2009-இல் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல் போன்ற செயல்களுக்காக இலங்கை சர்வதேச சமூகத்தினால் நெருக்கடிக்குள்ளாகப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் உதவியுடன் இலங்கை தப்பித்து வருகிறது. அமெரிக்கா ஐ.நா.-வில் கொண்டுவந்த தீர்மானத்தின் படி, இலங்கையே தன் குற்றங்களை விசாரித்து, தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்ளவேண்டும் என்ற வினோதமான தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியது. இலங்கையும் LLRC என்று ஒரு செயல்படாதக் குழுவை அமைத்தது. இன்றுவரை இலங்கை அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. புவியரசியல் காரணமாக இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் இலங்கை மீது கவனம் செலுத்தினாலும், எந்த நாடும் தமிழர் பிரச்சனையில் இலங்கையை கண்டுகொள்ளவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை, இலாப அரசியல் நடத்தி, தமிழர்களை அடியோடு ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் இறங்கியது.

கடந்த சில வருடங்களாக இலங்கையின் போர்குற்றம் மற்றும் மனிதஉரிமை மீறல் தொடர்பான செய்திகளும் நிகழ்வுகளும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தன. வடக்கு பகுதியில் இராணுவமயமாக்கல், தமிழர் நிலங்களை கையகப்படுத்துதல், சிங்கள மக்கள் குடியேற்றம், சிங்களம் மற்றும் பௌத்தம் பரவலாக்கம் போன்றவை தடையில்லாமல் நடைபெற்று வந்தன. இந்தியாவும், சீனாவும் உதவி என்ற பெயரில் வீடு கட்டி தருகிறோம், இரயில் நிலையங்களையும், துறைமுகங்களையும் செப்பனிடுகிறோம் என்று  இலங்கைக்கு பணத்தை வாரி வழங்குகின்றனர். ஆனால் எதுவும் தமிழர்களை பலனளிக்கவில்லை. இப்படி தமிழர் பகுதிகளில் ஒடுக்குமுறைகள் நடைபெறும் நிலையில், கடந்த சில மாதங்களாக ஈழத்தமிழர் நலன் பற்றியும், அதைத்தொடர்ந்து வடக்கு மாகாணத் தேர்தல் அறிவிப்பும், 13-வது சட்டத்திருத்தம் மாற்றம் குறித்தான தகவல்களும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென இந்த அறிவிப்புகளும் அவசரவசரமான பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன. எதற்காக இத்தனை பரபரப்பு? எதற்காக இத்தனை அவரசம்? இவற்றைப் பற்றி கொஞ்சம் சிந்தித்தால், இவையனைத்தும் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய (காமன்வெல்த்) மாநாட்டை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன எனபதை அறிந்து கொள்ள முடியும். இதற்கு பின்பு பரபரப்பான அரசியல் கலந்துள்ளன.

பொதுநலவாய (காமன்வெல்த்) மாநாடு

கடந்த 2009-ம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில், 2013-ம் ஆண்டிற்கான 23-வது பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இந்தியா தான் 2009 போரையும் அதன் பின்பு இலங்கைக்கு தப்புவிப்பதற்கான திட்டத்தையும் வகுத்திருந்தன. அந்தவகையில் தான் இந்த அறிவிப்பும் இந்தியாவின் பின்பலத்தில் வெளிவந்தது. 2009-க்கு பிறகு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வுகளும் அதில் இந்தியாவின் பங்களிப்பையும் சற்று அலசிப் பார்த்தால் இது புரியும். இலங்கையில் பொதுநலவாய மாநாடு என்று அறிவிப்பு வெளியானது முதலே எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருந்தன. 2011-இல் கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதை கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் இந்தியாவின் பலமிக்க லாபியினால், அந்த எதிர்ப்புகள் அடக்கப்பட்டன. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைமை நீதிகள் கலந்து கொண்ட சட்ட மாநாட்டிலும் கூட இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றின. உச்சக்கட்டமாக கனடா இலங்கையில் நடைபெறும் மாநாட்டை புறக்கணிக்கிறது என்று அறிவித்தும் விட்டது. ஆஸ்திரேலியாவும் மிரட்டிகிறது.

இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் கண்டுகொள்ளாத இலங்கை, இந்தியாவை பலமாக நம்பிக்கொண்டிருந்தாது. ஆனால் கடந்த மாதங்களாக நடைபெற்ற சம்பவங்களினால் இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவது கேள்விக்குறியாக்கப்பட்டது. ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வெற்றி பெற வைத்தது, தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களினால் திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமை ஆணையம், கனடா போன்ற சில நாடுகளின் அழுத்தம் போன்றவை பொதுநலவாய அமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கின. ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை பயணம் மேற்கொள்வது கூட இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கின. இந்நிலையில் இம்மாநாடு  நடக்காமல் போனால் இலங்கை சர்வதேச சமூகத்தில் தனிமைப்படும் நிலை ஏற்படும். இதனை சரிக்கட்டுவதற்கு என்ன செய்வது யோசித்த இலங்கை, நீண்ட காலமாக தேர்தல் நடைபெறாமல் இருந்த வடக்குப் பகுதில் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இந்திய உட்பட பல நாடுகள் இதை வரவேற்றன. இலங்கை மீண்டும் உற்சாகமடைந்தது.

வடக்கு மாகாணத் தேர்தல்

வரும் செப்டம்பர் மாதம் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது. இது 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் தேர்தல். இத்தேர்தலை வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாடுகளின் நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக நடத்தவிருப்பதாக அறியமுடிகிறது. இதேப்  போல திரிகோணமலை மாணவர் படுக்கொலைக்கு, 12 போலீசாரை ஒப்புக்காக கைது செய்து, தன்னை நல்லவன் போல காட்ட இலங்கை முயற்சிக்கிறது. மேலும் வடக்கில் இராணுவப் படைகளை குறைப்பதாகவும், வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தன்மையில் கவனம் செலுத்தப் போவதாகவும் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இது போன்ற அறிவிப்புகள் அத்துனையும், பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு உலக நாட்டுத் தலைவர்கள் இலங்கை வரவிருக்கும் நிலையில், போருக்குப் பின்பு வடக்கு மாகாணம் எவ்வளவு அமைதியாகவும், வளர்ச்சிப் பாதையில் செல்வதைப் போலவும் ஒரு மாய பிம்பத்தை உருவாக்க நினைப்பதாகவே தெரிகிறது.

இது போன்ற அறிவிப்புகள் வந்து கொண்டிருதாலும், அறிவிக்கப்பட்டதால் செயல்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருப்பதாலும், உண்மையாகவே இராஜபக்ச அரசு இவைகளை செய்து கொடுக்குமா? இதனால் ஈழத்தமிழர்கள் மீண்டும் தலை நிமிர்ந்தால் இலங்கை என்ன செய்யும்? சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களை நடத்துமா? தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தாலும், அதில் இலங்கையை  பொருத்தவரை சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தேர்தல் நடத்தினாலும், ஆட்சி அதிகாரத்தை தமிழர்கள் கையில் வழங்கிவிடக் கூடாது  அல்லவா. இதற்காகத் தான் தற்போது இலங்கை 13-வது சட்டத் திருத்தத்தை கையிலெடுத்து, அதில் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளது. 13-வது சட்டத்திருத்தத்தால் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்காதெனினும், அதில் திருத்தம் கொண்டு வந்து, தமிழர்கள் ஆட்சியில் அமர முடியாதவண்ணம் இச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது வடக்கு மாகாணத் தேர்தல் நடக்கும் முன்பு எப்படியாவது 13-வது சட்டத்திருத்தத்தை வழுவிழக்கச் செய்யவேண்டும் என்று இராஜபக்ச முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார்.

