சாதி ஆதிக்கம் தனக்கிருக்கிற அதிகாரத்தை மறுபடியும் நிரூபித்திருக்கிறது. தனது உண்மையான காதலுக்காக 2012 அக்டோபர் முதல் போராடிய ஒரு வெகுளியான இளைஞன் இப்போது (2013 ஜீலை 4-ல்)கொல்லப்பட்டான்.

தருமபுரி–நத்தம் இளவரசனை வெகுளி என்பதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை. தனது காதலுக்கு எதிராக களமிறங்கிய அதிகார வர்க்கம் குறித்து எதுவும் தெரியாத ஒரு இளைஞனை என்னவென்று சொல்வது?

இளவரசன் சமூக நிலைமை தெரியாமல் போராடி இறந்தான். இப்போது இளவரசனின் சாவுக்கு காரணமானவர்களை ஆதாரத்தோடு பிடித்து தண்டிக்க களமிறங்கியுள்ளவர்கள் சமூக நிலைமை தெரிந்தவர்கள். இவர்கள் வெகுளிகளல்ல. சமூக இயக்கவியல் கற்றவர்கள். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த உயிரைக் கொடுத்து போராடுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் எண்ணற்ற விவரங்களும், ஆதாரங்களும் உள்ளன. இவர்கள் விவரங்களையும் ஆதாரங்களையும் வரிசைப்படுத்தும் போது உயரதிகாரிகள் எல்லோரும் ஆடிப்போகிறார்கள். உண்மைக்கு வெகு அருகில் வந்துவிட்டதைப்போல அதிசயிக்கிறார்கள். நீதி நிலை நாட்டப்படும் என்கிற நம்பிக்கை வெளிச்சம் எல்லா இடத்திலும் பரவுகிறது.

இந்த அறிவார்ந்தவர்கள் இயக்கத்தவர்கள் செய்த அனைத்தையும் இளவரசனும் செய்யவில்லையா? அவனும் சட்டம் - நீதி - காவல் - அரசு அனைத்தையும் நம்பவில்லையா?

இளவரசன் என்ற வெகுளியும் கூட நமது மதிப்புமிக்க இயக்கத்தவர் செய்கின்றதை தெளிவாக செய்தான். தனது உயிரான காதலியை சட்டப்பூர்வ மனைவியாக்கினான். அச்சான்றிதழை உரிய காவல்துறை அதிகாரி முன் சமர்ப்பித்தான். பாதுகாப்பு கோரினான்.

சட்டம் - நீதி - காவல் - அரசு என்ன செய்தன?

2012 அக்டோபர் 7ல் இளவரசனும், திவ்யாவும் ஒன்றாக வாழ முடிவெடுத்தனர். 15.10.2012ல் தங்களது திருமணப்பதிவு சான்றிதழோடு சேலம் டிஐஜி சஞ்சய் குமாரிடம் அடைக்கலம் தேடினர். தருமபுரி வெப்பம் பரவ ஆரம்பித்தது. இதன் ஆழமும் ஆபத்தும் அரசுக்கு நன்றாகத் தெரியும். அரசின் ஆக்டோபஸ் கரங்கள் சூழ்ந்த பகுதிதான் தருமபுரி மாவட்டம். தருமபுரியை, நத்தம் முதலான முக்கிய கிராமங்களை சல்லடையாக துளைத்து துருவிக்கொண்டிருக்கிறது உளவுத்துறை. நக்சல் பீதியால் நடுங்கியுள்ள அரசாங்கம் மொத்த தருமபுரியையும் தனது பல்வேறு காவல் துறைகளின் பிடியிலேயே வைத்துள்ளது. ஆக அரசின் அனைத்து துறைக்கும் இளவரசன் - திவ்யா திருமணம் அரசியலாக்கப்படுகிறது என்பது நன்றாகத் தெரியும்.

பா.ம.க வை சார்ந்த கொட்டாவூர் மாது (வன்னியர் சங்க மாவட்டத் தலைவர்), வி.பி.மதியழகன் (வெள்ளாளப்பட்டி முன்னாள் ஊராட்சித்தலைவர்) அ.இ.அ.தி.மு.கவை சார்ந்த பழையூர் முருகேசன், கன்பார்ட்டி முருகன், திமுகவைச் சார்ந்த பச்சியப்பன் (முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்), புளியம்பட்டி கிராமத்தைச் சார்ந்த கந்துவட்டி முருகன், மணி என முக்கியமான அரசியல் புள்ளிகள் இத்திருமணத்தை காரணம் காட்டி சுற்றுவட்டார கிராமங்களில் சாதி வெறியூட்டலை செய்தனர். தலித் மக்களின் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி முதலான கிராமங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.

