கடந்த 163 ஆண்டுகளாக, நமது செய்திகளை பரிமாறிக்கொண்டிருந்த “தந்தி” என அழைக்கப்படும் “டெலிகிராம்” சேவை இன்றோடு நாடு முழுவதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தகவல் தொடர்பு சாதனமானது இனி பயன்பாட்டில் இருக்காது. கிராமங்களில், சினிமா கொட்டகைகளில் காட்டப்படும் திரைப்படங்களின் விளம்பரத்திற்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளில், கடைசிநாள் காட்சியின்போது, “இன்றே இப்படம் கடைசி” என ஒரு துண்டு செய்தி ஒட்டப்படும். அதுபோலவே, இன்றோடு (15.07.13) தந்தி முறை மூலமான, தகவல் பரிமாற்றத்திற்கு இறுதி நாளாகும். எவ்வளவோ கணக்கற்ற சுக, துக்க செய்திகளை பரிமாறிய, இந்த மிகப்பழமையான தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான தந்தி சேவையானது, இனி வரலாற்றில் மட்டுமே இடம்பெறும்.

முதல் தந்தி:

1837இல் அமெரிக்காவில் ஓவியராக இருந்த “சாமுவெல் மோர்சு” என்பவர் முதன்முதலில் மின்சாரப் பதிவு முறையில் தந்தியை அனுப்பினார். கடந்த 05.11.1850 அன்று இந்தியாவில் முதன்முறையாக, கல்கத்தா முதல் டைமண்ட் துறைமுகம் வரையிலான 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு, “மின் சமிக்ஞை” (எலெக்ட்ரிகல் சிக்னல்) மூலமாக சோதனை முறையில் தந்தி முறையானது பயன்படுத்தப்பட்டது. 1851ஆம் ஆண்டில் தந்தி முறையானது, கிழக்கிந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு அறிமுகபடுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1855ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தந்தி முறையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இப்படியாக புதியதொரு தகவல் தொடர்பு முறையானது நம் சமூகத்தில் அறிமுகமானது. 1853ஆம் ஆண்டில் தந்திக்கென தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டதுடன், கொல்கத்தா, ஆக்ரா, மும்பை, சென்னை, ஊட்டி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே 6,400 கிலோ மீட்டர் தொலைவிற்கு தந்தி சேவைக்கான தொலைத்தொடர்புக் கம்பிகள் நிறுவப்பட்டன. 

“இந்திய தந்தி சட்டம்”,1855:

இதனை தொடர்ந்து 1855ஆம் ஆண்டில் ஜுலை 22 அன்று, “இந்திய தந்தி சட்டம்” இயற்றப்பட்டு, அதே ஆண்டில் அக்டோபர் முதலாம் நாளில், அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 1902ஆம் ஆண்டில் கம்பியில்லா தந்தி நிலையம் உருவாக்கப்பட்டது. 1927ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வானொலி வாயிலான தந்தி முறை கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1933 ஆம் ஆண்டில், “இந்திய கம்பியில்லா தந்தி சட்டம்” இயற்றப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் இந்தியாவில், இன்டர்நெட் முறை கொண்டுவரப்பட்டது. இந்திய அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவையானது, 1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. 1980களில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் தந்திகள் அனுப்பப்பட்டன. பின்னர் 1991-92ம் ஆண்டுகளில் மட்டும் அதிகபட்சமாக ஆறரை கோடி தந்திகள் அனுப்பப்பட்டன. இந்த எண்ணிக்கை 1995-96ல் ஐந்து புள்ளி ஆறு கோடியாகவும், 2000 முதல் 2001ம் ஆண்டுகளில் மூன்றரை கோடியாகவும் சரிந்தது. இப்படியாக, தந்தி முறையானது காலத்திற்கு காலம் புதுப்பிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டு வந்ததுடன், நாடு முழுவதும் 182 தந்தி அலுவகங்கள் இயங்கி வந்தன. அவற்றிற்கு இன்றோடு (15.07.13) மூடுவிழா நடத்தப்பட உள்ளது. 

தகவல் தொடர்பு சாதனம்:

தகவல் தொடர்பு சாதனங்களில் தந்தி முறையானது பிராதானமான ஒன்றாகும். குறைந்த விலையில் விரைவானதும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் விளங்குவது தந்தி முறை. பிறப்பு இறப்பு மற்றும் அவசர செய்திகளைக் கொண்டுசெல்வதோடு மட்டுமின்றி, சமூக இயக்கங்களின், அரசியல் கட்சிகளின் கருத்துகளை ஆட்சியாளர்களுக்கு தெரிவித்திடும் சாதனமாகவும் இருந்து வந்தது. கிராமங்களில் ஒருவருக்கு தந்தி வந்திருந்தாலே, அது துக்க செய்தியாகத்தான் இருக்கும் என, அந்த மொத்த கிராமத்தினராலும் கருதப்பட்ட காலமும் இருந்தது. இது போன்ற காட்சிகள் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையாக காட்டப்பட்டிருக்கும். 