13-வது சட்டத் திருத்தம்

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த குறைகளைத் தீர்க்க 1987-இல் இந்திய பிரதமர் இராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்தனே இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழர்களுக்கென ஒரு மாகாணமும், மற்றப்பகுதிகளை உள்ளடக்கியவற்றை சிங்களவர்களுக்கென ஒரு மாகாணம் என்று பிரித்து, இரண்டு மாகாணங்களுக்குத் தேவையானவற்றை தனித்தனியே மற்றொரு மாகாணம் பாதிக்காத வகையில், தனி மாகாண சட்டமன்றம் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதனை சட்டமாக்க 1988-இல் இலங்கை அரசியல் சட்டத்தின் 13 வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தில் எந்த ஒரு மாற்றம் தேவையென்றாலும், 1988 உடன்படிக்கையின்படி இலங்கை இந்தியாவுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இச்சட்டத்திருத்தத்தின்படி தமிழர்களுக்கு ஆட்சி, நிலம் மற்றும் காவல்துறை போன்ற முக்கிய உரிமைகள் வழங்கப்படும்.

தமிழர்களுக்கு தனி மாகாணம் அமைத்து அரசியல் உரிமையை கொடுப்பது தான் இச்சட்டதிருத்ததின் சாராம்சம். ஆனால் சிங்களவர்கள் யாரும் கேட்காத நிலையில் சிங்களவர் பகுதிகளை ஏழாகப் பிரித்து மொத்தம் எட்டு மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் தமிழர்களை விட சிங்களவர்கள் ஏழு மடங்கு அதிக அரசியல் உரிமைகளைப் பெற முடியும். தமிழர்கள் சிங்களவர்களுக்கென தனித்தனி மாகாணம் உருவாக்கப்பட்டால், அரசியல் உரிமைகள் சரிசமமாகப் பிரிக்கப்படும். இதனை தமிழர்களுக்கு வழங்க சிங்கள அரசு விரும்பவில்லை. 13-வது சட்டத்திருத்தத்தின் படி ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் 1988-இல் தேர்தல் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் புறக்கணித்த இத்தேர்தலில் 1990 வரை வரதராசப்பெருமாள் தலைமையில் ஆட்சியமைந்தது. பின்னர் சிங்களவர்கள் கைகளுக்கு மாறியது. 2006-இல் வடக்கு-கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டது செல்லாது என்று ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் கிழக்கு மாகாணத்தில் மட்டும் தேர்தல் நடத்தி கிழக்குப் பகுதியை சிங்களம் கைக்குள் கொண்டுவந்தது. இலங்கையின் இது போன்ற அராஜக செயல்களை இந்தியா கண்டுக்கொள்ளவே இல்லை.

வடக்கு மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், சில தமிழ் அமைப்புகளும், இந்தியாவும் மீண்டும் 13-வது சட்டத்திருத்தத்தை நடைமுறைபடுத்த கோரியது. பொதுநலவாய மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்க மனமற்ற நிலையில், தற்போது 13-வது சட்டத்திருத்தத்தை இலங்கை நீர்த்துபோக செய்யும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் 1987 இராஜீவ்-ஜெயவர்தனே உடன்படிக்கையை சட்டப்பூர்வ வடிவம் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள், இந்த 13-வது திருத்தத்தை ஏற்கனவே நீர்த்துப்போக செய்துவிட்டது உண்மை. தற்போதுள்ள நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழ் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுவதும் இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு உண்டு. சிங்களவர்களை 75% மேல் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில், தமிழர்களுக்கு நன்மைபயக்கும் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்ற முடியாது. இந்தியா இதைத்தான தற்போது நடைமுறைப்படுத்த வேண்டும் இலங்கையை கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