தாக்குதலை நியாயப்படுத்த ஓர் உயிர்ப்பலி தேவைப்பட்டது. திவ்யாவின் தந்தை நாகராசு 2012 நவம்பர் 7ல் பலியிடப்பட்டார். தாக்குதல் வெறித்தனத்தோடு நடத்தப்பட்டது. இவை எல்லாமும் தருமபுரி மாவட்ட ஆட்சித்துறை, காவல்துறை, உளவுத்துறை அனைத்துக்கும் தெரியும். இவற்றை தடுப்பதற்கு சிறு துரும்பைக்கூட அரசு அசைக்கவில்லை. மாறாக இப்படியொரு சம்பவம் அவசியமானதுதான் என அரசு நிர்வாகம் கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்தது.

இத்தனையையும் பார்த்தப் பிறகும் கூட நீதித்துறை தானாக முன்வந்து தலையிடவில்லை.

2012 நவம்பர் 7 வரை நடந்த சம்பவங்களில் மொத்த அரசையும் இணைத்துப் பார்ப்பது கொஞ்சம் சிரமமானதுதான். ஆனால் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளில் இருந்து அரசின் எந்தத் துறையும் தப்பிவிட முடியாது. காரணம் தருமபுரி கலவரம் உலகறிந்ததாயிற்று. அதன் தொடர்ச்சியாக மரக்காணம் வரை தீ பரவியது.

இந்த கொந்தளிப்பான நிலையில்தான் 2013 ஜூனில் திவ்யாவின் தாயார் தனது மகளை மீட்டுத் தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேன்மையான நீதிபதிகள் இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். 2012 செப்டம்பர் 15ல் பதிவு திருமணச் சான்றிதழோடு சேலம் டி.ஐ.ஜி சஞ்சய்குமாரிடம் தஞ்சமடைந்தது முதல் 2012 நவம் 7ல் திவ்யாவின் தந்தை இறந்தபோதும். அதையொட்டி பெருங்கலவரம் வெடித்த போதும் எந்தச் சூழலிலும் பிரியாத இணை குறித்து நீதிபதிகள் அக்கறை காட்டவில்லை. இளவரசன் - திவ்யா இணை மனமுவந்து வாழ்கிறார்களா? மனக்கசப்புடன் வாழ்கிறார்களா? என ஆய்வு செய்யவில்லை. இவர்களின் திருமணத்தால் உருவான சாதி வெறியாட்டத்தின் பின்னணி அலசப்படவில்லை. இவ்வளவு பெரிய வன்முறையை நடத்தியவர்கள், இவர்களைப் பிரிக்க என்னவெல்லாம் செய்தார்கள் என ஆதாரங்களைப் பார்க்கவில்லை. கணவனை பலிகொடுத்த திவ்யாவின் தாயார் யாருடைய பிடியில் இருக்கிறார் என பரிசீலிக்கவில்லை. திவ்யாவின் தாயார் எந்த தூண்டுதலும் இல்லாமல் இந்த வழக்கைத் தொடுத்திருக்க முடியுமா? என விசாரிக்கவில்லை. இளவரசனோ, திவ்யாவோ விசாரணையில் வெளிப்படுத்தும் கருத்துக்களால் சமூகத்தில் அசம்பாவிதங்கள் நிகழுமா எனக் கவலைப்படவில்லை.

நீதித்துறை கவலைப்படாத இவ்விடயங்கள் குறித்து மற்றெந்த துறையும் முன்வந்து சுட்டிக்காட்டவில்லை. தருமபுரி பகுதிகளின் கிராம நிர்வாக அதிகாரி முதல் மாவட்ட ஆட்சியர் வரை எவரும் துளியும் அலட்டிக் கொள்ளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், முதலமைச்சர் எவருக்கும் இதுகுறித்து அக்கறையில்லை.

அன்றாடம் ஊடகங்களில் தீனியாக இருந்த இந்த விடயத்தை ஊடகத்துறை கூட தனது லாபத்துக்கான குறியீடாக கொண்டிருந்ததே தவிர சமூகப்பொறுப்போடு அரசுக்கு சுட்டிக்காட்டவில்லை.