தந்தியின் தேவைகள்:

நீதித்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற துறைகளில் இன்றளவும் தந்தியின் தேவை தவிர்க்க முடியாதாகும். ஆள்கொணர்வு மனு, பிணை, முன் பிணை, ஏல முறைகள், குற்றவியல் மற்றும் உரிமையியல் பிரச்சினைகள், ஆக்கிரமிப்பு, வெளியேற்றம், இடைக்கால, அவசர தடை உத்தரவுகளை தெரிவித்தல் போன்ற பல்வேறு சூழல்களில் தந்தி முறையின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாதவைகளாக விளங்குகின்றன. இராணுவத்துறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு சாதனம் தந்தி முறையே ஆகும். 

தந்தி முறை நிறுத்தம்:

இந்நிலையில், தொலைபேசி, மொபைல், இணையதளம், குறுஞ்செய்திகள் போன்ற பல்வேறு நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக தந்தி முறையை முன்பு போல மக்கள் பெருவாரியாக பயன்படுத்துவது குறைந்துபோனது. இதன் விளைவாக சமீபகாலமாக தந்தி துறையானது, மிகுந்த நட்டத்தில் இயங்குகிறது என்று, தந்தி முறையைக் கையாண்டு வரும், பி.எஸ்.என்.எல். நிறுவனம், அறிவித்தது. மேலும், கடந்த 11.06.13 மற்றும் 28.06.13 ஆகிய இரு தினங்களில் அந்நிறுவனத்தால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் (15.07.13) இன்று முதல் தந்தி முறையான நிறுத்தப்படுகிறது. நேற்று மாலை வரை தந்தி செய்திகளை பெற்றுக் கொண்ட பி.எஸ்.என்.எல். நிறுவனம், இன்று அதனை உரிய நபர்களிடம் கொண்டு சேர்ப்பதுடன் தனது பணிகளை முடித்துக் கொள்ள இருக்கிறது. 

தந்தி முறை அமலில் உள்ள நாடுகள்:

பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ரஷ்யா, ஹங்கேரி, இஸ்ரேல், ஸ்லோவேனியா, ஸ்வீடன், ஜப்பான், மெக்சிகோ, பஹ்ரைன் போன்ற தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் தந்தி சேவையானது இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. 

பொது நல வழக்குகள்:

எழுபது விழுக்காடு மக்கள் இன்றளவும் கிராமப்புறங்களில் வசிக்கும் இந்நாட்டில், பொதுமக்களின் பிரதானமான தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான தந்தி சேவையை, அறவே நிறுத்திட முடிவெடுத்த நடுவணரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனம், அந்த உத்தரவு குறித்து பொதுமக்களிடம் போதிய அளவில் கருத்துகளைப் பெறாமல், அதேவேளையில் அது குறித்து பெரிதும் விளம்பரம் செய்யாததுடன், தந்திமுறையை நிறுத்திய பிறகு அதற்கு மாற்று முறையாக எதையும் அறிவிக்காமல் விட்டுவிட்டது. இது குறித்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்திருக்க வேண்டிய எதிர் கட்சிகளும், சமூக இயக்கங்களும் இதனை கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டது அதிர்ச்சியான உண்மையாகும். 

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வராஜ் என்பவரும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், திருச்சியிலுள்ள நுகர்வோர் அமைப்பை சேர்ந்த சேகரன் என்பவரும், இக்கட்டுரையாளர் இராபர்ட் சந்திரகுமாரும், தந்தி முறை நிறுத்தப்படும் எனும் அறிவிப்பினை ரத்து செய்து தந்தி முறையானது தொடர்ந்து நீடித்திட உத்தரவு பிறப்பித்திட வேண்டும் என்று பொதுநல வழக்குகளை தொடர்ந்தார்கள். வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்புக்காக வழக்குகளை ஒத்தி வைத்திருக்கிறது. 

இப்படியாக ஆளும் அரசும், எதிர்கட்சிகளும், சமூக இயக்கங்களும், பொதுமக்களும், நீதித்துறையும் சேர்ந்து, 163 ஆண்டுகளாக நம் முன்னோர்கள் மற்றும் நமது வாழ்வில் பிரதானமான பங்கு வகித்த தகவல் தொடர்பு சாதனைகளில் பழமையான ஒன்றான தந்தி முறைக்கு முடிவு கட்டிவிட்டோம். இதன் விளைவாக பெரிதும் பாதிக்கபடவிருப்பது எப்போதும் போல, சமூகத்தின் அடித்தட்டு மக்களே ஆவார்கள். ஆகவே, பல வகைகளில் அத்தியாவசிய சேவையாக இன்னும் மக்களால் உணரப்படும் தந்தி சேவையினை மீண்டும் தொடர்ந்து நடத்திடுவதே, ஒரு மக்கள் நல அரசின் சிறந்த செயல்பாடாக இருக்க முடியும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It