பசில் இராஜபக்ச டில்லி வருகை

13-வது சட்டத்திருத்தில் மாற்றம் செய்து நீர்த்துபோக செய்ய வேண்டுமென்றால் இந்தியாவின் தயவு கண்டிப்பாக தேவை. ஆனால் இந்தியாவிடம் இதுபற்றி ஆலோசிக்காமல் இச்சட்டத்திருத்தில் திருத்தம் கொண்டு வர அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்டு ஒரு அமைக்கப்படும் என இலங்கை அறிவித்தது. ஆனால் இந்தியாவை ஆலோசிக்காமல் இலங்கை தன்னிச்சையாகஅறிவித்ததினால், 13-வது சட்டத்திருத்தத்தை மாற்றம் ஏதும் செய்யாமல் உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். இலங்கையை இப்படி அறிவிக்க சொன்னது மன்மோகன்சிங் அரசின் தந்திரமாகக் கூட இருக்கலாம். அல்லது இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம், இராஜீவ்காந்தி போட்ட ஒப்பந்தத்தை இலங்கை மீறிவிட்டதாக நினைத்திருக்கலாம். எப்படி பார்த்தாலும் இந்திய அரசிற்கு தமிழர்கள் மேல் கரிசனம் இல்லை என்பது நிதர்சன உண்மை. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து, மன்மோகன்சிங்கை தன் வழிக்கு கொண்டுவர இராஜபக்சே தன் சகோதரனும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்சவை டில்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். மன்மோகன்சிங்கை சந்தித்து மனமாற்றம் செய்ய டில்லி வந்த பசில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஏனோ மன்மோகன்சிங்கை சந்திக்க இயலவில்லை. ஒருவேளை தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த பசில் தகுதியில்லாதவராக நினைத்திருக்கலாம்.

எந்த ஒரு அரசு பயணத்திலும், இரு நாட்டு பிரதிநிதிகள் நடத்தப்போகும் பேச்சுவார்த்தைகள், அதன் விளைவுகள், அதன்பின்பு இரண்டு நாட்டவரும் இணைத்து வெளிவிடும் கூட்டறிக்கை ஆகியன அந்தந்த அரசுத்துறையின் இணையதளத்திலும், பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளியிடப்படும். ஆனால் பசில்-குர்ஷித் சந்திப்பின் பேச்சுவார்த்தை குறித்தான தகவல்கள் எதுவும் இரு நாட்டு பத்திரிக்கைகளிலும், இணையதளத்திலும் வெளிவரவில்லை. இது பொதுவெளியில் வெளியிடும்படியான பேச்சுவார்த்தை இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் பசிலிடம் இந்தியாவின் நிலை குறித்து கேட்ட போது, சில விடயங்கள் கணவன்-மனைவி இடையே உள்ள இரகசியங்கள் போல வெளியே சொல்ல இயலாது என்று கூறுகிறார். ஆக இந்தியா இலங்கை இடையே இருக்கும் கணவன் மனைவி பிரச்சனையில் தமிழர்கள் பகடைக்காயாக்கப்படுகிறார்கள். குர்ஷித்துடன் நடத்த பேச்சுவார்த்தையில் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இலங்கை வந்து சேர்ந்த பசில் 13-வது சட்டத்திருத்தில் திருத்தம் கொண்டுவருவதில் மாற்றமில்லை என்று அறிவிக்கிறார்.

சிவசங்கர் மேனன் இலங்கை வருகை

இலங்கையின் நிலையில் மாற்றமில்லை என்ற நிலையில், அப்படியே விட்டுவிட மனமில்லாமல் தமிழர்களின் அதிகாரம் பகிர்ந்தளிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கொழும்பு செல்வார் என்று இந்தியா அறிவிக்கிறது. இலங்கை சென்ற இவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடனும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு அதிபர் இராஜபக்சவை சந்தித்து 13-வது சட்டத்திருத்தத்தை வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. பசில் வந்து சென்ற நான்கு நாட்களுக்குப் பிறகு சிவசங்கர் மேனன் எதற்காக இலங்கை செல்ல வேண்டும்? 2009-இல் நடந்த இனப்படுகொலையில் இந்தியா சார்பாக இவர் தான் பங்கேற்றார். இனப்படுகொலையில் இவரது பங்கும் இருக்கும் நிலையில், இவர் என்ன தமிழர் நலனுக்காகவா பேச்சுவார்த்தை நடத்துவார்? இந்தியா இலங்கை இடையே 13-வது சட்டத்திருத்தத்தை வைத்து நடந்து வரும் பேரம் படிவதற்காக வந்துள்ளார். தமிழர் நலனில் அக்கறை கொள்வது போல் காட்டிக்கொண்டு, புவியரசியல், இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இலங்கைகையை இந்தியாவின் வழிக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக தமிழினத்தை எப்படி பலியாக்குவது என்பதைப் பற்றி விவரித்தால் இலங்கை படிந்து விடும். இதற்காக சிவசங்கர் மேனன் பேரம் பேச சென்றிருப்பார். இதில் சர்வதேச நாடுகளிடமிருந்து தன்னை காப்பாற்ற இலங்கை பேரம் பேசுகிறது. இந்த இருவரின் பேரம் படியும் போது தமிழர்கள் மீண்டும் அடிமைகளாக்கப்படுவார்கள்.