விபரம் தெரிந்த இந்த அரசின் அங்கத்தினரெல்லாம் விளையாட்டாக திவ்யாவின் அம்மா தொடுத்த ஆட்கொணர்வு மனுவை வேடிக்கை பார்த்தனர். நீதித்துறையும் இவ்வழக்கின் பின்னால் இருக்கும் சமூக நிலைமைகள் தெரிந்தும் சராசரி வழக்கைப்போல் அணுகியது.

ஜீன் 6ம் தேதி, முதல் விசாரணையில் திவ்யா தனது கணவர் இளவரசனை விட்டு விலகுவதாக கூறத்தொடங்கியதில் இருந்து மீண்டும் நிலைமை மோசமாகியது. இவர்களின் திருமணத்தை அரசியலாக்கிய சமூக விரோதிகள் ஊக்கம்பெற ஆரம்பித்தனர். தலித் சமூகம் அச்சத்தில் பதறத் தொடங்கியது. ஆனாலும் நீதித்துறை தனது சடங்குத்தனமான விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டது. சமூகத்தில் பரபரப்பையும் பதட்டத்தையும் தூண்டிவிட்டது. சூலை 3ஆம்நாள் விசாரணை, நிலைமையை சிக்கலாக்கியது

இந்த சட்டம் - நீதி - காவல் என அரசை நம்பிய இளவரசன் எனும் வெகுளி பலியாகிப் போனான். இதே சட்டமும் நீதியும் காவலுமான அரசை  நம்பித்தான் திவ்யாவின் தந்தையும் பலியானார்.

இப்போது விவரம் தெரிந்த இயக்கத்தவர்கள் கூட இச்சட்டம் - நீதி - காவல் -அரசை நம்பித்தான் களமாடுகிறார்கள். இவர்கள் யாரைப் பிடித்து யாரிடம் ஒப்படைப்பார்கள்?

இளவரசன் - நாகராசு படுகொலைகளுக்கும் தருமபுரி சாதிவெறியாட்டதுக்கும் யார் காரணம்?

இளவரசன் - திவ்யா பாதுகாப்பானாலும் சரி, இதுபோல் அன்றாடம் நடக்கும் சாதியக் கொடுமைகளானாலும் சரி ஓர் அரசு என்னதான் செய்துவிடமுடியும் என்றும், இதில் ஒட்டுமொத்த அரசை ஏன் இழுக்கவேண்டும்? என்றும் நமது சராசரி மனசாட்சி குழப்புகிறதல்லவா?

இந்த அரசுக்கு எவ்வளவுப் பெரிய சக்தி இருக்கிறது தெரியுமா? தமிழ்நாடு தொழில்பாதுகாப்பு நிறைந்த மாநிலம். வெளிநாட்டு முதலாளிகள் தொழில்செய்வதற்கு பாதுகாப்பு நிறைந்த மாநிலம். வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் மூலப்பொருள், மூலதனம் இறக்குமதிக்கும், அவை சரக்குகளாகவும் பெரும் லாபத்தொகையாகவும் வெளியேறவும் உத்திரவாதமுள்ள மாநிலம்.

இந்த லாபவேட்டைக்கு எதிராக சிறு அசம்பாவிதமும் எழாத வகையில் சட்டம், ஒழுங்கு, காவல் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலம். அவ்வாறு அசம்பாவிதம் நடப்பதற்கு எந்த தனிமனிதரோ, ஒரு இயக்கமோ முயற்சித்தால் முளையிலே கிள்ளி  நசுக்கி அழித்துவிடும் மாநிலம்.   யாரெல்லாம் இந்த லாப வேட்டைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதல்ல, தனது மனதுக்குள்ளே சிந்திக்கிறார்கள் என்பதைக்கூட இந்த அரசு கண்டுபிடித்துவிடும். அப்படி கண்டுபிடித்துத்தான் பழங்குடி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் மனுவேல், மக்கள் சனநாயகக் குடியரசு கட்சித்தோழர்கள் துரைசிங்கவேல்,ராகினி, ஒன்றுமறியாத வெங்காய வியாபாரி திருச்சி தமீம்அன்சாரி என பலரை இந்த அரசு கைது செய்து சிறையிலடைக்கிறது.

ஒருவர் தனது மூளைக்குள்ளே சிந்திப்பதை கண்டுபிடித்து விடுகிற அரசுக்கு வெளிப்படையாக நடந்துவரும் சாதிவெறியாட்டங்களை குறித்து அறிவில்லை என்று சொல்லமுடியுமா? எல்லாம் தெரிந்தும் அரசு ஏன் இந்த சாதி வெறியாட்டத்தை அனுமதிக்கிறது?

