழக அரசின் தடை ஆணைக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்கிறார்.

இந்நூல் தடை செய்யப் படாமல் இருந்திருந்தால் கண்டுக்கொள்ளாமலே போயிருக்கும் என்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். ”இந்நூல் எவ்வித தீர்மானகரமான செல்வாக்கையும் செலுத்தாது. காரணம், இது அரை உண்மைகளாலும் கட்டற்ற கற்பனைகளாலும் கட்டமைக்கப்பட்டது” என்கிறார். பள்ளர்களை ஆட்சியாளர்களாக, ஆதிக்க சக்திகளாக படம்பிடித்துக் காட்டும் இம்முயற்சி சமூக வரலாற்றுக்கு முரணானது என்றும் கூறினார்.

நூலாசிரியர் பிற சாதியினரை, தலித் சமூகத்தின் ஒரு அங்கமான பறையர்களையும், பள்ளர்களோடுச் சேர்ந்து ஒதுக்கப்பட்ட சின்ன மேளக்காரர்கள் என்னும் தெலுங்கு துணைச் சாதியினரையும் கூட இழிவுபடுத்தி எழுதியிருப்பது துரதிட்டமானது என்கிறார் அ.மார்க்ஸ். ”இதற்கு முன்பே வெளியான நூல்களிலிருந்துதான் அவை மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன என்று வாதிடுவது திருப்திகரமாக இல்லை” என்கிறார்.

திராவிட இயக்கத்தை செந்தில், “தமிழ்ப் பகைவர்” என்கிறார். தெலுங்கர் கன்னடர் போன்ற வந்தேறிகளை இலக்காக்காமல் திராவிட இயக்கம் நம் மீது படை எடுக்காத பார்ப்பனர்களை தமிழர்களுக்கு எதிராக பொருதச் செய்தது. “தமிழ் அடையாளத்திற்கான போர் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையே நிகழ்ந்திருக்க வேண்டும்” என்று வாதாடுகிறார்.

தமிழ் அடையாளத்தை தெலுங்கு கன்னட வந்தேறிகள்தான் அழித்தனர் என்ற கூற்றிற்கு எதிர் வினையாற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் இசுலாமிய படையெடுப்பினை நாயக்கர்கள்தான் எதிர்கொண்டனர் என்று உரைக்கின்றனர். ”ஒரு வரலாற்றை கட்டமைக்கும்போதோ அல்லது வடிவமைக்கும்போதோ நம்பகமான தக்கச் சான்றுகள் தேவை. இல்லையெனில் அவை உயர்வுநவிர்ச்சியாகவோ அல்லது மிகைப்படுத்தப்பட்டவையாகவோ அமையும்” என்கிறார் லக்‌ஷ்மணன்.

எழுத்தாளரும், முன்னாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான த.ரவிகுமார் அவர்கள் செந்திலின் கூற்று வலிந்து பெறப்பட்டது. “பாரபட்சமான கருத்துக்களை ஊக்கிவிக்கக் கூடாது. ஒரு இனத்தின் சமூகப் பண்பாடு மற்றும் மானுடவியல் கூறுகளை யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம். ஆனால் செந்திலின் இந்த படைப்பு “ஓர் இனத்தின் வரலாற்றை தேடும் முயற்சியில் தம்மைத் தொலைத்த, முற்றும் வீணான உழைப்பு” என்றே சொல்லவேண்டும்.

அடையாள அரசியலுக்கு பெயர் பெற்ற தமிழ் நாட்டில் மற்றொரு அடையாள அரசியலின் வெளிப்பாடுதான் இந்த நூல் என்று பார்க்கிறார் மார்க்ஸ். ”ஒதுக்கப்பட்டவர்கள், வரலாற்றில் புறந்தள்ளப்பட்ட, தங்களின் அடையாளத்தை நிலை நிறுத்துவது தேவையாகிறது. தலித் சாதியினரின் அடையாளத்தை மறுகட்டமைப்பு செய்வதன் வரலாற்றுத் தேவையை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்” என்கிறார்.

ஆனால் நூலாசிரியர் பள்ளர்கள் என்னும் மள்ளர்கள்தான் பாண்டியர்கள் என்று நிறுவுவதற்கான தனது மேலான, ஆனால் அவசர முயற்சியில், அறிவார்ந்த நிதானத்தை இழந்துவிட்டுள்ளார். நைஜீரிய எழுத்தாளரான கேப்ரிள் ஓகாரா சொல்வார்: “தன் நிழலை பதியாத ஒருவனின் இருப்பு அவன் இருந்தும் இல்லை என்பதேயாகும்”. தமிழ் இலக்கிய உலகில் செந்திலின் இப்படைப்பு ஒரு நிழல் மட்டுமே. இறுதியில், அவருடைய படைப்புகளைவிட அவர்தான் அதிகமாக வாசிக்கபடுகிறார்.

நன்றி: FRONTLINE, JULY 16,2013 

தமிழில்: பொன்.சந்திரன்.

Pin It