சட்டத் திருத்தம் மாற்றங்கள் மீதான நிலை

இரு நாடுகளும் மாற்றி மாற்றி பேரம் பேசுவதற்கு யாரேனும் ஒருவரை அனுப்பிக்கொண்டிருந்தாலும், அப்பாவி மக்களுக்கு இந்தியா 13-வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த கடுமையாக போராடுவதைப் போலவே தோற்றமளிக்கும். ஆனால் இச்சட்டத்திருத்தம் மீது இரு நாடுகள் கொண்ட நிலை இன்று வரை மாறிவிடவில்லை. 13-வது சட்டத்திருத்தத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்தியாவினை கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை என்று கோத்தப்பய இராஜபக்ச கூறுகிறார். பின்னர் மன்மோகன்சிங் இச்சட்டத்தை மாற்றம் ஏதும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். பசில் மக்களின் விருப்பத்திற்கிணங்க கண்டிப்பாக மாற்றப்படும் என்றார். சிவசங்கர் மேனன் இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்திவிட்டோம் என்றார். பின்னர் அதிபர் ராஜபக்ச இந்தியாவின் நிலைப்பாட்டை மீறி சட்டத்ததிருத்தம் மேற்கொள்ளப்படும் என்று, எதிர்க்கட்சிகள் எதுவுமின்றி ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்கிறார். கோத்தப்பய இராஜபக்ச, தமிழர்களுக்கு நிலம் மற்றும் காவல் ஆகியவற்றில் அதிகாரம் வழங்குவது தேசப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்கிறார். தமிழகம் சார்பாக சுதர்சன நாச்சியப்பனும் இது தொடர்பாக பேசிக் கொண்டே தான் இருக்கிறார். ஆக மொத்தம் 13-வது சட்டத்திருத்தம் இன்றுவரை இந்தியா இலங்கை இடையே இழுபறியில் தான் உள்ளது.

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், இலங்கை கண்டிப்பாக தான் நினைத்தபடி இச்சட்டத்தை வழுவிழக்கச் செய்து தேர்தலுக்கு முன்பாகவே நிறைவேற்றும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி பொதுநலவாய மாநாட்டில் பெருமை சேர்த்துக்கொள்ளும். பொதுநலவாய மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்தி சர்வதேச நாடுகளின் நெருக்கடியில் இருக்கும் தன்னை விடுவித்துக்கொள்ளும். இப்படி ஒருசேர 13-வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல், பொதுநலவாய மாநாடு என்று அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திக்காட்டி, தமிழர்கள் மீண்டெழுவதை தடுப்பதுடன் இனப்படுகொலையை மறக்கடிக்கும். இதற்காக இலங்கை நிறைய விடயங்களை இந்தியாவுடன் சமரசம் செய்துகொள்ளும். இந்தியாவும் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தான் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளும். இப்படி இவ்விரு நாடுகளின் அரசியலுக்கிடையில், தமிழர்களின் நலன் சுத்தமாக இல்லை. தமிழர்கள் மீண்டும் பார்வையாளர்களாகவே மட்டுமே உள்ளனர்.

--
அசோக் குமார் தவமணி, மே 17 இயக்கம்

Pin It