உண்மைகள் இது தான். இத்தகைய சாதி வெறியாட்டங்கள் அரசின் ஸ்திரத்தன்மையை குலைத்துவிடாது. இதனால் நாட்டில் தொழில் முடக்கமோ, பொருளாதார தேக்கமோ உருவாகிவிடாது. நிலைமைகள் எதுவும் கட்டுமீறிப் போய்விடாது. எல்லாமே அரசின் பிடிக்குள்தான் இருக்கிறது என்பது ஒரு உண்மை.

கூடவே இத்தகைய சாதிவெறியாட்டங்கள்தான் அரசின் ஸ்திரத்தன்மையையும், தொழில் வளர்ச்சியையும், பொருளாதார பெருக்கத்தையும் பாதுகாக்கிறது என்பதும் உண்மையாகும். ஏனென்றால் தஞ்சை மீத்தேன், நிலக்கரி பங்கு விற்பனை, அணுஉலை, விலைவாசி உயர்வு, சாராய சமூக சீரழிவு என ஒவ்வொன்றிலும் அரசுக்கு எதிராக மக்கள் போராடவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். இப்போராட்டங்கள் அரசை மட்டுமல்ல சமூகத்தையே மாற்றக்கூடியவை.

அரசை நிலைகுலைய வைக்கும் இப்போராட்டங்களில் இருந்து மக்களை திசைத்திருப்ப,போராடும் மக்களைப் பிளவுபடுத்த இந்த சமூகத்தில் இருக்கும் அறிய வாய்ப்பு சாதிக்கலவரம். இந்த வகையில் இன்றைய சாதிக் கலவரங்கள் அரசால்தான் தூண்டப்படுகின்றன.

தன்னால் தூண்டப்படுகிற சாதிக்கலவரங்களைத் தானே கட்டுப்படுத்தும் திறனை அரசு கொண்டிருக்கிறது . இதற்காக அரசுக்கு முழு முதல் துணையாக இருப்பது கைக்கூலி கட்சிகளும், அமைப்புகளும் ஆகும். இக்கட்சிகள், அமைப்புகளில் சில அரசால் தோற்றுவிக்கப்பட்டவை; தோன்றியவைகளில் அரசால் கையகப்படுத்தப்பட்டவை. இந்த வகையிலான கட்சிகள் தாம் பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும். இக்கட்சிகள் எதுவும் அரசின் நலனுக்கு எதிராக இருக்க முடியுமா? இருந்தால் இவர்களும் நக்சல்பாரிகளாவர். ஆனால் நக்சல்பாரிகளின் எழுச்சியில் இருந்து மக்களை திசை திருப்பி அரசுக்கு ஆதரவாக செயல்படவே இக்கட்சிகள்  இருக்கின்றன.

ஆதலால்தான் இக்கட்சிகள் எல்லா சூழ்நிலையிலும் அரசைப் பாதுகாக்கின்றன. தருமபுரி இளவசரன் - திவ்யா சிக்கலிலும் ஆரம்பத்தில் தலையிட்ட அரசியல் புள்ளிகள், அப்புள்ளிகளோடு நெருங்கி உறவாடி வழிகாட்டிய காவல்துறை மற்றும் உளவுத்துறையினர், நெருக்கடியை மேலும் மேலும் தீவிரமாக்கிய நீதித்துறை, கிராம, மாவட்ட, மாநில நிர்வாகம் எவை குறித்தும் இக்கட்சிகள் வாயே திறப்பதில்லை. மாறாக மீண்டும் மீண்டும் இந்நிர்வாகங்கள்தாம் நம்மையெல்லாம் காப்பாற்ற முடியுமென்று மக்களை நம்ப வைக்கிறார்கள்.

ஆக உளவுத்துறை கலவரத்தை மூட்டுகிறது. நிர்வாகத் துறை நிவாரணம் வழங்குகிறது. நீதித்துறை நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. காவல்துறை படைகளை குவித்தும், தடியடி நடத்தியும் மக்களை அடிமைப்படுத்துகிறது. இங்கு எங்காவது சாதிவெறியை தணிப்பதற்கான துளி வேலையாவது நடந்திருக்கிறதா?

இதுதான் அரசுக்கு வேண்டும். சாதிய நிலைமைகள் நீடிக்க வேண்டும். தேவையென்றால் சாதிவெறியாட்டங்கள் நடக்க வேண்டும். மக்களை அச்சத்தில் ஆழ்த்தி அரசுதான் பாதுகாப்பளிக்க முடியும் என நம்ப வைக்க வேண்டும். அரசுதான் பாதுகாப்பானது என்ற பின் அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் எழாத நிலை உருவாக வேண்டும்.

ஆக அரசு சாதிக்கலவரங்களை மூட்டவும், கட்டுப்படுத்தவும் திறன் பெற்றிருக்கிறது. அரசுக்கு சேவகம் செய்யும் அமைப்புகள் மக்களை கையாளவும், சமாளிக்கவும் தேர்ச்சியடைந்துள்ளன. இதற்கெல்லாம் இன்று தமிழ்நாட்டில் நிலவும் சமூகப்பொருளாதாரம் (உயிர்வாழ்வதை எப்படியாவது உத்திரவாதப்படுத்தும் சீர்திருத்தம்) துணை செய்கிறது.

இப்படி அரசும் அரசின் அடியாள் படை கட்சிகளும் திட்டமிட்டு நடத்திய தருமபுரி சாதி வெறியாட்டம் நாகராசு - இளவரசன் படுகொலையில் முடிந்திருக்கிறது. இப்போது நமது ஆற்றல்மிகு இயக்கத்தவர்கள் யாரைப் பிடித்து யாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள்.

நமது இயக்கங்களுக்கு என்னவாயிற்று?

இளவரசன் மரணமானாலும் சரி, செங்கொடி மரணமானாலும் சரி, முத்துக்குமார் மரணமானாலும் சரி நமது இயக்கங்கள் என்ன செய்தன? உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி அதை உரிய முறையில் இறுதிச்சடங்கு நடத்த முயற்சிக்கின்றன. இந்த முயற்சி மதிப்பு மிக்கது; தேவையானது. ஆனால் இது மட்டுமே போதுமானதல்ல. இனி மேல் இவ்விழப்புகள் நடக்காதபடியான அரசியல் நிலைப்பாடுகளும், நடைமுறைகளும் முதன்மையானதாக இருக்க வேண்டும். இதுதான் மிக அடிப்படையான அவசியம். இது இருந்தால் அடுத்தடுத்து காரியங்கள் நடக்கும். ஒத்த கருத்துடையவர்களிடையே விவாதம், அணிசேர்க்கை நடக்கும். இயக்கம் பலப்படும். அடுத்த இழப்பை தடுக்கவோ அல்லது அவ்விழப்பில் முன்னின்று மரியாதைகள் கொடுக்கவோ முடியும். பலமில்லாமல் எதுவும் செய்ய முடியாது.

நமது இயக்கங்களின் பலவீனம் மேற்கூறிய நிகழ்வில் எல்லாம் என்ன சாதித்தது? சொல்லி வைத்தது போல் எல்லா இடங்களிலும் விடுதலை சிறுத்தைகளிடம் தோற்க நேர்ந்தது. விடுதலை சிறுத்தைகள் நிகழ்வுகளை படைபலத்தோடு கைப்பற்றுகிறது. அரசுக்கு எதிராக சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாதபடி அரசை பாதுகாக்கிறது. முத்துக்குமார் மற்றும் செங்கொடி இழப்பில் தோழர்களை உதைக்கவும் செய்தனர். அரசின் அடியாள் படையாக இருக்கும் கட்சி இதைவிட என்ன செய்யமுடியும்?

இந்த வகையான அசிங்கங்களுக்குப் பிறகும் நமது இயக்கங்கள் தம்மை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை அரசியல் ரீதியாக மேற்கொள்ளவில்லை. இப்போது இளவரன் இழப்புக்குப் பிறகும் இதற்கான முயற்சிகள் இயக்கங்களிடம் இல்லை. பல ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. அதில் பல நிகழ்வுகளுக்கு திட்டமிடப்படுகின்றன. ஆனால் எதிர்காலத்தில் இழப்புகளை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற விவாதங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஏன்? ஏனென்றால் நமது இயக்கங்களில் ஆகப் பெரும்பான்மையானவை சிறிய அளவிலான இயக்கங்களாகும். இவ்வியக்கங்களின் பொறுப்பாளர்கள் யாரும் முழுநேரப் புரட்சியை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர்களல்ல. சொந்த வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொண்டும். சொந்த வாழ்க்கையில் நிலவுகின்ற சாதி - சமூக வேறுபாடுகளை அனுசரித்துக்கொண்டும் வாழ்கிறவர்கள். தமது சொந்த வாழ்க்கையின் பொருட்டு பொது வாழ்வுக்கான தியாகங்களை நிராகரித்தவர்கள். எவ்வித இழப்புக்கும் தயாரில்லாதவர்கள். இவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையின் பொருட்டு சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டத்தை முன் வைக்காதவர்கள்.

இவர்கள் எதற்காக ஒன்றுபட வேண்டும்? பலமடைய வேண்டும்? ஆகவே புரட்சிகர இயக்கங்களின் ஒற்றுமைக்காக சிந்திப்பதில்லை. மாறாக இவர்களின் வர்க்கப் பின்னணியிலான அணி சேர்க்கைக்காக எல்லா சமரசங்களையும் செய்கிறார்கள். சமூக அக்கறையுடைய தனிநபர், சிறு இயக்கங்கள், முதலாளித்துவ வாய்ச்சவடால் இயக்கங்கள் என்ற இவர்களது அணி சேர்க்கைதான் இன்று சமூகத்தில் செயல்படுகிறவையாக உள்ளன. அச்செயல்பாடுகள் என்பது நடைபெறுகிற சம்பவங்களுக்காக அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமே ஆகும். இது எந்த வகையில் நிலைமையை மாற்றிவிட முடியும்?

இத்தகைய இயக்கங்களைத் தாண்டிய முழுநேரப் புரட்சியாளர்களைக் கொண்ட இயக்கங்கள் வெகுசில உள்ளன. இவைகள் முழு வளர்ச்சியடையாத போதும் இவைகளே நம்பிக்கைக்கு உரியனவாக உள்ளன. முன்னேற்றமான சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளன. முதலில் இவ்வியக்கங்களின் தேக்கத்துக்கு காரணமாகிய கெட்டித்தட்டிப்போன தலைமைகளை தகர்க்கத் தொடங்கியுள்ளன. அடுத்து மிக முக்கியமானது சட்டப்பூர்வமான வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் சட்டமறுப்பு நடவடிக்கைகளை கையாளவுமான புரட்சிகர நடைமுறைக்கு துணிந்துள்ளன. புரட்சிகர நடைமுறைக்கு வழிகாட்டும் தத்துவ – அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்துகின்றன. எதிர்புரட்சி தத்துவ – அரசியல்  கழிசடைகளை எதிர்க்கத் துணிந்துள்ளன. இதன் மூலம் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதில் தெளிவாக தொடங்கியுள்ளன. இவ்வகையில் ஒத்த இயக்கங்கள் ஒன்றிணையவும், பலமடையவுமான நிலைமைகள் தோன்றியுள்ளன.

இவ்வியக்கங்களின் வளர்ச்சிதான் சடங்குகளுக்காக சண்டையிடுவதை மாற்றும். அடையாளப் போராட்டங்களை மாற்றும். துண்டுத்துண்டான இயக்கங்களையும், அதன் அடிப்படையிலான வேலைமுறைகளையும் மாற்றும். ஆளும் வர்க்கத்துக்கும், அரசுக்கும் சேவகம் செய்கிற அமைப்புகளையும், கட்சிகளையும் சமூகத்தில் இருந்து  மாற்றும். அரசின் வர்க்க நலனில் இருந்து திட்டமிட்டுத் தூண்டபடுகிற சாதிவெறியாட்டம் மற்றும் சமூக விரோதப் போக்குகளை அடியோடு மாற்றும். சாதி வெறியாட்டத்தை தடுப்பதற்கு முதன்மையாக சாதிவெறிக்கு பலியாகும் மேல்சாதி உழைக்கும் மக்களிடம் போராடும். அவர்களிடம் குடிகொண்டுள்ள மேல்சாதி திமிரைக் களையும். மேல்சாதி திமிரொழிந்த உழைக்கும் மக்களை தலித் மக்களோடு இணைக்கும். உழைக்கும் மக்கள் ஒற்றுமையை கட்டியமைக்கும். ஒவ்வொரு நடைமுறைக்கும் பின்னால் இருக்கும் வர்க்க நலனையும் வர்க்க நலனோடு இணைந்த சாதிய நலனையும் தோலுரித்து வர்க்கப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தும். மனித சமூகத்திற்கு கேடு விளைவிக்கிற மக்களை துன்பத்தில் தள்ளியுள்ள நாற்றமெடுத்த இந்த சமூக அமைப்பை மாற்றும்.

- திருப்பூர் குணா, செல்:9486641586

Pin It